'தீதும் நன்றும் பிறர் தர வாரா!' -


'தீதும் நன்றும் பிறர் தர வாரா!' - எத்தனை சத்தியமான வரி இது!

'முயற்சி செய்யாமல், ஆசையும் படாமல் இருந்தால் வாழ்க்கையில் நல்லது நடக்குமா?' என்பவர் களுக்கு வேதாந்தம் தரும் பதில் என்ன?

வியாபாரத்தில் ஒருவனுக்குப் பெருத்த நஷ்டம். இதை வியாபாரி விரும்பினானா? அல்லது இதற்காக முயற்சிகள் மேற்கொண்டானா? மாறாக, நஷ்டம் நேரக்கூடாது என்பதற்காக எதை எதையோ செய்கிறான். ஆனால், அதையும் மீறி நஷ்டம் ஏற்படுகிறது.

நடந்தவற்றுக்கும் நமக்குமான தொடர்பு என்ன?

புற்றுநோய் உள்ளிட்ட வியாதிகள், விபத்துகள், துக்கம், நஷ்டம் மற்றும் மரணம் முதலான... நாம் விரும்பாத பல செயல்கள், நம்மையும் மீறி நடந்து விடு கின்றன. இதேபோல்தான், நல்ல செயல்களும்!

இவை எல்லாவற்றுக்கும் நாம் செய்த கர்ம வினையே காரணம். சிலர் ஆரோக்கியமாக இருப்பர்; ஆனால், ஆயுள் இருக்காது. சிலருக்கு நல்ல குடும்பம் அமைந்திருக்கும்; ஆனால், செல்வம் இருக்காது. நல்லவையும் கெட்டவையும் வாழ்க்கையில் இப்படி மாறி மாறி வருவதற்கு, அவரவர் செய்த பாவ-புண்ணியங்களே காரணம். குறிப்பாக, இந்தந்த புண்ணியத்துக்கு இன்ன பலன்; இந்தந்த பாவங்களுக்கு இன்ன மாதிரியான கெடுதல்கள் உண்டு.

வேதாந்தம், துறவிகளுக்கு மட்டுமே பயன் தரும் என எண்ண வேண்டாம். வேதாந்த சிந்தனை ஓரளவு இருப்பின், சம்சாரிகளும் அமைதி பெறலாம்.


ஹனுமத் ஜயந்தி நாளில், அனுமனின் அம்சமாகவே அவதரித்தவர் ஸமர்த்த ராமதாஸர். இடைவிடாமல் ராம நாமத்தையே ஜபித்து வந்தவர்; வைராக்கியமாக தனிமையில் வாழ்ந்தவர். கையில் ஜபமாலை, மானம் காக்க இடையில் சிறிய ஆடையுடன் மிக எளிமையாக, குகைகளில் வசித்தவர். இவரது சீடர்களும் அவரைப் போலவே எளிமையுடனும் வைராக்கியத்துடனும் வாழ்ந்தவர்கள். ஆனால், ஒருவர் மட்டும் வித்தியாசமானவர். அவரின் பெயர் ரங்கநாத கோஸ்வாமி. இவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். பக்கத்துக்கு ஒருவராக இருவர் கவரி வீச, மற்றொருவர் குடை பிடிக்க, மகாராஜாவைப் போல் பல்லக்கில் பயணிப்பார் இவர். பார்ப்பதற்கு மிகவும் ஆடம்பரமாகத் தெரியும்.

'ஸமர்த்த ராமதாஸர் எவ்வளவு எளிமையாகவும் வைராக்கியத்துடனும் திகழ்கிறார். அவரின் சீடரான ரங்கநாத கோஸ்வாமி மட்டும் இப்படி படாடோபத் துடன் ஆடம்பரமாக வாழ்கிறாரே!' என்று பலரும் பேசிக் கொண்டனர். இன்னும் சிலர், 'ஸமர்த்த ராமதாஸரது பெயரைக் கெடுக்க இவர் ஒருவரே போதும்' என்று நிந்தித்தனர்.

பக்தர்களது சம்பாஷணைகளை அறிந்த மற்ற சீடர்கள், 'குருவின் பெயரை ரங்கநாத கோஸ்வாமி கெடுக்கிறாரே!' என்று வருந்தினர். 'என்ன செய்வது?' என்று சிந்தித்து, ஒரு முடிவுக்கு வந்தனர். ஒரு நாள், ஸமர்த்த ராமதாஸரிடமே இதுகுறித்து விவரித்து, தங்களது வருத்தத்தையும் தெரிவித்தனர். ஆனால், 'கோஸ்வாமியை அழைத்து குருநாதர் கண்டிப்பார்!' என்று நினைத்த சீடர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நாட்கள் நகர்ந்தன!

