பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில்!




உலகின் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, ஜப்பான், கொரியா எனப் பலப் பல நாடுகள் இருந்தும் இந்தியாவை மட்டும்தான் புண்ணிய பூமி எனக் கூறுகி றோம். உலகின் வேறு எந்த நாட்டிலும் நினைத்தும்கூட பார்க்கமுடியாத பதிவிரதா ஸ்த்ரீ ரத்தினங்கள், சத்தியமும், தர்மமும்தான் தங்கள் உயிர்நாடி என அரசாட்சி செய்த மாமன்னர்களும், பகவானே தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் பல அவதாரங்கள் எடுத்ததும், மனித வாழ்வின் நிலையற்ற தன்மையைத் தங்கள் தவ வலிமையால் அறிந்து, நமக்குப் புலப்படுத்திய மகரிஷிகளும், அருளாளர்களும், சித்த புருஷர்களும் அவதரித்தது இப்பாரத புண்ணிய பூமியில் மட்டும்தான்.

மாமன்னன் சகரனின் கொள்ளுப் பேரனான பகீரதன் செய்த கடும் தவத்தினால் தேவர்களின் உலகில் பிரவகிக்கும் தேவகங்கை பூலோகத்திற்கு வந்ததும் இப்புண்ணிய பூமியில்தான்.

இத்தனை புனிதமும், மகத்துவமும் பாரத பூமிக்கு மட்டும் ஏன் ஏற்பட்டது என்பதை அனைவரும் தெரிந்துகொள்வது அவசியம். எத்தனை எத்தனை மகான்கள்! தெய்வீக த்தைப் பறைசாற்றும் எத்தனை எத்தனை திருக்கோயில்கள்! தெய்வத்திருமேனியில் தரிசனமளிக்கும் எத்தனை எத்தனை புனித மலைகள்! எத்தனை எத்தனை புண்ணிய நதிகள்!

கிழக்கில் பிரம்மபுத்திரா நதி பெருகி ஓடும் காம ரூபம் (தற்போதைய அஸாம்), மேற்கில் சிந்து நதி ஓடும் காந்தாரம் (இன்றைய பாகிஸ்தான்) தெற்கில் ஸ்ரீ ராமபிரானால் நிர்மாணிக்கப்பட்ட சேது, வடதிசையில் பனிச் சிகரங்களினால் ஒளிவீசிப் பிரகாசிக்கும் கேதாரம், காஷ்மீரம் (ஸ்ரீ ஆதிசங்கரரின் முதல் சாரதா வித்யா பீடம்) இவற்றிற்கு இடையே உள்ள புனித பூமிதான் பாரதம்.

புராதன காலத்தில் அம்பிகை தாட்சாயணியின் திவ்ய திருமேனி உடல் பாகங்கள் வீழ்ந்தபோது உண்டான பிரதேசம்தான் இன்று இந்தியா எனக் கூறப்படும் பாரதப் பு ண்ணிய பூமி. சக்தி பீடங்களுக்குள் அடங்கிய பிரதேசமாதலால் இந்தியா புண்ணிய பூமி ஆயிற்று. இதே காரணத்தினால்தான் பாரத புண்ணிய பூமியே ஒரு தி ருக்கோயிலாகத் திகழ்கிறது.

பாஸ்கர ராஜபுரம்!

இவ்விதம் தமிழகத்தில் தன்னிகரற்று விளங்கும் சக்தி வாய்ந்த திருத்தலம் ஒன்றுதான் மயிலாடுதுறையை அடுத்த திருவாலங்காடு திருப்பதியை அடுத்த மிகப் புராதனமான பாஸ்கர ராஜபுரம் திருத்தலமாகும்.

உலக மக்களை உய்விக்க சிவபெருமான் உருவமாய், அருவமாய், அருஉருவமாய் தலங்கள்தோறும் எழுந்தருளி சிவலிங்கத் திருமேனியில் காட்சியளித்து திருவருள் புரிந்து வருகிறாள்.

