பகவான் ஸ்ரீமந் நாராயணன் உபாசகர்





சர்வலோக சரண்யனான பகவான் ஸ்ரீமந் நாராயணன் நம் மீது கொண்டுள்ள பரம கருணையினாலும், எல்லையற்ற வாத்ஸல்யத்தினாலும் பல மகான்களை அவ்வப்போது அவதரிக்கச் செய்து, அவர்கள் மூலம் நமக்கு நல்வழிகாட்டி நம் பிறவி பயனடைய அருள்புரிகிறான்.

எங்கு, எப்போது இத்தகைய பேரருளாளர்கள் அவதரிக்கின்றனர் என்பது அவன் ஒருவனுக்கு மட்டுமே தெரிந்துள்ள சூட்சுமமாகும். இத்தகைய அவதாரபுருஷர்கள் அவர்களது ஜீவித காலத்திற்குப் பின்பு ‘பிருந்தாவனம்’ எனப்படும் ஜீவ சமாதிகளில் அமர்ந்து கடும் தவத்தில் ஈடுபடுகின்றனர்.

தாங்கள் செய்துவரும் தவத்தினால் அளவற்ற தெய்வீக சக்திகளைப் பெறும் இம்மான்கள், அந்த சக்திகளைத் தங்களை நாடிவரும் பக்தர்களின் துன்பங்களைக் களை வதற்காகவே பயன்படுத்தி அருள்புரிகின்றனர்.

இவ்விதம் எம்பெருமானின் நியமனத்தால் நம் நலன் கருதி இப்பூவுலகில்
அவதரித்த மகான்கள் ஸ்ரீ ஆதிசங்கரரும், ஸ்ரீமத் ராமானுஜரும், ஸ்ரீ மத்வாச்சாரியாரும்! இம்மூ ன்று மகான்களும் நம் வேதநெறிமுறைக்குச் செய்துள்ள சேவை அளவிடற்கரியது! இத்தகைய தெய்வீக சக்திவாய்ந்த மகான்களின் திருவடி ஸ்பரிசம்பட்ட இடங்கள் அனைத்தும் திருத்தலங்களுக்குச் சமமானவை ஆகும்.

இத்தகைய மகான்களில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடன் நேரில் பேசும் பாக்கியம் பெற்ற அவதார புருஷர், ஸ்ரீ கேசவ தீர்த்தர்.

ஸ்ரீகேசவனையே (ஸ்ரீகிருஷ்ண பகவான்) தம் இஷ்ட தெய்வமாகக் கொண்டு தீவிர பக்தி செலுத்தி வந்ததால் அவரது தாஸ்யநாமமும் (சந்நியாச திருநாமம்) கேசவ தீர்த்தர் என்றே ஆயிற்று.

ஸ்ரீ மத்வாச்சாரியார்!

இறைவனை அடைவதற்கு துவைத சித்தாந்த மார்க்கத்தை உபதேசித்த அவதாரபுருஷர் ஸ்ரீ மத்வாச்சாரியார். இம்மகானின் இயற்பெயர் ஸ்ரீமத் ஆனந்த தீர்த்த பாதாச்சாரியர் என்பது!

பகவான் ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீ ராமபிரானாக அவதரித்தபோது வாயு பகவான் ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமியாகவும், ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தின்போது பீமசேனனாகவும், கலியுக த்தில் ஸ்ரீ வேதவியாஸராகவும், பின்பு ஸ்ரீமத்வராகவும் தோன்றி, ‘ஹரியே சர்வோத்தமன்’ என்பதை உபதேசித்தருளினார்.

இத்தகைய பெருமைபெற்ற ஸ்ரீமத்வருக்கு ஸ்ரீ பூர்ண போதர், ஸ்ரீ பூர்ண ப்ரக்ஞர், ஸ்ரீ சர்வக்ஞர் போன்ற பல திருப்பெயர்களும் உண்டு. துவைத வேதாந்தத்திற்கும், ஸ்ரீ வேதவியாஸரின் பிரம்மசூத்திரத்திற்கும் விளக்கங்களை அளித்ததுடன், பிரசித்திப்பெற்ற 37 கிரந்தங்கள் மூலம் அருள்மழை பொழிந்த மகான் ஸ்ரீமத்வர். பிரம்மசூத்திரத்திற்கு ஸ்ரீமத்வர் எழுதிய பாஷ்யம் (விளக்கவுரை) உலகப் பிரசித்திபெற்றது. இத்தகைய பெருமைவாய்ந்த ஸ்ரீமத்வரின் சிஷ்யர்கள் ஸ்ரீபத்மநாப தீர்த்தர், ஸ்ரீ நரஹரி தீர்த்தர்,

ஸ்ரீ மாதவ தீர்த்தர், ஸ்ரீ அட்சோப்ய தீர்த்தர் ஆகிய மகான்கள் ஸ்ரீமத்வ பீடத்தை அலங்கரித்திருக்கின்றனர்.

