ரகசியங்களின் தொடர்ச்சி........

ஏழாவது ரகசியம் தீ (dhee) இதன் அர்த்தம், அறிவின் தூய்மை. அறிவு என்பது உங்களுக்குள் இருக்கும் மிகப் பெரிய சக்தியாகும். உங்கள் தனித்தன்மை என்பது ஒரு ரதம் என்று நினைத்துக் கொண்டால் அதை இயக்கும் சாரதிதான் உங்கள் அறிவு. ஆனால் இந்த அறிவு அகந்தையாலும், ஆசைகளாலும், கோபதாபங்களாலும் அவ்வப்பொழுது சூழப்படுகிறது. ஆகவே அறிவை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். யதார்த்த உலகில் அறிவின் மூலமே நீங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறீர்கள். தெளிவாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்கிறீர்கள். அவற்றை அப்படிப் புரிந்து கொள்ளாத பொழுது, பிரச்னைகள் எழுகின்றன. சரியான புரிதலோடு வாழ்ந்தால், பிரச்னைகள் தூசாகின்றன. காட்டு மிருகங்களை எல்லாம் தன் கொடுமையான குணத்தால் கொன்று அழித்த சிங்கத்தை சாதாரண முயல் பாழுங்கிணற்றில் விழவைத்துக் கொன்ற கதையைப் படித்திருப்பீர்கள். அதேபோல், உங்கள் அறிவை நீங்கள் உபயோகிக்கும் பொழுது, சாதாரணமாக சாத்தியப்படாதவையாகத் தோன்றுபவைகூட சாத்தியமாகிவிடும். விவேகத்திலும் அறிவின் ஆக்கத்தாலும் நீங்கள் வளரும் பொழுது, சரியான திசையில் உங்கள் அறிவு இயங்கும் பொழுது, உங்களுக்கு மாத்திரமல்ல, மனித குலத்திற்கே பெரும் சேவையைச் செய்தவராகிறீர்கள். அதேசமயம், அறிவின் வலிமையாலேயே எதையும் சாதித்துவிட முடியும் என்ற இறுமாப்பு எழக்கூடாது. அறிவின் தூய்மை அதைவிட முக்கியமானது. நீங்கள் பெரிய அறிவாளியாக இருக்கலாம். ஆனால் உங்கள் அறிவு தூய்மையானதாக இல்லாவிட்டால், உங்கள் மனத்தை நீங்கள் கட்டுப்படுத்தி, உள்ளார்ந்த ஒரு மன அமைதியைப் பெறவே முடியாது. அறிவு என்பது பிரபஞ்சத்தின் பின் உள்ள உயர்ந்த உண்மையை உணர வேண்டும். அந்த உணர்வு எழுந்தபின் உங்கள் தனித்தன்மை மாற ஆரம்பிக்கிறது. உங்கள் அறிவு தீட்சண்யத்தைப் பெற வேண்டும் என்பதுதான் பிரார்த்தனைகளிலேயே மிக உயர்ந்தது. வேறு ஒன்றிற்காகவும் நீங்கள் பிரார்த்திக்க வேண்டாம். உங்கள் அறிவு ஒளி பெற்றால் போதும், நீங்கள் எதையும் பெறலாம். எட்டாவது ரகசியம் வித்யா - அறிவு அறிவு என்பது இருவகைப்படும். ஒன்று அபரவித்யா. மற்றொன்று, பர வித்யா. உலக யதார்த்த விஷயங்களைப் பற்றிய ஞானமானது அபர வித்யா எனப்படும். பூகோளம், சரித்திரம், மொழி, விஞ்ஞானம், கணிதம், கலை என்பவை எல்லாம் இந்த அபர வகையைச் சேர்ந்தவை. இது ``கீழ் மட்டத்து'' அறிவாகும். கல்லூரிகளிலிருந்தும், பள்ளிக்கூடங்களிலிருந்தும் நீங்கள் பெறும் அறிவானது, ஏதோ ஒரு குறிக்கோளை அடைவதற்காகத்தான் பெறப்படுகின்றன. அவை எல்லாம் ஒன்றை அடையும் வழிதான். ஆனால் வாழ்க்கையை வாழ வேறு புனிதமான அறிவு