சிவபெருமானின் சிவலிங்கத் திருமேனிகள் தாமாகவே சுயம்புவாகத் தோன்றுவதுண்டு. மகரிஷிகளாலும், சித்தபுருஷர்களாலும் தோற்றுவிக்கப்பெற்று பூஜிக்கப்படும் சிவலிங்கத் திருமேனிகளும் உண்டு.

மன்னர்கள் தோற்றுவித்து வழிபாடு ஆற்றுகின்ற மரபும் உண்டு. இத்தகைய புராதன பெருமைமிக்க பாஸ்கரராஜபுரத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு மகான்

ஸ்ரீ பாஸ்கரராயரின் தேவியரான ஆனந்தி தேவியினால் நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில் பாஸ்கரராஜபுரம்

ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில்.

ஸ்ரீ பாஸ்கர ராயர்!

ஸ்ரீதேவி உபாசகரான ஸ்ரீ பாஸ்கரராயர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாகா என்ற ஊரில் அவதரித்தார். தந்தையின் பெயர் கம்பீர ராயர். தாயாரின் பெயர் கோனாம்பிகா. விஸ்வாமித்திர கோத்திரத்தில் பிறந்த இவர், 1690-ம் ஆண்டு பிறந்திருக்கக்கூடும் என உத்தேசமாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். இம்மகான் பிறந்த குடும்பம் ஈஸ்வர பக்தியில் திளைத்த குடும்பமாகும். தந்தை கம்பீர ராயர் சகல சாஸ்திரங்களையும், புராண இதிகாசங்களையும், வேத தர்மங்களையும் கற்றறிந்த பண்டிதர். ஒழுக்கச்சீலர். இம்மகானின் தவச்செல்வனாக அவதரித்தவர்தான் ஸ்ரீ பாஸ்கரராயர்.

சிறு வயதிலேயே சரஸ்வதி உபாசனையைக் கற்றுக் கொடுத்தார் தன் செல்வ மகனுக்கு கம்பீரராயர். அக்காலத்தில் உயர்ந்த கல்வி புகட்டப்பட வேண்டுமானால் காசி க்ஷே த்திரத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம். அதன்படியே பாஸ்கரனையும் காசி க்ஷேத்திரத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீ நரசிம்மானந்த நாதர் என்னும் குருவிடம் வித்யாப்யாசத்திற் காகச் சேர்த்தனர். தனது 7-வது வயதிற்குள்ளேயே அனைத்து வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தான் சிறுவன் பாஸ்கரராயன். அப்போது காசி நகரத்தை ஆண்ட மன்னர் ஸ்ரீ சபேஸ்வரன் சிறந்த கல்விமான். அவரது நன்மதிப்பைப் பெற்ற பாஸ்கர ராயர் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய கங்காதர வாஜ்பேயி என்ற பெரியவரிடம் தர்க்க சாஸ்திரத்தையும், அறிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான அதர்வண வேதத்தையும் முறையாகக் கற்றுக்கொண்டார். பின்பு தேவி பாகவதத்தில் மிகச் சிறந்த விற்பன்ன ரானார்.

இல்லறம்!

தனது கல்வி முடிந்து, தமிழகம் திரும்பிய பாஸ்கரராயர் ஆனந்தி என்ற உத்தமியைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குப் பிறந்த குழந்தைக்கு சந் திரபாகா நதியில் சேவை சாதிக்கும் விட்டலனின் திருநாமமாகிய பாண்டுரங்கன் என்று பெயரிட்டனர்.

தஞ்சைக்கு எழுந்தருளல்!

