கொம்பு முளைத்த இளநீர்



தாமிரபரணி ஆற்றங்கரை யோரம், இயற்கை எழில் பொங்கும் தென்திருப்பேரை என்ற சிற்றூரில் நவ கைலாயங்களுள் ஒன்றான கைலாசநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

புதன்கிரகதோஷம் நீக்கும் இத்தலத்து இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இங்கே ஓர் அற்புதம் காத்திருக்கிறது. அது, கொம்பு முளைத்த இளநீரைப் பார்க்கும் வியப்பான வாய்ப்பு. அது என்ன அதிசயம்?

வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இக்கோயிலின் எதிரே இருந்த தென்னை மரத்தின் இளநீர் அம்மனுக்கும்; சுவாமிக்கும் அபிஷேகத்திற்குப் பயன்படுத் தப்படுவது வழக்கம்.

ஒரு சமயம் இவ்வழியே வந்த வெள்ளைத்துரை ஒருவர் தோட்டத்துப் பணியாளரிடம் தாகம் தீர்க்க இளநீர் கேட்டாராம். கோயிலுக்கு உரிய அபிஷேக இளநீரைத் தர பணியாளன் மறுத்தான். கோபமடைந்த அதிகாரி, ``இக்கோயில் இளநீருக்கு கொம்பு முளைத்திருக்கிறதா?'' என்று ஏளனமாகப் பேசி வாளை உருவ, அச்சமடைந்த தோட்டக்காரன், இளநீரைப் பறித்துப் போட்டான்.

இளநீரைப் பார்த்த அதிகாரிக்கு அதிர்ச்சியும் அச்சமும் உருவானது. காரணம், அந்த இளநீருக்கு மூன்று கொம்புகள் முளைத்திருந்தன. தம்முடைய தவறை உணர்ந்தவர் இக்கோயில் இறைவனின் அபார ஆற்றலை உணர்ந்து அவரிடம் மன்னிப்பும் கோரினார்.

இந்த அற்புத நிகழ்ச்சிக்குச் சான்றாக மூன்று கொம்புகள் முளைத்த அந்த இளநீர் இன்றும் இத்தலத்து இறைவி அழகிய பொன்னம்மாளின் சன்னதியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கருவறை வாயிலில் துவார பாலகர்கள் உள்ளனர். இவர்களுக்கு முன்பாக விநாயகரும், முருகனும் அருள்பாலிக்கின்றனர்.

கருவறையில் பக்தர்களின் குறைதீர்க்கும் வள்ளலாக, சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார், கைலாசநாதர்.

ஜுரஹரதேவர் மூன்றுமுகம், மூன்றுகரங்கள், மூன்று கால்களுடன் காய்ச்சலைக் குணப்படுத்தும் வைத்தியராக நின்றவடிவில் காட்சி தருகிறார். தீராதக் காய்ச்சல் உடையவர்கள் இவருக்கு மிளகு படைத்து தீபமேற்றி வழிபட்டால் ஜுரம் குணமாகும் அற்புதம் நிகழ்கிறதாம்.

மகாமண்டபத்தின் வடபுறமுள்ள மேடையில் சந்திரசேகர சுவாமி மற்றும் அம்பாள் காட்சியளிக்கின்றனர். இறைவி அழகிய பொன்னம்மாளுக்கு தனி சிலையும் உள்ளது. மகாமண்டபத்தின் கீழ்ப்புறமுள்ள தூண்களில் ரோமச முனிவர் கைலாசநாதரை வழிபடும் காட்சி நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

முதற்பிராகாரத்தில் கன்னிவிநாயகரும், வள்ளி - தெய்வானையுடன் சிவலிங்கத்தை வழிபடும் தோற்றத்தில் முருகப்பெருமானும் காட்சி தருகின்றனர்.

தெய்வானை - வள்ளி சமேத முருகனை மனமார வழிபட்டு பின் சண்டிகேசுவரரைக் கும்பிட்டு வந்தால், சனீஸ்வர பகவானை தனி சந்நதியில் தரிசிக்கலாம்.

அடுத்து பைரவர் ஆறுமுகத்துடன் கம்பீரமாகக் காணப்படுகிறார். பூஜைமணி, கத்தி, கேடயம் சகிதமாக காணப்பெறும் இவருக்கு அருகே நாய் வாகனமில்லை. அஷ்டமி நாளில் இவரை வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும், அகலுமாம்.

புதனின் தலமானாலும் இங்குள்ள நவகிரகங்கள் யாவுமே பெருமை பெற்றுள்ளன.

கல்வி, கேள்வி, அறிவு, ஞானம் இவற்றிற்குக் காரணமாக விளங்கும் புதன், நவகிரகங்களுள் ஏழாவதாகப் போற்றப்படுகிறார். படிப்பு வரம் வேண்டுவோரும், ஜாதகத்தில் புதனின் பலம் குறைவாக உள்ளோரும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் நற்பலன் கிட்டும் என்பது நிச்சயம்!

திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலை யில் தென்திருப்பேரை என்ற சிற்றூரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Comments