நவ மாருதி வழிபாடு


ஆஞ்சநேயரும் பிற தெய்வங்களைப் போலவே வடிவங்கள் பல எடுத்தவர் என்கின்றன புராணங்கள்.

வாயுமகன், வானர வீரன், அஞ்சனாபுத்திரன், கேசரி நந்தனன் என பெயர்களுக்கு ஏற்ப, சதுர்புஜ அனுமன், அஷ்டபுஜ ஆஞ்சநேயன், வீர அனுமன், விஜய மாருதி, கல்யாண ஆஞ்சனேயர்,பால மாருதி, பக்த அனுமன் இப்படி எத்தனை எத்தனையோ வடிவங்கள் அவர் எடுத்ததாக சொல்லப்படுகின்றன.

நவ வியாக்ரண பண்டிதன் என்று போற்றப்படும் அனுமனின் வடிவங்களுள் ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்கு உரியவை என்கின்றன புராணங்கள்.

ஆஞ்சநேயரின் ஒவ்வொரு வடிவமும் தனித்தனியே வெவ்வேறு காரணங்களுக்காக வழிபடப்பட்டாலும், நவகிரக தோஷங்கள் நீங்கவும், நல்லன யாவும் கிட்டவும் அருள்வது இந்த நவ மாருதி தரிசனம் என்பது ஐதிகம்.

அந்த நவ மாருதி வடிவங்களுள் எந்த உருவினை வழிபடுவது என்ன பலன் தரும்? ஒவ்வொரு வடிவின் சிறப்பும் என்ன? இதோ உங்களுக்காக......

கல்யாண ஆஞ்சனேயர்: அனுமன் பிரம்மசாரியா? திருமணமானவரா? இந்தக் கேள்விக்கு அநேகமாக பலரும் பிரம்மசாரி என்றுதான் பதில் சொல்வீர்கள். ஆனால் அவருக்கு மனைவியும், ஒரு மகனும் உண்டு என்கின்றது புராணம். சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது அனுமனின் வியர்வை கடலில் விழுந்தது. அப்போது மீன் வடிவில் கடலில் நீந்திக் கொண்டிருந்த தேவகன்னி ஒருத்தி, அந்த வியர்வையை விழுங்கினாள். அதன் காரணமாக அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அந்த தேவகன்னிகை பின்னர் அனுமனை மணந்தாள். இப்படிப் போகிறது அந்தப் புராணக் கதை. மாருதியின் மனைவி பெயர்,சுவர்ச்சலா. (சில புராணங்களில் சுசீலா, அநங்க சுதா என்றும் கூறப்பட்டுள்ளன). மகன், மகரத்வஜன்.

கல்யாணம் என்பதற்கு சர்வ மங்களம் என்றும் அர்த்தம் உண்டு. இவரை தரிசிப்பது, மணப்பேறும், மழலை பாக்கியமும் தரும். தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர்: ராம- ராவண யுத்தத்தின்போது ராவணனுக்கு உதவ வந்தான்,மயில் ராவணன். மாயைகளில் வல்லவனான அவன், விபீஷணனை ஏமாற்றி ராம லட்சுமணரை மயக்கிக் கவர்ந்து சென்றான். மயில் ராவணனை அழித்து ராம லட்சுமணரை மீட்டார் மாருதி. அப்போது ஐந்து முகங்கள் உள்ளவராக அவர் எடுத்ததே பஞ்சமுக அனுமன் வடிவம். அனுமனின் முகத்தோடு வராகர், ஹயக்ரீவர், நரசிம்மர், கருடன் முகங்களும் இணைந்த வடிவம் இது. எனவே இவரை வழிபட்டால் தைரியம், கல்வி அறிவு, எதிரிபயம் இன்மை, சுபகாரியத் தடைவிலகல் ஆகிய நற்பலன்களோடு, தீயசக்திகளால் ஏற்பட்ட பயமும் அகலும்.



நிருத்த ஆஞ்சனேயர்: போர்க்கோலத்தில் காட்சிதரும் அனுமன் இவர். ராம ராவணப் போரின்போது அசுரவீரர்களோடு அதி உக்ரமாக சண்டையிட்ட தோற்றம் இது. இவரை வணங்குவதால், வாழ்வில் வரும் பணியிடப் பிரச்னைகளும் முன்னேற்றத் தடைகளும் நீங்கும்.

பால ஆஞ்சனேயர்: அஞ்சனை மகனாக அழகான பாலனாகக் அருட்காட்சி தரும் அனுமன். சில சமயம், தாய் அஞ்சனா தேவியும் இவரோடு இணைந்து இருப்பார். இந்த அனுமனைத் துதித்து வந்தால், பிள்ளை இல்லாக் குறை நீங்கும். மனக் குழப்பங்கள் அகலும்.

பக்த ஆஞ்சனேயர்: பக்தர்கள்தான் தெய்வத்தை வணங்குவார்கள். கடவுள் பக்தர்களைக் கும்பிடுவாரா? இதற்கு பதில் சொல்வதுபோல் குவித்த கரங்களுடன் கும்பிடும் பாவத்தில் காட்சி தருபவர், பக்த ஆஞ்சநேயர். தன்னை வணங்குவோர் ராம நாமம் சொல்லிப் பணியும்போது அதனைப் பணிவோடு ஏற்கும் பாவம் இது என்பர். ராமபிரானை எங்கும் எதிலும் காண்பவர் அனுமன் என்பதால், தன் பக்தர்களின் மனதிலும் ராமச்சந்திரன் உறைவதாகக் கருதி வணங்கும் வடிவம் இது எனவும் சொல்வர். பக்த ஆஞ்சநேயரை வழிபடுவோரின் உள்ளம் அமைதி பெறும். இல்லத்தில் இனிமை நிறையும்.

வீர ஆஞ்சனேயர்: சிறுவயதில் செய்த குறும்புகளால் முனிவர்களின் சாபத்துக்கு ஆளாகி, தன் ஆற்றல் என்ன என்பதையே மறந்தார் மாருதி. ராமபிரானுக்காக சீதையைத் தேடிச் செல்லப் புறப்பட்ட அவர், கடலைக் கடக்கத் தயங்கி நின்றார். அப்போது ஜாம்பவான், அனுமனுக்கு அவனது வலிமைபற்றி எடுத்துச் சொன்னார். அதைக் கேட்டதும் தனது வீரமும், வலிமையும் நினைவுக்கு வர, விஸ்வரூபம் எடுத்தார் அனுமன். அந்தத் திருவடிவமே வீர ஆஞ்சநேயர். மனதைரியம் அதிகரிக்கவும், தீவினைத் துன்பங்கள் விலகவும் இவரை வணங்குவது நல்லது.

யோக ஆஞ்சனேயர்: அவதார நோக்கம் நிறைந்ததும் ராமபிரான் வைகுந்தம் சென்றார். அதன் பின்னர் இடைவிடாத ராம தியானத்தில் மூழ்கினார் ஆஞ்சநேயர். பீமன், திரௌபதிக்காக சௌகந்திக மலரை எடுக்க வந்தபோது இவரைப் பார்த்தான். வயோதிக வானரம் என அற்பமாக நினைத்தான், அதனால் இவரோடு போரிடவும் துணிந்தான். முடிவில் தோற்ற பீமன், தனது அண்ணனே அனுமன் என்பதை உணர்ந்து அவரைப் பணிந்தான். அவர் உதவியால் தேவலோக மலரையும் எடுத்துவந்தான். இன்றும் சிரஞ்சீவியாக ராமநாமம் ஒலிக்கும் இடமெல்லாம் சென்று அந்த நாமத் தேனில் திளைத்து மகிழ்ந்து கொண்டிருப்பவர் இவர். ராம நாமம் சொல்லி இவரை வழிபட்டால், கேட்பவை யாவும் கிட்டும்; நல்லதே நடக்கும்.

சிவ பிரதிஷ்டா ஆஞ்சனேயர்: இராமேஸ்வரத்தில் ராமர் சிவ பூஜை செய்ய விரும்பியபோது அவருக்காக லிங்கத் திருமேனியை எடுத்து வரப்போனார் மாருதி. காலதாமதமாகிவிடவே, சீதாதேவி பிடித்த மணல் லிங்கத்தை வழிபட்டார் ராமபிரான். தாமதமாக வந்த மாருதி வருந்தினார். அனுமன் எடுத்து வந்த லிங்கத்தினை அவரையே பிரதிஷ்டை செய்யச் சொல்லி அதனையும் பூஜித்து வாயுமகனின் வாட்டத்தினைப் போக்கினார் ராமர். லிங்கத் திருமேனியை ஸ்தாபித்த திருவடிவில் காட்சி தருபவர் இந்த மாருதி. மேலும் சிவனின் அம்சமே அனுமன் எனவும் சொல்வர். விருப்பங்கள் யாவும் ஈடேறவும், சுபகாரியத் தடைகள் நீங்கவும் இவரை பூஜிப்பது சிறப்பு.

சஞ்சீவி ஆஞ்சனேயர்: சமய சஞ்சீவியாக செயல்பட்டு ராமபிரானின் வெற்றிக்கு உதவியவர் ஆஞ்சனேயர். போரின்போது மயங்கி வீழ்ந்த லட்சுமணனும், இறந்த வானர வீரர்களும் பிழைத்தெழ அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வந்து உதவினார். இந்தக் காரணங்களால் அனுமனுக்கு சஞ்சீவிப் பட்டமும் கிடைத்தது. சஞ்சீவி அனுமனை வழிபட்டால், மன சஞ்சலங்கள் மறையும். நோய்களின் பாதிப்பு குறையும். ஆயுள், ஆரோக்கியம் நீடிக்கும் என்பது நிச்சயம்!


Comments

Post a Comment