சபரி மலைக்கு நீங்க வந்து பாருங்க

சபரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் வழியில் தரிசிக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு ஐதிகமும் பெருமையும் உண்டு. என்னென்ன? தெரிஞ்சுக்குங்களேன்..

எரிமேலி: ஐயப்ப பக்தர்கள் எருமேலின்னு சொல்லக் கேள்விப்பட்டிருப்பீங்களே.. அந்தத் தலத்தோட சரியான பெயர் எறிமேலி. ஐயப்பன் மகிஷியோட போரிட்டபோது, முதல் அம்பை எய்தது இங்கே இருந்துதானாம். அதனால் எறிமேலியாகி இப்போ எரிமேலி, எருமேலி. ஐயப்பன் தாவித் தாவி சண்டை போட்டதை நினைவுபடுத்திதான் பக்தர்கள் இங்கே பேட்டை துள்ளல் நடத்தறாங்க. கன்னி சாமிகள் இங்கே மறக்காம சரக்கோலை வாங்கிக்குங்க. எரிமேலி சாஸ்தாவும், வாபரரும் இங்கே இருக்காங்க.

காளகெட்டி: தன்னோட மகன் மகிஷியோட சண்டை போடும் அழகை நேரில் பார்க்க வந்தார் பரமசிவன். ஈசன் தான் ஏறி வந்த காளையை( நந்தி) கட்டி வைத்த இடம்தான் இது. பெயர்க் காரணம் புரிஞ்சிருக்குமே! இங்கே சிவாலயம் ஒண்ணு இருக்கு.

அழுதா மலை: மணிகண்டன் அம்பு மகிஷிமேல பட்டதும் அவளோட தீய குணம் மாறி நல்ல எண்ணம் வந்திடுச்சு. அதனால தன்னை மன்னிக்கும்படி வேண்டி மனம் விட்டு அழுதா. அந்தக் கண்ணீர்தான் அழுதா நதியாகப் பெருகி ஓடுது. அழுதா நதியில கல் எடுத்து அதை அழுதா நதி மேடு முடியும் இடத்துல( கல்லிடும் குன்று) வீசிட்டா நாம செய்த பாவமெல்லாம் விலகிடும்கறது நம்பிக்கை.

கரிமலை: கரின்னா தமிழ்ல யானைன்னு அர்த்தம். காட்டுயானைகள் நிறைந்த கடினமான மலைப்பகுதி. பக்தியோட வரும் பக்தர்களுக்கு ஐயப்பனே இந்தப் பகுதியில கைகொடுத்து உதவுவான்கறது நம்பிக்கை.

பம்பாநதிக் கரை: தர்ம சாஸ்தா, மணிகண்டனாக பூவுலகுல அவதாரம் செய்த இடம் இதுதான். அதனால பக்தர்கள் கண்டிப்பா ஒரு நாள் இரவு தங்கணும்னு சொல்வாங்க. இங்கே நடக்கற விருந்துல ஐயப்பனும் கலந்துப்பார் என்பது நம்பிக்கை. அந்த விருந்துக்கு பம்பா ஸத்தின்னு பேர். அதற்காக மூட்டப்படற அடுப்போட சாம்பலை, பம்பா பஸ்மம்னு பக்தர்கள் வீட்டுக்கு எடுத்து வருவாங்க.

நீலிமலை: பம்பைலயிருந்து புறப்பட்டு வழியில பிள்ளையார்கோயில், ராமர் கோயில் எல்லாம் தரிசிச்சுட்டு அப்படியே நடந்தா வர்ற இடம் நீலிமலை அடிவாரம். பந்தளராஜ பரம்பரையில வந்த ஒருத்தர் அங்கே பக்தர்களுக்கு ஆசி வழங்கறதை நீங்க பார்க்கலாம். நீங்களும் ஆசி வாங்கிக்கலாம். நீலிமலை ஏற்றமும் இறக்கமும் ரொம்ப கஷ்டம்.

அப்பாச்சி மேடு: நீலிமலை இறக்கத்துல இருக்கு அப்பாச்சிமேடு. இங்கே அப்பாச்சி குழின்னு ஒரு பெரிய பள்ளம் இருக்கு. இந்தப் பள்ளத்துல கன்னிச் சாமிகள் மாவு உருண்டைகளைத் தூக்கி எறிவாங்க. இது அவங்களைப் பின் தொடர்ந்து துர்தேவதை எதுவும் வந்துடாம இருக்கறதுக்காக அவசியம் செய்ய வேண்டிய வழிபாடு.

சபரிபீடம்: ராமசந்திரனை சபரி அன்னை தரிசிச்சு சுவையான கனிகளைக் கொடுத்த ராமாயணக் கதை தெரியும் இல்லையா? அது நடந்த இடம் இதுதான். சபரிமாதா, சூ ட்சும வடிவுல ஐயப்பனை தரிசிச்சதும் இங்கேதானாம். சபரியோட நினைவாகத்தான் இது சபரி பீடம். சரியா சொன்னா ஐயப்பன் வாசம் செய்யற சபரிமலையின் ஆரம்ப இடம் இதுதான்.

சரங்குத்தி: பள்ளிக்கூடத்துக்கு வர்ற பசங்க வருகை பதிவு தர்றமாதிரி, பள்ளிக் கட்டை முதல் முறையாக சுமந்து வர்ற கன்னிச் சாமிகள் வருகைப் பதிவு செய்யற இடம் இது. தங்களோட வருகைக்கு அடையாளமா, எரிமேலியில இருந்து கொண்டு வந்த சரத்தினை இங்கே குத்திவைப்பாங்க.. எந்த வருஷம் கன்னிச்சாமி யாருமே வரலையோ அப்போ உன்னைக் கல்யாணம் செய்துக்கறேன்னு மாளிகைபுரத்தம்மனுக்கு ஐயப்பன் வாக்குத் தந்திருக்காராம். பாவம் அவ ஆசை நிறைவேறவே நிறைவேறாதுங்கறது அவளுக்குத் தெரியாது. அந்த அம்மன் இங்கே வந்துதான் சரங்களைப் பார்வையிடுவாளாம்.

பதினெட்டுப் படிகள்: சத்தியமான பொன்னு பதினெட்டுப் படிகளின் மேல்தான் ஐயப்பன் அருளாசி புரிகிறார். அந்தப் படிகளில் ஏறி, பொய்யின்றி மெய்யோடு கொண்டு செல்லும் நெய்யினால் ஐயனை அபிஷேகித்து, வழிபட்டு அந்த ஆனந்த தரிசனத்தால் மெய்சிலிர்த்து பக்தர்கள் உரக்கக் குரல் எழுப்புகிறார்கள்.. ‘சுவாமியே.......சரணம் ஐயப்பா...!’

Comments

Post a Comment