ஸ்ரீஅனுமனின் காலடியில்... ஸ்ரீசனிபகவான்!












சேது பாலப் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில், ஸ்ரீஅனுமனை சனி பகவான் பிடித்துக் கொண்டார். 'என் தலையில் ஏறிக்கொள், என்ன செய்வது?’ என்று அனுமன் சொல்ல, சனீஸ்வரரும் அவரது தலையில் ஏறி அமர்ந்துகொண்டார்.
அனுமன் தலையில் கல்லைச் சுமந்து வர... சனீஸ்வரர் நெளிந்தார். பாரம் தாங்காமல் திண்டாடினார். 'இது ராம காரியம்’ எனும் உத்வேகத்துடன் ஓடியாடி வேலை செய்தார் அனுமன். அதில் நிலைகுலைந்து, அனுமனின் காலடியில் விழுந்தார் சனீஸ்வரர். ஒருகட்டத்தில் தன்னை விட்டுவிடும்படி அவர் கதறினார். ''அப்படி வா வழிக்கு! ஸ்ரீராம காரியத்தில் எவர் ஈடுபட்டாலும், ராம நாமத்தை எவர் சொன்னாலும் அவர்களைப் பிடிக்கக் கூடாது நீ!'' என்று ஸ்ரீஅனுமன் சொல்ல, ''அப்படியே ஆகட்டும்'' என உறுதியளித்தார் சனி பகவான். ஆனந்த ராமாயணம் சொல்லும் புராணக் காட்சி இது.



ஸ்ரீசனீஸ்வரரை தன்னுடைய திருவடியில் கிடத்தியபடி திருக்காட்சி தரும் ஸ்ரீஅனுமனைத் தரிசிக்க வேண்டுமா? கும்பகோணம் மேலக்காவிரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஹயக்ரீவர் திருக்கோயிலுக்கு வாருங்கள்.

சனிப் பிரீதி செய்யும் தலம் எனப் போற்றுகின்றனர், இந்தத் தலத்தை! சனிப் பெயர்ச்சிக்காக பரிகாரம் செய்யவேண்டிய ராசிக்காரர்கள், இங்கு வந்து ஸ்ரீஆஞ்சநேயரை வணங்கினால், சனி பகவானின் பிடியில் இருந்து தப்பலாம். தவிர, சனீஸ்வரரின் பேரருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.



இந்தக் கோயிலில் ஸ்ரீஹயக்ரீவர் மற்றும் ஸ்ரீசரஸ்வதிதேவிக்கும் முக்கியத்துவம் என்றாலும், சனிக்கிழமைகளில் எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் இங்கு வந்து, ஸ்ரீஅனுமனையும் ஸ்ரீசனீஸ்வரரையும் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். சனிப்பெயர்ச்சி ஹோமமும் இங்கு சிறப்புற நடைபெறுகிறது.



கும்பகோணம் மேலக்காவிரியில் உள்ள ஸ்ரீஹயக்ரீவர் கோயிலுக்கு வந்து, ஸ்ரீஅனுமனையும், அவரின் திருப்பாதத்தில் உள்ள ஸ்ரீசனீஸ்வரரையும் மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். வியாபாரம் செழிக்கும்; இல்லறம் சிறக்கும்! திருமணத் தடை நீங்கி, நல்ல வரன் அமையப் பெறுவீர்கள்!

Comments