ஸ்ரீ அட்சோப்ய தீர்த்தரின் சீடர்தான் உலகப் பிரசித்திபெற்ற ஸ்ரீ ஜெயதீர்த்தர். ஸ்ரீமத்வரின் அற்புத கிரந்தங்களுக்கு விரிவுரைகள் எழுதி ஞானயக்ஞம் செய்த தன்னிகரற்ற மகான் ஸ்ரீ ஜெயதீர்த்தர்.

ஸ்ரீ அட்சோப்ய தீர்த்தர் மற்றும் ஸ்ரீ ஜெயதீர்த்தர் ஆகிய இரு மகாபுருஷர்களின் ஜீவபிருந்தாவனங்கள் குல்பர்க்காவை அடுத்த மல்கேடா எனும் ஊரில் காகினி என்ற புண்ணிய நதிக்கரையில் அமைந் துள்ளன.

இவ்விதம் அருமையும், பெருமையும் வாய்ந்த மத்வ சித்தாந்த மகான்களின் வரிசையில் பூஜிக்கத்தக்க தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த மகான் ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தர். இந்து மதத்தின் கோட்டையாக விளங்கி, வேத தர்மத்தைப் பாதுகாத்துவந்த விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் ராஜகுருவாக விளங்கியவர் ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தர். இம்மகான் ஒரு ஞானசமுத்திரம். இம்மகானால்தான் ஸ்ரீமத்வரின் துவைத வேதாந்த விருட்சம் பசுமையாய், ஆழ்ந்து வேரிட்டு, பூரணமாக மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது எனப் பெரியோர்கள் கூறுவர்.

ஸ்ரீஹரிநாம சங்கீர்த்தனத்தின் பெருமையை உலகிற்கு வெளிப்படுத்தியதுடன், பல தாஸஸ்ரேஷ்டர்களுக்கு ஆச்சார்யனாகவும் விளங்கிய ஸ்ரீ வியாஸராஜர், ஸ்ரீ கண்ணனு டைய காளிங்கநர்த்தனத்தைத் தனது ஊனக்கண்களினால் கண்டு தரிசிக்கும் மகத்தான பாக்கியத்தைப் பெற்ற மகான்.

ஸ்ரீ வியாஸராஜர்தான் - ஈடிணையற்றவரும், தன்னை நாடிவரும் பக்தர்களிடம் அளவற்ற கருணைகாட்டும் காமதேனுவான ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் முந்தைய அவதாரபுருஷராகும்.

ஸ்ரீமத்வாச்சாரியார், வேதவியாஸரின் பிரம்மசூத்திரத்திற்கு அருளிய பாஷ்யத்திற்கும் (விளக்கவுரை), அதற்கு மகான் ஸ்ரீ ஜெயதீர்த்தர் அருளிய வியாக்யானங்களுக்கும் சேர்த்து ஸ்ரீ வியாஸராஜதீர்த்தர் ‘சந்திரிகா’ என்ற ஒப்பற்ற நூலை இயற்றித் தந்திருக்கிறார். இந்நூல் தன்னிகரற்ற ரத்தினம் போன்றதாகும்.

ஸ்ரீ வியாஸராஜரின் ஜீவபிருந்தாவனம்தான், கர்நாடக மாநிலம் கங்காவதி தாலுகா, ஆனேகுந்தி திருத்தலத்தில் பரமபவித்திரமான துங்கபத்ரா நதியின் மத்தியில் தெய்வீக ஒளி வீசிப் பிரகாசிக்கும் நவபிருந்தாவனத்தில் நடுநாயகமாக ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீ கேசவதீர்த்தர்!

