முள்ளை முள்ளால்........

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பர். அதுபோல, சத்தமே இல்லாமல் சாந்தமாகி நிறைந்து அந்த ஆத்மாவிலேயே ஒடுங்கவும் சில சத்தங்களை நாம் ஓத வேண்டும். அந்த சத்தங்களே வேத மந்திரங்கள்!

பூமியில் தங்கம், வெள்ளி முதலான உலோகங்கள், பல விதமான கற்கள், எண்ணெய் மற்றும் நீர் ஆகியன உள்ளன. காற்று, தன்னகத்தே நுண் வாயுக்களை உள்ளடக்கி உள்ளது. தண்ணீரில், ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் உள்ளன. காவிரி நதிக்கு பொன்னி என்ற காரணப் பெயரும் உண்டு. இதில் பொன் (தங்கம்) கலந்துள்ளதாம். இதேபோல், தாமிரம் கலந்துள்ளதால் தாமிரபரணி நதி என்று பெயர் வந்ததாம்!

ஆகாயமும் வெற்றிடம் கிடையாது. விதவிதமான ஒலி அலைகள் நிறைந்தது. இவற்றை, தங்களது யோக சக்தியால் கிரகித்துக் கொடுத்தவர்களே மகரிஷிகள். எந்தெந்த ஒலி அலைகளை எழுப்பினால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதே மந்திர சாஸ்திரம். அதாவது, மந்திரங்களின் மகிமைகளைக் கூறும் நூல்.

இன்னொரு விஷயம்... பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பே ஒலி உண்டானதாம். பின்னரே உருவங்கள் தோன்றினவாம். ஆக, இப்படித் தோன்றிய முதல் ஒலிதான் பிரணவம்!

குழந்தைக்கு சாதம் ஊட்டும்போது, வேடிக்கை காட்டுவதற்காக நாயின் துணையை நாடுவாள் தாய். 'நாயே...' என்று அழைத்தால், எந்த நாயும் திரும்பிப் பார்க்காது. அதே நேரம், 'தோ... தோ!' என்று சத்தம் எழுப்பினால், வாலைக் குழைத்தபடி வந்து நிற்கும். இந்த 'தோ...தோ!' சத்தம், தன்னை அழைப்பதற்காகவே என்பது நாய்களுக்கு எப்படித் தெரிந்தது? எவர் சொல்லிக் கொடுத்தார்கள்? இவற்றை அறியும் தன்மை நாய்களுக்கு இயல்பாகவே உள்ளது என்பதே உண்மை. இதேபோல் மகுடிக்கு பாம்பும், கொம்புச் சத்தத்துக்கு மானும் வசப்படும்.


உலகத்தின் போக்கு, தெய்வத்தின் வசம் உள்ளது. அந்த தெய்வம், மந்திரத்துக்கு வசப்படக் கூடியது. ஆகவே, இத்தகைய மந்திர ஸித்தி எவரிடம் உள்ளதோ, அவர்களை தெய்வம் என்று சொன்னால் மிகையாகாது.

வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் சிறியதோ, பெரியனவோ... மந்திரங்கள் அவற்றில் இருந்து நமக்கு நிவாரணத்தைத் தருகின்றன. துன்பங்களுக்குக் காரணம் கர்மாதானே! எனவே, இதன் வீரியத்துக்குத் தக்கபடி ஜபம் செய்வது அவசியம். வியாதி ஆரம்ப நிலையா அல்லது முற்றிய நிலையா என்பதைப் பரிசோதித்து, அதற்குத் தக்கபடி மருந்து கொடுப்பது போல்தான் இதுவும்!

சிருங்கேரி பீடத்தை, ஸ்ரீசந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் அலங்கரித்த காலம்! ஸ்வாமிகள் ஜீவன் முக்தர் என்பது, அவரை முதல் முறை பார்ப்பவருக்கும் புரிந்து விடும். அவரின் முகத்தில் சாந்தம் மற்றும் தேஜஸ் ஆகியன போட்டி போட்டுத் தாண்டவமாடும்.

ஜீவன் முக்தரான ஸ்வாமிகளுக்குத் தெரியாதது என்று ஒன்றும் இல்லை. தனது வாழ்நாளில் பல வருடங்களை தனிமையிலேயே கழித்த உத்தமர். ஜீவன் முக்தராக இருந்தபோதும், தன்னை அண்டி வரும் உலகத்தவர்களின் துயர்களைக் காது கொடுத்துக் கேட்டு, அவர்களது துயர் நீங்க தக்க வழிகளை சொல்வார்.

அதற்குக் காரணம் என்ன? மகான்களது நிலை நமக்குப் புரியாது. ஆனால் நமது நிலை, அவர்களுக்கு நன்றாகப் புரியும் என்பதே காரணம்.

ஒரு முறை ஸ்வாமிகள் திருநெல்வேலி ஜில்லாவில், பாபநாசம் என்ற ஊரில், சாதுர்மாஸ்ய விரதம் மேற் கொண்டார். இரவு பூஜை முடிந்ததும், எல்லோருக்கும் தீர்த்தப் பிரசாதம் கொடுப்பது அவரது வழக்கம்.

அப்படி ஒரு தருணத்தில் ஸ்வாமிகளிடம் வந்த ஒருவர், கூட்டத்தில் எவரோ தன் குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்று விட்டதாகக் கூறி அழுதார். அது திரும்பக் கிடைக்க அருள் புரியுமாறு ஸ்வாமி களிடம் வேண்டினார். அவரை, மறுநாள் காலையில் வருமாறு கூறினார் ஸ்வாமிகள்.

மறு நாள் அந்த நபர் வந்ததும், அபூர்வமான மந்திரம் ஒன்றை அவருக்கு உபதேசித்தார் ஸ்வாமிகள். பிறகு, 'இதைத் தங்களது வீட்டின் வாசலில் அமர்ந்து, சரியாக ஆயிரத்தெட்டு முறை, நிதானமாக ஜபிக்க வேண்டும். ஜபம் முடியும் வரையிலும் கண்களைத் திறக்கக் கூடாது. ஜபம் முடிந்து, கண்களைத் திறக்கும்போது தங்களின் பார்வை எவர் மீது விழுகிறதோ அவரைப் பின்தொடர்ந்து செல்லுங்கள்!' என்று அருளினார்.

உபதேசம் பெற்ற அந்த நபரும் அப்படியே செய்தார். ஆயிரத்தெட்டு முறை ஜபம் முடிந்ததும் அவர் கண்களைத் திறக்க... வீதியில் ஒருவர் செல்வதைக் கண்டார். அந்த நபரைப் பின்தொடர்ந்தார்.

வெகுதூரம் நடந்து ஜன நடமாட்டம் இல்லாத ஓர் இடத்தை அடைந்தார் அந்த நபர். அங்கு பூமியில், தான் அடையாளம் இட்டு வைத்திருந்த இடத்தைத் தேடி அங்கிருந்து ஒரு பொருளை கையில் எடுத்தார். இந்த நிலையில் நம்மவர் (நகையை பறிகொடுத்தவர்) அருகில் சென்றதும், எதுவும் பேசாமல் அந்தப் பொருளை கொடுத்து விட்டுச் சென்றார் அந்த நபர். அது... குழந்தையின் தங்கச் சங்கிலி!

மந்திரங்களின் மகிமைகளை உணர்ந்து, நல்ல மந்திரங்களை குருமுகமாக உபதேசம் பெற்று, முறைப்படி ஜபம் செய்து வந்தால் தினம் தினம் திருநாளே!

Comments