ராம நாமம்

ராம ராம ராம ராம ராம ராம... அன்பர்களே, எதையும் சுலபமாகச் செய்யவும், பலன் உடனே கிடைப்பதையுமே மனித சுபாவம் விரும்புகிறது.

ஒரு தென்னை மரத்தையோ தேக்கு மரத்தையோ நட்டு வைத்து அது பலன் தரும் வரை பொறுத்திருப்பது பல பேருக்குக் கஷ்டமாகவே இருக்கிறது.

விரைவிலேயே பலனை எதிர்பார்க்கிறவர்கள் மானிடர்கள் என்று பகவான் கீதையில் சொன்னது சரிதான்.

அரசமரத்தைச் சுற்றியதும் அடி வயிறைத் தொட்டுப் பார்த்தாள் போன்ற பழமொழியும் அவசரக்காரர்களது தன்மையைத்தான் குறிக்கிறது.

ஆற அமர ஒரு காரியத்தை ஆராம்சையாகச் செய்யப் பொறுமையில்லை. குறுகிய காலப் பயிர் என்று விவசாயத்திலும் விளைச்சலைத் துரிதமாகத் தருவது வழக்கமாக உள்ளது.

பரம்பொருளை நாடுவதிலும் தேடுவதிலும் கூட பொறுமை யாருக்கும் இருப்பதில்லை. பக்தி செய்கிறேன்; பலன் உடனே கிடைக்குமா என்று ஆசைப்படுகிறோம்.

ராமகிருஷ்ண மடத்துத் துறவி கமலாத்மானந்தாவிடம் ஒரு தரம் மன அமைதி பெறும் எளிய மார்க்கம் ஒன்று கூறும்படி கேட்டேன்.

அவர் தினமும் ஐயாயிரம் நாமா உச்சரித்து வாருங்கள் என்றார். அவரே ஒரு பகவான் நாமாவையும் கூறினார்.

ஒரு மாத காலம் செய்துவிட்டு அவரிடம் சென்று, ``ஒண்ணும் பலன் தெரியவில்லையே!'' என்றேன்.

``நான் உங்களை ஆறு மாசம் பண்ணச் சொன்னேன். ஒரே மாசத்துலே வந்து கேட்கிறீர்களே'' என்றார். நான் பல்லைக் கடித்துக்கொண்டு மேலும் ஐந்து மாதங்கள் ஜபித்துவிட்டு அவரிடம் சென்று ``ஒன்றும் பலன் தெரியவில்லையே'' என்றேன்.

``அப்படியானால், இன்னும் ஒரு ஆறு மாசம் செய்யுங்கள்'' என்றார். மனசுக்குள், `நீங்கள் சுலபமாகச் சொல்லிவிட்டீர்கள் எனக்குப் பிராணன் போகிறது' என்று நினைத்துக் கொண்டு - இது சரிப்படாது, இது ஒரு சாமர்த்தியமான பதிலே தவிர, பலன் தரவில்லை என்று தளர்ந்து வந்துவிட்டேன்.

நாரத மகரிஷிக்கு ஒரு சமயம் ஒரு சந்தேகம் தோன்றியதாம். தனக்கு இன்னும் எத்தனை ஜென்மம் இருக்கிறது? பகவானில் ஐக்கியம் ஆக, தான் இன்னும் எத்தனை ஜென்மம் எடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியதாம்.

மகாவிஷ்ணுவிடம் சென்று கேட்டாராம்- அவர், ஒரு குறிப்பிட்ட புனித ஏரிக்குச் சென்று முழுகி எழுந்தால் தெரியும் என்றாராம்.

நாரதர் விரைந்து சென்று அந்தக் குளத்தில் முழுகினாராம். முழுகி எழுந்ததும், ஒரே சோகமானவராகக் காணப்பட்டாராம். ரொம்ப விரக்தி வந்துவிட்டது.

காரணம், இன்னும் இரண்டு லட்சம் ஜென்மங்கள் அவருக்கு இருப்பதாகத் தெரிந்தது. இவ்வளவு பக்தனாக இருந்தும் நமக்கு இத்தனை ஜென்மம் பாக்கியா? என்று சோர்ந்துவிட்டார்.

தளர்நடையுடன் வரும்போது, இன்னொரு மகரிஷி அந்த ஏரியில் குளித்து, முழுக வந்து கொண்டிருந்தாராம். அவரும் சிறந்த பக்தர். நாரதர் மகாவிஷ்ணுவிடம் கேட்டதைப் போலவே அவர் நாரதரிடம் கேட்டார். நாரதரும் பகவான் தனக்குச் சொன்ன பதிலையே அவருக்கும் சொல்லி, புனித ஏரியில் முழுகித் தெரிந்து கொள்ளும்படி கூறினாராம்.

பக்தர் முழுகி எழுவதை நாரதர் கவனிக்க நேர்ந்தது. முழுகி எழுந்த பக்தர், ஒரே குதூகலமும் களிப்புமாக `ஆகா! இறைவனது கருணையே கருணை. அன்பே அன்பு' என்று பரவச நிலையில் ஆடிப் பாடினாராம்.

நாரதர் அவரை அணுகி, `உமக்கு இன்னும் எத்தனை ஜென்மம் என்று தெரிந்ததா?'' என்று கேட்டார்.

``எனக்கா! நான் பகவானுடன் ஐக்கியமாக இன்னும் எட்டே எட்டுக் கோடி ஜென்மம் தான் எடுக்க வேண்டும் என்று தெரிந்தது. என்னே பகவானின் கருணை! இந்த ஈன உடலுடன் கூடிய என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, எட்டே எட்டுக்கோடி ஜென்மத்தில் அவன் திருவடியை அடையலாம் என்று தெரிவித்துவிட்டாரே! என்னே அவன் கருணை!'' என்று ஆடிப் பாடியவாறு போய்விட்டாராம்.

நாரதர் முன் பகவான் தோன்றி, ``நாரதா, அந்த பக்தருக்கு ஏற்பட்ட நிறைவு உனக்கு ஏற்படவில்லையே... கவனித்தாயா? உனக்கு இரண்டே லட்சம் ஜென்மம்தான். அவனுக்கோ எட்டுக் கோடி ஜென்மம்! ஆனாலும் அவன் மகிழ்ச்சியோடு போகிறான்.

உனக்கு, நீ ஒரு பரம பக்தன் என்ற அகங்காரம். ஆகவே நீ இரண்டு லட்சம் ஜென்மம் என்றதும் வருத்தப்படுகிறாய். அவனோ, தனக்கு வாய்ப்பே இல்லை என்று அறிவிக்காமல், எட்டுக்கோடி ஜென்மாவில் பரம்பொருளை அடைவோம் என்று தெரிந்ததே என்று மகிழ்ச்சி! உன்னைவிட அவன்தான் சிறந்த பக்திமான். அகங்காரமில்லாதவன்... உன்னைக் காட்டிலும் சீக்கிரமே சிறப்பாக பக்தி செய்து உன்னைவிட விரைவாக அவன் என் பாதத்தில் வந்து சேர்ந்துவிடக் கூடும்'' என்றாராம்.

பக்தி செய்கிறவர்களுக்கு, பொறுமை மிக அவசியம் என்பதை இந்தக் குட்டிக் கதை நமக்குச் சொல்கிறது.

விஷ்ணு சகஸ்ரநாமத்திலும், ``எந்தத் திருநாமத்தை உச்சரிப்பதன் மூலம் மானிடர் சீக்கிரமாக ஞானம் பெறுவர்?'' என்று முனிவர் கேட்கிறார்.

ஆக, எளிய முறையில் சீக்கிரமே சென்று இறைவனை அடைய என்ன மார்க்கம் உள்ளது என்றே ஜீவர்கள் அறிய விரும்புகிறார்கள். கைலாச யாத்திரை போவது நல்லது. ஆனால் எளிய முறையில் சென்று அடையும் மார்க்கம் இருந்தால், மனிதர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். கீதையில் பல ஸ்ருதியிலும் கூட `இந்த சுலோகங்களை முழுசாகவோ, ஒரு அத்தியாயம் மட்டுமோ, ஒரு சுலோகம் மட்டுமோ, சுலோகத்தின் ஒரு பாதியோ, அர்த்தத்துடனோ, அர்த்தம் படிக்காமலோ, ஒரு நாளைக்கு மூன்று தடவையோ, ஒரு தடவையோ படித்தால், அது அதற்கு இன்ன பலன் என்று சொல்லப்படுகிறது.

இதைப் படித்தாலும், படிக்கச் சொல்லிக் கேட்டாலும் பலன் என்கிறார்கள். திருவண்ணாமலை கே்ஷத்திரத்தை நினைத்தாலே முக்தி என்கிறார்கள். நினைப்பது என்பது சுளுவான வேலை. பஸ், ரயில், டிக்கெட், கியூ, செலவு இந்த விவகாரமெல்லாம் இல்லை.

இப்படியாக, எதைச் சுலபமாக செய்தால் பக்தி ஏற்படுமோ, புண்ணியம் கிட்டுமோ அந்த வழிமுறையையே மனிதர் நாடுவது இயல்பு.

அந்த வகையிலே ஒருமுறை சொன்னாலே உயர்வான பலன்தரும் என்று பரமசிவனே பார்வதியிடம் சொன்ன பெருமைக்கு உரியது ராமநாமம்.

பல கோடி முறை ராம நாமம் சொல்லி ராம தரிசனம் கண்டவர் தியாக பிரம்மம். பலநூறு காலம் ராம நாமத்தை `மரா மரா' என்று சொல்லி அந்த ராம கதையை பாடும் பாக்யம் பெற்றவர் வால்மீகி.

ஒருமுறை சொன்னாலே கோடி கோடி நன்மை தரும் ராம நாமத்தைச் சொல்லுங்கள். எளிதாக எல்லா நன்மைகளும் பெறும் வழி அதுவே!


வெற்றிலை மாலையுடன் தோன்றும் கடவுள்

செங்கல்பட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அனுமந்தபுரம். இங்குள்ள அகோர வீர பத்திர சுவாமி, 5 அடி உயரத்தில் நான்கு கைகளில் வில், அம்பு, கத்தி, கேடயத்துடன் காட்சி அளிக்கிறார். இவர் எப்பொழுதும் வெற்றிலை மாலையுடன் காட்சி அளிப்பது சிறப்பு.


Comments