மருதமலை மாமணியே முருகா




இயற்கை வளங்கள் நிறைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் அறுநூறு அடி உயரத்தில் அமைந்துள்ளது மருதமலைக்கோயில்.

மருத மரங்கள் அடர்ந்து செழித்து சோலையாக காட்சியளித்த மலை என்பதால் மருதமலை எனப் பெயர் பெற்றது. உடல் பிணி தீர்க்கும் மருத்துவ குணங்களைக் கொண்ட அற்புத மூலிகைச் செடிகளை, பெரும் அளவில் தன்னகத்தே கொண்ட ஓர் அற்புத மலையாகும்.

முன்பு கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய `ஆறை' நாட்டின் எல்லையாக மருதமலை இருந்தது. இக்கோயில் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கான கல்வெட்டு மற்றும் புராணச் சான்றுகள் உள்ளன.

மருதமலைக் கோயிலை படிக்கட்டுகள் வழியாகச் சென்றும் வாகனங்களில் மலைப்பாதை வழியாகச் சென்றும் அடையலாம்.

படிகள் வழியாகச் செல்ல ஆரம்பித்தவுடன் முதலில் அருள்பாலிப்பவர் `தான்தோன்றி விநாயகர்'. பாறையில் மேற்கு நோக்கி தோன்றியுள்ள சுயம்பு உருவம். இவர் அருகே சிலைவடிவான விநாயகரையும் பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்துள்ளனர்.

மலைப்படிகளில் தீப வழிபாடு செய்கின்றனர். அப்படிச் செய்வதால், நினைத்த காரியங்கள் நிறைவேறுவதாக நம்புகின்றனர். இப் படிகளின் முடிவில் வலது புறத்தில் சிறிய ஆஞ்சநேயர், அருளாட்சி புரிகின்றார்.

அடுத்து சிறப்புடன் அமைந்துள்ள கோயிலில் இடும்பன் அருள்பாலிக்கின்றார். இவரை வணங்கினால் முருகனை வழிபட்ட பலன் கிடைக்குமாம். உடல் உபாதைகள் நீங்கவும், குழந்தைப் பேறு கிடைக்கவும் திரளான பக்தர்கள் இவர் சன்னதி முன் கூடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியபின்பு பக்தர்கள் கோயில் மேடையைச் சுற்றி உள்ள மரங்களில் கட்டிய தொட்டில் குழந்தை, மண்ணால் செய்யப்பட்ட உருவங்கள் அதிக அளவில் காணப்படுவதே இவரது அருளுக்குச் சான்றாகும்.

இடும்பன் கோயிலை அடுத்து `குதிரைக் குளம்பு' எனப்படும் பாறையில் அமைந்துள்ள சுவடினைக் காணலாம். முருகவேள், சூரனை போரில் வெல்ல புறப்பட்டுச் செல்லும்போது குதிரையின் குளம்பு பதிந்த இடம் எனச் சொல்லப்படுகிறது. இதைக் கடந்து மேலே சென்றால் மூல ஸ்தான கோயிலை அடையலாம். இங்குள்ள சந்நதியில் அருவுருவத் திருமேனியாக வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு முருகன் காட்சி அளிக்கின்றார். பாம்பாட்டிச் சித்தரும் ஏனைய பக்தர்களும் ஆதியில் இவ்வடிவைத்தான் பூஜித்தனர்.

தற்போது இவ்வுருவங்கள் மீது வள்ளி-தெய்வானை, சுப்ரமணியர் ஆகிய உருவங்களைக் கொண்ட வெள்ளிக் கவசங்களைச் சாத்தி அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து வடகிழக்குப் பகுதியில் அமைந்திருப்பது பஞ்ச விருட்ச விநாயகர். இங்கே அரசமரம், வேம்பு, குரகட்டை, கல்இச்சி, வக்கணை ஆகிய மரங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி வளர்ந்திருக்கின்றன. இதனை பஞ்ச பூத விருட்சம் எனவும் கூறுகின்றனர். இதன் காற்று பிணிகளைத் தீர்க்க வல்லது எனவும், பல முனிவர்கள் இம்மரத்தடியில் தவம் செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

இம்மரங்களின் அடியில் அமைந்துள்ள மேடையில் கிழக்கு நோக்கியும், மேற்கு நோக்கியும் விநாயகர்கள் காணப்படுகின்றனர் கிழக்கு நோக்கிய விநாயகர் சிலையின் தென்புறம் ஓர் அபூர்வமான முருகன் சிலை உள்ளது. முருகன் மயில் மீது அமர்ந்திருக்க, அவரது `வேல்' கீழ் நோக்கி குத்துவதைப் போன்ற அமைப்பைக் கொண்டு இச் சிலை அமைந்துள்ளது.

பிரதான முருகன் சந்நதி, பட்டீஸ்வரர்- மரகதாம்பிகை சந்நதிகளின் நடுவே அமைந்துள்ளதால் சோமாஸ்கந்த மூர்த்தம் என்ற சிறப்பு அமைப்பைப் பெற்றுள்ளது. மூலவர் மருதாசல மூர்த்தி பேரெழிலோடு ஞான சொரூபமாய் நின்று ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்கும் பேரழகைக் காணக் கண் கோடி வேண்டும்.

அர்த்த மண்டபத்தின் வடபகுதியில் தண்டாயுதபாணி, வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், வீரபாகுத்தேவர், சிவலிங்கம், பாம்பாட்டிச் சித்தரின் பாதரட்சை ஆகிய உற்சவ மூர்த்திகளை தரிசிக்கலாம்.

மூலவரை தரிசிக்கும் முன்பு தென்பகுதியில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் முழு முதற் கடவுளாம் வேழமுகனை தரிசிக்க வேண்டும். வெளிப் பிராகாரத்தில் பட்டீஸ்வரர், சண்டிகேஸ்வரர், மரகதாம்பிகை ஆகிய சந்நதிகள் அமைந்துள்ளன.

வசந்த மண்டபத்தின் வடபகுதியில் கிழக்கு நோக்கிய பெருமாள் சந்நதி உள்ளது. மண்டபத்திற்கு வெளியே நவகிரக சந்நதி அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவர் சந்நதி எதிரிலும், ஆதீமூல ஸ்தான சந்நதி எதிரிலும் தனித்தனியே தீப ஸ்தம்பங்கள் உள்ளன.

ஆதீமூலஸ்தான சந்நதிக்கு பின் உள்ள படிக்கட்டுகள் வழியே கீழே இறங்கிச் சென்றால் தல விருட்சமான மருத மரமும், மருத தீர்த்தமும், கன்னிமார் சந்நதியும் உள்ளன.

கன்னிமார் சந்நதியில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் படிக்கட்டுகள் வழியே சென்றால் பதிணென் சித்தர்களில் ஒருவரான `பாம்பாட்டி சித்தர்' சமாதியை அடையலாம். இங்கு பாம்பு படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பில் இயற்கையாகவே ஒரு பாறை அமைந்துள்ளது. அவர் வாழ்ந்த குகையில் உள்ள ஒரு பாம்பு, பக்தர்கள் படைக்கும் பாலையும் பழத்தையும் உண்டு செல்வதாகக் கூறுகிறார்கள்.

இச்சந்நதியில் தியானம் செய்ய, மன அமைதி கிடைப்பதுடன் இங்கு எழும் அதிர்வுகளை உணர முடிகிறதாம். இங்கு வழிபடுவோர் விஷ சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து விடுபட்டு சுகமடைகின்றனர்.

இத்தலத்தில் முருகப் பெருமானுக்கு உரிய கார்த்திகை, தமிழ் வருடப்பிறப்பு, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் மிகச் சிறப்புடன் நடைபெறுகிறது. ஆடிக்கிருத்திகையும் தைப்பூச பிரம்மோற்சவ பெருவிழாவும் தலையாய திருவிழாக்களாகும்.

தைப்பூசத் தேர்த் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கி வசந்த உற்சவம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படும் பிரம்மோற்சவ பெருவிழாவாகும். 7ம் நாள் திருக்கல்யாண உற்சவமும், 8ம் நாள் திருத்தேர்த் திருவிழாவும் சிறப்பானவை.முதலில் சிறிய தேரில் விநாயகப் பெருமானும் வீரபாகுத் தேவரும் உலா வருவதைத் தொடர்ந்து, பெரிய தேரில் வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி உலா வரும் ஒப்பற்ற காட்சி தேவலோக நிகழ்வுகளுக்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. ஒன்பதாவது நாள் மகா தரிசனத்தைத் தொடர்ந்து மாலை கொடி இறக்கப்படும். பத்தாவது நாள் வசந்த உற்சவத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவு பெறும். திருவிழாக் காலங்களில் ஆன்மிகச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை என ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தைப்பூசத் திருவிழாவின் சிறப்பு வாய்ந்த நிகழ்வு, சுற்று வட்டார ஊர்களிலிருந்து காவடி சுமந்து நடைபயணமாக வந்து மருதாசல மூர்த்திக்கு நேர்த்திக் கடன் செலுத்துவது. காவடிகளில் சுமந்து வருகின்ற பஞ்சாமிர்த பொருட்களை ஒன்றாகச் சேர்த்து பஞ்சாமிர்தம் தயாரித்து அதை மருதாசல மூர்த்திக்கு அபிஷேகம் செய்து அவரை தரிசனம் செய்வது வழக்கம். கிருத்திகை போன்ற நாட்களில், பக்தர்களின் வேண்டுதலுக்காக சுவாமி தங்கரதத்தில் புறப்பாடு நடைபெறும்.

காமிக ஆகமப்படி தினசரி ஐந்து கால பூஜைகள் நடைபெறும் இவ்வாலயம் தரிசனத்திற்காக காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்; பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 வரையிலும் திறந்திருக்கும்.

கோவை நகரின் மேற்கு திசையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் மருதமலை அமைந்துள்ளது.

Comments