நகை சொத்தல்ல... ராம நாமமே சொத்து!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் சத்குரு ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள். நாம ஜபம் மூலம் மிக சுலபமாக மோட்ச சாம்ராஜ்ஜியம் அடையலாம் என்பதற்கு, இவரது கீர்த்தனை களே சான்று. இந்த மகான், தன் தந்தை ராம பிரம்மத்திடம் ராம தாரக மந்திரத்தை உபதேசம் பெற்றதாகக் கூறுவர். மருதாநல்லூர் மடத்தின் தலைவரிடம் உபதேசம் பெற்றதாகவும் ஒரு குறிப்பு உண்டு.

ஆத்ம ஞானியாகவும் தீர்க்கதரிசியாகவும் விளங்கிய ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள், தமது சிறு வயதிலேயே இறை பக்தி மிகுந்தவராக விளங்கினார். சிறுவனாக இருக்கும் போதே ராமபிரானை பற்றி அடிக்கடி கனவு காண்பாராம். இந்த நிலையில், ராமகிருஷ்ணாநந்தர் என்ற சந்நியாசியிடம் ராம மந்திர உபதேசம் பெற்றார் தியாகராஜர். அதன் பிறகு, அவரின் உள்ளத்தில் ஸ்ரீராம (தாரக) மந்திரம் நிலை கொண்டது. எப்போதும் ராம நாம ஜபத்திலேயே திளைத்திருந்தார்.



இதன் விளைவாக ஒரு நாள், ஸ்ரீராம ஆராதனையின் போது, 'தோடி' ராகத்தில் அமைந்த, நமோ நமோ ராக வாய அநிசம்... என்ற தியாகராஜ ஸ்வாமிகளது முதல் கீர்த்தனை பிறந்தது. இதில் சிறப்பு என்னவென்றால், இந்தக் கீர்த்தனையைப் பாடும் போது, சங்கீதம்- இசை குறித்த எந்த வித பயிற்சியும் ஸ்வாமி களுக்குக் கிடையாது; பரிபூர்ண ராம நாம ஜப மகிமையால், இந்தக் கீர்த்தனை அவருக்குள் உதயமானது!

இதன் பிறகு மீண்டும் ராமகிருஷ்ணாநந்தரை சந்தித்த தியாகராஜர், ஸ்ரீநாரத மந்திரம் உபதேசிக்கப் பெற்றார். இதன் மூலம் ஸ்ரீநாரத முனிவரின் அருள் பெற்று, இசை குறித்த 'ஸ்வரார்ணவம்' என்ற தெய்வீக நூலை அடையப் பெற்றார். இதற்கு நன்றிக் கடனாக- நாரதரை போற்றும் விதமாக, 'ஸ்ரீநாரத' மற்றும் 'வரநாரத' ஆகிய கீர்த்தனங்களைப் பாடினார். இப்படி, தெய்வீகமான இசை நூல்களைப் பெற்று பயின்றாலும், ராம நாம ஜபத்தையும் இடைவிடாமல் தொடர்ந்தார். இதன் பலனாக அவரது வாழ்வில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

ஆம்! தியாகராஜர், ஸ்ரீராம நாமத்தை ஒரு கோடி முறை ஜபித்து நிறைவு செய்ததும், ஸ்ரீராமபிரான் தரிசனம் தந்தருளினார். பரவசத்தில் ஆழ்ந்த தியாகராஜர், 'அடாணா' ராகத்தில் அமைந்த, 'ஏல நீ தயராது' என்று துவங்கும் கீர்த்தனையைப் பாடினார். இது, ஸ்ரீராமனின் அருட் பிரவாகத்தையும், தோற்ற அழகையும் விவரிக்கும். இந்தக் கீர்த்தனையின் 3-வது சரணத்தில், 'பரம பாகவ தார்ச்சித' என்ற வரி வரும். இதற்கு, 'பரமபாகவத உத்தமர்கள் செய்யும் நாம ஜபத்தில் திளைத்தவனே!' என்று பொருள். ஸ்ரீதியாகராஜர், ராம நாமத்தை இரண்டு கோடி முறை ஜபித்து முடித்தபோது மீண்டும் ஸ்ரீராம தரிசனம் கிடைக்கப் பெற்றார். இதனால் மகிழ்ந்தவர், கனுகொண்டிநி..., நாத ஸ§தா ரஸம்பிலநு... உபசாரமுசேஸேவாரு... முதலான கீர்த்தனைகளை இயற்றினார்.

ஸ்ரீதியாகராஜரின் குரு ஸொண்டி வேங்கடரமணய்யா. இவரிடம் சிறிது காலமே இசை பயின்றார் ஸ்வாமிகள். ஸொண்டி வேங்கடரமணய்யா தன் சீடரது 'ராம நாம ஜப' மகிமையைப் பாராட்டி, 'தொரகுநா இடுவண்டி சிஷ்யடு' (இப்படிப்பட்ட சிஷ்யன் கிடைப்பானா?) என்று போற்றிப் பாடியதுடன், தனது தோடாவையும் (தற்கால பிரேஸ்லெட் போன்றதொரு அணிகலன்), மகரகண்டியையும் (கழுத்தில் அணியும் ஆபரணம்) தியாகராஜருக்கு பரிசளித்தார். மகிழ்ந்தார் தியாகராஜர். எனினும், குருநாதரின் மகள் திருமணத்தின்போது, இந்த நகைகளை அவரிடமே திருப் பிக் கொடுத்து விட்டார். ஆம்... தியாகராஜருக்கு ராம நாமம் மட்டுமே நிலையான- நிறைவான சொத்து!

ஸ்ரீதியாகராஜர், சமாதி அடைந்த புனித நாளில், உலகம் முழுவதும் இவருக்கு ஆராதனை மற்றும் இசை விழாக்கள் நடைபெறுகின்றன.

Comments