பொற்றாமரைக் குளத்தில் ஏன் மீன்கள் இல்லை?




முன்னொரு காலத்தில், மழையே இல்லாமல் மதுரை ஏகத்துக்கும் காய்ந்து போயிருந்தது. நீர்நிலைகள் அனைத்தும் வற்றத் துவங்கின. இங்குள்ள குளம் ஒன்றில் தினமும் இறங்கி, அதில் உள்ள மீன்களைக் கொத்திச் சாப்பிட்டு வாழ்ந்து வந்த ஒரு நாரை, தனக்கு உணவு அளித்த குளம் வறண்டு போனதை அடுத்து, பசியைத் தணிக்க வேறொரு குளத்தைத் தேடிப் போனது.

நாரை தேடிப் போன குளம்தான் - மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலில் அமைந்துள்ள பொற்றாமரைக் குளம்! பிரமாண்டமான அந்தக் குளத்தை அதிசயத்துடன் பார்த்தது. அப்போது, அந்தக் குளத்தில் மகான்கள் மற்றும் ரிஷிகள் சிலர் நீராடிக் கொண்டிருந்தனர். தனக்கே உரிய பொறுமையுடன் இந்தக் காட்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது நாரை.

குளத்தில் வசித்து வந்த மீன்கள், நீராடிக் கொண்டிருந்த மகான்கள் மற்றும் ரிஷிகள்


மீது மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. இதைக் கண்ட நாரை 'ஆகா... நன்றாகக் கொழுத்த உடலுடன் மீன்கள் இங்கே ஏராளமாக இருக்கின்றன. இன்றைக்கு நமக்கு நல்ல தீனி கிடைக்கப் போகிறது' என்று ஒரு கணம் மகிழ்ந்தது. ஆனால், அடுத்த விநாடியே அந்த மகிழ்ச்சி, பரிதாபமாக மாறியது. 'அடடா... தவறு செய்ய இருந்தோமே... முனிவர்கள் மீது அன்புடன் விளையாடிய மீன்களைச் சாப்பிட்டால் அது மகா பாவமாகி விடுமே!' என்று யோசித்த நாரை, தனது எண்ணத்தைக் கைவிட்டதுடன், உண்ணா நோன்பையும் மேற்கொண்டது.

இதை அறிந்த ரிஷி ஒருவர், மதுரை பொற்றாமரைக் குளத்தின் பெருமைகளை நாரைக்கு எடுத்துரைத்தார். இதைப் பக்தியுடன் கேட்டுக் கொண்ட நாரை, பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி எழுந்து, சிவபெருமானை வணங்கியது. இதில் உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான், நாரையின் முன்னே தோன்றி, ''நாரையே! உன் பக்தியில் மகிழ்ந்தோம். என்ன வரம் வேண்டும், கேள்'' என்றார்.

இறைவனை வணங்கிய நாரை, ''சிவனாரே! தங்களுடனேயே எப்போதும் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. எனவே, எனக்கு சிவலோகப் பதவி வழங்குங்கள். மேலும், தாங்கள் எனக்குத் தரிசனம் தந்த இந்தப் பொற்றாமரைக் குளத்தில் மீன்களே இல்லாமல் செய்ய வேண்டும். ஏனெனில், மீனைச் சாப்பிடத் துடிக்கும் மனிதர்களோ, விலங்கினங்களோ, இந்தக் குளத்தில் இறங்க நேரிட்டால், குளத்தின் புனிதமே கெட்டுவிடும்'' என்று சொன்னது. ''அப்படியே ஆகட்டும்'' என்று வரம் அளித்தார் சிவபெருமான்.

மதுரை பொற்றாமரைக் குளத்தில், மீன் இனங்கள் இன்று வரை தோன்றுவதில்லை என்பர்.

Comments