ஆயக் கலைகள் அருள்வாய் தாயே!





ஸ்ரஸ்வதீம் நமஸ்யாமி சேதனானாம் ஹ்ருதிஸ்திதாம்
கண்டஸ்த்தாம் பத்மயோனேஸ்து ஹிமாகர ப்ரியா ஸ்பதாம்!

மதிதாம் வரதாம் ஸுத்தாம் வீணாஹஸ்த வரப்ரதாம்
ஐம் ஐம் மந்த்ரப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதித்வம்ஸ காரிணீம்!

ஸுப்ரகாஸாம் நிராலம்பாம் அக்ஞான திமிராபஹாம்
ஸுக்லாம் மோக்ஷப்ரதாம் ரம்யாம் ஸுபாங்காம் ஸோபனப்ரதாம்!

பத்மோபவிஷ்டாம் குண்டலீனீம் ஸுக்லவர்ணாம் மனோரமாம்
ஆதித்யமண்டலே லீனாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம்!

இதி மாஸம் ஸ்துதானேன வாகீஸேன மஹாத்மனா
ஆத்மானம் தர்ஸயாமாஸ ஸரதிந்து ஸமப்ரபாம்!



பொருள்: சேதனர்களின் ஹிருதயத்தில் இருப்பவளாயும், பிரம்மாவின் கண்டத்தில் இருப்பவளாயும், எப்போதும் சந்திரனுக்குப் பிரியமுள்ளவளாகவும் பிரகாசிக்கும் ஸ்ரீசரஸ்வதிதேவியை வணங்குகிறேன்.

நல்லறிவு மற்றும் உயர்ந்த விஷயங்களைக் கொடுப்பவளாகவும், பரிசுத்தையாகவும், கையில் வீணையுடன் அபீஷ்டங்களைத் தருபவளாகவும், ஐம் ஐம், ஹ்ரீம், ஹ்ராம் என்ற மந்திரத்தில் விருப்பமுள்ளவளாகவும், விபரீத புத்தி உள்ளவர்களை நாசம் செய்பவளாகவும், நல்ல பிரகாசம் கொண்டவளாகவும், யாதொரு பிடிப்பில்லாதவளாகவும், அஞ்ஞானமாகிய இருட்டைப் போக்குகிறவளாகவும், வெண்மையாகவும்... மோக்ஷ புருஷார்த்தத்தை கொடுப்பவளாகவும், மிக்க அழகியவளாகவும், சோபமான அங்கங்களோடு கூடியவளாகவும், மங்கலத்தை அருள்பவளாகவும், தாமரையில் இருப்பவளாகவும், அழகிய கர்ணாபரணத்தோடு கூடியவளாகவும், வெண்மை நிறம் கொண்டவளாகவும், மனதுக்கு சந்தோஷம் அளிப்பவளும், சூரிய மண்டலத்தில் இருப்பவளும், ஸ்ரீவிஷ்ணுவுக்கு பிரியையாகவும் உள்ள சரஸ்வதிதேவியை நமஸ்கரிக்கிறேன்.

பிரகஸ்பதியால் அருளப்பட்ட... பத்மபுராணத்தில் உள்ள கலைவாணி குறித்த இந்த ஸ்லோகத்தைச் சொல்லி தேவியை வழிபட, சகல கலைகளும் கைகூடும். பிள்ளைகளுக்கு கலைஞானம் பெருகும்.

'சரஸ்’ என்றால் 'பொய்கை’ என்று பொருள். மனமாகிய பொய்கையில் வாழ்பவள் ஆதலால், சரஸ்வதி என்று அழைக்கப்படுகிறாள்.

கலைவாணி ஏந்தியிருக்கும் வீணைக்கு கச்சபி என்று பெயர். அதை அருளியது சிவபெருமான் என்பர். தேவியின் கரங்களில் இருக்கும் வீணையும் சுவடியும் கல்வியின் மேன்மையையும் கலைகளில் திறமையையும் அருள்பவள் என்பதை உணர்த்துகின்றன.

கலைமகளின் திருக்கரத்தில் திகழும் மணிமாலையை அட்ச மாலை எனப் போற்றுவர். தான் மொழி வடிவானவள் என்பதை உணர்த்த, அட்ச மாலையுடன் திகழ்கிறாளாம் சரஸ்வதி.

சரஸ்வதியின் வாகனம் அன்னப் பறவை. இது, கல்வியாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் இருக்கவேண்டிய நற்பண்புகளை உணர்த்துகிறது. தண்ணீரை நீக்கி பாலை மட்டும் பிரித்துப் பருகும் அன்னப் பறவை போல், கல்வியாளர்கள் விவேகத்துடன் தீயவற்றை நீக்கி, நல்லவற்றை ஏற்க வேண்டுமாம்.

சில நூல்கள், கலைவாணியின் வாகனமாக மயிலைக் குறிப்பிடுகின்றன. ராஜஸ்தானில் சில தலங்களிலும், மும்பையிலும் மயில் மீது வீற்றிருக்கும் சரஸ்வதியை தரிசிக்கலாம். தவிர, ஆட்டின் மீது அமர்ந்திருக்கும் சரஸ்வதியின் திருவடிவங்களும் உண்டு. பௌத்தர்கள், சரஸ்வதி தேவியை சிம்ம வாகனத்தில் எழுந்தருளச் செய்து வழிபட்டார்களாம்!

தமிழகத்தில் கூத்தனூர் போன்று ஆந்திர மாநிலத்தில், பாசரா என்ற திருத்தலத்தில் தனிக் கோயிலில் அருள்கிறாள் சரஸ்வதி. ஸ்ரீவிநாயகப் பெருமான் சரஸ்வதியை வழிபட்ட திருத்தலம் இது என்கிறார்கள்.

கலைவாணியை வாக்தேவியாகவும் போற்றுகின்றன புராணங்கள். வாக்தேவி யானவள் மூன்று சந்தியா காலங்களில் காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி என மூன்று வடிவங்களில் திகழ்கிறாளாம். இந்த மூன்று திருவடிவுடன் திருவீழிமிழலை தலத்தில் அவள் ஈசனை வழிபட்டதாக, அவ்வூர் தலபுராணம் சொல்கிறது. இங்குள்ள மூன்று லிங்கங்களை முறையே காயத்ரீஸ்வரர், சாவித்திரீஸ்வரர், சரஸ்வதீஸ்வரர் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.

Comments