கேட்ட வரம் தரும் பெருமாள்

திருமலையில் வாசம் புரியும் வேங்கடவன் பக்தர்களின் வசதிக்காக பிரசன்னமாகும் இடங்களில் எல்லாம் பிரசன்ன வேங்கடாசலபதியாக கோயில் கொண்டுள்ளார்.

அப்படி ஒரு தலம் சென்னைக்கு அருகில் காரனோடை பகுதியில் தேவனேரி என்ற கிராமத்தில் உள்ளது. அதென்ன தேவனேரி? குசஸ்தலை ஆறும் அதன் கரையை ஒட்டிய பகுதிகளும் ஒரு காலத்தில் மிகவும் புனிதமான இடமாகக் கருதப்பட்டது. இந்தப் பகுதியில் கார்கேய முனிவர் ஆசிரமம் அமைத்து பெரும் தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ராமபிரான் வனவாசம் வரும் வழியில் இந்த முனிவரின் ஆசிரமத்தில் சில காலம் தங்கியிருந்ததாக தலபுராணம் கூறுகிறது. ராமசந்திரனை தரிசிக்க இங்கு வந்த தேவர்கள் நீராட ஏரி ஒன்று இருந்ததாம். தேவர்கள் நீராடிய ஏரி என்பதால், தேவனேரி. அதுவே இப்பகுதிக்கும் பெயர்.

ஆரம்பத்தில் இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் ஸ்ரீநிவாசப் பெருமாள் படம் வைத்து பூஜைகள் நடத்தியுள்ளனர். காலம் செல்லச் செல்ல பெருமாளுக்கு ஒரு கோயில் கட்டி வழிபாடு செய்யும் எண்ணம் அவர்களுக்கு எழுந்தது. அதன் பயனாக எழும்பியதே இந்தத் திருக்கோயில்.

இத்தலத்தில் எம்பெருமான், ஏழு மலையானே இங்கு வந்து விட்டானோ என்று வியக்க வைக்கும் தோற்றத்தில் அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகக் காட்சி தருகிறார். ஸ்ரீ தேவி, பூதேவியர் உற்சவருடன் காட்சி தருகின்றனர்.
முகப்பு கோபுர மண்டபத்தில் தசவதார சிற்பங்கள் அறை வடிவில் இருபுறமும் அமைந்திருக்க மாலவன் தனது இரு தேவியருடன் காட்சி கொடுக்கிறார். கருட மண்டபத்தில் கருடபகவான் கருவறை பெருமானை தொழுத வண்ணம் காட்சி தருகின்றார். உள் மண்டப வாயிலில் கற்பக விநாயகரும் பாலசுப்ரமணியரும் வீற்றி ருக்கிறார்கள்.

கருவறைக்கு வலதுபுறம் தாயார் அலர்மேல் மங்காவும், இடது புறம் ஆண்டாள் நாச்சியாரும் தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். ஹயக்ரீவர், நரசிம்மர், வராகர் சந்நதிகளும் உள்ளன.

வைணவத்தலங்களிலிருந்து சற்று வித்யாசமாக, தென் கிழக்கு மூலையில் நவகிரக சன்னதி உள்ளது. பக்த ஆஞ்சநேயர் வழக்கமாக சனீஸ்வரனை நோக்கி சந்நதி கொண்டிருப்பார். இங்கு அவர் அங்கரனை நோக்கி இருப்பது விசேஷம்.

சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் நடந்தேறியிருப்பதால் கோயில், பளிச்சென்று இருக்கிறது.

இத்தலத்து பெருமாள், கேட்ட வரம் தரும் வள்ளலாகவே திகழ்வதால் பக்தர் கூட்டம் எப்போதும் நிரம்பியுள்ளது. நீங்களும் உங்கள் குடும்பத்துடன் வந்து தரிசித்து அவன் அருளை பெறுங்களேன்.

சென்னை - கல்கத்தா மெயின் சாலையில் காரனோடை என்ற இடத்துக்கு மேற்கே 2 கி.மீ.யில் உள்ளது இத்தலம். பேருந்து வசதி குறைவு. காரனோடையிலிருந்து ஆட்டோ அல்லது வேனில் செல்லலாம். கோயிலுக்கு அருகில் கடைகள் இல்லை.

Comments