தீபவிழா

கார்த்திகையன்று கோயில்களில் சொக்கப் பனை என்னும் ‘தீபவிழா’ கொண்டாடப்படும். இதுவே உலக வழக்கில் சொக்கப்‘பானை’ என்றாகிவிட்டது.

திருக்கோயில்களில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம் விசேஷமான நிகழ்ச்சி. கோயிலிலிருந்து சற்று தொலைவில், நெடிதுயர்ந்த தென்னை அல்லது பனை மரத்தை நட்டு, அதனை ஓலையால் சூழக்கட்டி, உச்சியிலிருந்து தீபமிட்டு படிப்படியாக அடிவரை நெருப்புப் பந்தம் செய்வார்கள். இந்தக் காட்சி ஜோதிமயமாக இருக்கும். இந்த தீபதண்டத்தை திருக்கார்த்திகையன்று பார்த்து தரிசிக்க வேண்டும்.

இறைவன் ஒளி வடிவமாக இருப்பவன். தீப மரமான ‘சொக்கப்பனை’யின் ஒளியில் கோபுரமும், கோயிலும், மலை தீபமும் கண்டு களிப்பது எல்லையில்லாத புண்ணியம் அளிக்கும்.

‘சொக்கப் பனை’ சுடர் விட்டு எரியும் போது தங்கம் உருக்கிய தழல் போல் முப்பதடி உயரம் இருக்கும். வைக்கப்பட்ட மரம் எதுவாக இருந்தாலும் சொக்கத் தங்கம் போன்று ஜொலிக்கும்.

கார்த்திகை தீபத்தன்று ‘சொக்கப் பனை’யாக நட வேண்டிய மரம், தென்னை மரம் என்பது ஆகமவிதி. தென்னை இல்லையென்றால் பனை மரம் சேர்க்கலாம்; இது மத்திமம். கமுகு மரம் அதமம் என்பர். ‘சொக்கப் பனை’க்கு மற்றைய மர வகைகளை உபயோகிக்கக் கூடாது என்பது காரண, காரிய, விசயம் என்னும் மூன்று ஆகமங்களிலும் கூறப்பட்டுள்ளது.

ஒரு கோயிலின் கர்ப்பகிரக உயர அளவுக்கு கொளுத்தப்படுகின்ற மரம் இருக்க வேண்டும். அதில் பனை ஓலைகள் சூழ்ந்து கட்டப்பட வேண்டும். காய்ந்த தென்னை ஓலை, கமுகு ஓலை, வாழைச் சருகுகள் மற்றும் காய்ந்த இதர சருகுகளையும் சூழக் கட்டலாம். இதனை ‘ஒளிமரம்’ என்றும் சொல்வார்கள்.

நாள்தோறும் ஆலயங்களுக்குச் சென்று ஆண்டவனைத் தொழுது தூப தீபம் பார்த்துப் பரவசமடைகிறோம். ஆனால் திருக்கார்த்திகையன்று கோயில் விமானம், கோபுரம், மதிற்சுவர், மலையுச்சி, பிராகாரங்கள் மற்றும் ஊர் முழுமையும் ஒளி வெள்ளத்தில் இருக்கும் அற்புத நிகழ்ச்சியை அனுபவித்து பக்தியைப் பாராட்டுவது திருக்கார்த்திகை நன்னாளில்தான். சொக்கப் பனையும் ஒரு ஜோதி தரிசனம்தான்.

இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு ஒரு புராண வரலாறு சொல்லுகிறார்கள்.

ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.

விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது.

ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது.

ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.

‘‘தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப்போக்கில் உன் நோய் நீங்கும்!’’ என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான்.

நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர்.

காலப்போக்கில் அனைத்து வர்ணத்தாரும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது.

‘சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே,’ என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசக பெருமான்.

Comments