குரு உபதேசம்...

பகவான் ஸ்ரீரமண மகரிஷியைப் பற்றி அறிய விரும்புகிறவர்கள் மிகக் கட்டாயமாக, ஸ்ரீகுஞ்சு சுவாமிகள் எழுதிய 'எனது நினைவுகள்’ புத்தகத்தைப் படித்தாக வேண்டும். திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரம வெளியீடான இந்தப் புத்தகம் எளிய விதத்தில் பகவானை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. குரு வேண்டும் என்கிற வேட்கையை நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது.

1897-ம் ஆண்டு ஜனவரியில், கேரளத்து பாலக்காட்டுக்கு அருகில் உள்ள செறக்கொடு என்கிற சிறிய கிராமத்தில் பிறந்தார் ஸ்ரீகுஞ்சு சுவாமிகள். மற்ற குழந்தைகளைப்போல ஓடியாடியோ, பிடிவாதம் பிடித்து அழுதோ செய்யாது, ஓர் இடத்தில் அமைதியாக அமர்ந்திருப்பார். இந்தக் குணத்தைக் கண்ட அவரது பெற்றோர், குழந்தையின் தாய்மாமனிடம் ஜாதகம் காட்டினார்கள்.

''இந்தக் குழந்தை தெய்விக சம்பத்து நிறைந்தது. அபூர்வமான குணம் கொண்டது. எனவே, ஆகார விஷயங்களில், மிக ஆசாரத்தோடு இருத்தல் நலம்'' என்றார் தாய்மாமன்.

நல்ல பெற்றோர்கள் அமைந்த காரணத்தால், ஸ்ரீகுஞ்சு சுவாமிகள் மிகச் சரியானபடி வளர்க்கப்பட்டார் தகப்பனா ருடன் குளத்தில் நீராட, காலையில் போகும்போது, மறு கரையில் வைதிக பிராமணர்கள் நீரில் நின்றும், படித்துறையில் அமர்ந்தும் மந்திர ஜபம் செய்வது கண்டார். அவருக்கும் அவ்விதம் செய்ய வேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று. ஆனால், யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. அன்று இரவு கனவில் ஜடா முடியும் விபூதியும் கொண்ட கோலத்தோடு பரமேஸ்வரன் தோன்றி, சிவ பஞ்சாட்சர மந்திரம் உபதேசித்தார். விடிந்ததும், அந்தக் கனவு நினைவில் இருந்தது. மந்திரம் மறந்துவிட்டது. கை நழுவ விட்டோமே என்று மனம் வருத்தமடைந்தது. ஆனால், அன்று இரவு சிவன் மறுபடியும் கனவில் தோன்றி மீண்டும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்க, விடியலில் அது நினைவில் தங்கியது. அன்று முதல் இடைவிடாது சிவபஞ்சாட்சர ஜபம் செய்து வந்தார் ஸ்ரீகுஞ்சு சுவாமிகள்.

ஒரு விபூதிப் பை வேண்டும் என்று ஆசை வந்தது. சிவ பஞ்சாட்சரம் சொல்லியபடியே, தோன்றும்போதெல்லாம் திருநீறு இட்டுக்கொள்ள வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது. அன்று கனவில் சிவன் அவருக்கு ஒரு மரத்தைக் காட்டி, அந்த மரத்தின் கீழ் உள்ள காசுகளை எடுத்து விபூதிப் பை வாங்கிக் கொள்ளச் சொன்னார். சொன்னபடியே, மரத்தின் கீழ் மூன்று காலணாக்கள் இருந்தன. கடையில் விபூதிப் பை விலை கேட்டபோது, மூன்று காலணாவுக்கு ஒரு விபூதிப் பை என்று சொல்லப்பட்டது. கூடவும் கொடுக்காது, குறையவும் தராது மிகச் சரியானபடி அவர் ஆசை நிறைவேறியது.

விபூதிப் பை ஏது என்று தகப்பனார் கேட்க, குஞ்சு சுவாமி விஷயம் சொன்னார். தந்தை சந்தோஷப்பட்டார்.

சிறிது நாட்கள் கழித்து ருத்திராட்ச மாலை அணிந்து கொள்ள ஆசை வந்தது. நண்ப னுடன் குளம் நோக்கி நீராடப் போகும்போது, நண்பன் ஏதோ காரணம் சொல்லிப் பிரிய, அடுத்த ஐம்பதடி தொலைவில், போகிற வழியில் ஒரு பெரிய தாமரைப் பூ கிடந்தது. எடுத் துப் பார்க்க, அந்தப் பெரிய தாமரைப் பூவுக்கு நடுவே, தங்கத்தில் கோத்த ருத்திராட் சம் இருந்தது. 'இது என்ன அதிசயம்!’ என வீடு வியந்தது. இன்னும் குஞ்சு சுவாமியைக் கொண்டாடியது. இந்தப் பிள்ளை ஒரு வரம் என்று கவனமாய் பேணிக் காத்தது.