இத்தகைய தெய்வீகப் பெருமைபெற்ற ஸ்ரீ வியாஸராஜரின் மடத்தில் சந்நியாசம் பெற்ற மகான் ஸ்ரீ கேசவ தீர்த்தர். ஸ்ரீ வியாசராஜர் போன்றே பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் ஈடிணையற்ற பக்தி பூண்ட ஸ்ரீ கேசவ தீர்த்தர் திருச்சி மாவட்டம், ராசாளம்பட்டி என்ற ஊரில் ஸ்ரீ பூர்ண போதாச்சார் என்ற மகானுக்குப் பிள்ளையாக அவதரித்தார். இவரது தந்தை ஆச்சார, அனுஷ்டானங்களினால் உயர்ந்த பரம பாகவதோத்தமர்.

சிறு வயதிலிருந்தே பகவான் ஸ்ரீ ஹரியின்மீது ஆழ்ந்த பக்தி கொண்ட கேசவன், சதாசர்வமும் ஸ்ரீ கிருஷ்ண பக்தியிலேயே திளைத்து வந்ததைக் கண்டு ஸ்ரீ பூர்ண போதாச்சார் தனக்கு மகனாகப் பிறந்துள்ளது சாமான்ய குழந்தை அல்ல; ஸ்ரீ ஹரியின் திருவுள்ளத்தினால் அவதரித்துள்ள ஒரு மகாபுருஷர் என்பதை உணர்ந்துகொண் டார். ஸ்ரீ கிருஷ்ண பக்தியில் மனம் திளைத்த குழந்தை கேசவன் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தபோது அவரது கிருஷ்ண பக்தியும், ஹரிநாம சங்கீர்த்தனத்தில் ஈடுபாடும் அதிகரித்துக்கொண்டே வந்தன.

இளம் வயதிலிருந்தே ஆழ்ந்த பக்தியினால் எம்பெருமானுடன் மானசீகமாக இணைந்துவிட்ட கேசவ தீர்த்தர், ஸ்ரீமத்வரின் துவைத சித்தாந்தத்திற்கு ஆற்றிய சேவையும், மக்கள்பால் கொண்டிருந்த கருணையும் ஈடிணையற்றவை. இத்தகைய தெய்வீகப் பெருமைபெற்ற
ஸ்ரீ கேசவதீர்த்தர் காவிரி நதியோரம், ராஜவாய்க்கால் கரையில் விளங்கும் திருமலை நாம சமுத்திரம் என்னும் திவ்ய க்ஷேத்திரத்தில் சுமார் 528 ஆண்டுகளுக்கு முன் - 1483-ம் ஆண்டு ஆஷாட சுத்த திதி அன்று பிருந்தாவனத்தில் (ஜீவ சமாதியில்) பகவான் ஸ்ரீ ஹரியின் திவ்யநாமத்தை உச்சரித்தபடியே அமர்ந்தார்.

இத்தகைய தெய்வீகப் பெருமைபெற்ற திருமலை நாமசமுத்திரம் எனும் திருத்தலம்தான் தற்போது அனிச்சம்பாளையம் என அழைக்கப்படுகிறது.

பரமத்திவேலூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது அனிச்சம்பாளையம். நடந்தோ அல்லது வாகனங்கள் மூலமோ அனிச்சம்பாளையம் சென்றடையலாம்.

பிருந்தாவனத்தின் தெய்வீக சக்தி!

மகான் ஸ்ரீ கேசவ தீர்த்தரின் பிருந்தாவனத்தின் முன் நிற்கும் அந்த விநாடியே அவரது ஈர்ப்பு சக்தியை (Vibration) உணரமுடிகிறது.

பிருந்தாவன சந்நிதியில் அரிய சாளக்கிராமங்களும் பூஜிக்கப்படுகின்றன. தன்னை அண்டிய பக்தர்களின் குறைகளை நமக்காக ஸ்ரீ கேசவனிடம் எடுத்துச்சொல்லி நம் து ன்பங்களையும் எடுத்துச் சொல்லி தீர்த்து வைக்கும் பாங்கும், கருணையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஸ்ரீ கேசவதீர்த்தரின் பிருந்தாவன தரிசனத்தால் துன்பங்கள் நீங்கி அளவற்ற நன்மைகளைப் பெற்ற அன்பர்கள் அவர்களது அனுபவங்களை விவரிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. நம்மையும் அறியாமல் நெஞ்சமெல்லாம் நடுங்குகிறது.

