திருக்கார்த்திகை தீபம்

திருக்கார்த்திகை தீப திருவிழா சிவாலயங்களில் மட்டுமல்லாது விஷ்ணுவாலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் தலங்கள் சில:

திருவண்ணாமலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில் இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போடப்படும். ஒரு மணங்கு கற்பூரத் தூள் சேர்த்துத் திரி சுற்றப்பட்டிருக்கும். இருபது மணங்கு நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள். அந்த ஜோதியைக் காண்பதற்கு தெய்வங்களே நேரில் வருவதாக ஐதிகம். அதுவே பஞ்சமூர்த்தி புறப்பாடு.
இச்சோதியானது பல மைல்களுக்கு அப்பால் பல நாட்கள் ஒளிவீசும். இவ்வொளி இம்மலையை அடுத்து யாவும் செந்நிற சிகப்பு நிறம் பொருந்தி வண்ணமாய் ஒளிர்ந்திடும். ஜோதிலிங்கமாக காட்சி தரும் திருவண்ணாமலை ஓர் அக்கினித் தலமாக விளங்குகிறது.

பண்டைய காலத்தில் மலைச் சிகரங்களில் விளக்கேற்றி ஆடிப்பாடி, விருந்துண்டு, விழா கொண்டாடினர் என்பதற்கு சங்க நூற்களில் சான்று உண்டு. பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில், ‘’வேலின் நோக்கிய விளக்க நிலையும்‘’ என்பதற்கு, கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்குகளின் சுடர்கள் கந்தனின் வேலினை நினைவுபடுத்துகின்றன என்று பொருள். பண்டைக் காலம் தொட்டே கார்த்திகை விழாவினைக் கொண்டாடி வருகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று என்பர் கார்த்திகை விழா நம் மனதில் உள்ள ஆணவ இருளை அகற்றி பக்தி ஒளியை நிரப்பிடும் திருவிழா என்பர்.

கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது.

தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

விஷ்ணு தலங்களில் மிகவும் புகழ் பெற்ற திருமலை திருப்பதியில் கார்த்திகை தீபத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

திருக்கார்த்திகைத் தீபத்தன்று பெருமாள் வீதியுலா வருவார். அதன்பின் ‘திருப்பு மண்டபம்’ என்ற இடத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அடுத்து கோயிலுக்கு எதிரே ஆலய நுழைவாயில் அருகே நடைபெறும் சொக்கப் பனைக் கொளுத்தும் நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பார். பிறகு ஆலயம் செல்வார். அப்போது பக்தர்களுக்கு லட்டும், கார்த்திகைப் பொரியும் பிரசாதமாகத் தருவார்கள்.

கேரள மாநிலம் பாலக்காடு நகரத்தின் ஒரு பகுதி கல்பாத்தி. காசியில் பாதி கல்பாத்தி என்பர். காரணம் காசியில் உள்ளது போல இங்கும் காசி விஸ்வநாதர் ஆலயமும், வற்றாத ஜீவநதியும் உள்ளது. காசி ஆலயத்தில் செய்யும் ஆறுகால பூஜையை இங்கேயும் செய்கின்றனர்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகச் சிற்பிகளால் கவினுற செய்து கொடுக்கப்பட்ட தேர் இங்கு உள்ளது. இவ்வாலயத்தின் பெரிய விழா இந்த தேர்த்திருவிழாதான். ஐப்பசி மாதத்து கடைசி மூன்று நாட்கள் இந்தத் தேர்த் திருவிழா நடைபெறும். இந்நாட்களில் சுற்றியுள்ள 18 கிராமங்களையும் தேர் சுற்றிவந்து கார்த்திகை மாத முதல் நாள் நிலைக்கு வரும். இவ்விழாவில் தமிழக பக்தர்களும் அதிக அளவில் கலந்து கொள்வார்கள்.

பிரம்மன் சரஸ்வதியைப் பிரிந்திருந்த காலத்தில் காஞ்சியில் யாகம் ஒன்று நடத்தினார்.

தன்னை விட்டு விட்டு பிரமன் யாகம் நடத்துவதால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை அழிக்க வேகவதி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடிவந்தார். திருமால் பெரிய ஒளிப் பிழம்பாக மாறி யாகத்தைத் தடுத்தார்.
பின் யாகத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாமலிருக்க சிவலிங்கம் நிறுவி வழிபட்டார். திருமாலுக்கு தீபப் பிரகாசர் என்றும் சிவனுக்கு விளக்கொளி நாதர் என்றும் பெயர். தீபேஸ்வர் என்றும் சிவனை அழைப்பர். இங்கு கார்த்திகை தீபத்தன்று ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். இப்படித்தான் தீபப் பிரகாசர் தோன்றினார். அத்துடன் தீபேஸ்வரரையும் பிரதிஷ்டை செய்தார்.

காசியில் மணிகர்ணிகா துறை அருகே மணிகர்ணிகேஸ்வரர் ஆலயத்தில் தீபப் பிரகாச லிங்கம் உள்ளது. இதை ஜோதி தீபேஸ்வரர் என்பர். கார்த்திகை தீபத்தன்று தீபதானம் செய்து இச்சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லா வகையான சிறப்புகளையும் பெறலாம்.

தேவலோக மங்கையர்களான அப்சரப் பெண்கள் இங்கு வந்து தீபமேற்றி வழிபட்டு பெரும் பேறு பெற்றுள்ளனர்.

