அமெரிக்க திருப்பதி







உலகின் ‘நம்பர் ஒன்’ பணக்காரக் கடவுள் யார்? பதில் : திருப்பதி வேங்கடாசலபதி.
உலகின் ‘நம்பர் ஒன்’ பணக்கார நாடு எது?விடை: அமெரிக்கா.

இப்போது நாம் தரிசிக்கப் போகும் கோயிலுக்கும்,இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.

அது, நம்பர் ஒன் பணக்காரக் கடவுளை, நம்பர் ஒன் பணக்கார நாட்டில் தரிசிக்கப் போகிறோம் நாம்.

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரம்தான் ஏழுமலைவாசன் கோயில் கொண்டு வாசம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறது. திருப்பதியில் எங்கு பார்த்தாலும் மலைகள் தெரியும் என்றால், இங்கே பார்க்கும் இடமெல்லாம் பாலங்கள்! பக்தர்கள், வாழ்க்கைக் கடலைக் கடந்திட பாலமாக இருக்கும் பகவானுக்கு பாலங்கள் நிறைந்த இடத்தில் கோயில் அமைந்திருப்பதும் பொருத்தம்தான்.

பாலங்கள் அதிகம் இருப்பதால், ‘சிட்டி ஆஃப் பிரிட்ஜ்’ என்றும், எஃகுத் தொழிற்சாலைகள் நிறைய இருப்பதால்,எஃகு நகரம் எனவும் அழைக்கப்படுகிறது பிட்ஸ்பர்க்.

நகரம் இருக்கட்டும், வேங்கடேஸ்வரப் பெருமாள் என்று பகவான் அழைக்கப்படுவதன் காரணம் தெரியுமா?

வேம் என்றால் பாவங்கள் என்று அர்த்தம். கடவன் என்பதற்கு, தகர்ப்பவன் அல்லது கடக்கச் செய்பவன் என்று பொருள். ஈஸ்வரன் என்பது பரம் பொருளைக் குறிக்கும் வார்த்தை.வேங்கடேஸ்வரன் பக்தர்களின் பாவங்களைப் போக்கி, சம்சாரக் கடலை கடக்கச் செய்யும் பரம்பொருள்.
அமெரிக்காவின் பென்சில்வேனிய மாகாணத் தலைநகரம் பிட்ஸ்பர்க். வட அமெரிக்காவின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றும் கூட! அலகேனி, மொனொகஹேலா, ஓஹையோ ஆகிய மூன்று ஆறுகள் இந்நகரத்தில் ஓடுகின்றன.

ஏழுமலைக்குச் சென்றால் ஏழு ஜென்ம வினைகள் நீங்கும் என்பர். அந்த ஆண்டவனை தரிசிக்கத் துடித்தனர், புலம்பெயர்ந்து இங்கே வந்திருக்கும் பல்லாயிரம் இந்தியர்கள்.

திருப்பதிக்கு ஒப்பான ஒரு கோயிலை எழுப்ப வேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்தினாலும் ஆசையினாலும் இங்கே கோயில் எழுந்த விதத்தைப் பார்க்கும் முன் வேங்கடாசலபதி பற்றிய கதையினைப் பார்க்கலாமா?

திருமலையில் திருக்கோயில் கொண்டு கலியுகவரதனாகத் திகழும் வேங்கடவன், பூவுலகில் கோயில் கொள்வதற்காக அந்தப் பொன் மகளையும் பிரிந்து வந்திருக்கிறார்.

ஒருசமயம், மகாவிஷ்ணுவும், மகா லட்சுமியும் ஏகாந்தமாக இருந்தபோது, அங்கு சென்றார் பிருகு முனிவர்.அவர் வந்ததை திருமால் கவனிக்காததால், சினத்தோடு திருமாலின் மார்பிலே எட்டி உதைத்தார். தன்னை எட்டி உதைத்ததால் முனிவருக்குக் கால் வலிக்குமே என்று தடவிவிட்டார் பெருமான்.திருமாலின் திருமார்பில் இருப்பவள் மகாலட்சுமி ஆயிற்றே! தன்னை விட முனிவர் முக்கியமானவராக ஆகிவிட்டாரா? என்று அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வர, திருமாலை விட்டுப் பிரிந்து பூலோகத்தில் உள்ள கோல்ஹாபூர் சென்று தனித்திருந்தாள்.

திருமகள் பிரிந்ததும் செல்வம் யாவும் இழந்த பெருமாள் கவலையுற்று, மகாலட்சுமியைத் தேடி பூவுலகு வந்தார்.

ராமாவதாரத்தில் வேதவதியாக இருந்த பத்மாவதிக்கு அளித்த வாக்கின்படி இந்த அவதாரத்தில் அவளை மணம் புரிந்தார். அப்போது குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் தங்க நாணயங்கள் கடன் வாங்கினார் பெருமாள். பின் மகாலட்சுமியும் கோபம் தணிந்து வர, உலகின் நம்பர் ஒன் பணக்காரக் கடவுளாகத் திகழுமளவுக்குப் பொன்னும் பொருளும் குவிகிறது திருப்பதியில்.

திருப்பதியின் பெருமை பற்றிக் கூற இந்த யுகம் முழுதும்கூட போதாது. அவ்வளவு கதைகள் இருக்கின்றன. அப்படியிருக்க, ஏழுமலைவாசனின் புகழ் கண்டங்கள் கடந்து அமெரிக்காவிலும் பரவியிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இதோ, வேங்கடவன் கடல் கடந்து, கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்து கோயில் கொண்டு பக்தர்களுக்காக அர்ச்சாவதார மூர்த்தியாக சேவை சாதிக்கும் பிட்ஸ்பர்க் நகருக்கு வந்துவிட்டோம். கோயிலை நோக்கிச் செல்லும்போது, வழியிலேயே கோபுர தரிசனம் கிட்டுகிறது. வெள்ளை வெளேரென்று வெண்பட்டு உடுத்தி விண் தொட்டு நிற்கும் விஸ்வவியாபியான எம்பிரான் போல் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது கோபுரம். கோவிந்தன் நாமம் சொன்னபடி கோபுரம் நோக்கி கைகுவித்துக் கும்பிடுகிறோம்.

ஆந்திர அரசும் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் முழு ஆதரவு அளித்து கட்டப்பெற்ற இக்கோயில் அமெரிக்காவின் திருப்பதி என்று கூறும் அளவிற்கு சிறந்து நிற்கிறது.

1970களில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒன்று கூடி, ‘இந்து டெம்பிள் சொசைட்டி ஆஃப் நியூயார்க்’ என்ற அமைப்பினைத் தொடங்கினர்.

அதன் செகரட்டரியாக இருந்த அழகப்பன் என்பவர் திருப்பதி பாலாஜியின் பெயரில் அமெரிக்கா முழுதும் சென்டர்கள் தொடங்கலாமா என திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வேண்டுகோள் வைத்தார். 1972ல் அதற்கு ஒப்புதல் அளித்த தேவஸ்தானம் ஏழு லட்சம் ரூபாய் நிதியையும் தந்து உதவியது.

பின்னர் ‘இந்து சொசைட்டி ஆஃப் பிட்ஸ்பர்க்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. கணபதி ஸ்தபதி தலைமையில் 1973ல் கோயில் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, 1975ல் இந்திய நாட்டு அம்பாசடர் முன்னிலையில், திருப்பதி தேவஸ்தானத்தின் முழு ஊக்கத்துடனும் கோயில் கட்டுமானப் பணி தொடங்கியது. அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரும் நன்கொடைகள் தந்தனர்.

திருப்பதி போன்றல்லாமல் சற்றே வித்தியாசமாக ஆண்டாள் சன்னதி மற்றும் மகாலட்சுமித் தாயார் சன்னதிகளோடு கட்ட முடிவெடுக்கப்பட்டது.

1977-ல் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, முதல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் உரிய இடைவெளிகளில் குடமுழுக்கு நடத்தப்பட்டு கடைசியாக 2009-ல் கும்பாபிஷேகம் நடந்தேறியிருக்கிறது.

இன்று அமெரிக்க நாட்டின் முதன்மையான இந்துக் கோயில்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

இளவேனிற்காலமான ஸ்ப்ரிங் சீஸன் நிலவுவதால்,குளிர் நடுக்கி எடுக்கிறது.எப்படித்தான் வெறும் காலுடன் கோயிலில் நடக்கப் போகிறோமோ என்று லேசாக நடுக்கம் ஏற்படுகிறது. ஆச்சரியம்! கோயில் முழுக்க ‘ஃபால்ஸ் ரூஃபிங்க்’ (தாழ்வான கூரை) செய்து மூடியிருக்கிறார்கள். ஹீட்டர் வசதியால் மிதமான தட்பவெட்பம் எங்கும் நிலவுகிறது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனி வேறு கொட்டுவதால் இந்த ஏற்பாடாம்.

நடக்கும் பாதை முழுதும் ‘கார்பெட்’ விரித்துள்ளார்கள். அதனால் குளிர் தெரியவில்லை.

முதலில் முழுமுதற் கடவுள் பிள்ளையாரின் சன்னதி. ஆனைமுகனை வணங்கிவிட்டுப் படியேறினால் பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதியின் எழிற் கோலத்தைக் கண்டு பிரமித்துப் போகிறோம். நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் எம்பிரானை கண்களால் அப்படியே படம்பிடித்து மனத்தினுள் அந்தக் காட்சியை அப்படியே பதித்துக் கொள்கிறோம். கேட்பவர் கேட்டதைக் கொடுப்பவர் இவர்.

ஆண்டாள், தாயார் சன்னதிகளும் அழகு மிளிர்கின்றன. அவர்களின் அலங்காரமும் அழகோ அழகு!

கோயிலினுள் அமெரிக்கர்கள் கூட கைங்கர்யம் செய்வதைப் பார்க்க முடிகிறது. கீழே விழும் குப்பைகளை உடனேயே கூட்டிக் களைகிறார் அமெரிக்கர் ஒருவர்.

அர்ச்சகர் துளசி தீர்த்தம் தந்து ஸ்ரீசடாரியை சிரசில் சாதிக்கிறார். சிரம் பணிந்து ஏற்றுக் கொள்கிறோம். துளசி தீர்த்தத்திற்கு அடுத்ததாகத் தரப்பட்ட பிரசாதத்தைப் பார்த்ததும், ஆனந்த அதிர்ச்சி! பாதாம், உலர் திராட்சை, முந்திரி, கற்கண்டு கலவையை பிரசாதமாகக் கொடுக்கின்றனர்.
இக்கோயிலில் தொண்டு செய்யும் பட்டாச்சாரியார்கள் பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவர்களாம்.

கோயில் நுழைவாயிலிலேயே இருக்கிறது அலுவலகம். பணம் செலுத்தி, சஹஸ்ரநாம அர்ச்சனை, அபிஷேகம் முதல் கல்யாண உத்சவம் செய்து கொள்கிறார்கள் பக்தர்கள்.

கோயில் அமைக்கப்பட்ட இருபத்து ஐந்தாவது ஆண்டு விழாவின்போது அந்த வருடம் முழுதும் கோடி துளசி தள அர்ச்சனை சகஸ்ர ரஜத கலசாபிஷேகம் (ஆயிரம், வெள்ளிக் கலசங்களால் அபிஷேகம்) அஷ்டாட்சர மகா மந்திர யாகம், ஸ்ரீ மஹாவிஷ்ணு விஷ்வஸாந்தி யாகம் என பக்திபூர்வமாக நடத்தியுள்ளனர்.

அமெரிக்கப் பள்ளிகளின் (ஜூன் முதல் ஆகஸ்டு வரை) கோடைக்கால விடுமுறையின்போது இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் மூலம் வாய்ப்பாட்டு, இசை, நாட்டியம் என்று குழந்தைகளுக்கு வகுப்புகள் நடத்துகிறார்கள். இல்லத்து விழாக்களுக்கு கோயிலின் உள்ளேயே மண்டபம் இருக்கிறது.

குழந்தைகளுக்காக பாலவிஹார் வகுப்புகளும் யோகா பயிற்சி முகாம்களும் வருடம் முழுதும் நடத்தப்படுகின்றன அனைத்துக்கும் மேலாக, கோயிலில் நூலகம் ஒன்றும் இருக்கிறது. ஆன்மிகப் புத்தகங்கள் நிறைய இருக்கின்றன.

எம்பெருமானை தரிசித்து வலம்வந்து வரம் வேண்டி சேவித்தாயிற்று. இறை தரிசனத்துக்குப் பின் வயிற்றுக்கு இதமாக இரை கிட்டுகிறது. கோயிலுக்குள்ளேயே இருக்கிற கேண்டீனில் புளியோதரை, பொங்கல், தயிர் சாதம் விற்பனை செய்கின்றனர். கொறிக்க இனிப்பு பூந்தி, மிக்சர் கோயில் அலுவலகத்திலும் விற்கிறார்கள். திருப்தியான முழுச் சாப்பாடு வேண்டும் என்றால் கோயில் அருகிலேயே உள்ளது உடுப்பி கஃபே. தென்னிந்திய உணவு வகைகள் அனைத்தும் இங்கு கிடைக்கிறது.

அமெரிக்காவிற்கு சுற்றுலா வரும் இந்தியர்கள் நயாகராவைத் தவறாமல் காணச் செல்வது போன்று பிட்ஸ்பர்க் வேங்கடவனையும் மறக்காமல் தரிசிக்கின்றனர். நீர்வீழ்ச்சி கண்களைக் குளிர வைக்கிறது என்றால், இந்த வேங்கடவன் தரிசனம் எல்லோர் மனதையும் குளிர்விக்கிறது நிறைவாக, நிரந்தரமாக!




கோயில் நேரம்:
வாரம் முழுதும் காலை ஒன்பது மணி முதல் இரவு எட்டு முப்பது மணி வரை.வெள்ளிக்கிழமை காலை ஒன்பது முதல் இரவு ஒன்பது முப்பது வரையில் விசேஷ நாட்களில் இந்த நேரம் மாறுபடும்.

மெக்கல்லி ட்ரைவ், மான்ரோவில்லில் இருக்கும் இக்கோயிலுக்கு ட்ரைவ் செய்து வருவது எளிது. வாடகைக் காரில் ஜிபிஎஸ் இருந்தால் நன்று. இல்லையெனில் கூகுள் மேப்ஸ் நம் கைப்பேசியில் டவுன்லோடு செய்து,
வழி பார்த்தும் வரலாம்.அமெரிக்க தேசியச் சாலைகள் வழிநெடுக மோட்டல்கள் இருக்கும். தொலை தூரத்திலிருந்து ட்ரைவ் செய்து
வந்த களைப்பு போக நம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு இவற்றில் தங்கி
காலையில் தரிசிக்க வரலாம்

Comments

  1. அருமையான பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    எனது நண்பர்களை உங்களது பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. நம்பர் ஒன் பணக்காரக் கடவுளை, நம்பர் ஒன் பணக்கார நாட்டில் தரிசிக்க வைத்த அருமையான பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்>

    ReplyDelete
  3. நீர்வீழ்ச்சி கண்களைக் குளிர வைக்கிறது என்றால், இந்த வேங்கடவன் தரிசனம் எல்லோர் மனதையும் குளிர்விக்கிறது நிறைவாக, நிரந்தரமாக!/

    மனம் குளிர வைக்கும் அற்புதப் பகிர்வு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment