பழமொழிகளில் பாரதம்

என்று பிறந்தது, எப்படிப் பிறந்தது என்று அறியாமலே எத்தனையோ பழமொழிகளை வழங்கி வருகிறார்கள், மக்கள்! பல மனிதர்களின் அனுபவ சாரமே ஒரு பழமொழி. இவை, பேச்சு மொழியில் ஆட்சி செய்கின்றன.

தமிழில் மட்டும் எழுபது, எண்பது பழமொழிக்கு மேல் பாரதக் கதைபற்றி உள்ளன. ‘பொம்பளை சிரிச்சா போச்சு’, ‘அடியைப் பிடிடா பாரதப் பட்டா’, ‘உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்’, ‘கர்ணன் கொடை பாதி - காவிரி பாதி,’ ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’, ‘மச்சானை நம்பினால் உச்சாணையில் இருக்கலாம்’ போன்ற பழமொழிகள் பாரதக் கதைகளையொட்டிப் பிறந்தவை.

உதாரணத்திற்கு இரண்டு பழமொழிகள்:அறுத்தும் அரசாண்டாள் பொன்னுருவி:

இது ஏட்டில் உள்ள பழமொழி. ஆனால் பேச்சு வழக்கில் அதிகம் கையாளப்படுவதில்லை. இது தொடர்பான கதை வியாச பாரதத்தில் உள்ளது.

கர்ணனை எல்லோரும் தேர்ப்பாகன் மகன் என்று எண்ணி, நகையாடினர். துரியோதனனுக்கு அவன் மேல் அளவற்ற அன்பு. அதனால் அவன் கர்ணன் மீதிருந்த சாதி நிந்தனையைப் போக்கும் பொருட்டு, அவனை அங்க நாட்டு அரசனாக்கினான்.அவனோடு இருந்து ஒரே இலையில் உண்டான்; தன் தம்பிமாரும் சுற்றத்தாரும் அவனைப் பணியுமாறு ஏவினான். துரியோதனனின் அந்தப்புரத்தில் கர்ணனுக்கு அனுமதியும் செல்வாக்கும் இருந்தன. இத்தனையும் போதாது என்று தன்னோடொத்த அரச குல நங்கையை அவனுக்கு மனம் செய்வித்தான்.

அந்த நங்கைதான் பொன்னுருவி.

பொன்னுருவி என்பது ‘ஸ்வர்ணலதா’ என்னும் சமஸ்கிருதப் பெயரின் தமிழாக்கம். பொன்னுருவி என்று எக்காலத்தில், எவர் தமிழ்ப்படுத்தினார் என்பது தெரியவில்லை. இவள் துரியோதனனின் தங்கையான துச்சலையின் மகள். துச்சலையின் கணவன் சிந்து தேசத்து அரசன். ‘ஜயந்திரன்’ என்ற பெயருடையவன்.

கர்ணனைவிட பொன்னுருவி வயதில் மிகவும் இளையவள். முன்னாளில் நீண்டகாலம் பிரம்மசரியம் காத்தவர்கள் பத்துப் பன்னிரண்டு வயதுள்ள பெண்களை மணந்திருக்கிறார்கள். திருமுருகாற்றுப்படை, நாற்பத்தெட்டு வயதை நல்ல இளமைப் பருவம் என்று கூறுகிறது. பல அந்தணர் அந்த வயது வரை பிரம்மசரியம் காத்து, பிறகு மணம் புரிந்து கொண்டனர் எனத் தெரிகிறது. அதனால், கர்ணனுக்கு துரியோதனன், மிகவும் இளமையாக இருந்த தன் மருகியை (மருகி-மருமகள்) மணம் செய்து கொடுத்திருந்ததில் வியப்பில்லை.

அவளே கர்ணனின் பெருந்தேவி (பட்டமகிஷி). அவளைத் தவிர கர்ணனுக்குத் தேர்ப்பாகன் மணம் செய்வித்த வேறு குல மங்கையும் மனைவியாக இருந்தாள்.

பொன்னுருவியை துரியோதனன், கர்ணனுக்கு மணம் செய்து கொடுத்துவிட்ட போதிலும் அவளுக்குத் தன் கணவனிடம் சாதி பற்றிய அருவருப்பு நீண்ட நாள் இருந்தது. அவள் அடிக்கடி கர்ணனுடன் மனம் வேறுபட்டு, தாய் வீடு சென்று விட்டதும் உண்டு. ஆனாலும், அரச காரியங்களில் அவளுக்கே செல்வாக்கு மிகுதி. துரியோதனன் மாமனாக இருந்தாலும் ஜயந்திரனுக்கு அஸ்தினாபுரத்தில் ஒரே மாப்பிள்ளை என்ற காரணத்தாலும் திருதராட்டிரன், காந்தாரி இவர்களிடமும் செல்வாக்கு அதிகம். அதனால், பொன்னுருவி சொன்னபடியெல்லாம் கர்ணன் நடந்து வந்தான்.

பின்னர், பாரதப்போரில் கர்ணன் இறந்தான்; பொன்னுருவியின் பிள்ளைகளும் இறந்து விட்டார்கள். அவள் விதவையானாள். அதன் பின்னரே அவள் தன் கணவன் பாண்டவரின் அண்ணன் - உயர்குடிப் பிறப்பு உடையவன் - என்பதை அறிந்து பூரித்தாள்.

