கல்யாண வரம் தருவார் கந்தக் கடவுள்!

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடு, திருப்பரங்குன்றம். சூரபத்மனை வதம் செய்த சஷ்டியும், ஸ்ரீதெய்வானையைத் திருக்கரம் பற்றிய திருக்கல்யாண வைபவமும் இங்கே பிரசித்தம்!

பல்லவ மன்னர் காலத்தில் கட்டப்பட்டு, திருமலை நாயக்க மன்னரின் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்ட அற்புதமான கோயில் இது. குடைவரைக் கோயில்களில் முக்கியமான ஆலயமும் கூட!



இந்தத் தலத்தில் சிவபெருமான், திருமால், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதுர்கை ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன. இங்கே, சிவலிங்க வடிவில் ஈஸ்வரனும், எதிரில் பெருமாளும் சந்நிதி கொண்டிருப்பதால், மால்விடை க்ஷேத்திரம் என்றும் சொல்வார்கள். இங்கே, மூலிகைகளால் செய்யப்பட்ட திருமேனியராக முருகப்பெருமான் திருக்காட்சி தருவதால், அவருக்கு அபிஷேகங்கள் இல்லை. வேலுக்கு மட்டுமே பாலபிஷேகம் நடைபெறுகிறது. வேலுக்குப் பாலபிஷேகம் செய்து பிரார்த்தித்தால், வேண்டிய வரங்களைத் தந்தருள்வான், வேலப்பன் என்கின்றனர் பக்தர்கள்.
காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது கந்தசஷ்டி திருவிழா. யாகசாலை அமைக்கப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெறும். ஸ்ரீதெய்வானையுடன் காட்சி தரும் உத்ஸவ மூர்த்திக்கு அபிஷேகங்கள் நடைபெறும். சஷ்டி விரதம் மேற்கொள்ளும் அன்பர்கள், இந்த நாளில் கையில் காப்பு கட்டிக்கொண்டு, விரதம் மேற்கொள்ளத் துவங்குவார்கள். மாலையில், சர்வ அலங்காரத்தில் ஸ்ரீசண்முகப்பெருமான் வீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும். இப்படி 2-ஆம் நாள், 3-ஆம் நாள் என ஹோமங்கள், அபிஷேகங்கள், அலங்காரங்கள், பூஜைகள், நைவேத்தியங்கள் என அமர்க்களப்படும் ஆலயம். 4-ஆம் நாள் பூஜையை அடுத்து, 5-ஆம் நாள், ஸ்ரீபார்வதிதேவியிடம் வேலைப் பெற்றுக்கொள்ளும் வைபவம் அரங்கேறும். உமையவள் தந்த வேலுக்கு அபிஷேகங்களும் பூஜைகளும் நடந்தேறும். 6-ஆம் நாள், சஷ்டித் திருநாள். அன்றைய தினம், சூரசம்ஹார வைபவம். கோயிலுக்கு அருகில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளும் முருகக்கடவுள், வேலுடன் திருவீதியுலா வருவார். ஸ்ரீசொக்கநாதர் கோயிலுக்கு முன்னே வந்து நிற்க... இரவு 7 மணிக்கு சூரனை வதம் செய்யும் படலம் அரங்கேறும். இதனைக் காண, லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். இதையடுத்து, இன்னொரு சிறப்பு, திருக்கல்யாண வைபவம். சூரசம்ஹாரமும் திருக்கல்யாணமும் அடுத்தடுத்து நிகழ்வது, திருப்பரங்குன்றம் திருத்தலத்தில்தான் என்று சொல்லிச் சிலிர்க்கின்றனர் பக்தர்கள். பிறகு, பூப்பல்லக்கில் வீதியுலா வரும் உத்ஸவர் அழகே அழகு! மறுநாள், விரதமும் விழாவும் நிறைவுறும் விதமாக, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நூறு படியில் தயிர்சாதம் செய்து நைவேத்தியம் செய்கின்றனர்.

ஆறுபடை வீடு என்றில்லை; திருப்பரங்குன்றம் என்றில்லை, முருகக் கடவுள் கோயில் கொண்டிருக்கும் எந்தவொரு ஸ்தலத்துக்கும் சென்று, கந்தக் கடவுளைத் தரிசியுங்கள்; மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். கல்யாண வரம் கைகூடும்; எதிரிகள் காணாமல் போவார்கள். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

Comments

  1. முருகக் கடவுள் கோயில் கொண்டிருக்கும் எந்தவொரு ஸ்தலத்துக்கும் சென்று, கந்தக் கடவுளைத் தரிசியுங்கள்; மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். கல்யாண வரம் கைகூடும்; எதிரிகள் காணாமல் போவார்கள். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!/

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    ReplyDelete

Post a Comment