திருவாசகத்தை அருளிய மாணிக்க வாசகருக்கு ஈசனே குருவாக வந்து குருந்த மரத்தடியில் உபதேசம் செய்த தலம், திருப்பெருந்துறை.

இக்கோயிலில் ஆகம தத்துவங்களை விளக்கும் வகையில் தீபங்களை வகை வகையாக அமைத்துள்ளனர்.

27 நட்சத்திரங்கள், 3 மூர்த்திகள், 36 தத்துவங்கள், 5 கலைகள், 51 வர்ணங்கள், 87 உலகங்கள், 11 மந்திரங்கள் என ஒவ்வொன்றையும் விளக்கும் வகையில் இவ்விளக்குகள் அமையப் பெற்றுள்ளன.
27 நட்சத்திர தீபங்களை கருவறையில் ஏற்றியுள்ளனர்.

உலகைப் படைத்து, காத்து, அழித்து வழிநடத்தும் மும்மூர்த்திகளைக் குறிக்க 3 தீபங்களை ஏற்றி கருவறையில் மஞ்சள், பச்சை, சிவப்பு நிற கண்ணாடிப் பெட்டியில் வைத்துள்ளனர்.

36 தத்துவங்களைக் குறிப்பதாக 36 தீபங்களை தீப மாலையாக தேவ சபையில் ஏற்றி வைத்துள்ளனர்.

5 வகை கலைகளைக் குறிக்க 5 தீபங்களை கருவறையில் ஒன்றின் கீழ் ஒன்றாக ஏற்றியுள்ளனர்.
51 எழுத்துகளைக் கொண்டது வர்ணம். இதைக் குறிக்க 51 தீபங்களை கருவறை முன் உள்ள அர்த்த மண்டபத்தில் ஏற்றி வைத்துள்ளனர்.
உலகங்கள் 87. இதைக் குறிப்பதற்கு கனக சபையில் குதிரைச் சாமிக்கு அருகே 87 தீபங்களை ஏற்றி வைத்துள்ளனர்.

மந்திரங்களைக் குறிக்க 11 விளக்குகளை நடனசபையில் ஏற்றி வைத்துள்ளனர்.

இப்படி தேவர்களை திருவிளக்குகளாக அமைத்து தீபமாக ஏற்றி வைத்துள்ளனர். இப்படிப்பட்ட அதிசய அமைப்பு தீபங்களை ஆவுடையார் கோயிலில் மட்டுமே தரிசிக்க முடியும்.

ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சத் தீபவிழா. மயிலாப்பூரில் ஆண்டுதோறும் இது நடக்கும். திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவர். அதிலும் இவ்வாலய சங்கு தீர்த்தத்தில் 12 வருடத்துக்கு ஒருமுறை தோன்றிய வலம்புரி சங்குகளைக் குவியலாகச் சேமித்து வைத்துள்ளனர். அச்சங்குகளால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து லட்சதீப விழா நடத்துவர்.

காஞ்சியில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில், ஏற்றிய மாவிளக்கை தலையில் வைத்துக்கொண்டு ஆலய வலம் வந்து வழிபட்டு ஈசன் அருளை பெறுவர்.
விருட்ச வடிவம் கொண்ட விளக்குகளை ஏற்றி வைத்தால் ஒரு மரமே தீப ஒளியுடன் பிரகாசிப்பதுபோல இருக்கும். இவ்விளக்குகளை குருவாயூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆலயங்களில் காணலாம்.

திருமழிசை குளிர் நாயகி சமேத ஒத்தாண்டேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை சோம வாரத்தில் காலையில் 108 சங்காபிஷேகம் செய்வர். மாலையில் லட்ச தீப விழா நடத்துவர். பின் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

குமரி மாவட்டத்தில், கார்த்திகை தீபத்தன்று பெண்கள் வீட்டு முற்றத்தில் பூக்கள் நிரப்பிய தாம்பாளத்தின் மத்தியில் குத்துவிளக்கேற்றி வைப்பர். அதனருகில் ஒரு பெரிய அகல் விளக்கில் எண்ணெய், திரிகளை நிரப்பி எரிய விடுவர். இதனை பரணி தீபம் என்பர்.

இதை எப்படிச் செய்வார்கள் தெரியுமா?

தினமும் வீட்டில் சுவாமி அறையில் ஏற்றும் தீபத்தில் பாக்கி உள்ள எண்ணெய், திரிகளை சேமித்து வைத்து அதனால் இதை எரிய விடுவர். இது குமரி மாவட்டப் பழக்கமாகும்.

ஸ்ரீ வாஞ்சியத்தில் உள்ள முனிதீர்த்தம் என்ற குப்தகங்கையில் கங்காதேவி 999 பங்கு தன் சக்திகளுடன் ரகசியமாக வசிக்கிறாள். காசியில் ஒரு பங்கு சக்தியுடன் தான் வாசம் செய்கிறாள். எனவே காசியைவிட ஸ்ரீவாஞ்சியம் அதிக மகத்துவம் பெற்ற தலம்.

இங்கு கார்த்திகை ஞாயிறுகளில் நீராடி ஈசனை வழிபட்டால் பஞ்சமாபாதகம் விலகும். அன்று அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் ஈசனும், தேவியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து குப்தகங்கை கிழக்குக் கரையில் ஆசி வழங்குவார்கள். இதை தரிசிப்பது புண்ணியம்.

குடந்தை நன்னிலம் சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

Comments