வினைதீர்க்கும் வேலவன்

தென்பழநி தெரியும்; வடபழநி தெரியும்; நடுபழநி முருகன் தலம் ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியுமா?


பசுமை பூத்துக்குலுங்கும் அழகிய கிராமமான பெருங்கருணை என்ற இடத்தில்தான் இத்தலம் அமைந்துள்ளது.

பெரும்பாலும் முருகன் திருத்தலம் என்றால் அத்தலத்துடன் யாராவது ஒரு சித்தரும் சம்பந்தப்பட்டிருப்பது சகஜம். இத்தலத்துக்கும் ஒரு சித்தர்தான் காரணமாகிறார்.

தற்போது கோயில் அமைந்திருக்கும் குன்றின்மீது ஆரம்பத்தில் ஒரு சிறு வேலையும், முருகன் விக்ரகத்தையும் வைத்து தியானத்தில் ஆழ்ந்தும் பூஜைகள் செய்தும் வந்தார் அவர். நாளடைவில், தங்கள் குறை தீர அங்கு வந்து வேண்டிக் கொண்ட பக்தர்கள் முயற்சியாலும், சித்தரின் ஈடுபாட்டாலும், படிப்படியாக உருப்பெற்றதுதான், இந்த நடுபழநி முருகன் தலம். காஞ்சி மகாபெரியவர் பரமாசாரியார் இத்தலத்துக்கு விஜயம் செய்திருக்கிறார். அவர்தான் இத்தலத்துக்கு நடுபழநி என்று பெயர் வைக்கும்படி சொன்னாராம்.

குன்றின் மேலே கோயிலுக்குச் செல்ல படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் வலதுபுறம் இடும்பனும், இடதுபுறம் ஆஞ்சநேயரும் காணப்படுகிறார்கள். அதைத் தொடர்ந்து, சிறு மண்டபம். வலது பக்கம் விநாயகர், இடதுபக்கம் மகாலட்சுமி அம்சமான கனகாதேவி மற்றும் நவகிரக சன்னதிகள் உள்ளன. சற்று தூரம் சென்றால் இடதுபுறம் சிவன் வீற்றிருக்க, அவர் முன்பு சரவணப்பொய்கை சலசலக்கிறது. அதன் கரையில் கார்த்திகைப் பெண்கள் முருகனின் ஆறு வடிவங்களைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் அழகான சுதைச் சிற்பங்கள் உள்ளன.

சுமார் எழுபது படிகள் கடந்ததும் மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்ட கோயில் உள்ளது. உள்ளே வட்டவடிவமான கருவறை. அதனுள் தண்டாயுதபாணி சுவாமி மரகதப்பச்சை சிலையாக அமைந்து பிரகாசிக்கிறார். சித்தர் பூஜித்து வந்த விக்ரகம், சிறிது பின்னமாகி விட்டபடியால் அந்த விக்ரகமும் யந்திரமும் இப்போது காட்சி தரும் மரகத தண்டாயுதபாணி சிலையின் கீழே பதிக்கப்பட்டு விட்டதாகச் சொல்கின்றனர்.

பிராகாரத்தில் ஆதிகுருவான தத்தாத்ரேயர் சன்னதி அமைந்துள்ளது. அப்பனுக்கே பாடம் சொன்னதால் ஏற்பட்ட பாவ விமோசனத்துக்காக முருகபிரான் தத்தரிடம் உபதேசம் பெறும் காட்சி, அழகிய சித்திரங்களாக வரையப்பட்டிருக்கிறது.

இக்கோயிலில் முருகனுக்கே உரித்தான தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை போன்ற விசேஷ நாட்கள், மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் உற்சவருக்கும், செவ்வாய்க் கிழமைகளில் மூலவருக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இத்தலத்து முருகனை தரிசித்து வேண்டிக்கொண்டால் மணப்பேறு, மகப்பேறு, கடன் சுமை போன்ற பிரச்னைகள் விலகி கல்விஞானம் பெருகுகிறதாம்.

கோயில் காலை 7.30 முதல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7.45 வரையும் தரிசனத்துக்குத் திறந்திருக்கும். அவசியம் குடும்பத்தோடு சென்று தரிசிக்க வேண்டிய முருகன் தலம்.

Comments

  1. பெருங்கருணை முருகன் தலம் பற்றிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

    ReplyDelete

Post a Comment