திருவிளையாடற் புராணம் தமிழ் காவியத்தைப் படித்து, மலையாளத்தில் விளக்கி, தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று ஊருக்கு அருகே நடந்தது. அதைக் கேட்க தந்தையும் மகனும் போவார்கள். கேட்டதை மனதில் பதித்துக்கொண்டு, உறவினர்களுக்கு விவரித்துச் சொல்வார் குஞ்சு சுவாமிகள். அவர் கதை போல் சொல்வதைக் கேட்டு, ஊரே சந்தோஷப்படும். என்ன ஞானம்... என்ன ஞானம் என்று வியக்கும்.

ஊருக்கு, கௌபீனம் மட்டுமே தரிந்த சாதுக்கள் வர, அவர்களை வந்து தரிசிக்கும்படி தந்தை வற்புறுத்தி அழைப்பார். சாட்சாத் பரமசிவனே வந்து மந்திர உபதேசம் சொல்கையில், யாரைப் போய் தரிசிப்பது என குஞ்சு சுவாமி மறுத்து விட்டார்.

பிறகு, எலப்புளி சுவாமிகள் என்கிற பெரியவர் ஊருக்கு வந்தபோதும், ஊர் அவரைக் கொண்டாடி, வேண்டுமென்ற உபசாரங்கள் செய்தது. இவரையும் தரிசிக்க வர குஞ்சு சுவாமி மறுத்துவிட்டார். ஆனால், தந்தை விடவில்லை. வேறு வேலைக்குப் போக வேண்டும் என்று தந்திரமாய் அழைத்துப் போய், எலப்புளி சுவாமி முன்பு நிறுத்திவிட்டார்.

''கனவில் வந்து கடவுள் உபதேசம் செய்தார் என்பதால், உயர்வாகி விடமுடியுமா..? பதினாறு வயதில் பிரசங்கம் செய்கிறாய் என்பதால் எல்லாம் தெரிந்தவனாகிவிடுவாயா? எது கேட்டாலும் கிடைக்கிறது என்று பேசி இறுமாந்து விடாதே! இவை ஆரம்ப கால சித்திகள். வேதாந் தம் தெரியாமல், முறைப்படி படிக்காமல் இறை வழியில் முன்னேற முடியாது. எனவே, கர்வம் விட்டு, என்னிடம் வா!'' என்று எலப்புளி சுவாமி சொல்ல, இளைஞருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. சரி என சம்மதித்தார்.

எலப்புளி சுவாமியிடம் தஞ்சம் அடைந்தார். ''என்ன படித்தாலும், என்ன மந்திர ஜெபம் செய்தாலும் அக்கால முனிவர்கள் அடைந்த உன்னத நிலையை அடைய முடிய வில்லையே..! அப்படிப்பட்ட முனிவர்கள், இறைவனைத் தன்னுள் கண்டவர்கள் இப்போது யாரும் இல்லையா? அவை பழங்கதைகள்தானா?'' என குருவிடம் குஞ்சு சுவாமி கேட்டார். ''ஏன் இல்லை... தமிழ்நாட்டில் திருவண்ணாமலை என்கிற தலத்தில், பகவான் ஸ்ரீரமண மகரிஷி என்கிற மகான் இருக்கிறாரே!'' என்றார் எலப்புளி சுவாமிகள். சடேரென்று குஞ்சு சுவாமியின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போன்ற அதிர்ச்சி உண்டாயிற்று. ரமண மகரிஷி... ரமண மகரிஷி என்று அவர் பெயரே நெஞ்சுக்குள் திரும்பத் திரும்ப ஓடியது. வேதாந்தப் படிப்பு, அதனோடு சில அப்யாஸங்கள் செய்து வந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையே என உள்ளே அயர்ச்சி தோன்றியது.

இதற்கிடையே, எலப்புளி சுவாமிகள் தமிழ்நாட்டின் சில முக்கியத் தலங்களுக்கு யாத்திரை போய் வந்தார். அவரோடு சில தனவந்தர்களும் போய் வந்தார்கள்.