பெற வேண்டும். எப்படி ஏமாற்றங்களைச் சமாளிப்பது, எதிர்பாராத சங்கடங்களை எப்படி சமாளிப்பது, சோதனை மிக்க கட்டங்களை எப்படிக் கடப்பது, பிரச்னைகளை மீறி எப்படி இலக்குகளை அடைவது போன்றவை எல்லாம் பெறுவது உயர்நிலை அறிவாகும். அந்த அறிவு ஒரு புனிதத்தைக் கொண்டது. அது நற்பண்பு உடையவரின் சேர்க்கையாலேயே பெறப்படும். புண்ணியம் மிகுந்த இந்த அறிவே எதற்கும் உபயோகப்படும். இதைத்தான் பரவித்யா என்கிறோம். அந்த அறிவே பூரண விடுதலைபெற உதவுகிறது. இந்த விடுதலை தான் வாழ்க்கையின் இலக்காக இருக்க முடியும். இதைத்தான் முக்தி என்கிறோம். ஒருவர் இந்த இரு வகையான அறிவையும் பெற்றிருக்க வேண்டும். கீழ் மட்டத்து அறிவு உங்களுக்கு உயர்மட்டத்து அறிவைப் பெற உதவுகிறது. பின்னதை அடைய அது ஒரு வழி. நீங்கள் பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் கற்றது எல்லாம், இந்த மனித இனத்திற்கு சேவை செய்ய உதவ வேண்டும். அத்தோடு நில்லாமல், ஒரு புண்ணியமான நிலையை அடைவதற்கு, அதாவது சூட்சுமமான அறிவைப் பெற உதவ வேண்டும். இது உயர்மட்டத்து அறிவு. ஒன்பதாவது ரகசியம் சத்யா - நியாயம் உண்மையே வெல்லும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யாரும் உண்மையை மறைக்கவே முடியாது. ஏதோ ஒரு கட்டத்தில் உண்மையை ஒருவர் மிக இலேசாக முணுமுணுத்தாலும் ஒரு நாள் அதுவே மிகப் பெரிய வலிமையைப் பெற ஆரம்பிக்கும். பொய்மை என்பது எவ்வளவு உரக்கக் கத்திப் பேசப்பட்டாலும், என்றாவது ஒரு நாள் கீழே விழும். சீனத்து அரசனின் ரகசியம் முன்னொரு காலத்தில் வாழ்ந்த சீனத்து அரசன் ஒருவன் ஒரு ரகசியத்தைக் காத்து வந்தான். அவன் தலையில் அதிசயமாக ஒரு கொம்பு வளர்ந்திருந்தது. அந்தக் கொம்பு எவர் கண்ணிலும் பட்டு விடக்கூடாது என்று விரும்பினான். ஆகவே, தன் சவரத் தொழிலாளியிடம் சென்றான். தன்னுடைய கொம்பை நீக்குமாறு சொன்னான். அந்தக் காலத்தில் இந்த தொழிலாளர்களே அறுவை சிகிச்சைகளையும் செய்து வந்தனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. யாரிடமும் அதைப் பற்றி சொல்லக் கூடாது என்று உறுதிமொழி பெற்றான். அந்தத் தொழிலாளி ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு சில நாட்களுக்குமேல் அந்த ரகசியத்தை அவரால் காக்க முடியாது போகவே, காட்டுக்குள் சென்றான். அங்கு ஒரு பெரும் குழியை வெட்டினான். அதற்குள் தன் வாயை வைத்துக் கொண்டு, ``ராஜா தலையில் ஒரு கொம்பு இருந்தது'' என்றான். சொல்லிவிட்டு அந்தக் குழியை மூடிவிட்டு வெளியேறினான். வெகு சீக்கிரத்தில் அந்த இடத்தைச் சுற்றி புல் வளர ஆரம்பித்தது. சுற்றிலும் அடர்ந்து படர்ந்து புல் வளர்ந்தது. காற்றில் புல் அசைந்தாடியது. அசைந்தாடும் புற்களிலிருந்து மெல்லிய ஓசையாக ``சீனத்து அரசனின் தலையில் ஒரு கொம்பு இருந்தது'' என்ற குரல் வந்தது. அதன் மூலம் ரகசியமாக இருந்த உண்மை எல்லோருக்கும் தெரிய வந்தது. இந்தக் கதையைப் போல எந்த ஒரு ரகசியத்தையும் மறைக்கவே முடியாது. இந்த உலகில், கடவுளுக்குத் தெரியாதது இல்லை. ஆகவே நீங்கள் நேர்மையையும் நாணயத்தையும் அடிப்படையான ஓர் உள்ளார்ந்த பண்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பண்பைத்தான் சத்தியம் என்கிறார்கள். உண்மையைப் பேசுவது மட்டும் சத்தியம் ஆகாது. உங்களுக்கே நீங்கள் உண்மையாக நடந்துகொள்ளுங்கள். அப்படி நடந்து கொண்டால் போதும். பிறரிடமும் உண்மையாக நடந்து கொள்வீர்கள். உண்மையையே பேசுங்கள். ஆனால் பிறரைக் காயப்படுத்தும் வகையில் நீங்கள் பேசுவது இருக்க வேண்டாம். நீங்கள் பேசும் உண்மை பிறருக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டும். உங்கள் வாக்கியங்களை எப்படி அமைக்க வேண்டுமென்றால், பிறருக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் அவை பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையைச் சொல்கிற வகையில் பிறர் தாக்கப்பட்டால், நீங்கள் உண்மை பேசவில்லை என்பது அர்த்தமாகிறது. உங்கள் எண்ணமே பிறரைக் காயப்படுத்த வேண்டும் என்று இருந்தால், வன்முறையையே நீங்கள் வார்த்தைகளாக பிரயோகிக்கிறீர்கள் என்று அர்த்தம். கடவுளை அடைவதற்கே உண்மைகள் பயன்பட வேண்டும். உங்கள் அகந்தையை வெளிப்படுத்துவதற்கு இல்லை. ஆன்மிகமாக உங்களுக்குள்ளேயே நோக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் நம்புவதையே நீங்கள் செய்கிறீர்களா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நம்புவதையே வெளியே சொல்கிறீர்களா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் சொற்கள், எண்ணங்கள் மற்றும் செயல்கள் இவை மூன்றும் இசைபட இருத்தல் வேண்டும். உண்மையையே எண்ணி வாழுங்கள். உண்மையையே பேசுங்கள். உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை வெறும் பேச்சளவில் பேசி நிறுத்திக் கொண்டு விட்டு அவற்றை அனுசரிக்காமல் விட்டுவிட்டால், அது பொய்மையாகும். உண்மையாகாது. நேர்மையும் நாணயமுமே வெற்றிக்கும் செல்வச் செழிப்பிற்கும் பின்னணியாகும். உண்மையானவர்கள் சமூகத்தில் பெரும் ஆரோக்கியமான தாக்கத்தைக் கொண்டு வருகிறார்கள். உண்மையற்றவர்கள் ஆங்காங்கு அவ்வப்பொழுது ஓரிரு பேரிரைச்சலை உண்டு பண்ணிவிட்டு ஓய்ந்துவிடுகிறார்கள். ``வாய்மையே வெல்லும்; பொய்மை அல்ல'' என்பது வேத வாக்கியம். (நன்றி: கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட, `இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை', 23, கண்ணதாசன் சாலை, சென்னை-17)

Comments