ஸ்ரீவித்யா உபாசகரான ஸ்ரீ பாஸ்கரராயர் சிவதத்த சுக்லர் என்ற மகானிடம் சிவதீட்சை பெற்றார். அப்போது தஞ்சையை ஆண்ட மன்னரின் வேண்டுகோளுக்கிணங்கி தமிழகத்திற்கு எழுந்தருளினார். அப்போது அவரது குருவான கங்காதர வாஜ்பேயி காவிரியின் தென்கரையிலுள்ள திருவாலங்காட்டில் வசித்து வந்ததால் அங்கேயே தானும் வசிக்க விரும்பினார் பாஸ்கரராயர். அவரது விருப்பத்தை அறிந்த தஞ்சை மன்னரும் திருவாலங்காட்டுக்கு வடகரையில் இருந்த செழிப்பான கிராமத்தை இம்மகானுக்கு ந ன்கொடையாக அளித்தார். அந்தக் கிராமமே பிற்காலத்தில் பாஸ்கரராஜபுரம் என்ற புகழ்பெற்ற திருத்தலமாக
ஆயிற்று.

அம்பிகையின் பூரணமான அனுக்கிரகத்தைப் பெற்றுத் திகழ்ந்த ஸ்ரீ பாஸ்கரராயர் மிகவும் பிரசித்திபெற்ற குப்தவதி என்னும் நூலுடன், 40க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியிருக்கிறார். ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரைத் தனது நூல்களில் வெகுவாக ஸ்தோத்திரம் செய்துள்ளார் ஸ்ரீ பாஸ்கரராயர்.

மந்திர சாஸ்திர ரகசிய நுணுக்கங்களில் இம்மகான் அறியாதது எதுவுமில்லை என்று பெரியோர்கள் மகிழ்ந்து போற்றும்படி, மந்திர சாஸ்திரம் பற்றி 17 நுண்ணிய ஆராய்ச்சி நூல்களை இவர் இயற்றியுள்ள ர்.

ஏராளமான மகான்களின் திருவடி ஸ்பரிசம் பெற்றதால், மகத்தான புனிதம் பெற்ற, திருவிடைமருதூர் மகாதானத் தெருவில் இம்மகான் பலகாலம் வசித்து வந்திருக்கிறார்.

தீவிர அம்பிகை உபாசகரான ஸ்ரீ பாஸ்கரராயர், லலிதா சஹஸ்ரநாமத்திற்கு அற்புதமான ‘‘ஸௌபாக்ய பாஸ்கரம்’’ எனும் பாஷ்யத்தை, பரம பவித்ரமானதும், மிக, மிகப் புராதனமானதுமான திருக்கோடிக்காவல் ஆலயத்தில், அகிலாண்டநாயகியான ஸ்ரீ திரிபுரசுந்தரியின் சந்நிதியில் அமர்ந்து இயற்றியுள்ளார். அதனால் திருவுள்ளம் உகந்த அம்பிகை, அவருக்குத் தரிசனம் அளித்து, அருள் புரிந்ததாகத் தலவரலாறு கூறுகிறது.

கிடைத்ததற்கரிய, விலை மதிப்பற்ற பொக்கிஷம் இந்நூல்!

பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில்!

ஸ்ரீ பாஸ்கரராயரின் தேவியரான ஆனந்தியும் ஸ்ரீவித்யா உபாசகி ஆவர். அந்த அம்மையார் நிர்மாணித்த அற்புதமான திருக்கோயில்தான் பாஸ்கரராஜபுரத்தில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ பாஸ்கரேஸ்வரர் திருக்கோயிலாகும்.

மகாராஷ்டிரத்தைத் தன் அவதார பூமியாகவும், புண்ணிய காசி க்ஷேத்திரத்தை தனது வித்யா தலமாகவும் கொண்டு விளங்கிய ஸ்ரீ பாஸ்கரராயரும் அவரது தர்ம பத்னியான ஸ்ரீ ஆனந்தவல்லியும், பாஸ்கராயபுரத்தைத் தங்கள் தவக்ஷேத்திரமாகக் கொண்டு விளங்கினர். பல தருணங்களில் அம்பிகையின் தரிசனத்தைப் பெற்ற பாக்கியசாலிகள் இந்த தம்பதிகள்.

அக்காலத்திலும் தர்மத்திற்கு சோதனைகள் ஏற்படுவதுண்டு. ஸ்ரீ பாஸ்கரராயரின் தெய்வீகப் பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட சிலர், தஞ்சை மன்னர் சரபோஜி மகாராஜா அவர்களிடம் சென்று, ஸ்ரீ பாஸ்கரராயர் தனது பூஜையின்போது மது, மாமிசம் படைத்து, பூஜை செய்கிறார் என்று கோள் சொல்லியுள்ளனர். இதனால் மனக்கிலேசம் அடைந்த மன்னர், பாஸ்கரராஜபுரம் வந்து ராயர் பூஜை செய்யும் அறைக்குள் சென்று பார்த்தார். அங்கு ஒரு பித்தளை செம்பு இருந்தது. அதில்தான் மது இருக்கிறது என்று கூறினர் அவரிடம் கோள் சொன்னவர்கள். அதனைப் பரிசோதனை செய்வதற்காக மகாராஜா அச்செம்பினுள் கைவிட்டபோது, அதில் நைவேத்தியத்திற்காக சூடான
பாயசம் இருந்ததைக் கண்டு, தான் இத்தகைய மகானை சந்தேகித்தோமே என்று மிகவும் மனம் வருந்தி, ஸ்ரீ பாஸ்கரராயரிடம் ஸ்ரீ அம்பிகையே இருக்கிறாள் என்பதை உணர்ந்து மேலும் பல கிராமங்களை இனாமாகக் கொடுத்து, தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.

திருக்கோயிலின் பெருமை!

ஸ்ரீ பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் மிகவும் புராதனமானது. சக்தி வாய்ந்தது. கடன் தொல்லைகள், தொழில் பின்னடைவு, மனக் கிலேசங்கள் ஆகியவற்றிற்கு பரிகாரத்தலம் இது.

முக்கிய விழாக்களாக ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில், பஞ்சமி திதியில் நவாவரண பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. பூஜ்யஸ்ரீ பாஸ்கரராய ஆச்சார்ய நினைவு மண் டபம் (பாஸ்கரராஜபுரம்) ஸ்ரீசக்கர பூர்ண மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரதிமாதமும் பௌர்ணமி அன்று ஸ்ரீ மகோமேரு ஆலயத்தில் நவாவரண பூஜை அற்புதமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ லலிதாசஹஸ்ரநாம அர்ச்சனை!

ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 1-ம் தேதி 1008 தாமரை மலர்களால் மூல மந்திரத்துடன் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை அதிசிறப்பாக நடைபெறுகிறது. அனுபவி த்து ஆனந்தமடைய ஆயிரம் பிறவிகள் போதாது. அத்தகைய அற்புத அனுபவம் இந்த அர்ச்சனை.

மிகவும் பழைமையானதும், அளவற்ற சக்தியும், கணக்கற்ற மகான்களின் திருவடி ஸ்பரிசமும் பெற்ற இத்திருக்கோயிலை மனிதப்பிறவி எடுத்த ஒவ்வொருவரும் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

குறிப்பு : பாஸ்கரராஜபுரம் - மயிலாடுதுறையிலிருந்தும், குற்றாலம், ஆடுதுறையிலிருந்தும் ரயில், பஸ், கார் மூலம் வசதியாகச் சென்று வரலாம். குற்றாலத்திலிருந்து 4 கி.மீ.யும், ஆடுதுறையிலிருந்து 5 கி.மீ.யும் தொலைவிலுள்ளது.

விவரங்களுக்கு :

திரு. எஸ். பாஸ்கரசிவம்,
பாஸ்கரராஜபுரம்,
திருவாலங்காடு அஞ்சல்,
மயிலாடுதுறை - 609 810.

போன் : 04364 232400 / 9788524776. என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

Comments

  1. அருமையான பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment