ஆழ்வாராய் வந்த ஸ்ரீ ராமர்

திரேதாயுகத்தில் பகவான் மகாவிஷ்ணு ஸ்ரீராமனாக அவதரிக்க, அவருக்கு சேவை சாதிக்கவே ஆதிசேஷன் இளையபெருமாளாக ஸ்ரீராமனின் சகோதரனாக அவதரித்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே!

ராமாயண காலகட்டம் முழுவதும் இலக்குவனர் தமது மனைவி, குடும்பம், பாசம் என்ற அனைத்தையும் துறந்து ஸ்ரீராமர் சேவை ஒன்றே நமக்குப் போதுமென்று வாழ்ந்து வந்தவர். இதனால் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ஒருநாளாவது இளையபெருமாளுக்கு தாம் சேவை செய்துவிட வேண்டும் என்று அடிக்கடி மனதில் நினைத்துக் கொள்வாராம்.

அந்த எண்ணத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவே துவாபரயுகத்திலே இளையபெருமாள் பலராமனாகவும், ஸ்ரீராமர் அவருக்குத் தம்பியாக கிருஷ்ணனாகவும் அவதாரம் செய்தனர். அந்த யுகத்திலும் பலராமன், கிருஷ்ண சேவையிலே தனது கவனத்தைச் செலுத்த, கிருஷ்ணனாக இருந்து சேவை சாதிக்க முடியவில்லையாம். அதனால்தான் கலியுகத்திலே ஓர் `ஆழ்வாராக' அவதரித்து தமது எண்ணத்தைப் பூர்த்தி செய்து கொண்டதாக கூரத்தாழ்வான் வைபவம் பற்றி குறிப்பிடுகிறது புராண வரலாறு.

மோட்ச புரியிலே சிறந்தது காஞ்சி என்று குறிப்பிடுவார்கள். அத்தகைய காஞ்சி மாநகரில் கூரம் என்ற தேசத்துத் தலைவனாக இருந்து ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தவர்தான் கூரத்தாழ்வான். இவரது இயற்பெயர் ஸ்ரீவத்ஸாங்கமித்ரர் என்பதாகும். நாள்தோறும் அன்னதானம் வழங்கியும், இல்லாதவர்களுக்கு நவமணிகளை காணிக்கை தந்தும் தர்மத்தின் ஒப்பற்ற தலைவனாகவும் ராஜ்ய பரிபாலனத்தை நிர்வகிக்கும் திறமையான நிர்வாகியாகவும் திகழ்ந்து வந்தான். அஷ்ட ஐஸ்வர்யங்களும் நிரம்பப் பெற்றவன். பேரருளாளன். வரதராஜப் பெருமாள் மீது பரம பக்தி நிரம்பியவன்.

இவரது அரண்மனை வாயிற்கதவைச் சாத்தும்போது அதில் கட்டப்பட்டிருக்கும் மணிகளின் `கிண்கிணி' ஓசை பல மைல் தூரம் கேட்கும் என்றால் எத்தனை பெரிய வாயில்களைக் கொண்டதாக இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்! இவரது திருமாளிகையின் கதவுகள் காஞ்சிபுர பேரருளாளன் வரதராஜப் பெருமாள் சன்னதியின் கதவுகள் சாத்தப்பெற்ற பிறகே சாத்தப்படுமாம்.

ஒரு முறை கோவில் கதவு மூடப்படுவதற்கு சற்று தாமதம் ஆகிவிட்டது. அது அறியாத ஆழ்வார் மாளிகைச் சேவகர்கள் கதவைச் சாத்த ஆரம்பிக்க, கதவில் இருந்த மணிகளின் கிண்கிணி ஓசை எழுந்து காஞ்சிபுரம் வரை ஒலித்ததும், அந்த ஓலியைக் கேட்ட பெருந்தேவியார், பெருமாளிடம் எங்கிருந்து வருகிறது இந்த ஓசை என்று கேட்க, அது ஆழ்வானின் திருமாளிகையின் கதவில் உள்ள மணிகளின் ஓசை என்று கூறினாராம். அதைக்கேட்டு வியப்புற்ற தாயார், அத்தனை ஐஸ்வர்யங்களைப் பெற்ற அந்த ஆழ்வாரை, தான் காண வேண்டும் என்று கூற, பெருமாளும் திருக்கச்சி நம்பியிடம் கூறி ஆழ்வாரிடம் தெரிவிக்கச் சொன்னாராம்.

திருக்கச்சி நம்பியும் ஆழ்வாரின் திருமாளிகையை அடைந்து தாயார் வியப்புற்ற செய்தியைக் கூறி, தங்களைக் காண வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறார் என்று கூறி அழைத்துச் சென்றார். அந்த நாள் முதலே ஆழ்வார் தனது செல்வம், புகழ், பெருமைகள் அனைத்தையும் விட்டு ஒரு நல்ல ஆச்சார்யன் கீழ் சேவை செய்யத் தீர்மானித்து சன்னியாசிக் கோலத்தைப் பூண்டு கிளம்பிவிட்டாராம்.

இப்படியாகத்தான் கூரத்தாழ்வார் ராமானுஜரை வந்தடைந்து அவரது பிரதான சீடரானார். ஆழ்வாரும் ராமானுஜர் சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மகான். ஒருவகையில் ராமாவதாரத்தில் தமக்கு சேவை செய்து தொண்டாற்றிய இளையபெருமாளுக்கு இந்த ஆழ்வார் அவதாரத்தில் தாம் சேவை செய்து ஸ்ரீராமர் தனது எண்ணத்தைப் பூர்த்தி செய்து கொண்டாராம்.

இத்தகைய புராண வரலாற்றுச் சிறப்புமிக்க கூரத்தாழ்வான் தினமும் பூஜித்து வந்த தலம் பங்கஜவல்லி உடனுறை ஆதிகேசவப் பெருமாள் என்ற திருத்தலமாகும். இத்தலத்தில் ஆழ்வார் பூஜித்துவந்த ஸ்ரீ ராம, லட்சுமண, சீதாதேவி விக்ரகங்கள் இன்றும் மூலவரான ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் சன்னதியில் காணலாம்.

இத்திருத்தலம் நரசிம்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது என்றும், முதன் முதலாக பல்லவர்கள் கருங்கற்களைக் கொண்டு கோயில் எழுப்பும் கலையை இக் கோயிலிலிருந்துதான் ஆரம்பித்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

கோயில் கிழக்குப் பார்த்து அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஆதிகேசவப் பெருமாள் கம்பீரமாக வீற்றிருந்து நமக்கு சேவை சாதிக்கின்றார். வலதுபுறம் தனிச் சன்னதியாக பங்கஜவல்லித் தாயாரும், இடது புறம் ஆண்டாள் சன்னதியும் அமைந்திருக்கிறது. சுற்றுப்பிராகாரத்தில் சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னதிகள் அமைந்துள்ளன.

கூரத்தாழ்வானுக்கு தனிச் சன்னதியாக இக் கோயில் அமைந்துள்ளது சிறப்பான அம்சமாகும். ஷ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் தரிசனம் கண்டவர்கள் இத்தலத்துக்கு வந்து கூரத்தாழ்வாரையும் தரிசித்துச் செல்வது ஐதிகமாக பக்தர்கள் மத்தியில் நிலவுகின்றது.

இத்தலத்து ஆழ்வாரைத் துதிப்பதால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை அவர் தீர்த்து வைப்பதாகவும் மற்றும் கல்வி ஞானம் சிறக்க அருள்பாலிப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. தற்போது கூரத்தாழ்வாரின் ஆயிரமாவது ஆண்டு பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. பிப்ரவரி 2010 வரையில் இவ்விழாவை சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

அவசியம் குடும்பத்துடன் சென்று தரிசிக்க வேண்டிய ஆலயம்.

காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கூரம் கேட் என்ற இடத்திலிருந்து சுமார் 3 கி.மீ. சென்றால் `கூரம்' திருத்தலத்தை அடையலாம். காஞ்சிபுரத்திலிருந்து 10 கி.மீ. தூரம் இருக்கும். கூரத்துக்கு மினி பேருந்துகள் செல்கின்றன.

Comments