இன்ன மாதத்தில், இன்ன நாளில், இன்ன நேரத்தில், தான் சமாதி அடையப் போவதாக, எலப்புளி சுவாமி அறிவித்தார். 'தனக்கு அடுத்த வாரிசு குஞ்சு சுவாமிகள்’ என்றார். நாள் நெருங்கியது. சமாதிக் கட்டடங்கள் எழும்பின. குஞ்சு சுவாமிக்கு இவை எதுவும் புரிபட வில்லை. இனம் புரியாத வேதனை வாட்டியது. வாழ்க்கை முழுவதும் வெறும் நாடகமாக இருக்கிறதே என்கிற துக்கம் முட்டியது. கொள்ள முடியாமலும் சொல்ல முடியாமலும் தவித்தார். ஸ்ரீரமணரைத் தரிசிக்க வேண் டும் என்று குருவிடம் குஞ்சு சுவாமி கேட்க, 'என்ன, விளையாடுகிறாயா! நான் மகா நிர்வாணம் அடையப் போகிறேன். இந்த நேரத்தில் என்னை விட்டு எங்கே போகிறாய்?’ என்று கூச்சலிட்டார். வேறு வழியின்றி, அவரின் மகா நிர்வாண நாளுக்குக் காத்திருக்க வேண்டிய தாயிற்று. குறிப்பிட்ட மாதம், நாள், குறிப்பிட்ட தருணம் வந்ததும் எலப்புளி ஸ்வாமிகள் சமாதிக் குழியில் உட்கார்ந்தார். தலையாட்டல் நின்றதும், தட்டைக் கருங்கல்லை நகர்த்தி, சமாதியை மூடிவிட ஏற்பாடு! ஊர் ஜனம் கடவுளர் பெயர்களை உரக்க உச்சரித்துக் கொண்டிருந்தது. சுவாமிகள் தலையாட்டம் நிற்கவில்லை. நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. உள்ளே இருக்க முடியாமல், எலப்புளி சுவாமிகள் சடாரென்று மேலே ஏறி, கூட்டத்திற்கு நடுவே புகுந்து ஓடி மறைந்தார். கேலியும் கோபமுமாய் ஜனங்கள் கூவினார்கள். எல்லாச் சாமியார்களும் இப்படித்தான் என்று இழிவுபடுத்தினார்கள். பிற்பாடு, ஒரு தோப்பில் ஒளிந்திருந்த எலப்புளி சுவாமி, கூட வந்த தனவந்தரோடு ஊரை விட்டு வெளியேறினார்.

ஸ்ரீரமண மகரிஷியிடம் போக வேண்டும் என்கிற தாபம், குஞ்சு சுவாமிகளுக்கு இப்போது மேலும் அதிகரித்தது. எவருக்கும் சொல்லாது வீட்டை விட்டு குஞ்சு சுவாமிகள் வெளியேறி னார். அவரது ஆன்மிக நண்பர் ஏற்கெனவே திருவண்ணாமலைக்குப் போய் ஸ்ரீரமணரிடம் சேர்ந்துவிட்டார் என்று செய்தி கிடைத்ததால், அங்கு போனால் உதவிக்கு ஆள் இருக்கிறது என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.

பயணங்களில் பல தடை கடந்து, குஞ்சு சுவாமி திருவண்ணாமலை அடைந்தார். சிலர் வழிகாட்ட, மலை ஏறினார். மிக உன்னதமான ஓர் ஆத்மாவை தரிசிக்கப் போகிறோம் என்கிற ஆவல், பரபரப்பு தொற்றிக் கொண்டது. போய் பகவானை பார்த்ததும் என்ன செய்ய வேண்டும் என்று மனதுள் பலமுறை யோசித்து வைத்துக் கொண்டார். மலையேறி அங்கு பகவானைக் கண்டதும் மெய் சிலிர்த்து நின்றார். விழுந்து வணங்கினார். ஆன்மிக நண்பர் ஸ்ரீராம கிருஷ்ணர், குஞ்சு சுவாமியை வரவேற்றார். பகவானிடம் அறிமுகப்படுத்தினார். 'சரி’ என்று பகவான் தலையசைத்தார்.

குஞ்சு சுவாமி வந்த அன்று, பகவானுக்குத் தொண்டு செய்துகொண்டிருந்த அண்ணா மலை என்பவர் ப்ளேக் நோயினால் இறந்து விட்டிருந்தார். அவரின் இறப்புக்குத் துக்கப் பட்டு பகவானின் தாய் வாய்விட்டு அழ, 'அண்ணாமலை இறந்தால் என்ன... இந்த பிள்ளை வந்துவிட்டானே’ என்று தாய்க்கு பதில் சொன்னார். பகவான் ஸ்ரீரமணருக்கு அண்மையில் குஞ்சு சுவாமிக்கென ஓர் இடம் ஒதுக்கப்பட்டுவிட்டது என்பதை, அப்போது அறிந்துகொள்ள முடியவில்லை.

ஆஸ்ரமத்தில் உள்ளவர்கள் அண்ணாமலை அடக்கத்துக்கு போய்விட, பகவான் கூழ் தயாரித்து, தட்டில் விட்டு ஆற்றினார். ஒரு கூடையைத் திறந்தார். உள்ளே இருந்து நான்கு நாய்க் குட்டிகள் ஓடி வந்தன.

'நான்கையும் பிடி’ என்று பகவான் கட்டளை யிட்டார். நான், மகாவாக்கியங்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று குஞ்சு சுவாமி தீர்மானித்தார். 'ஒவ்வொன்றாக விடு!’ - பகவான் அடுத்துப் பேசினார். மனதின் ஆசாபாசங்களை ஒவ்வொன்றாக விடவேண்டும் என்று குஞ்சு சுவாமிகள் சங்கல்பம் செய்துகொண்டார்.

நாய்க் குட்டி சிறுநீர் கழித்தது. 'துடை’ என்று பகவான் கட்டளையிட்டார். மனத்தில் மாசுகள் இன்றி, சுத்தமாகத் துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று, பகவான் ஸ்ரீரமணர் தன்னிடம் பேசிய முதல் மூன்று வாக்கியங் களையும் அவர் உபதேசித்த மந்திரங்களாக எடுத்துக் கொண்டார் குஞ்சு சுவாமிகள்.

பகவானுக்குப் பணிவிடை செய்யும்

பாக்கியம் வெகு விரைவில் கிட்டியது. அவரோடு தனித்திருக்கும் பேறும் வந்தது. எந்தப் பண உதவியும் செய்யாமல், பகவானுக்கு வரும் பி¬க்ஷயில் பங்கு போட்டுச் சாப்பிடுகிறோமே என்ற கவலையும் இருந்தது. 'இங்கே நல்லபடியாக சில மாதங்கள் இருந்துவிட்டோம்; உள்ளே ஆழ்ந்து பார்க்க முடிகிறது. இதை வீட்டிலேயே இருந்து செய்தால் என்ன? ஏன் பகவானுக்குச் சுமையாக இருக்கவேண்டும்?’ என்று நண்பரோடு விவாதித்து, ஊர் வந்தார்.

ஆனால், பகவான் சன்னதியில் கிடைத்த அமைதி, ஆழ்ந்து நோக்குதல் வீட்டில் கிடைக்கவில்லை. தனி அறையில் இருந்தும் பயனில்லை. மறுபடி பகவானிடம் போகும் எண்ணம் பொங்கியது. இந்த முறை வீட்டில் முறையாக விடைபெற்று, திருவண்ணாமலை வந்தார்.

இதுதான் தன் இடம் எனத் தெளிந்தார். பகவான், போனதற்கும் கோபித்துக் கொள்ளவில்லை; வந்ததற் கும் பாராட்டவில்லை. ஒருநாள், தனிமையில் பகவானோடு இருக்கை யில், தன் வாழ்வு முழுவதையும் விளக்கி, தேடல் பூரணமாகவில்லையே என்று வருத்தப்பட்டார். 'உன்னை நீ அறிந்தாயாகில் உனக்கொரு கேடுமில்லை என்று கைவல்யம் சொல்கிறதே’ என்று பகவான் பதில் சொன்னார்.

''தன்னை எவ்விதம் அறிந்துகொள்வது பகவான்?''

''நீ யார் என்று விசாரி!''

''எப்படி விசாரிப்பது பகவானே?''

''எங்கு நினைப்பு தோன்றுகிறதோ, அங்கே பார்!''

''அதை எப்படிப் பார்ப்பது பகவான்?''

''மனத்தை உள்முகப்படுத்தி இதயத்தில் பார்!''

இதைச் சொல்லிவிட்டு, பகவான் ஸ்ரீரமணமகரிஷி மௌனமானார். அதேவிதமாய் குஞ்சு சுவாமிகளும் மௌனமாக இருந்தார். ஸ்ரீரமண மகரிஷியின் அருட் பார்வை குஞ்சு சுவாமியின் மீது நிலைத்திருந்தது. அந்தக் கணத்திலேயே உள்ளே ஒரு மாறுதல் ஏற்பட்டு, குஞ்சு சுவாமிக்குள் அமைதியும் ஆனந்தமும் தோன்றின.

இப்படியாக, குஞ்சு சுவாமியின் வாழ்வுப் பயணம், மிகச் சரியான இடத்தில் வந்து அமைந்தது. நல்ல குருவை அடைய, பல தடைகள் தாண்டித்தான் வர வேண்டும். ஊராரின் கேலிக்கு ஆளான எலப்புளி சுவாமிதான், பகவான் ஸ்ரீரமண மகரிஷியைப் பற்றித் தெரிவித்தார்.

ஸ்ரீகுஞ்சு சுவாமிகள், தொடர்ந்து பகவானோடு வாழ்ந்து ஆன்மிகச் சாதனை செய்யலானார்.

Comments

  1. அருமையான பதிவு.
    மிக்க நன்றி.

    ReplyDelete

Post a Comment