ஒரு நாள், கோதாவரி நதியில் நீராட சீடர்களுடன் சென்றார் ஸமர்த்த ராம தாஸர். அப்போது எதிரே குடை, கவரி முதலான பரிவார மரியாதைகளுடன் பல்லக்கில் வந்து கொண்டிருந்தார் ரங்கநாத கோஸ்வாமி. குருநாதரைப் பார்த்ததும், பல்லக்கில் இருந்து இறங்கி வந்து ஸமர்த்த ராமதாஸரின் பாதம் பணிந்தார். அவரிடம், ''பல்லக்கு, குடை, சாமரம் மற்றும் உன்னுடன் இருக்கும் அனைத்தையும் ஒதுக்கி விடு. உன் பின்னே எவரும் இருக்கக் கூடாது. நான் நீராடி விட்டுத் திரும்பும் வரை, இந்த ஆற்று மணலில் மௌனமாக அமர்ந்திருக்க வேண்டும்'' என்று கட்டளையிட்டார் ஸமர்த்த ராமதாஸர்.

அதன்படி, ஆற்று மணலில் அமர்ந்தார் கோஸ்வாமி. 'கோஸ்வாமிக்கு, குருநாதர் தக்க பாடம் புகட்டிவிட்டார்!' என்று மற்ற சீடர்கள் மகிழ்ந் தனர். சற்று நேரத்தில், சத்ரபதி சிவாஜி அந்த வழியே வந்தார். தன் பக்திக்கும் மரியாதைக்கும் உரிய ஸமர்த்த ராமதாஸரின் சீடர் ஒருவர், சுட்டெரிக்கும் ஆற்று மணலில் தனியே அமர்ந் திருப்பதைக் கண்டார். கோஸ்வாமியிடம் சென்று பேச்சுக் கொடுத்தார் வீரசிவாஜி. ஆனால் கோஸ்வாமியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை!

'மௌன விரதத்தில் இருக்கிறார் போல' என்று எண்ணிய வீரசிவாஜி, தன் சேவகர்களை அழைத்தார். அவர்க ளிடம், 'கோஸ்வாமி மீது சூரிய வெப்பம் படாதபடி, பந்தல் போடுங்கள்' என்று உத்தரவிட்டார். தவிர, சேவகர்கள் இருவரை, கோஸ்வாமிக்கு கவரி வீசப் பணித்தார். மேலும் சிலரை, அவருடன் இருக்கும்படி ஆணையிட்டு விட்டு, கிளம்பிச் சென்றார்.

நீராடி விட்டுத் திரும்பிய ஸமர்த்த ராமதாஸர், கோஸ்வாமியின் நிலையைக் கண்டார். சீடர்கள் திகைத்தனர். ''என்ன நடந்தது?'' என்று விசாரித்த குருநாதரிடம் நடந்ததை விவரித்தார் கோஸ்வாமி. கவனத்துடன் கேட்டுக் கொண்ட ஸமர்த்த ராமதாஸர், மற்ற சீடர்களை ஏறிட்டார். ''இப்போது புரிகிறதா... உங்களைப் போலவே ரங்கநாத கோஸ்வாமியும் பரம வைராக்கியசாலிதான். முற்பிறவியில் அவர் செய்த புண்ணியங்களின் பலனையே இப்போது அனுபவிக்கிறார். ஒருவருக்கு முக்தி கிடைக்க வேண்டும் எனில், பாவம்- புண்ணியம் இரண்டையும் அனுபவித்துக்கழிக்க வேண்டும் எனும் உண்மை கோஸ்வாமிக்குத் தெரியும். ஆகவே, தனக்கு விருப்பம் இல்லாதபோதும், செய்த கர்மாவின் நற்பலனை அனுபவித்து கழிக்கிறார்'' என்று விவரித்தார்.

பாவ- புண்ணியங்களுக்குத் தக்கபடியே வாழ்வில் இன்ப- துன்பம் வரும் எனும் உண்மை சீடர்களுக்குப் புரிந்தது.

செய்த வினைப் பயனை பொறுமையுடன் ஏற்று அதை அனுபவிக்கப் பழகிக் கொண்டால், நமக்கும் தினம் தினம் திருநாளே!

Comments