மனித வடிவில் வந்த மகேசன்

பக்தர்களைக் காப்பதற்காக பரமேஸ்வரன் எத்தனை எத்தனையோ திருவிளையாடல்களைப் புரிந்திருப்பது தெரிந்திருக்கும். அவர் மக்களைக் காத்திட மானிட வடிவம் எடுத்து வந்த புராணக்கதை தெரியுமா?

அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், திருநிலை எனும் கிராமத்திற்குச் செல்ல வேண்டும். ஈசன் இங்கே நிலைகொண்டு நின்றதால் ‘திருநிலை’ எனப் பெயர்.

ஏன், எதற்காக மானிட வடிவம் எடுத்தார் மகேசன்?

முன்னொரு காலத்தில் சுந்திரபத்திரன் என்ற அசுரன், சிவபெருமானை வணங்கி பல அரிய வரங்கள் பெற்றான். அவற்றுள் முக்கியமானது, அவனது மரணம் சிவசக்தி சொரூபமானவரால் மட்டுமே நிகழ வேண்டும். அதுவும் எம்பெருமான் மனித அவதாரம் எடுத்து முடித்திருந்தால் மட்டுமே அவனைக் கொல்ல முடியும் என்ற சிக்கலான வரம் பெற்று இருந்தான். அதனால், இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியைக் கைப்பற்றியதோடு, மூவுலகிலும் உள்ளே வர்க்கு பலவகையில் தொல்லை கொடுத்து வந்தான். அசுரனின் தொல்லை பொறுக்க முடியாமல் யாவரும் சிவபெருமானிடம் முறையிட்டு காக்குமாறு வேண்டினர்.

அவர்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர், மனதில் ஒரு திட்டத்தோடு மகேஸ்வரியைப் பார்க்கச் சென்றார், ஈசன். அப்போது தவத்தில் ஆழ்ந்திருந்தாள் அம்பிகை. அசுரனை அழித்து தேவர்களைக் காக்க வேண்டும், உடனே புறப்படு! என்று கூறி அவர் முன் நின்றார், ஈசன். ஐயன் கூறியதைக் கேளாமல் உமையவள் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து இருந்தாள். அதனால் கோபம் கொண்ட எம்பெருமான், ‘‘என்னுடைய சொல் கேட்டு பதில் கூறாமல் இருக்கும் நீ, மானிடப் பெண்ணாகப் பிறப்பாய்!’’ என சாபமிட்டார். தியானத்தில் இருந்து விழித்தெழுந்த பார்வதிதேவி, ஐயனை நோக்கி, ‘‘என்னில் பாதியாக விளங்கு பவர்தானே நீங்கள்... அதனால் தாங்களும் மனிதனாகப் பிறக்க வேண்டும்!’’ என சாபமிட்டாள். ஈசனின் திட்டப்படியே நடந்தது இது.

அவ்வார்த்தையைக் கேட்ட ஈசன் மனித அவதாரம் கொண்டார். அம்பிகை அவரைவிட்டு விலகி இருந்ததால், சக்தியற்றவராக உலகமெல்லாம் பித்தனாக அலைந்து திரிந்தார். பரமனின் இந்நிலை கண்டு உலக உயிர்கள் பயத்தில் நடுங்கின. தேவர்கள் முதலானோர் உமாதேவியை வணங்கி காத்து அருளுமாறு வேண்டினர்.

உடனே தாய தன் சூலாயுதத்தை வீசி எறிந்தாள். அது பறந்து சென்று, பூமியில் ஓர் இடத்தில் பிரகாசமான ஒளியுடன் நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து இருபத்தொரு மண் உருண்டைகள் சிதறி சுற்றிலும் வீழ்ந்தன. அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக மாறி, மகேசனின் வருகைக்காக காத்து நின்றன.

