மனிதனின் மனதிற்குப் புரியாத புதிர்






மனித வாழ்க்கையே ஒரு மர்மம்தான்!

அனைவருமே இறைவனின் படைப்புகள்தான். அவ்விதம் இருந்தும், சிலர் செல்வந்தர்களாக இருக்கின்றனர். சிலர் வறுமையில் வாடுகின்றனர். சிலர் சுகத்தில் திளைக் கிறார்கள். பலர் துன்பத்தில் வாடி, வதங்குகிறார்கள். சிலர் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். சிலர் வியாதியில் வருந்துகின்றனர்.

இது ஏன்? மனிதனின் மனதிற்குப் புரியாத புதிர் இது!

சாதாரண மனிதனின் மனதிற்கு எட்டாத, மனித வாழ்க்கையின் சூட்சுமங்களைத்தான், நமது வேதகால மகரிஷிகள் தங்கள் ஆத்ம சக்தியினால் அறிந்து, நம் பிறவியின் இரகசியங்களை, நமது நன்மைக்காகவே வெளிப்படுத்தியுள்ளனர் - பரம கருணையுடன்.

பிறவியின் நோக்கம்!

நம் பிறவியின் நோக்கம் நல்ல காரியங்களைச் செய்து, மேலும், மேலும் நல்ல பிறவிகளை எடுத்து, அதன் பலனாக மேலும் பல புண்ணிய காரியங்களைச் செய்யும் வசதியும், மனமும் உள்ள நல்ல பிறவிகளை எடுத்து, உயரவேண்டும். இவ்விதம், தொடர்ந்து படிப்படியாக உயர் பிறவிகளை எடுத்து, மேலும் பல புண்ணிய காரியங்களச் செய்து, சிறுகச் சிறுக, இறைவனை அணுகி, இறுதியில் அவனுடன் இரண்டறக் கலந்துவிடும் முக்தி நிலையை அடைந்துவிட வேண்டும். இதுதான் நம் பிறவியின் உண்மையான நோக்கம் ஆகும்.

பிறவியும் ஒரு புனித யாத்திரைதான்!

பலவகைகளிலும், மனிதப் பிறவியும் ஒரு புனித யாத்திரைதான்! ஆனால், அது ஒரு ஆபத்துகள் நிறைந்த யாத்திரை ஆகும்!!

மனித வாழ்க்கை என்பது கொடிய விலங்குகள் நிறைந்த காட்டைக் கடப்பதற்குச் சமமாகும் என்று விவரித்துள்ளார் அவதார புருஷரான ஸ்ரீ வேதவியாசர். பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை என்ற மூன்று ஆசைகளும் புனிதமான நம் பிறவியைச் சீர்குலைக்கும் கொடிய விலங்குகள் என அருளியுள்ளார் அவர்.

தெய்வ பக்தி, நேர்மை, ஒழுக்கம், சத்தியம் ஆகியவற்றின் துணையுடன் தனது வாழ்க்கை காலத்தைக் கடக்கும் விவேகமுள்ள மனிதன், தன் வயோதிக காலத்திலும் மனநிம்மதியுடனும், மனநிறைவுடனும் கவலையின்றி வாழ்கிறான். உடலில் பலமும், வாழ்வில் ஓரளவு வசதியும் உள்ளபோதே நற்செயல்களைச் செய்து புண்ணிய பலன் களைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மனிதப் பிறவியில் நமக்கு என்றும் துணையிருந்து, துன்பங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் உண்மையான, அழியாத, எவராலும், எக்காலத்திலும் அழிக்கமுடியாத சொத்து நாம் செய்யும் புண்ணிய காரியங்களின் பலன்கள் மட்டுமே. புண்ணியத்தைச் செய்யாவிடினும் பாவச் செயல்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.

மனிதப் பிறவி எடுத்தவர்கள் செய்யவேண்டிய தர்ம காரியங்களை நம் வேத கால மகரிஷிகள் இருவகை புண்ணியச் செயல்களாகப் பிரித்துக் காட்டியுள்ளனர். ஒன்று - நாம் தேடிச் செல்லும் புண்ணியம். மற்றொன்று - நம்மை நாடிவரும் புண்ணியம்!

நாம் தேடிச் செல்லும் புண்ணியங்கள் எவை என்பதை நாம் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.

1. திருத்தலங்கள் தரிசனம்,
2. புண்ணிய நதிகளில் ஸ்நானம், 3.தினமும் செய்யும் தான, தர்மங்கள்,
4. திருக்கோயில் உழவாரப் பணிகள், 5. சிதிலமடைந்த திருக்கோயில்களைச் சீரமைத்தல்,
6. திருக்கோயில்களில் தீபம் ஏற்றுதல், 7. பகவானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்தல்,
8. பகவானுக்குத் தினமும் பூஜை செய்தல், 9. பித்ரு (தந்தை), மாத்ரு (தாய்) பூஜைகள். 10. அனாதைப் பிரேத ஸம்ஸ்காரம்.

இவையனைத்தும் நாம் செய்யவேண்டிய மிக முக்கியக் கடமைகளாகும். அளவற்ற புண்ணியத்தை நமக்கு அளிப்பவை இவை.

இதுபோன்றே நம்மை நாடிவரும் புண்ணியம் :- 1. நவராத்திரி, 2. புரட்டாசி சனிக்கிழமைகள், 3. ஏகாதசி விரதம்,
4. பிரதோஷம், 5. சஷ்டி, 6. சிரவணம்,
7. கிருத்திகை ஆகிய தினங்களில் உபவாசம், 8. மகாளய பட்சம் 15 நாட்கள், 9. தீபாவளி அன்று இல்லந்தோறும் எழுந்தருளும் கங்கா தீர்த்தத்தில் ஸ்நானம் (அதிகாலை 3.00 முதல் 4.00 வரை). 10. ஆண்டுத் திதி அன்று நம் இல்லத்திற்கு எழுந்தருளும் பித்ருக்களைப் பூஜித்தல்.

பித்ருக்களின் கருணை!

அளவற்ற புண்ணியத்தை மிக, மிக எளிதில் நமக்குப் பெற்றுத் தருவது மறைந்த நம் முன்னோர்களை சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் போன்றவற்றால் பூஜிப்பதாகும். அமாவாசை, மாதப் பிறப்பு, சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பித்ரு பட்சம் (மகாளய பட்சம்) ஆகிய புண்ணிய காலங்களில் நாம் செய்யும் பித்ரு பூஜைகள் நம் குழந் தைகளுக்கு இப்போதே நாம் சேர்த்து வைக்கும் வைப்புநிதி (Deposit) ஆகும். பல தலைமுறைகளுக்கு இப் புண்ணிய பலன்கள் நம் குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் பூர்வீக சொத்து என தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பித்ரு பூஜைகளினால் நாம் சேர்த்து வைக்கும் புண்ணியத்தை நம் குழந்தைகள் பூர்வீக சொத்தாக அனுபவிக்க லாம். ஆனால், அதனை அழிக்க முடியாது. இது எப்படி என்று கேட்கலாம்.

அதாவது, ஒருவர் செய்யும் புண்ணியம், அவர் செய்யும் பாவங்களால் கரைந்துவிடும். ஒரு பக்கம் புண்ணிய காரியங்களைச் செய்து கொண்டே, மறுபக்கம் பாவச் செயல் களையும் செய்வது, அடியில்லாத பாத்திரத்தில் நீர் நிரப்ப முயற்சிப்பதைப் போலாகும்.

ஆனால், மறைந்த நம் மூதாதையர்களுக்குச் செய்யும் திதிபூஜைகள், தர்ப்பணம் ஆகியவற்றால் நமக்குக் கிடைக்கும் புண்ணிய பலனை, எதனாலும், எவராலும் அழிக்க முடியாது. அது, தலைமுறை தலைமுறையாக, நம் குழந்தைகள், பேரன்கள், பேத்திகள் ஆகியோருக்கு நாம் வைத்துச் செல்லும் சாஸ்வதமான சொத்தாக நீடிக்கும்.

ஆதலால்தான், நாம் பித்ரு பூஜைகளை அவசியம் செய்து வர வேண்டும் என மகரிஷிகள் உபதேசித்துள்ளனர்.

பித்ருக்கள் ஏன் நேரில் வருவதில்லை..?

திரேதாயுகத்தின் முதல் பகுதி வரையில், பித்ருக்கள் நேரில் எழுந்தருளி நாம் செய்யும் திதி பூஜைகளை ஏற்று வந்தனர். அளவற்ற தேஜஸ்(ஒளி)
ஸுடன் வரும் அவர்களை, புத்திரர்கள் தங்கள் இல்லங்களின் வாயிலில் காத்திருந்து, பாத பூஜை செய்து, வீட்டினுள் வரவேற்று, ஆசனங்கள் சமர்ப்பித்து, விசேஷ அன் னம் அளித்து, குடும்பத்தினர் அனைவரும் பித்ருக்களின் திருவடிகளில் வணங்கி, அவர்களது ஆசியைப் பெற்று, வழி அனுப்புவது வழக்கத்தில் இருந்து வந்தது.

ஸ்ரீ ராமபிரான், தன் தேவி ஸ்ரீ சீதையுடன் கயா திருத்தலத்திற்கு எழுந்தருளி, கயா சிரார்த்தம் செய்தபோது, தசரதர், ரகு மற்றும் அஜன் ஆகிய பித்ருக்கள் நேரில் வந்து, பல்குனி நதிக் கரையில் சிரார்த்தத்தை ஏற்று, ஸ்ரீராமபிரானையும், ஸ்ரீசீதாதேவியையும் ஆசீர்வதித்த நிகழ்ச்சியை கயா திருத்தல வரலாறு விவரித்துள்ளது.

துவாபர யுகத்தின் பிற்பகுதியிலிருந்து மனிதர்களின் தேஜஸ் (ஒளி), வீர்யம் (சக்தி), ஆரோக்கியம், உருவம் ஆகியவை படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்ததால், பித் ருக்கள் எழுந்தருளும்போது அவர்களின் ஒளியையும், சக்தியையும் தாங்கிக் கொள்ளும் பலம் கண்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அதனால்தான், இக்கலியுகத்தில் சிரார்த்தங்களின்போது நம் முன்னோர்கள் வருவதை நம்மால் பார்க்க முடியவில்லை.

கலியில் பித்ருக்கள் நேரில் வரும் புனித தலங்கள்!

கலியுகத்தில் நம் முன்னோர்கள், சிரார்த்தங்கள் மற்றும் அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகண புண்ணிய காலங்கள் ஆகியவற்றின்போது செய்யும் தர்ப்பணம் ஆகியவற்றை வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் ஆகிய தேவர்களின் மூலம், அவர்களது அம்சமாகவே வந்து நாம் செய்யும் பூஜைகளை ஏற்று நம்மை ஆசிர்வதித்து, அதன்பின்பு அவர்களின் புண்ணிய உலகங்களுக்குச் செல்கின்றனர் என்பதைப் புராதன நூல்கள் விளக்கியுள்ளன.

மகாளய பட்சம் 15 நாட்கள் மற்றும் மகாளய அமாவாசை ஆகிய விசேஷ காலங்களிலும், கயை, குருக்ஷேத்திரம் (சூரிய குண்டம், பிரம்மசரஸ்), பதரி ஆஸ்ரமம் (பிரம்ம கபாலம்), வர்க்கலை (ஜனார்த்தனம் - கேரளம்), கோமுகம், மானஸசரோவரம் ஆகிய ஆறு(6) பரமபவித்திரமான இடங்களில் நாம் அளிக்கும் பித்ரு பூஜையையும், அன் னத்தையும் நமது முன்னோர்கள் நேரில் வந்து, ஏற்று நம்மை ஆசீர்வதிக்கின்றனர்.

தமிழகத்தில் மகாளயபட்சம்!

இந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் மகாளயபட்சம் 15 நாட்களும் தினமும் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்யும் பாக்கியம் பெற்றதாக எமக்குத் தெரிவித்துள்ளனர். இது கேட்டு அளவற்ற மகிழ்ச்சியை அடைகிறோம்.

பவானி கூடுதுறை, புண்ணிய நதிகளான பவானி, காவிரி, காயத்ரி ஆகிய மூன்றும் சேருமிடத்தில், அமிர்தமும் சேர்ந்து அமுத நதியாக பிரவகிக்கும் தலமாகும். சரஸ்வதி நதியும் அந்தர்வாஹினியாக சங்கமிக்கும் ‘பிரயாகை’யான இந்த பவானியிலும், அழகிய மணவாளன் ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளியிருக்கும் திருவரங்கம் அம்மாமண்டபம் காவிரிதுறையிலும், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்திலும், ஹரித்வார், ரிஷிகேஷ், காசி, உத்தர காசி, கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புண்ணிய நதிக்கரைகளிலும் லட்சக்கணக் கான மக்கள் மகாளய அமாவாசையன்று பித்ருக்களுக்குத் தர்ப்பணம், தீர்த்தம், அன்னம் ஆகியவற்றை அளித்து பூஜித்த விவரங்கள் கிடைத்துள்ளன. இவற்றை அறிந்து அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

ஒவ்வொருவரும் புண்ணிய காரியங்களைச் செய்து, அதன் பலனாக கடன், வறுமை, நோய்கள் மற்றும் இதர துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெற்று மகிழ வேண்டும் என் பதே எங்கள் ஆசை! அதற்காகத்தான், தேடிச்செல்ல வேண்டிய புண்ணியங்களையும், நம்மை நாடிவரும் புண்ணியங்களையும் தவறாமல் ஏற்று பிறவி என்னும் ஒப்பற்ற வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டு பகவானின் பரிபூரணமான கருணையைப் பெற வேண்டுகிறோம்.

புண்ணியம் என்னும் ஒப்பற்ற வழியிருக்க நாம் ஏன் வருந்த வேண்டும்?

Comments

  1. ஐயா, உங்களின் பதிவுகள் நீங்கள் பதிப்பித்த உடன் எனக்கு மின்னஞ்சலில் உடன் வந்துவிடும்.

    இந்த பதிவில்,
    பிறவியின் நோக்கம்,
    பிறவியும் ஒரு புனித யாத்திரைதான்,
    பலவகைகளிலும் மனிதப் பிறவியும் ஒரு புனித யாத்திரைதான் ஆனால், அது ஒரு ஆபத்துகள் நிறைந்த யாத்திரை ஆகும் ,
    பித்ருக்களின் கருணை,
    இருவகை புண்ணியம் குறித்து தாங்கள் விளக்கி இருப்பது அருமை.

    அதோடு தாங்கள் சித்தர்கள் இராச்சியம் வலைப்பூவில் பதிவிட்ட பல கமென்ட்களை நான் படித்ததுண்டு. அதில் தங்களின் இத்துறை சார்ந்த ஆழ்ந்த அறிவாற்றல் விளங்குகின்றது.
    மேலும், பல்வேறு ஆன்மீக கட்டுரைகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

    அன்புடன்,
    பா. முருகையன், வடலூர்.
    Visit My Blog : www.siddharkal.blogspot.com

    ReplyDelete
  2. ஒரு பக்கம் புண்ணிய காரியங்களைச் செய்து கொண்டே, மறுபக்கம் பாவச் செயல் களையும் செய்வது, அடியில்லாத பாத்திரத்தில் நீர் நிரப்ப முயற்சிப்பதைப் போலாகும்.

    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment