நலம் தரும் நவதிருப்பதிகள்








எந்த ஊருக்கும் இல்லாத சிறப்பாக நவ கயிலாயத் தலங்களும், நவதிருப்பதி தலங்களும் இருப்பது நெல்லைச் சீமையில்தான்! சைவ ஆலயங்களைப் போலவே, இந்த நவதிருப்பதிகளும் நவக்கிரகங்களுடன் தொடர்புகொண்ட, நவக்கிரக தோஷங்களை நீக்கியருளும் திருத்தலங்களாகப் போற்றப்படுகின்றன. இவற்றுள் தாமிரபரணியின் வடகரையில் 6 திவ்விய தேசங்களும் தென்கரையில் 3 திவ்விய தேசங்களும் அமைந்துள்ளன.

திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில், சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீவைகுண்டம். ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீவைகுண்டநாதர்; உத்ஸவர்- ஸ்ரீகள்ள பிரான், ஸ்ரீசோரநாத பெருமாள். தாயார் ஸ்ரீவைகுந்த நாயகி, ஸ்ரீசோரநாத நாயகி. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்களுக்கான பரிகாரத் தலம் இது. இங்கு வந்து எம்பெருமானை சேவித்தால், சகல பாவங்களும் நீங்கும்; தாயாருக்குத் திருமஞ்சனம் செய்து பிரார்த்திக்க, குழந்தைச் செல்வம் கிடைக்கும்.

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது வரகுண மங்கை (நத்தம்). சந்திர பரிகாரத் தலம் இது. இங்கே, பெருமாளின் திருநாமம் ஸ்ரீவிஜயாசனர் (ஸ்ரீபரமபத நாதர்); உத்ஸவர்- ஸ்ரீஎம்மிடர் கடிவான். தாயார்- ஸ்ரீவரகுணவல்லித் தாயார், ஸ்ரீவரகுணமங்கை. இங்கு வந்து பிரார்த்தித்தால், சந்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். திருமண யோகம், கல்வி ஞானம் ஆகியவற்றைத் தந்தருள்வார் பெருமாள் என்கின்றனர், பக்தர்கள்.



வரகுணமங்கையில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவு பயணித்தால் வருவது, திருப்புளியங்குடி. இந்தத் தலத்தின் நாயகன் ஸ்ரீபூமிபாலகர்; உத்ஸவர்- ஸ்ரீகாய்சினவேந்தன். தாயார்- ஸ்ரீமலர்மகள் நாச்சியார், ஸ்ரீநிலமகள் நாச்சியார். புதன் தோஷம் நீக்கும் திருத்தலம் இது! பெருமாளுக்கு அப்பம் நைவேத்தியம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, நீராஞ்சன விளக்கேற்றி (பச்சரிசி பரப்பி, அதில் தேங்காயில் நெய்யூற்றி விளக்கேற்றுதல்) வழிபட்டால், திருமணத் தடை அகலும்; பச்சைப் பயறு தானம் செய்தால், கல்வியும் ஞானமும் கைகூடும்.

அடுத்து, திருப்புளியங்குடி பெருமாளைத் தரிசித்துவிட்டு, ஸ்ரீவைகுண்டம்- ஏரல் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவு பயணித்தால், இரட்டைத் திருப்பதியை (திருத்தொலைவில்லி மங்கலம்) அடையலாம். இந்தத் தலங்கள் ராகு- கேது பரிகாரத் திருத்தலங்கள். மூலவர்- ஸ்ரீநிவாச பெருமாள்; உத்ஸவர்- ஸ்ரீதேவர்பிரான். தாயார்- ஸ்ரீஅலர்மேலுமங்கைத் தாயார், ஸ்ரீபத்மாவதி தாயார். ஸ்ரீநிவாசபெருமாளை தரிசித்து வணங்கினால், கால சர்ப்ப தோஷம் மற்றும் ராகு தோஷம் ஆகியன நிவர்த்தியாகும். பூர்வ ஜன்ம பாவங்களும் நீங்கி நிம்மதியாக வாழலாம் என்பது ஐதீகம்.

இரட்டைத் திருப்பதிகளில் அடுத்துள்ள தலத்தில் ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீஅரவிந்தலோசனர்; உத்ஸவர்- ஸ்ரீசெந்தாமரைக்கண்ணன். தாயார்- ஸ்ரீகருந்தடங் கண்ணித் தாயார், ஸ்ரீதுலைவில்லிமங்கலத் தாயார். கேது பரிகாரத் திருத்தலம் இது. இங்கு வந்து பெருமாளை சேவித்தால், கால சர்ப்ப தோஷம் நீங்கும்; பாவங்கள் விலகும்; சுபிட்சமாக வாழலாம் என்பது ஐதீகம்!



இரட்டைத் திருப்பதியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது பெருங்குளம். சனி பரிகாரத் தலமான இந்தக் கோயிலில் ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீவேங்கடவாண பெருமாள். உத்ஸவர்- ஸ்ரீமாயக்கூத்தர். தாயார்- ஸ்ரீகமலாவதி தாயார், ஸ்ரீகுழந்தைவல்லித் தாயார். இந்தத் தலத்தில் நீராடி, பெருமாளை தரிசித்தால், சனி தோஷங்கள் விலகும்; திருமணத் தடை அகலும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கும்; பாவங்கள் நீங்கி, பெருமாளின் திருவடியை அடையலாம் என்கின்றனர், பக்தர்கள்.

இதையடுத்துள்ள மூன்று திருத்தலங்களும் திருநெல்வேலி- தூத்துக்குடி மெயின் சாலையில் இருப்பதால், இந்தத் தலங்களுக்குச் செல்வது எளிது.

பெருங்குளம் தலத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவு பயணித்தால் தென்திருப்பேரையை அடையலாம். ஆழ்வார்திருநகரியில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவு. சுக்கிர பரிகாரத் தலம். மூலவர்- ஸ்ரீமகரநெடுங்குழைக்காதன்; உத்ஸவர்- ஸ்ரீநிகரில்முகில்வண்ணன். தாயார்- ஸ்ரீகுழைக்காது வல்லித் தாயார், ஸ்ரீதிருப்பேரை நாச்சியார்.

இங்கு வந்து பிரார்த்தித்தால் தொழிலில் மேன்மை, பதவி உயர்வு ஆகியன கிடைக்கும்; சுக்கிர தோஷம் விலகி, சகல ஐஸ்வரியங்களும் அமையப் பெறலாம் என்பது ஐதீகம்!

தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார் திருநகரிக்குச் செல்லும் வழியில், சுமார் 4 கி.மீ. தொலைவு பயணித்து, அங்கிருந்து உடன்குடி செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவு பயணித்தால் திருக்கோளூரை அடையலாம். செவ்வாய் தோஷம் நீக்கும் தலம் இது. மூலவர்- ஸ்ரீவைத்தமாநிதிபெருமாள்; உத்ஸவர் ஸ்ரீநிஷோபவித்தன். தாயார்- ஸ்ரீகுமுதவல்லித் தாயார், திருக்கோளூர்வல்லித் தாயார். குபேரன், பெருமாளை வழிபட்டு, இழந்த செல்வத்தை மீட்ட திவ்விய தேசம் இது. எனவே, இங்கு வந்து வழிபட, இழந்த பதவியையும் செல்வத்தையும் பெறலாம்; வியாபாரம் செழிக்கும்.

திருக்கோளூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது ஆழ்வார்திருநகரி. குரு பரிகார திருத்தலம் இது. மூலவர்- ஸ்ரீஆதிநாத பெருமாள்; உத்ஸவர்- ஸ்ரீபொலிந்து நின்றபிரான். தாயார்- ஸ்ரீஆதிநாத நாயகி, திருக்குருகூர் நாயகி. நம்மாழ்வார் அவதரித்ததும் இங்குதான். இந்தப் பெருமாளை வணங்கினால், திருமணத் தடை நீங்கும்; தொழிலில் ஏற்பட்ட தடை அகலும்.

ஒன்பது தலங்களுக்கும் சென்று வர, பேருந்து வசதிகள் உண்டு. இவற்றை ஒரே நாளில் தரிசிக்கலாம். எனினும், ஸ்ரீவைகுண்டம் வரை பேருந்தில் சென்று, அங்கிருந்து ஆட்டோ மற்றும் கார் மூலம் மற்ற ஆலயங்களைத் தரிசிப்பது வசதியானது என்கின்றனர், பக்தர்கள்.

Comments

  1. அருமையான செய்திகள் அடங்கிய பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment