காவிரி கரையில் அமைந்துள்ள கோவில்களின் தொடர்ச்சி ..................


தான்தோன்றி மலை

கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் அலங்கார வளைவு தான்தோன்றி மலை அருகில் இருப்பதை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. 4 கி.மீ. தூரம்தான். ஊர் மக்கள் சுருக்கமாக `தான்தோனி' என்று அழைக்கிறார்கள். ஐம்பது அடி உயரமான பாறை மீது ஒரு கோபுரமும், பாறைமீது பூசப்பட்ட திருமண்ணும் கோயிலை நாம் நெருங்கிவிட்டதை உணர்த்தும்.

சிற்பிகளால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில். மலையைக் குடைந்து அதில் எட்டடி உயரமான பெருமானைச் செதுக்கி உள்ளார்கள். நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். பக்தன் ஒருவனுக்காக தானாகத் தோன்றி காட்சி தந்ததால் `தான்தோன்றிப் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார்.

திருமஞ்சனம் செய்விக்கும்போது கூர்ந்து கவனித்தால் சிற்பியின் வேலை முழுமை பெறாத நிலையை உணர முடியும். பட்டுப் பீதாம்பரம், மலர் மாலைகளோடு கம்பீரமாக சேவை சாதிக்கும்போது, கல்யாண வெங்கடரமணப் பெருமாள், நமது குறைகள் எல்லாவற்றையும் களைந்திடவே, திருப்பதியிலிருந்து இங்கே வந்துவிட்டாரோ என்ற எண்ணமும் மேலிடுகிறது.

பல ஆயிரம் குடும்பங்களின் குலதெய்வமாக, பிரார்த்தனைத் தலமாகத் திகழுகிறது கரூர் தான்தோன்றிமலை. புரட்டாசியில் பிரம்மோற்சவம் நடக்கும் சமயம் கரூரே அமர்க்களப்படும். மனநிறைவோடு கோயிலை விட்டு வெளியே வருகிறோம்.

வெள்ளியணை

தான்தோன்றிமலைக்குத் தெற்கே நமது பயணத்தைத் தொடர்ந்தால் வெள்ளியணை என்ற சிற்றூரில், பாலசுப்ரமணியர் கோயிலை தரிசிக்கலாம். வெள்ளியணை, வெண்ணெய்மலை, வேலாயுதம்பாளையம் என்று கரூரைச் சுற்றிலும் குமரனுக்குக் கோயில்கள் உண்டு.

தேவர்மலை

`தேவர்மலை' என்றதும், மீண்டும் ஒரு மலைக் கோயிலுக்குச் செல்கிறோமோ என்று எண்ண வேண்டாம். திண்டுக்கல் சாலையிலேயே 30 கி.மீ. பயணித்து பாளையம் என்ற ஊரை அடைகிறோம். அங்கிருந்து கிழக்கே திரும்பி 5 கி.மீ. சென்றால் `நரசிம்மப் பெருமாள்' சேவை சாதிக்கும் தேவர்மலை என்ற ஊரை அடையலாம்.

உக்ர நரசிம்மராக இருந்தபோதிலும், வலது கரம் அபயஹஸ்தமாகவும், இடது கரம் ஆஹ்வான ஹஸ்தமாகவும், சங்கு சக்கரமேந்தியபடி சுகாஸனத்தில் சேவை சாதிக்கிறார்.

ராஜகோபுரத்திற்கான கருங்கல் கட்டுமானமும், அதன்முன்னே உள்ள நான்கு கால் மண்டபமும், கல்லினாலான துவஜஸ்தம்பமும் அதன் பழைமையைப் பறைசாற்றுவதாக உள்ளன. கோயில் எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

`அழகிய சிங்கராக' கதிர் நரசிம்மரும், கமலவல்லித்தாயாராக மகாலட்சுமியும் சேவை சாதிக்கிறார்கள். அபூர்வமான லட்சுமி நாராயணர் திருமேனியும் உள்ளது. அத்தனை மூலவிக்ரகங்களும், பாலாலயம் செய்விக்கப்பட்டு உள்ளன.

முப்பத்துமுக்கோடி தேவர்களும் வழிபட்ட தலம் ஆனதால் `தேவர்மலை' ஆனது இந்தத் திருத்தலம். தேவர்கள் உருவாக்கியதே `மோட்சதீர்த்தம்'. நம்மாழ்வார், ராமானுஜரோடு, பைரவரும் இடம் பெற்றிருப்பது வியப்பைத் தருவதாக உள்ளது.

நரசிம்மப் பெருமாள் சேவை சாதிக்கும் தலங்கள் எல்லாமே பிரார்த்தனைத் தலங்களாக விளங்குவதைக் காண்கிறோம். `தேவர்மலை' நரசிம்மப் பெருமாள் ஆலயத்தில் பெரிய அளவில் நடைபெற்று வரும் திருப்பணிகள் விரைவில் முடிவடைந்து, வண்ணக் கலாபத்துடன் சம்ப்ரோட்சண வைபவத்தையும் காணத் துடிக்கிறது நெஞ்சம்!

வெஞ்சமாக்கூடலூர்

``அரசே போற்றி! அமுதே போற்றி! விரைசேர் வரணவிகிர்தா போற்றி!'' என்று மாணிக்கவாசகர் தனது போற்றித் திருஅகவலில் புகழ்ந்து பாடிய விகிர்தனைக் காணவே நாம் இப்போது மற்றொரு கூடுதுறை நோக்கிச் செல்கிறோம்.

குடகனாறுடன் சிற்றாறு கலக்குமிடமான கூடுதுறையில் இருப்பதாலும், வெஞ்சன் என்ற அரசன் வழிபட்டதாலும் வெஞ்சமாக்கூடலூர் எனப் பெயர் பெற்றது இந்தத் திருத்தலம்.

கரூர்-அரவக்குறிச்சி சாலையில் 13 கி.மீ. பயணித்து ஆறு ரோடு பிரிவில் விலகி 8 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். தேவர் மலையிலிருந்து வெள்ளோடு வழியாக குறுக்குப்பாதையிலும் எளிதில் சென்றடையலாம். முப்பதாண்டுகளுக்கு முன்பு, குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊரே அழிந்துவிட்ட நிலையில், சிவனடியார்கள் பலர் பெரு முயற்சி செய்து திருக்கோயிலைப் புதிதாக எடுப்பித்து குடமுழுக்கும் நடத்தியுள்ளனர்.

இந்திரன், சாபநிவர்த்திக்காக ஈசனை பூஜை செய்து வழிபட்ட தலம்.

ஐந்து நிலை ராஜகோபுரமும், பெரிய பிராகாரத்துடனும் கூடிய திருக்கோயில். கல்யாண விகிர்தீசுவரர் என்ற திருநாமங்கொண்டு சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார் எம்பெருமான். கிழக்கு நோக்கிய சன்னதி. `மதுரபாஷிணி' என்ற வடமொழிப் பெயர், பண்ணேர் மொழியம்மை என்பது தமிழ்த் திருநாமம். வெளிச்சுற்றில் பஞ்சலிங்கங்கள் உள்ளன.

ஆறுமுகப்பெருமான், மயில்மீது காலை வைத்தபடி, வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.

நாகம்பள்ளி

வெஞ்சமாக்கூடலூரிலிருந்து நேராக கரூர்-அரவக்குறிச்சி நெடுஞ்சாலையை அடைந்து, மேற்கில் உள்ள நாகம்பள்ளி திருத்தலத்தை அடைகிறோம். சர்ப்பதோஷபரிகாரத் தலம் இது என்பதை அதன் பெயரே குறிப்பிடுகிறது. `மகாபலேசுவரர்' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் ஈசன். அன்னை மரகதவல்லி. அமராவதி ஆற்றின் கிழக்குக் கரையில் உள்ளது இந்தத் திருத்தலம்.

அரவக்குறிச்சி

நாகம்பள்ளி- அரவக்குறிச்சி - பெயர்களில் காணும் ஒற்றுமையைக் கவனித்தீர்களா? `அரவம்' என்றால் `பாம்பு' என்றுதானே பொருள்? கரூர் - திண்டுக்கல் சாலையில் தென்மேற்காக 24 கி.மீ. காசிவிசுவநாதர்-விசாலாட்சி அருள்பாலிக்கும் தலம். 3 கி.மீ. தொலைவில் உள்ள ராஜபுரத்திலும் விசுவநாதர்-விசாலாட்சியே அருள்பாலிக்கிறார்கள்.

சின்ன தாராபுரம்

கரூருக்குத் தென்மேற்கில் 25 கி.மீ. தொலைவில் உள்ளது சின்ன தாராபுரம். அமராவதி ஆற்றின் வடகரையில் உள்ளது. வளமான நிலங்கள் சூழ்ந்த கிராமம். மேற்கு நோக்கியபடி, ஈசுவரன் அருள்பாலிக்கும் தோஷ நிவர்த்தித் தலம்.

மூலவர் விமானம் மகாபலிபுரம், தருமராஜர் ரதத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. மூலவர் திருமேனியும் கம்பீரமாக அமைந்துள்ளது. மணிமுக்தீசுவரர் அன்பர்களின் குறைகள் அனைத்தையும் களைந்திடுபவராக உள்ளார். அன்னை அகிலாண்டேசுவரி தனிச்சன்னதி கொண்டுள்ளாள்.

உள்பிராகாரத்தில் விநாயகர், முருகப்பெருமான், காசிவிசுவநாதர், கைலாசநாதர், தட்சிணாமூர்த்தி, பைரவர், நவகிரக சன்னதிகள் உள்ளன. சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது சின்ன தாராபுரம்.

மொடக்கூர்

அரவக்குறிச்சிக்குத் தென்மேற்கில் உள்ளது மொடக்கூர். சுயம்புலிங்கமாக மெய்ப்பொருள் நாதர் அருள்பாலிக்கும் தலம் இது. தாயினும் நல்லவள் அந்தப் பராசக்தியைத் தவிர வேறு எவராக இருக்க முடியும்! அவளே மொடக்கூரில் கொலுவிருக்கும் நல்ல மங்கை.

மூக்கணாங்குறிச்சி

அரவக்குறிச்சிக்கு வடகிழக்கில் உள்ள திருத்தலம் மூக்கணாங்குறிச்சி. வீரபாண்டியன் அமைத்த திருக்கோயில். வீரபாண்டீசுவரர், ஈசனின் திருநாமம் ஆகும்.

ராஜபுரம்

அரவக்குறிச்சிக்கு வடமேற்கில் உள்ளது ராஜபுரம். வெஞ்சமாக்கூடலூரிலிருந்து அரவக்குறிச்சி செல்லும் குறுக்குப் பாதையில் 3 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம். விசாலாட்சி-காசிவிசுவநாதர் அருள்பாலிக்கும் தலம்.

பரமத்தி

கரூருக்கு மேற்கில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம்தான் பரமத்தி. சடைமுடியுடன் எம்பெருமான் காட்சி தரும் தலம் இது. அவரது திருநாமம் ஜடேசுவரர். அழகம்மையைத்தான் சௌந்தரநாயகி என்று அழைக்கின்றனர்.

குப்பம்

பரமத்திக்கு வடக்கில், புகமூர் செல்லும் சாலையில் உள்ளது குப்பம் என்ற சிற்றூர். சாலையின் வலப்புறம் கம்பீரமான, வண்ணப் பொலிவுடன் விளங்கும் கருவறை விமானங்கள் நம் கவனத்தைக் கவருகின்றன. கும்பேசுவரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அன்னை, குங்குமவல்லி. அருகிலேயே லட்சுமிநாராயண பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது.

Comments

Post a Comment