சூலாயுத ஒளியைக் கண்டு அங்கு வந்த எம்பெருமான் ஓர் இடத்தில் பாதம் பதித்து நிலையாய் நின்றார். பார்வதி தேவி அங்கு வந்து அவரை வணங்கினாள். ஒரு நாழிகை நேரம் மனிதனாக இருந்தவர் பின் சிவமாய் உருமாறினார். ‘‘மனிதனாக இவ்வுலகை வலம் வந்த ஆண்டவராகிய நீங்கள், பெரியாண்டவர் என்று அழைக்கப்படுவீர்!’’ என உமையவள் கூறினாள். இவ்வார்த்தையைக் கேட்ட தேவர் முதலானோர் ‘‘பெரியாண்டவா! பெரியாண்டவா!’’ எனக் கூறி அழைத்து அவர் பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர்.

‘‘அலைந்து திரிந்த என்னை நிலையாய் நிறுத்திய இவ்விடம், ‘திருநிலை’ என அழைக்கப்படும்’’ எனக்கூறிய ஐயன், ‘‘உலகைக் காக்கும் நாயகி திருநிலையாய் ஆட்கொண்டதால், திருநிலைநாயகி என அழைக்கப்படுவாள் என்றும் வாழ்த்தினார். சிவபெரு மான் ஒரு நிலையில் தன்பாதம் பதித்து அருள்புரிந்த திருத்தலமே, திருநிலையாகும்.

திருக்கழுக்குன்றத்தின் வடகிழக்கே 8 கி.மீ. தூரத்திலும், திருப்போரூரில் இருந்து மேற்கே 12 கி.மீ. தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே 14 கி.மீ. தூரத்திலும் உள்ளது திருநிலை கிராமம். புள்ளினங்கள் இசைபாடும் குளம் மற்றும் ஏரி இரு கரையின் மத்தியில் சுயம்பு லிங்கமாகத் தோன்றி சிவபெருமான், பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அரு ள்பாலிக்கின்றார்.

எம்பெருமானைச் சுற்றி 21 சிவகணங்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சி இவ்வாலயத்தைத் தவிர வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.

குழந்தையாகக் கருவில் தோன்றாது தாமாகவே பெரியமனிதனாகத் தோன்றி உலகை வலம் வந்தமையால், இவ்வுலகில் கரு வின்றி வாடும் தம்பதியரில் உமது திருநாமம் கூறுவோர்க்கு மழலைகளை வழங்கி அருள் புரியவேண்டும் என அம்பிகை வேண்டினாள். இறைவனும் அவ்வாறே நடைபெறும் என அருளினார். இன்றும் இவ்வாலயத்தின் அருகில் உள்ள சித்தாமிர்த குளத்தில் நீராடி இறைவனை நினைத்து மனம் உருகி நெய்தீபம் ஏற்றினால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆண்டவனின் பாதம் பதித்த இடத்தில் ஜோதி வெளிப்பட்டு சுயம்பு லிங்கம் ஒன்று அமைந்துள்ளது. சூலாயுதம் வீழ்ந்த இட த்தில் இருந்து இருபத்தொரு மண் உருண்டைகள் சிவகணங்களாக உருமாறி நின்றதால் இவ்வாலயத்தில் இருபத்தொரு மண் உருண்டைகள் சிவகணங்களாக செய்து வைத்து சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் அவற்றுக்கும் ஆராதனை செய்கின்றனர்.

பெரியாண்டவர் அடியாரை ஆட்கொள்ளும் நாயகனாக காட்சி தருகின்றார். அவரின் அற்புதங்கள் கணக்கில் அடங்கா. மங்கையரின் மனக்குறை களைந்து மணப்பேறு, மகப்பேறு அருளி ஏழை எளியோரின் வாழ்வைக் காத்து ரட்சித்து, மண்வளம் மழைவளம் அளித்து, குழந்தைகளை அஞ்சாது காத்து, நாடிவரும் அடியார்கள் வாழ்வில் அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் வழங்கி மேன்மையான வாழ்வு தருகிறார் பெரியாண்டவர்.

செங்கல்பட்டில் இருந்து திருநிலை பெரியாண்டவர் கோவிலுக்கு திருக்கழுக்குன்றம் வழியாக ஜி11 என்ற பேருந்து தினமும் காலை 9 மணி, மாலை 2 மணி மற்றும் இரவு 9 மணிக்குச் சென்றுவருகிறது.

Comments

  1. அருமையான பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment