திருப்பதி பெருமாளின் மாமனார்



பகவத் ராமானுஜருடைய முக்கியச் சீடர்களுள் ஒருவர் அனந்தாழ்வான்.

திருவேங்கடமுடையானின் கைங்கர்யங்களில் ஈடுபட ராமானுஜர் தேர்ந்தெடுத்த சீடரே அனந்தாழ்வான்.

இவர் தற்போதைய கர்நாடக மாநிலம் திருநாராயணபுரத்திற்கு மிக அருகிலுள்ள சிறுபுதூர் என்ற ஊரில் கலி 4155 விஜய வருடம் கி.பி.1053 சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர்.

அவருடைய ஆசார்யரான ராமானுஜர் அவதரித்தது ஸ்ரீபெரும்புதூர் என்றால், சீடர் அனந்தாழ்வானின் அவதாரத் தலம் சிறுபுதூர் என்று அமைந்தது ஆச்சர்யம்!

அனந்தாழ்வான், தன்னுடைய ஆசார்யரான ராமானுஜரின் ஆணைப்படி திருவேங்கடமுடையானுக்கு கைங்கர்யம் செய்ய திருப்பதி சென்றார். அனந்தாழ்வானுக்கு முன்னதாக ராமானுஜரே திருப்பதி செல்லவில்லை என்று தெரிகிறது. திருமலையைத் தன் கால்களால் மிதித்து ஏறமுடியாது என்று ராமானுஜர் மறுத்தபோது, அனந்தாழ்வான் முதலானோரின் அன்பு வேண்டுகோளால்தான் திருப்பதிக்குச் சென்றார்.

அனந்தாழ்வான் திருவேங்கடமுடையானுக்கு புஷ்பக் கைங்கர்யம் செய்ய நினைத்து ஓர் ஏரி அமைத்து, நந்தவனம் அமைத்து பரிபாலித்து தம் கைங்கர்யங்களைத் தொடர்ந்தார். அவருக்கு உதவி செய்ய திருவேங்கடமுடையானே சிறுவனாக வடிவெடுத்து வந்தார். தான் தனது ஆசாரியன் நியமனப்படி கைங்கர்யம் செய்வதால் சிறுவனை அதில் தலையிட வேண்டாம் என்று கூறி துரத்திவிட்டார்,

அனந்தாழ்வான்.

வேங்கடவன் மீண்டும் அச்சிறுவன் வேடத்திலேயே வந்து, அனந்தாழ்வானின் கர்ப்பவதியான மனைவிக்கு உதவியபோது, கோபத்தோடு அவனைத் துரத்த, தம்கையில் இருந்த மண்வெட்டி போன்ற ஆயுதத்தை வீசினார். அது சிறுவனின் முகவாய்க் கட்டையில் பட்டு, ரத்தம் பெருகியது. சிறுவனாக வந்த வேங்கடவன், பயந்தவன் போல் ஓடிவிட்டார்.

மறுநாள் அனந்தாழ்வான், எம்பெருமானின் சன்னதிக்குச் சென்றபோது பெருமானின் முகவாய்க் கட்டையில் வழிந்த ரத்தப் பெருக்கைக் கண்டு திடுக்கிட்டார். சிறுவனாக வந்தவர் திருமாலே என உணர்ந்தார். அவரது திருமுகத்தில் காயம்பட, தானேதான் காரணம் என்றுணர்ந்து, காயத்தில் பச்சைக் கற்பூரத்தை அப்பினார். அதனால்தான் இன்றும் திருவேங்கடமுடையானுக்கு பச்சைக் கற்பூரம் சாத்தப்படுகிறது.

சிறுவனாக வந்த திருமால் மேல் அனந்தாழ்வான் எறிந்த ஆயுதம் கோபுர நுழைவாயிலில் வலப்புறம் உள்ள கதவிற்கு அருகே மேலே தொங்கவிடப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.

அனந்தாழ்வானின் நந்தவனத்தில் திருவேங்கடமுடையானும் பத்மாவதித் தாயாரும் பூக்களைப் பறித்து இஷ்டப்படி விளையாடி வந்ததால், நந்தவனத்தில் ஆங்காங்கே பூக்கள் சிதறியிருக்கும். காலை வேளைகளில் இக்காட்சியைக் கண்ட அனந்தாழ்வான், இரவில் யாரோ நந்தவனத்தில் பூக்களைத் திருடுகிறார்கள் என்று நினைத்து அதைக் கண்டுபிடிக்க ஒரு நாள் இரவு, நந்தவனத்தில் மறைந்து இருந்து கண்காணித்தார்.

வழக்கம்போல் வந்த திவ்யதம்பதிகளைக் கண்டவர், அவர்கள் பெருமானும் பிராட்டியும்தான் என்றறியாமல் அவர்களைப் பிடித்துக் கட்டிப் போட முயன்றபோது பெருமாள் தப்பித்து ஓடிவிட, பிராட்டி மட்டும் அகப்பட்டுக் கொண்டாள். அனந்தாழ்வானிடம் தன்னை மகளாக பாவித்து விட்டுவிடும்படி பிராட்டி கேட்டுக் கொண்டாலும், அனந்தாழ்வான் பிராட்டியை விடாமல் ஒரு செண்பக மரத்தினடியில் கட்டிப்போட்டார்.

மறுநாள் காலை சன்னதியில் திருவேங்கடவனின் திருமார்பு லக்ஷ்மியைக் காணாமல் திகைத்துப்போன அர்ச்சகர்களிடம் எம்பெருமான் நடந்த விவரங்களைக் கூறி, அனந்தாழ்வானையும் அப்பெண்ணையும் அழைத்து வரச்சொன்னார்.

அதுபோல அனந்தாழ்வான் அப்பெண்ணுடன் சன்னதிக்குச் செல்ல, பிராட்டியும், தான் அனந்தாழ்வானின் மகள் என்று கூறி, அனைவரின் முன்பாக வேங்கடவனின் திருமார்பில் இணைந்தாள். பெருமானும் பிராட்டியைத் தன்னிடத்தே சேர்த்த அனந்தாழ்வானை தன் மாமனாராக பாவித்து அவருக்கு மாலை மரியாதைகளைச் செய்வித்தான்.

இப்படி பல வைபவங்களை அனந்தாழ்வானுக்குக் காட்டினான், வேங்கடவன். ஆடிப்பூர நன்னாள் ஒன்றில் அனந்தாழ்வான், பெருமானின் திருவடியில் இணைந்தார். தாம் அமைத்த நந்தவனத்திலேயே மகிழமரமாய் இன்றும் விளங்குகிறார்.

அனந்தாழ்வான் நந்தவனம், ராமானுஜ புஷ்கரணி, மகிழமரம் ஆகியவற்றை இன்றும் வேங்கடமாமலையில் தரிசிக்கலாம்.

திருவேங்கடமுடையான் அனந்தாழ்வான் நந்தவனத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி திருமலையில் பிரம்மோத்ஸவம் முடிந்த மறுநாள் - அனந்தாழ்வானின் அவதார நன்னாளில் நடக்கிறது.

குருவடி போற்றிய அனந்தாழ்வானின் திருவடி பணிவது அனந்தகோடி நன்மை தரும்.


Comments