மதுரை அருகே... பெருமாள் கோயிலில் அருளும் குரு பகவான்!





எந்த ஓர் ஆலயத்திலும் அங்கு பிரதிஷ்டையான பிரதான மூலவர் விக்கிரகம்தான், முதன்மையான வழிபாட்டில் இருக்கும். ஆனால் சில ஆலயங்களில், மூலவர் விக்கிரகங்களை விட பரிவார மூர்த்திகளுக்கு வழிபாடும் வரவேற்பும் அதிகமாக இருக்கின்றன. ஆலயத்துக்கு வரும் பக்தர்களும், குறிப்பிட்ட அந்த பரிவார மூர்த்தியை பிரதானமாக வழிபட்டுச் செல்வதுண்டு.

திருநள்ளாறில் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர்தான் பிரதான மூலவர். ஆனால், அவரை விட அங்கு குடி கொண்டிருக்கும் சனிபகவானை வணங்குவதில்தான் பலருக்கும் நாட்டம். இதேபோல், கிரகங்கள் ஆட்சி செய்யும் திருத்தலங்களில் பிரதான மூலவருக்கு உரிய பரிகாரங்களை செய்வதை விட, அங்கு அருளாட்சி செய்யும் நவக்கிரக சந்நிதியில் தங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லி, வழிபடவே பக்தர்கள் அதிகம் திரள்கிறார்கள். இப்படி எத் தனையோ தலங்கள் உண்டு.

அவற்றுள், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில், சோழவந்தானுக்கு அருகில் உள்ள குருவித் துறையும் ஒன்று. இந்த ஊர்- அயன் குருவித்துறை மற்றும் கோயில் குருவித்துறை என இரு பகுதிகளாக விளங்குகிறது. இதில், 'கோயில் குருவித் துறை' பகுதியில் அமைந்துள்ளது சித்திர ரத வல்லப பெருமாள் ஆலயம். குரு பகவானின் பிரச்னையைத் தீர்த்தருளி அவருக்குப் பிரத்தியேக மாகக் காட்சி தந்து அருளிய பெருமாள் இவர். இதனால், இந்த ஆலயத்தின் வெளியே குரு பகவானுக்கென்று தனிக் கோயில் இருக்கிறது (பெருமாள் கோயில் என்பதை விட, குரு கோயில் என்றால்தான் பலரும் இந்தத் திருக்கோயிலை அடையாளம் சொல்கிறார்கள்).

பொதுவாக, சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் திருத்தலங் களில் நவக்கிரகத்துக்கு என்று தனிச் சந்நிதி பெரும்பாலும் இருக்கும் (முற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்ட சில சிவ ஆலயங்களில் நவக்கிரகத்துக்கு சந்நிதி இருக்காது. தல புராணப்படி சில ஆலயத்தில் உறையும் இறைவனோ அல்லது பிற தெய்வங்களோ நவக்கிரக தோஷத்தையும் போக்கும் சக்தி கொண் டிருப்பதாகவும் சொல்வர்). இந்த ஒன்பது கிரக அதிபதிகளும்தான் மனிதர்களின் ஏற்றத் தாழ்வுகளுக்கு, நன்மை- தீமைகளுக்குக் காரணமாக அமைகிறார்கள்.


கையில் உள்ள ஐந்து விரல்களில் எந்த விரலுக்கு அதிக முக்கியத்துவம் என்று சொல்ல முடியுமா? அதுபோல் நவக்கிரகங்களில் எந்தக் கிரகத்துக்கு அதிக முக்கியத்துவம் என்று கூற முடியாது. ஒவ்வொரு கிரக அதிபதியும் ஒவ்வொரு வகை யான சுகத்தை- சந்தோஷத்தை மனித குலத்துக்கு வழங்கி வருகிறார்கள். இவர்களில், வியாழ பகவான் என்று அழைக்கப்படும் குரு பகவான், நவக்கிரக வரிசையில் முக்கியமான ஓர் அந்தஸ்தில் இருக்கிறார். இவரை வணங்கினால் ஞானம், செல்வம் முதலான வற்றை அடையலாம். 'குரு' என்றால்,
'இருளை நீக்குபவர்' என்று பொருள். அதாவது, நம்மிடம் இருந்து வரும் அறியாமையாகிய இருளை நீக்குபவர்.

சிவாலயங்களில் குரு பகவான் எழுந்தருளி இருப்பது சாதாரணமாகப் பார்க்கக் கூடிய ஒன்று. ஆனால், வைணவத் தலம் ஒன்றில் குருபகவான் எழுந்தருளி இருப்பது, சற்று வித்தியாச மானதுதான். தேவ லோகத்தில் இருந்த குரு பகவான் பூலோகத்துக்கு வந்து, இங்கு வீற்றிருந்து பெருமாளைத் தரிசித்த இடம் என்பதால், 'குரு வீற்றிருந்த துறை' என ஆரம்ப காலத்தில் இந்தத் தலம் வழங்கப்பட்டது. பின்னாளில் இதுவே மருவி, 'குருவித்துறை' ஆகி இருக்கலாம் என்கிறார்கள். இடைக்காலப் பாண்டிய மன்னர்களில் ஒருவனான சடாவர்மன் ஸ்ரீவல்லபன் (கி.பி.1101- 1124) காலத்தில் இந்தப் பகுதிக்குக் 'குருவிக்கல்' என்ற பெயர் இருந்திருக்கிறது. வைகை ஆற்றில் ஒரு சிற்றணையை ஒட்டி இருந்த ஆற்றுத் துறை, 'குருவிக்கல்துறை' என அழைக்கப்பட்டதாம். இதுவே சுருங்கி, குருவித்துறை ஆனது என்றும் தகவல் இருக்கிறது.



பரஞ்ஜோதி முனிவர் அருளிய திருவிளை யாடற் புராணத்தில் 'பன்றிக்குட்டிக்கு பால் கொடுத்த படலம்' என்று ஓர் அத்தியாயம் இருக்கிறது. அதில், குருவித்துறையில் எழுந்தருளி இருக்கும் குரு பகவான் பற்றிய குறிப்பு காணப் படுகிறது. குருவித்துறை என்கிற இந்த ஊர், 'குருவிருந்த துறை' என்று, திருவிளையாடற் புராணத்தில் குறிக்கப்பெற்றுள்ளது.

குருவிருந்த துறையில் சுகலன்- சுகலை என்கிற தம்பதிக்குப் பிறந்த பன்னிரண்டு பிள்ளை களும், வைகைக் கரையில் தவம் இருந்த குரு பகவானின் தியானத்துக்கு இடையூறு செய்ததால், அவர்களைப் பன்றிகளாகப் போகும்படி குரு சபித்து விட்டாராம். அதேநேரம், இந்த சாபத் துக்கும் ஒரு விமோசனம் கொடுத்தார் குரு.

மதுரை நாயகனாம் சோமசுந்தரக் கடவுளே, இந்தப் பன்னிரண்டு பன்றிகளையும் ஆட்கொண்டு காத்து, மனிதர்களாக்கி வளர்ப்பார் என்றும் முடிவில் நாட்டை ஆளும் மன்னனின் அரசவையில் பன்னிரண்டு பேரும் அமைச்சர்களாக ஆவார்கள் என்றும் அருளினார். அதன்படி, பன்றிகளை வேட்டை ஆடுவதற்காக மன்னன் ராஜராஜ பாண்டியன் ஒரு முறை காட்டுக்கு வந்தான். பன்னிரண்டு பன்றிகளுடைய தாய்- தந்தையரை வேட்டையாடினான் மன்னன். அதன் பின், அநாதைகளான இந்தக் குழந்தைப் பன்றிகளை இறைவனே காத்து, இவர்களுக்கு உருவம் கொடுத்து பன்றி மலையில் வளர்த்ததாகவும், பின்னர் இவர்கள் அமைச்சர்களாக ஆனதாகவும் திருவிளையாடற் புராணம் கூறும்.

குருவித்துறை வைணவ ஆலயத்தில் அருள் புரியும் மூலவர் திருநாமம்- ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள். தாயார் திருநாமம்- செண்பகவல்லி. தன் மகன் கசனுக்கு ஏற்பட்ட ஆபத்தில் இருந்து அவனை விடுவிப்பதற்காக பெருமாளை வேண்டி இங்கே தவம் இருந்தார் குரு பகவான். அவரது தவத்துக்கு இரங்கிய பெருமாள், சித்திரங்கள் வரையப்பட்ட ரதம் (தேர்) ஒன்றில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சி கொடுத்தார். குரு பகவானுக்கு அருள் புரிந்ததோடு, அவரின் மகன் கசனையும் ஸ்ரீசுதர்சனத்தின் உதவியுடன் ஆபத்தில் இருந்து விடுவித்தார் எனவே, இந்தப் பெருமாள், 'சித்திர ரத வல்லப பெருமாள்' என்று அழைக்கப்பட்டார். இந்தப் பெருமாளுக்கு இந்தத் திருநாமத்தை சூட்டியவரே குரு பகவான்தான் என்கிறது தல புராணம்.

சித்திரங்கள் வரையப்பட்ட ரதத்தில் குரு பகவானுக்குப் பெருமாள் காட்சி கொடுத்தது- சித்திரை மாதம் சித்திரை நட்சத்திர தினம் என்று
சொல்லப்படுகிறது. தனக்குத் தரிசனம் தந்த பெருமாள் என்றென்றும் இங்கேயே இருந்து பக்தர்களின் குறைகளையும் களைய வேண்டும் என குரு பகவான் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்க... சித்திர ரத வல்லப பெருமாள் இங்கேயே கோயில் கொண்டு, இங்கே வரும் பக்தர்களுக்கு சகல வளங்களையும் அளித்து வருகிறார். வருகிற 6.12.08 அன்று குருப் பெயர்ச்சி நிகழ இருப்பதால், குரு பகவானுக்கு லட்சார்ச்சனையும் சிறப்பு வழிபாடுகளும் நடக்க இருக்கின்றன.

வைகைக் கரையில் அமைதியாகக் காட்சி தருகிறது ஆலயம். ஊரின் எல்லையில் ஒதுங்கி இருப்பதால், மாலை 5:30 மணிக்கே ஆலயத்தை மூடி விடுகிறார்கள் (விசேஷ நாட்களில் இது மாற் றத்துக்கு உரியது). குரு பகவான், இங்கு வந்து ஏன் தவம் செய்தார்? அதற்கான காரணத்தை அறிந்து கொள்வோமா?தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடுவே கடுமை யான யுத்தம் நடந்து கொண்டிருந்தது. தேவர்கள் தரப்பில் பாதிப்பு அதிகமாகவே இருந்தது. பலரும் மாண்டனர். அசுரர்களது தரப்பில் உயிரிழப்பு என்பதே இல்லை. இதற்குக் காரணம் அசுரர்களின் குருவாக விளங்கிய சுக்கிராச்சார்யர்தான்.

தேவர்களால் தாக்கப்பட்டு இறந்து விழுந்த அசுரர்களின் காதுகளில் 'மிருதசஞ்சீவினி' என்கிற மந்திரத்தை உச்சரித்து ஒவ்வொருவரையும் உயிர்ப்பித்துக் கொண்டிருந்தார். அதுதான் மிருதசஞ்சீவினி மந்திரத்தின் மகத்துவம். இறந்து போனவர்களது காதுகளில் இந்த மந்திரத்தை முறையாகச் சொன்னால்... இறந்து கிடப்பவர், சில விநாடிகளில் எழுந்து உட்கார்ந்து விடுவார்.

இந்த மந்திரத்தை முறையாக உச்சாடனம் செய்திருந்தார் சுக்கிராச்சார்யர். எனவே, தேவர்களின் தாக்குதலால் வீழும் அசுரர்களின் காதுகளில், மிருதசஞ்சீவினி மந்திரத்தைச் சொல்லி அவர்களை உயிர்ப்பித்து, மீண்டும் போருக்கு அனுப்பினார். இதனால், அசுரர்கள் தரப்பு பலத்தை இழக்காமல் ஏற்றம் பெற்றது. தேவர்கள் தரப்பு, உயிரிழப்பு காரணமாகத் துவண்டு போனது.

இதனால் கவலை அடைந்த தேவர்கள், இந்திர னிடம் முறையிட்டனர். அப்போது ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. 'தேவர்களில் ஒருவரும் இந்த மந்திரத்தை அறிந்து கொள்வதுதான் ஒரே வழி... நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் நபர், அசுர குலத்தில் நைச்சியமாக இணைந்து, சுக்கிராச்சார்யரிடம் இருந்து மிருதசஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொண்டு திரும்ப வேண்டும்' என்று முடிவெடுத்தனர்.
இதற்குத் தகுதியானவனாக குரு பகவானின் மகன் கசன் தேர்ந்தெடுக்கப்பட்டு, அசுர லோகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

சுக்கிராச்சார்யரின் மகள் பெயர் தேவயானை (முருகப் பெருமான் மணந்த தேவயானை வேறு). அசுர லோகம் சென்ற கசன், தேவயானையின் அன்பைப் பெற்றான். இறந்த உடலை மீண்டும் உயிர்ப்பிக்கும் மிருதசஞ்சீவினி மந்திரத்தை வேறு எவருக்கும் சுலபத்தில் கற்றுத் தர மாட்டார் சுக்கிராச்சார்யர். ஆனால், தேவயானையின் அன்பைப் பெற்றவன் என்பதால், இந்த மந்திரத்தைக் கற்பதில், கசனுக்குத் தடை ஏதும் இல்லை.

அதேநேரம், மிருதசஞ்சீவினி மந்திரத்தைக் கற்க வந்தவன் தேவகுலத்தைச் சார்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், சுக்கிராச்சார்யருக்கும் தெரியாமல் அவனைக் கொன்று விட எண்ணினர். அதன்படி ஒரு நாள், கசனை வஞ்சகமாகக் கொன்று, அவனைச் சாம்பல் ஆக்கி, சுக்கிராச்சார்யர் அருந்தும் பழ ரசத்தில் சாம்பலைக் கலந்து கொடுத்து விட்டனர்.

வெகு நாட்கள் ஆகியும், கசனைக் காணாமல் தவித்துப் போனாள் தேவயானை. தன் தந்தையிடம் சென்று, 'கசன் இருக்கும் இடத்தைத் தாங்கள் அறிந்து சொல்ல வேண்டும்' என்றாள். கொல்லப்பட்ட கசன் தன் வயிற்றில் சாம்பல் வடிவில் இருப்பதை, ஞான திருஷ்டியால் அறிந்தார் சுக்கிராச் சார்யர். மகளிடமும் கூறினார்.



'கசனை எப்படியாவது உயிர்ப்பிக்க வேண்டும்' என்று தேவயானை கலங்க... மகளின் கோரிக்கைக்கு இணங்கி தன் வயிற்றை வெடிக்கச் செய்து, கசனை உயிருடன் கொண்டு வந்தார் சுக்கிராச்சார்யர். வெளியே வந்த கசன், வயிறு வெடித்து இறந்து கிடந்த சுக்கிராச்சார்யரை, தான் கற்ற மிருதசஞ்சீவினி மந்திரம் சொல்லி உயிர்ப்பித்தான்.

குருகுல வாசம் முடிந்து கசன் விடைபெறுகிற போது, 'குருதட்சணையாக என்ன வேண்டும்?' என்று சுக்கிராச்சார்யரிடம் கேட்டான். தன் மகள் தேவயானையை மணம் புரிந்து கொள்ளுமாறு வேண்டினார் தந்தை. ஆனால் இதை மறுத்த கசன், 'நான் தங்களது வயிற்றில் இருந்து மறுஜன்மம் எடுத்ததால் தங்களுக்கு மகனாகவும், தேவயானைக்கு சகோதரனாகவும் ஆகிறேன். எனவே, அவளை மணந்து கொள்ள முடியாது. மன்னியுங்கள்' என்று சொல்லி, விடைபெற்றான். இதைக் கேள்விப்பட்ட தேவயானை, மிகுந்த கோபமுற்றாள். அசுர லோகத்தை விட்டு அவன் வெளியேறாதவாறு சாபம் இட்டாள். அவளின் சாபத்துக்குக் கட்டுப்பட்ட சப்த பர்வதங்கள், அசுர லோகத்தை விட்டுக் கசன் வெளியேறாதவாறு தடை ஏற்படுத்தித் தடுத்தன.

மிருதசஞ்சீவினி மந்திரம் கற்க அசுர லோகம் சென்ற தனது மகன் கசன், வெகு நாட்கள் ஆகியும் திரும்ப வராததால் தவித்துப் போனார் தேவகுரு. நாரதரிடம் ஆலோசனை கேட்க, அவர் தன் ஞான திருஷ்டியால் கசனுக்கு ஏற்பட்ட சாபம் பற்றி விளக்கினார். தேவகுரு இதற்குப் பரிகாரம் கேட்க, 'பூலோகம் சென்று வேகவதி ஆற்றின் (வைகை) கரையில் அமர்ந்து ஸ்ரீமந் நாராயணனை நோக்கி தவம் செய்யுங்கள். அவர் உங்களின் இன்னல் தீர்ப்பார்' என்றார்.

அதன்படி, குருவித்துறையில் அமைந்த இந்த வைகைக் கரைக்கு வந்து தேவகுரு தவம் இருந்தார். குருவின்
தவத்துக்கு இரங்கி, ஒரு நாள் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக சித்திரங்கள் வரையப்பட்ட தேரில் வந்திறங்கிக் காட்சி தந்தார் திருமால். குருவின் வேண்டுகோள்படி, கசனை மீட்க ஸ்ரீசுதர்சன ஆழ்வாரை அனுப்பினார். ஸ்ரீசுதர்சன ஆழ்வார், சப்த பர்வதங்களையும் விரட்டி கசனை பத்திரமாக மீட்டு வந்து குரு பகவானிடம் ஒப்படைத்தார்!

குருவின் பிரார்த்தனைக்கு இரங்கி வந்த பெருமாள், அதன் பின் குரு பகவானின் வேண்டுகோளின்படி இங்கேயே தங்கி விட்டார். குரு பகவானும் தன் மகனைக் காக்க வந்த ஸ்ரீசுதர்சன ஆழ்வாருடன் ஆலயத்துக்கு வெளியே தனிச் சந்நிதி கொண்டுள்ளார். சடாவர்மன் ஸ்ரீவல்லப பாண்டியன் தன் ஆட்சிக் காலத்தில் ஆலயத்துக்குத் திருப்பணி செய்தான். அவன் காலத்தில் இந்தப் பெருமாள் ஆலயம் சிறப்புடன் விளங்கியதாகக் கல்வெட்டுத் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த மன்னன் காலத்தில் இந்தத் திருக்கோயிலுக்கு, 'திருச்சக்கர தீர்த்தத்து எம்பெருமான் கோயில்' என்றும், 'திருச்சக்கரத்தாழ்வார் கோயில்' என்றும் பெயர் கள் இருந்திருக்கின்றன. இங்குள்ள பெருமாள் 'திருச்சக்கர தீர்த்தத்து எம்பெருமான்' என்றும், 'திருச்சக்கர தீர்த்தத்து நின்றருளிய பரம சுவாமிகள்' என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். பலரும் ஆலயத்துக்கு உதவிய விவரங்களை, கல்வெட்டு மூலம் அறியலாம்.ஆலய தரிசனம் செய்வோமா?

மூன்று பிராகாரங்களைக் கொண்ட விரிவான கோயில். வைகைக் கரையில் அமைந்த திருக்கோயில். பெருமாளைத் தரிசனம் செய்யச் செல்வதற்கு முன் வெளியே- குரு பகவானின் திருச்சந்நிதி. பெருமாள் கிழக்கு நோக்கிக் காட்சி தர, அவரைத் தரிசிக்கும் கோலத்தில் மேற்கு நோக்கிக் காணப்படுகிறார் குரு. இவருக்கு அருகே ஸ்ரீசக்கரத்தாழ்வார் (பின்பக்கம் நரசிம்மர் கிடையாது). இந்த இரு சிலா விக்கிரகங்களும் ஒரு மேடை மேல் தரிசனம் தருகின்றன. இதன் பழைய வடிவமான சுயம்பு விக்கிரகங்களை, கீழே தரிசிக்கிறோம். இங்கே நாம் தரிசிக்கும் குரு பகவான், யோக குருவின் வடிவம். கைகளை நெஞ்சில் குவித்து வணங்கும் பாவனையில் காட்சி தருகிறார்.

ஆதிசேஷன் குடை பிடிக்க, பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனின் சுதைச் சிற்பங்களை ஆலய முகப்பில் தரிசித்து உள் செல்கிறோம். தூண்கள் நிறைந்த பிரமாண்ட மண்டபம், முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்று பிரமாண்டமாக அமைந்த திருக்கோயில். கருவறையைச் சுற்றி ஒரு பிராகாரம். முன் மண்டபத்தில் துவார பாலகர்கள். முதல் பிராகாரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள், யோக நரசிம்மர், விஷ்வக்சேனர் போன்ற விக்கிரகங்கள். 2-ஆம் பிராகாரத்தில் கம்பத்தடி மண்டபம், மடப்பள்ளி, ஆழ் வார்கள் சந்நிதி, ஏகாதசி மண்டபம், தாயார் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன.

தாயார் சந்நிதியும் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்று காணப்படுகிறது. திருநாமம் செண்பகவல்லித் தாயார். தாமரை மலர்கள் ஏந்தி, அபயம்- வரதம் அருளும் தாயார். படி தாண்டா பத்தினி. திருக்கல்யாண காலத்தில் கூட பெருமாளிடம் இருந்து பெற்று வந்த திருமாங்கல்யத்தை இங்கே உள்ளே கொண்டு வந்துதான் கட்டுவார்கள் பட்டாச்சார்யர்கள். வரப்ரசாதியான தாயார்.

3-ஆம் பிராகாரத்தில் காவல் தெய்வமான பூதத்தான் எனப்படும் கருப்பசாமி கோயில் உள்ளது. ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாளை வணங்கக் கருவறை நோக்கிச் செல்கிறோம்.

பெருமாளைப் பார்த்ததும் பிரமிப்பு! பெரிய உருவில் சந்தன மரத்தால் ஆன மூலவர் திருமேனி.
இரு புறமும் ஸ்ரீதேவி- பூதேவித் தாயார்கள்; சிலா வடிவினர். சங்கு- சக்கரம் தரித்து, நின்ற கோலத்தில் ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள் (வல்லபர் என்ற சொல் விஷ்ணுவைக் குறிக்கும்). சித்திரை மாதம் சித்ரா நட்சத்திரன்று (பௌர்ணமி தினம்) பெருமாள் காட்சி அளித்த நிகழ்வு, விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது. அலங்காரப் பிரியர் என்பதால் பெருமாளுக்கு அநேக விழாக்கள் நடந்து வருகின்றன.

வல்லமை வாய்ந்த ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாளையும், சிறப்புடன் திகழும் குரு பகவானையும் தரிசித்து வளம் பெறுவோம்.

தகவல் பலகை
தலம் : கோயில் குருவித்துறை
மூலவர் : ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள்; தாயாரின் திருநாமம்- செண்பகவல்லி.
சிறப்பு சந்நிதி: சித்திர ரத வல்லப பெருமாளை நோக்கி இருக்கும் குரு பகவான் சந்நிதி.
எங்கே இருக்கிறது?: மதுரையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் இருக்கிறது சோழவந்தான். இங்கிருந்து தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம் வழியாக சுமார் 12 கி.மீ. தொலைவு பயணித்தால் வரும் கிராமம் கோயில் குருவித்துறை. வைகைக் கரையை ஒட்டி ஊர் எல்லையில் ஆலயம் அமைந்துள்ளது.
எப்படிப் போவது?: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்து எண் 68, குருவித்துறை செல்கிறது. அரசரடி, கோச்சடை, சோழவந்தான் வழியாகச் செல்கிறது இந்தப் பேருந்து. குருவித்துறைப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு, சுமார் இரண்டு கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். அல்லது ஆட்டோக்களில் செல்லலாம். வியாழக்கிழமைகளில் மட்டும் 'எண் 68'- நகரப் பேருந்து, கோயில் வாசல் வரை வருகிறது.
தரிசன நேரம்: காலை 9:00- 12:30. மாலை 3:30- 5:30. (ஊர் எல்லையில்- காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் கோயில் என்பதால் மாலை சீக்கிரமாகவே நடை சாத்தி விடுவார்கள்.)

தொடர்புக்கு: செயல் அலுவலர்,
அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோயில்,
கோயில் குருவித்துறை, வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் (வழி) மதுரை மாவட்டம்.
மொபைல்: 94439 61948, 97902 95795,
98425 06568


Comments