அனுமன் பெருமை

சுந்தரகாண்டம் படித்தால் வேண்டுதல்கள் யாவும் ஈடேறும் என்பர்.

ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் அதை காண்டங்களாகப் பிரித்தார். அப்போது அவருக்கு ராமாயணத்தில் அரும்பெரும் செயல்கள் புரிந்த அனுமனுக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் எனத் தோன்றியது. எனவே ஏழுகாண்டங்களுள் ஒன்றினை அனுமனின் பெயரால் சுந்தர காண்டம் என்று அமைத்து மகிழ்ந்தார்.

அனுமன் சொல்லின் செல்வன் என்பதற்கு எடுத்துக்காட்டாக சில காட்சி வசனங்களை அமைத்தார் கம்பர்.

அனுமன் முதன் முதலில் ராமனை சந்தித்த போது, ராமபிரான் அவரிடம், ‘‘நீ யார்?’’ என்று கேட்டார்.

ராமனின் வினாவுக்கு, ‘காற்றின் வேந்தர்க்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன்’’ என்று தன்பெயருக்கு முன் பெற்றோர் யார் என்பதையும் சேர்த்து அடக்கமாக கூறினார்.

அனுமன், சீதையை தேடி இலங்கைக்குச் சென்றபோது அசோகவனத்தில் சீதை தற்கொலைக்கு முயற்சிப்பதைக் கண்டார். ஒரு நொடி தாமதித்தாலும் சீதை உயிர் நீத்துவிடுவாள் எனும் நிலை. அவளை என்ன சொல்லித் தடுப்பது? சட்டென்று, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சீதை காதுபட உரக்கக் கூறினார். ராம நாமம் கேட்டதும் அப்படியே நின்றாள் சீதை.

சீதா தேவியிடம்,‘‘ தாயே..! நான் ராமபக்தன். என் பிரபு ஸ்ரீராமன் தங்களை விரைவில் சிறை மீட்டுச் செல்வார்..!’’ என்றும் ஆறுதல் சொல்லி தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றினார்.

இலங்கையில் இருந்து திரும்பி வந்த அனுமன், ராமபிரானிடம், ‘கண்டனென் கற்பினுக் கணியை கண்களால்' என்று ஒரே வரியில் சீதையைக் கண்டதையும் அவர் கற்புக்கரசியாக திகழ்வதையும் கூறினார்.
வால்மீகியும், கம்பனும் மட்டுமல்ல; இன்றும் கூட ராமாயணத்தினை யார், எந்த மொழியில் எழுதினாலும் எல்லோராலும் போற்றப்படுபவராக இருப்பதே அனுமனின் பெருமை எனலாம்.

கண்ணனும் அனுமனும்
கண்ணனுக்கும் அனுமனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.
கண்ணன் அர்ஜுனனின் தேரில் சாரதியாக அமர்ந்து இருந்தார். மாருதி, பார்த்தன் தேரில் வெற்றிக் கொடியாக இருந்தார்.

கண்ணன் பாண்டவர்களுக்காக துரியோதனனிடம் தூது சென்றார். ஆஞ்சநேயர் ராம, லட்சுமணர்களுக்காக ராவணனிடம் தூது சென்றார்.

கண்ணன் கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து கோகுலத்து மக்களைக் காப்பாற்றினார். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்து லட்சுமணனைக் காத்தார்.

இருவருமே விஸ்வரூப தரிசனம் தந்தவர்கள்.

Comments