ராஜயோகம் தருவார் ஸ்ரீவரதராஜர்!





புதுக்கோட்டை கீழ ராஜவீதியில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புராதனமிக்க ஆலயம். மூலவர்- ஸ்ரீஅலர்மேலுமங்கை தாயார் சமேத ஸ்ரீநிவாச பெருமாள்; உத்ஸவர்- ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள்.

ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீபால ஆஞ்சநேயர், ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஆகியோரும் தனிச்சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். சித்திரை மாத பௌர்ணமியில், பெருமாளுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அன்றைய நாளில், மாட்டுவண்டியில் உத்ஸவர் கடையக்குடி ஸ்ரீபிரசன்ன ரகுநாத பெருமாள் கோயி லுக்குச் சென்று எழுந்தருள்வார்.

ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில், வைகாசி திருவோணத்தை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் திருவீதியுலா, திரு அலங்காரம் என அமர்க்களப்படுமாம் ஆலயம். ஏழாம் நாள், திருக்கல்யாணம். இதில் கலந்துகொண்டு ஸ்வாமியை வணங்கினால், திருமண தோஷம் விலகும் என்பது ஐதீகம்!

புரட்டாசி மாதம் துவங்கிவிட்டால், இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கிச் செல்வார்களாம். புதுக் கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டு, தற்போது உலகெங்கிலும் வாழும் அன்பர்கள், குடும்பத்துடன் வந்து, ஸ்வாமி மற்றும் தாயாருக்கு வஸ்திரம் சார்த்தி, நைவேத்தியம் படைத்து வணங்குகின்றனர்.

புரட்டாசி 3-வது சனிக்கிழமையில், மூலவருக்கு சந்தனக்காப்பு அலங் காரம் நடைபெறும். இந்த அலங்காரத் தில் பெருமாளைத் தரிசித்து வணங் கினால், மனதில் நிம்மதி நிலைக்கும்; சந்தோஷம் குடிகொள்ளும் என்கின்றனர் பக்தர்கள்.

பீஷ்மர் முக்தி அடைந்த தை மாத சப்தமியில்... அதிகாலையில் பெருமாளுக்குத் திருமஞ்சனம் நடைபெற்று, அவர் வீதியுலா வருகிற வைபவமும் இங்கு விசேஷம். நவராத்திரி நாட்களில் தாயாருக்கு மஞ்சள், சந்தனம், தேங்காய், தானியங்கள், வளையல்கள், பூக்கள் ஆகியவற்றால் அனுதினமும் அலங்காரம் செய்யப் படும் என்கிறார் பாலாஜி பட்டாச்சார்யர்.

'தீபாவளித் திருநாளின்போது, பெருமாளுக்கும் ஸ்ரீஅலர்மேல்மங்கைத் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெறும். இந்த நாளில், பெருமாளுக்கு புது வஸ்திரம் சார்த்தி குடும்பத்துடன் வழிபட்டால், குபேர சம்பத்துகள் கிடைக்கும். நாளும் நலம்வாழ திருவருள் புரிவார் ஸ்ரீவரதராஜர் என்று உள்ளூர் பக்தர்கள் சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள்.

புதுக்கோட்டை கீழ ராஜவீதி ஸ்ரீவரதராஜரை தீபாவளித் திருநாளில் வணங்குங்கள்; இனி உங்களுக்கு ராஜயோகம்தான்!

Comments

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment