பிணி தீர்க்கும் ஈசனின் ஆலயம்...








'அடுத்தவர் உடைமைக்கு ஆசைப்படுவது எவ்வளவு தவறு என்பது, அப்போது தெரியவில்லை; இப்போதுதான் புரிகிறது’ என்று புலம்பினான் இந்திரன். 'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது என் விஷயத்திலும் நடந்துவிட்டது. கெட்டுப் போன பிறகே புத்தி விழித்துக்கொண்டு இருக்கிறது’ என ஆதங்கப் பட்டான், அவன்.



'பிறன் மனை நோக்காப் பேராண்மை இல்லாமல் போயிற்றே என்னிடம்! அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படுவது எத்தனை பெரிய பாவம்? அதுவும், குருவின் மனைவியை குருவாகவோ அல்லது தாய்க்கு நிகராகவோ அல்லவா மதிக்கவேண்டும்? ஆனால், குருவின் மனைவியை அடைய நினைத்தது, எவ்வளவு பெரிய கேட்டினை எனக்குத் தந்துவிட்டது! எத்தனை பெரிய அவமானத்தை அடைந்துவிட்டேன் நான்!’ எனப் புலம்பிக்கொண்டே இருந்தான் இந்திரன்.

'கௌதம முனிவர், மிக உத்தமர். தெய்வ பலம் கொண்டவர்! அவரின் ஆஸ்ரமம் எத்தனைப் புனிதமானது! அவரின் மனைவி அகலிகை, பதிவிரதை அல்லவா?! அவளை அடைய நினைத்தது மிகப் பெரிய பிழை! மாபாதகச் செயலை அல்லவா செய்துவிட்டேன்!’ என்று மனதுள் வருந்தியபடி, தலங்கள் தலங் களாகச் சென்று சிவனாரை வேண்டினான் இந்திரன்.



'பாபத்துக்கு ஆளான பாவிக்கு, சாபம்தான் பரிசாகக் கிடைக்கும். எனக்கும் அப்படி யரு சாபம் கிடைத்துவிட்டது. ஓர் அதிகாலை நேரத்தில், அன்றைய தினத்து அனுஷ்டானங்களை நிறைவேற்றுவதற்காக, கௌதம முனிவர் ஆற்றங்கரைக்குச் செல்லும் போது, என்னுடைய அனுஷ்டானங்களை நிறைவேற்றுவதற்கு மறந்தே போனேனே, அதுவொரு பாபம். என்னுடைய நித்தியக் கடமைகளைத் துறந்து, மிகப் பெரிய பேராற்றலும் தவ வலிமையும் இறைபக்தியும் கொண்ட கௌதம முனிவரின் தோற்றத் தில், புனிதம் மிக்க ஆஸ்ரமத்துக்குள் சென்ற போதேனும், மனம் திருந்தியிருக்கக் கூடாதா? காமம் என் புத்தியை முற்றிலுமாக முடக்கிப்போட்டுவிட்டது. முற்றும் துறந்த கௌதமர், தமது ஞானதிருஷ்டியால் அனைத் தையும் அறிந்திடுவார் என்கிற எண்ணம்கூட இல்லாமல், ஆசையைத் தீர்த்துக் கொள்ள ஆஸ்ரமத்துக்குள் நுழைந்தது, படுபாதகச் செயல் அல்லவா!’

கௌதமர், ஆஸ்ரமத்துக்குத் திரும்பி வந்தபோது, திருட்டு முழி முழித்தபடி, சட்டென்று அவருடைய உருவத்தில் இருந்து மாறி, பூனையாகிப் போனான் இந்திரன். 'ஞானக்கண் திறக்கும் ஆசானுக்கு நீ தருகிற குருதட்சிணை இதுதானா? சீச்சீ... உன்னுடைய கண்களில் கொப்பளித்துக் கிடக்கிற காமம், நீ எவ்வளவு பெரிய அயோக்கியன் என்பதை உணர்த்துகிறது. மாற்றான் மனைவி மீது ஆசைப்படுகிற உன்னை உலகத்துக்கே தெரியப்படுத்தவேண்டும். உன் அங்கம் முழுவதும் கண்களாகக் கடவது!’ என்று கடும் கோபத்துடன் சாபமிட்டார் கௌதமர். அவ்வளவுதான்... அவன் கைகளில், கால்களில், கழுத்தில், தலையில், நெஞ்சில், வயிற்றில் என ஆயிரக்கணக்கான கண்கள் காட்சி அளித்தன.

கலங்கிப்போனான் இந்திரன். 'இந்தச் சாபத்தில் இருந்து விமோசனம் தாருங்கள், குருவே!’ என்று கண்ணீர்விட்டு வேண்டி னான். அவனுடைய உடலில் இருந்த அத்தனைக் கண்களில் இருந்தும் தாரைதாரையாகக் கண்ணீர் பெருக்கெடுத்தது. 'நெற்றிக் கண்ணைக் கொண்டு உலகைக் காணும் சிவபெருமானால் மட்டும்தான், உமக்கு விமோசனம் அளிக்க முடியும்’ என்று இந்திரனிடம் சொன்ன கௌதம முனிவர், அகலிகையையும் 'கல்லாகக் கடவது’ என்று சாபமிட்டார்.

'எவ்வளவு பெரிய பாவியாகிப் போனேன்! இந்தச் சாபத்தில் இருந்து விமோசனம் தாருங்கள் என் சிவனாரே!’ என்று, பூவுலகில் உள்ள ஒவ்வொரு தலத்துக்கும் சென்று வழிபட்டான் இந்திரன். வசிஷ்ட முனிவர் பன்னெடுங்காலம் பர்ணசாலை அமைத்து தவம் செய்த திருத்தலத்தை வந்தடைந்தான். தேகம் முழுவதும் கண்களைப் பெற்றதுடன், தீராத நோயையும் சாபமாகப் பெற்றிருந்தவன், அங்கேயுள்ள சிவனாரை மனமுருகப் பிரார்த்தித்து வழிபட்டு வந்தான்.

நீண்ட தவத்துக்குப் பிறகு இந்திரனுக்கு மனமிரங்கினார் சிவபெருமான். அவனுக்குத் திருக்காட்சி தந்ததுடன், அவனது சாபத்தையும் போக்கி, வரம் அருளினார். அப்போது, 'என்னைப் போல் பாவம் செய்தும் நோய்களால் அவதிப் பட்டும் அல்லல்படும் மாந்தர்கள், இங்கே இந்தத் தலத்துக்கு வந்தால், அவர்களுக்கும் அருள வேண்டும்’ என சிவனாரிடம் வேண்டுகோள் வைத்தான் இந்திரன். 'அப்படியே ஆகட்டும்’ என அருளினார் சிவபெருமான். இந்திரனிடம் சொன்னபடி, இன்றைக்கும் தன்னை நாடி வரும் அன்பர்கள் அனைவரது பாவங்களையும் போக்கியருள்கிறார்; அவர்களின் தீராத நோய்களையும் தீர்த்தருள்கிறார் சிவபெருமான்.

வசிஷ்டர் தங்கியிருந்து தவம் செய்த அந்தத் தலம், ஆதிகாலத்தில் திருவசிட்டபுரி என அழைக்கப்பட்டது. பிறகு, வசிட்டக்குடி என மாறி, பின்னாளில் அதுவே திட்டக்குடி என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். கடலூர் மாவட்டத்தில் உள்ளது திட்டக்குடி. இந்தத் தலத்தில், நோய் தீர்க்கும் மருத்துவராக அருள்வதால், சிவனாருக்கு ஸ்ரீவைத்தியநாதர் என்று திருநாமம். இறைவி- ஸ்ரீஅசனாம்பிகை.



ஒருகாலத்தில் இந்தப் பகுதி வேங்கை மரம் சூழ்ந்த இடமாகத் திகழ்ந்ததால், வேங்கைவனம் எனப்பட்டது. வேங்கை மரம் என்பது வெற்றிக்கு உகந்த மரம் எனப் போற்றுகின்றனர், முனிவர்கள். எனவே, இந்தத் தலத்து நாயகிக்கு ஸ்ரீவேங்கவன நாயகி என்றும் ஒரு பெயர் அமைந்ததாம்.

இத்தனைப் பெருமைகளை அறிந்த மன்னர்கள், இந்தக் கோயிலைக் கட்டி, ஏராளமான திருப் பணிகளைச் செய்துள்ளனர் .

தீராத நோயால் அவதிப்படுபவர்கள், செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் கிடைக்காதா என்று ஏங்கிக் கலங்குபவர்கள் இங்கு வந்து, ஸ்ரீவைத்தியநாதரையும் ஸ்ரீஅசனாம்பிகை யையும் தரிசித்துப் பிரார்த்தித்தால், பிணிகள் யாவும் அகலும்; பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்! எனவே, திட்டக்குடி ஸ்ரீவைத்தியநாதரின் பேரருளைப் பெறுவதற்காக விருத்தாசலம், விழுப்புரம், திருக்கோவிலூர் என நடுநாட்டு மக்கள் பலரும் இங்கு வந்து பிரார்த்தித்துச் செல்வார்களாம்.



இங்கு விழாக்களுக்கும் பஞ்சம் இருந்ததில்லை. சித்திரையிலும் பங்குனியிலும் விழாக்கள் விமரிசையாக நடக்க, இங்கேயுள்ள ஸ்ரீநடராஜ ருக்கு திருவாதிரையிலும் ஸ்ரீஅசனாம்பிகைக்கு நவராத்திரியிலும் சிறப்பு பூஜைகள் அமர்க்களப் படுமாம்! சூரியன் தனது கிரணங்களால் வழிபடும் ஆலயங்களில் இதுவும் ஒன்று!

ஆனால்... தற்போது இந்த ஆலயத்தில் விழாக்களோ, கொண்டாட்டங்களோ கிடை யாது. கும்பாபிஷேகம் செய்து மாமாங்கம் பல கடந்துவிட்டது. பக்தர்களின் வருகையும் குறைந்துபோன நிலையில், சிதிலம் அடைந்து, வழிபாடின்றி இருக்கிறது கோயில். இந்தக் கோயிலின் திருப்பணிகள் துவங்கி, நிதிப் பற்றாக்குறையால் மிகவும் மந்தமாகவே பணிகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கின்ற னர், திருப்பணிக் கமிட்டியினர்.



''நோய் தீர்க்கும் மருத்துவனாக ஸ்ரீவைத்திய நாதர் குடியிருக்கும் இந்தத் தலத்துக்கு, அவசர- அவசியத் தேவை- திருப்பணிகளும், பூஜைகளும்தான்! வெற்றிக்கு வித்திடும் நாயகியாம் ஸ்ரீஅசனாம்பிகை அருளும் ஆலயம், விழாக்களும் கொண்டாட்டங்களும் நிறைந்த திருத்தலமாக மலர வேண்டும். இதுவே எங்களின் நெடுநாள் பிரார்த்தனை!'' என்கிறார் திருப்பணி கமிட்டியைச் சேர்ந்த பி.டி.ராஜன்.

திட்டக்குடி ஸ்ரீவைத்தியநாதர் ஆலயத்தின் திருப்பணிக்கு நம்மால் ஆன கைங்கர்யத்தைச் செய்வோம்; தீராத நோய்களையும், நாம் அறி யாமல் செய்த பாவங்களையும் தீர்த்தருளக் காத் திருக்கிறார் ஸ்ரீவைத்தியநாதர்.

Comments

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment