கார்த்திகையில் சங்காபிஷேகம்

கார்த்திகை மாத சோமவாரங்களில் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு சிவாலயத்தில் சங்காபிஷேகம் செய்வார்கள். சித்தாந்த ரத்னாகர நூலில் சங்காபிஷேகம் பற்றிய விளக்கம் உள்ளது.

கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். எனவே குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் ஸ்ரீமன் நாராயணன் கார்த்திகை மாதத்தில் தினமும் எழுந்தருள்கிறார். அம்மாதத்தில் செய்யப்படும் பூஜை ஆயிரம் மடங்கு பலன் தரும். இப்பூஜையால் பாவங்கள், வறுமை விலகுவதுடன்; வளமான வாழ்வும் பெறலாம்.

கார்த்திகை மாதத்தில் கஸ்தூரியால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால் மகா விஷ்ணுவைவிட்டு, லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள். வில்வ இலையால் விஷ்ணுவையும், சிவனையும் பூஜிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை.

கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டம் செல்லும் பாக்யம் கிட்டும்.

ஆலயத்தில் சுவாமிக்குமுன் பூஜை நேரத்தில் ஷோடச தீபாராதனை செய்வார்கள். இதனை வெறும் சடங்காக நினைக்கக்கூடாது. உலகின் தோற்றத்தையும், ஒடுக்கத்தையும் காட்டும் குறியீடாகக் கருதி இந்த தீபாராதனையை வழிபட வேண்டும். அதனால் சுகபோகமும், ஞானமும் கிட்டும்.

கார்த்திகைப் பொரி மிகவும் வெண்மையாகவும் தூய்மையாகவும் இருக்கும். பொரியுடன் தேங்காயின் சரவலையை சேர்க்கிறோம். தூய பக்திக்கு அடையாளமாக வெல்லம் சேர்க்கிறோம்.

வெண்பொடி பூசிய, என்றென்றும் களங்கமற்ற தூயவனாகிய சிவபெருமானை நெல் பொரி குறிப்பிடுகிறது. வள்ளல் தன்மை படைத்த மாவலியை தேங்காயின் துருவல் உணர்த்துகிறது. கள்ளங்கபடமில்லாத தூய பக்திக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பது தத்துவம்.

Comments