தருமனே முறைப்படி அரசனானான். ஆயினும், கர்ணனோடு பொன்னுருவி வாழ முடியாததை எண்ணி தம்பிமாரும், தாய் குந்தியும் வருந்தினார்கள்.
அந்த வருத்தமெல்லாம் பொன்னுருவியை மகிழ்வித்து அவள் சொற்படி நடப்பதில் மறைந்துவிட்டது. கர்ணன் இல்லாதபோதும் பொன்னுருவிக்கு அரண்மனையில் செல்வாக்கு குறையவே இல்லை.

இந்தக் காரணத்தையொட்டியே ‘அறுத்தும் அரசாண்டாள் பொன்னுருவி’ என்ற பழமொழி தோன்றியது. ஒருவருக்கு நீண்டகால சோதனைக்குப் பிறகும் நல்லது நடக்காவிட்டால் அவர், பொன்னுருவிக்குக் கிடைத்த பாக்கியம் தனக்குக் கிடைக்காததை எண்ணி இந்தப் பழமொழியைக் கூறி, பெருமூச்சு விடுவது வழக்கம். உயர் தகுதி எதுவும் இன்றி - அல்லது தகுதியை இழந்தும்கூட - ஒருவர் செல்வாக்கு செலுத்துவதைக் கண்டும் இந்தப் பழமொழியைக் கூறுவர்.

ஆள்காட்டி விரலுக்கும் அன்னதானப் பலன்:

தானத்துள் சிறந்த தானம் அன்னதானம் என்பர். எதை எவரும் எளிதில் செய்யலாம். தம்மிடம், பசித்து வருவோருக்கு வேறு இடத்தை சுட்டிக்காட்டி, அங்கே செல்லும்படி சொன்னாலும் சிறிதளவு அன்னதானப் பயன் உண்டாம். இதனையொட்டி எழுந்தது, மேலே உள்ள பழமொழி. இது தொடர்பான பாரதக் கதை:

கர்ணன் அர்ச்சுனனால் கொல்லப்பட்ட பிறகு தன் புண்ணிய பலத்தின் காரணமாக கைலாசம் சென்றான். அங்கே அவனுக்குப் பசி எடுத்தது. அந்தப் புனித லோகத்தில் எவருக்கும் பசி, தாகம் இல்லை. ஆனால், தனக்கு மட்டும் பசி ஏற்படக் காரணம் கர்ணனுக்குப் புரியவில்லை.
அவன் நந்திதேவரிடம் சென்று விசாரித்தான்.

நந்திதேவர், ‘‘கர்ணா! நீ பூவுலகில் எல்லா வகையான தானங்களும் செய்தாய். ஆனால், அன்னதானம் மட்டும் செய்யவில்லை. அதனால் உனக்கு இங்கே வந்ததும் பசிக்கிறது. நீ உன் ஆள்காட்டி விரலை வாயிலே வைத்துச் சுவை. அப்போது பசி போய்விடும்’’ என்றார்.

கர்ணனும் அப்படியே செய்தான்; பசி போய்விட்டது. உடனே கர்ணன் நந்தியடிகளைப் பார்த்து, ‘‘இந்த ஆள்காட்டி விரலில் என்ன மர்மம் இருக்கிறது?’’ என்றான். அதையடுத்து அவர் சொன்ன வரலாறு இது:

‘கிருஷ்ண பகவான் பாண்டவர்களுக்காகத் தூதுவராக அஸ்தினாபுரம் சென்றபோது அவரை வரவேற்க துரியோதனன் போகவில்லை. கிருஷ்ணருக்கு சிறப்பான தங்குமிடம் (மாளிகை) ஒன்றை அமைத்தான் துரியோதனன். பிறகு, கிருஷ்ணருக்கு விருப்பமுள்ள கர்ணனை வரவேற்குமாறு அனுப்பினான்.

கர்ணன், கிருஷ்ணருடன் தெருக்கள் வழியே வரும்போது மாயவர் ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்துக் கொண்டே வந்தார். இடையில் கர்ணன் தன் ஆள்காட்டி விரலினால் விதுரரின் வீட்டைக் காட்டி, ‘‘இது விதுரரின் வீடு; உங்கள் மீது மிகுந்த பக்தியுடையவர்; அவர். உங்களுக்கு விருந்திட ஆர்வம் மிகுந்தவர். ஆனால் அரசர் உங்களுக்கு வேறு தங்குமிடம் அமைத்திருக்கிறார்’’ என்றான்.

அதனை, உடன் இருந்து கேட்டு வந்த விதுரர், ‘‘கண்ணா! இது உங்கள் வீடு; என் வீடு அன்று!’’ என்றார்.

இதனையே ஆதாரமாகக் கொண்டு கிருஷ்ணர், ‘‘அஸ்தினாபுரத்தில் எனக்கும் ஒரு வீடு இருக்கிறதா? அப்படியானால், நான் இங்கேயே தங்குகிறேன்’’ என்று கூறி, உள்ளே புகுந்து விதுரருக்கு விருந்தினர் ஆனார்.
மேற்கூறிய கதையை நந்திதேவர் சொல்லக் கேட்ட கர்ணன், அன்னதானத்தின் பலனை அறிந்து கொண்டு, தனக்கு மறு பிறவியை வேண்டி, பூவுலகுக்கு வந்து, அன்னதானம் செய்து, கைலாசம் மீண்டான்.
இது வியாச பாரதத்திலோ, வில்லிபாரதத்திலோ இல்லாத நிகழ்ச்சி. பிறமொழிகளில் உள்ள பாரதத்தில் இருக்கக்கூடும். இதை புராணிகர்கள் உபன்யாசங்களில் கூறி, பரப்பினர்.


Comments