ஸ்ரீ பிருந்தாவனத்தில் ஸ்ரீ ருக்மிணி, ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ கோபால கிருஷ்ணன், ஸ்ரீ திருவேங்கடவன், ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ஸ்ரீ ரங்கநாதன், ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ சீதாதேவி, ஸ்ரீ ராமபிரான், தவழும் குழந்தை ஸ்ரீ கண்ணனும் மற்றும் ஸ்ரீமத்வர், ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தர் ஆகிய மகான்களும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

பிருந்தாவனத்தினுள் பிரவேசித்ததுமே அதன் தெய்வீகச் சூழ்நிலையையும், அளவிடற்கரிய சக்தியையும் நம்மால் உணர முடிகிறது.

தினமும் மதியம் 12.30 மணிவரை மட்டுமே பிருந்தாவன தரிசனம் கிடைக்கிறது. வியாழன், ஞாயிறு, பௌர்ணமி தினங்களில் காலை 8.00 மணி முதல் 9.30 வரை சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.

பிருந்தாவனம் எனும் புதையல்!

புதையல்கள் எங்கு மறைந்துள்ளன,
அவை எவருக்குக் கிட்டும், எப்போது
கிட்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாது. அதேபோன்றுதான் மகான்கள் மறைந்திருக்கும் இடம் எது? அந்த இடங்களின் தரிசனம் நமக்கு எப்போது கிடைக்கும் என்பதெல்லாம் பகவானின் திருவுள்ளத்திற்கு மட்டுமே தெரியும்.

புதையல் இருக்குமிடத்தைத் தேடி,
நாடி நாம்தான் செல்லவேண்டும்.

அத்தகைய ஈடிணையற்ற பொக்கிஷம்
தான் அனிச்சம்பாளையத்தில் திகழும்
ஸ்ரீ கேசவ தீர்த்தரின் ஜீவ பிருந்தாவன
மாகும்!

பக்தர்களின் உதவி நாடி...!

கலி தோஷத்தினால் தற்காலத்தில் ஏராளமான திருக்கோயில்களுக்கும், பிருந்தாவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைதான் ஸ்ரீ கேசவ தீர்த்தரின் பிருந்தாவனத்திற்கும் ஏற்பட்டுள்ளது. அன்றாட ஆராதனைகள் சற்று சிரமத்துடன்தான் நடைபெற்று வருகின்றன.

பிருந்தாவனத்தின் அர்ச்சகரும் பரிபாலகருமான ஸ்ரீ கிருஷ்ணாராவ் அவர்கள் தனது வயோதிக காலத்தில் ஆசார, அனுஷ்டானங்களுடன், பரம பக்தியுடனும், அன்றாட பூஜைகளைச் செய்துவரும் பாங்கு நம்மை பிரமிக்க வைக்கிறது. அவர் ஆற்றி வரும் தெய்வீகப் பணிக்கு நம்மால் என்ன கைம்மாறு செய்யமுடியும்? இருப்பினும் அவர் செய்துவரும் குரு பணிக்கு நம் சக்திக்கு உட்பட்டு உதவுவது அளவற்ற புண்ணிய பலனைத் தரும். ஒரே ஒரு ரூபாய் கொடுத்தாலும் அதனை ஜீவபிருந்தாவனத்தில் எழுந்தருளியுள்ள மகான் ஸ்ரீ கேசவ தீர்த்தர் ஒரு கோடியாக ஏற்று திருவுள்ளம் மகிழ்வார். நம் குடும்பமும், சுபிட்சமும், மங்களமும் பெற்று தழைத்தோங்கும்.

மேலும் இத்தகைய பிருந்தாவனங்களை நமது பிறவியில் ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டும்.

மேலும் விவரங்கள் வேண்டுவோர், ஸ்ரீ கிருஷ்ணாராவ் அவர்களுடன் தொடர்புகொள்ளலாம்.

ஸ்ரீ கிருஷ்ணாராவ் அவர்கள்,
அர்ச்சகர் & பரிபாலகர்,
அனிச்சம்பாளையம்,
ஸ்ரீ கேசவதீர்த்தர் பிருந்தாவனம்,
பரமத்திவேலூர் (தாலுக்கா),
நாமக்கல்-638 182.
தொலைபேசி எண் : 9442687616

Comments

  1. இத்தகைய பிருந்தாவனங்களை நமது பிறவியில் ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டும்./

    nice.

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment