சுயம்பு வடிவமாக - மாரியம்மன்.











பண்ணாரி

வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் வனப்பகுதியால் சூழப்பட்டுள்ள திருத்தலம் பண்ணாரி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் சாலையில் 14 கி.மீ. தொலைவில் உள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதி. தெற்குப் பார்த்த வண்ணமாக, சுயம்பு வடிவமாக எழுந்தருளியுள்ளாள் மாரியம்மன்.

திம்பம் மலையின் அடிவாரத்தில், தோரணப்பள்ளம் என்ற காட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம். வேங்கை வரிப்புலியும் புள்ளிமான்களும் ஒரே துறையில் ஒரு சேர நீர் அருந்திய அற்புதத் தலம். வேங்கை வனம் என்றும் பண்ணாரிக்கு வேறு பெயர் உண்டு.

அந்தப் பகுதியில் பெரும்பாலான மக்கள் மாடு மேய்ப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர்.

அவர்களில், ஒருவன் மேய்த்துவந்த மாடுகளில் காராம்பசு ஒன்று, தன் கன்றுக்கும் கொடுக்காது, கறப்பதற்கும் இடம்தராமல் இருந்ததை உற்றுக் கவனித்தான். அதன் போக்கு அவனது சந்தேகத்தை ஊக்குவித்தது. அதனைத் தனியே தொடர்ந்து சென்றபோது, ஒரு வேங்கை மரத்தடியில் கணங்கு புற்கள் நிறைந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில், தன்னிச்சையாக அந்தப் பசு பால் பொழிவதைக் கண்ணுற்றான். ஊராரிடம் அந்த அதிசயத்தைக் கூற, அவர்கள் அனைவருமே இது ஓர் தெய்வச் செயல் என்று கூறி மகிழ்ந்தனர்.அந்த இடத்தை சுத்தம் செய்ய முற்பட்டபோது, மரத்தினடியில் சுயம்புவாக ஒரு திருமேனியும் கண்டனர். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு முதியவர் பால் `அருள்' உண்டாகி, திருவாய் மலர்ந்தருளினார் அம்மன்.

மண்ணார்காடு என்ற பகுதியிலிருந்து, (கேரளத்தில் வண்ணார்காடு) மைசூர் சென்று கொண்டிருந்த மக்களுக்கு வழித்துணையாக வந்தவள் நான். இந்த இடத்தின் இயற்கை எழில் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. இங்கேயே தங்கிவிடுவேன். என்னை `பண்ணாரியாள்' என்றே அழைக்கலாம் என்று அருள்வாக்கு கூறியது.

அருள்வாக்குப்படியே, `பண்ணாரி அம்மனை' கணங்குப் புற்களினால் ஆன குடிலில் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினர். கணங்குப்புற்றின் அடியில் அமர்ந்தவள், இன்று கண்கவர் ராஜகோபுரம், மகாமண்டபம், தங்கரதம் என்று, கோலோச்சி வருகிறாள். கருவறையை அலங்கரிக்கிறது பளபளக்கும் பொன்போன்ற கதவுகள். நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள் பண்ணாரியம்மன்.

ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையடுத்து வரும் செவ்வாய் கிழமை அதிகாலையில் நடைபெறும் `குண்டம்' திருவிழா, பண்ணாரியின் மிகப்பெரும் விழா ஆகும். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் என்று சுற்றிலும் உள்ள மக்கள் பல லட்சம் பேர் இங்கே கூடுவர்.

விரதம் இருக்கும் மக்கள், மஞ்சள் ஆடை உடுத்தியபடி, கையில் வேப்பிலைக் கொத்தை ஏந்தியபடி, `அக்னிக்குண்டம்' இறங்கிடும் காட்சி மெய்சிலிர்க்கவைக்கும். பாலகர் முதல் முதியோர் வரை, பக்திப்பரவசத்துடன் பண்ணாரியம்மனைத் தொழுதவாறு, அக்னிக்குண்டத்தில் இறங்கி, எந்தவித தீக்காயமுமின்றி வெளியே வரும் அற்புதக் காட்சி அது. ஏழு நாட்கள் திருவிழா முடிந்தபின், அம்மனுக்கு மறுபூஜையும், மிரவணை எடுத்தலும் நடைபெறும். திரிசூலமேந்திய பக்தர்கள், மேளதாளத்துடன் திருக்கோயிலைச் சுற்றிவருவர்.


கால்நடைத் தெய்வமாக மாதேசுரரும், தனிக்கோயில் கொண்டுள்ளார் பண்ணாரியில்.

பவானிசாகர்

பவானி ஆறும் மோயாறும் கூடும் இடத்தில், இருந்தது பழமையான கிராமம் டணாயகன் கோட்டை. பவானிசாகர் அணை உருவானபோது, அங்கே இருந்த சிவாலயத் திருமேனிகளுக்காக, புதிய தோர் கோயிலை உருவாக்கினார்களாம். தான்தோறீசுவரராக விருந்த ஈசுவரன், சோமேசுவரர் என்ற பெயரையும் கொண்டார். அன்னை மங்களாம்பிகை. அவரோடு, புதிய ஆலயத்தில் குடி பெயர்ந்தோர் மாதவப்பெருமாள் நவநீதகிருஷ்ணன் ஆகியோரும்தான்.

துர்வாசர் வணங்கிய தலமாம் இது. சர்ப்பயாகம் செய்த `ஜனமேஜய அரசன்' வழிபட்ட தலமும்கூட. கொங்குச் சோழர்களில் மூன்றாம் நரசிம்மன், தனது தந்தையின் நினைவாகக் கட்டிய கோயில்தான், அணைக்கட்டில் மூழ்கியது.

சத்தியமங்கலம்

ஈரோடு மாவட்டத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் சாலையில் உள்ள முக்கியமான நகரம்தான் சத்திய மங்கலம். பவானி ஆற்றின் வடகரையில் அமைந்த திருத்தலம். ஆற்றின் கரையிலேயே பவானி ஈசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பழமையான கோயில். மகாமண்டபத்தின் இருபுறமும் பஞ்சமுக ஹேரம்ப கணபதியும், நவகிரகங்களும் இடம்பெற்றுள்ளனர். நவகிரகங்களில், சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வரும் காட்சி அற்புதமாக உள்ளது. அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் பஞ்சமுக விநாயகர் காட்சி தருகிறார். மூலவர் பவானி ஈசுவரர் சுயம்பு மூர்த்தி ஆவார். அன்னை `பவானிசங்கரி' என்று திருநாமங்கொண்டுள்ளாள்.

அருகிலேயே அமைந்துள்ளது வேணுகோபாலசுவாமி ஆலயம். 3 நிலை ராஜகோபுரம், பிரகாரம், மகாமண்டபம், மிகப்பெரிய ஜயவிஜயர் திருமேனிகள் எல்லாம், கம்பீரமாக உள்ளன.

ரங்கநாதர், சக்கரத்தாழ்வார், நாச்சியார், மகாலட்சுமி ஆகியோர் தனி சந்நதி கொண்டுள்ளனர். `சொர்க்கவாசல்' தனிச்சிறப்பு பெறுகிறது. நல்ல முறையில் பராமரிக்கப்பட்டுவருவதோடு, உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுவதை காண மகிழ்ச்சி ஏற்படுகிறது. அருகில் தவளகிரியில் முருகனுக்கு கோயில் உள்ளது.

சத்தியமங்கலத்திலிருந்து கொள்ளே கால் செல்லும் பாதையில் ஆசனூர், 24 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பேசுவரர் - மங்களாம்பிகை அருள்பாலிக்கும் தலம் இது.

சத்தியமங்கலத்திலிருந்து தென்கிழக்கே திரும்பி, நம்பியூரை நோக்கி வருகையில், எலத்தூர் சோழீசுவரரையும், குருமந்தூர் சோலீசுவரரையும் தரிசிக்கிறோம்.

எலத்தூர் சோழீசுவரரைக் கண்டதோடு, வடமேற்கில் அங்கிபாளையத்தில் சிவகாமி நடராஜப் பெருமானைக் காணலாம். அங்கேயே கொசனம் என்று ஒரு தலம். அங்கேயும் நடராஜப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

குருமந்தூருக்கு வடக்கே `ஆலுகுழி' என்றொரு தலம். சோழீசுவரர் பெரியநாயகி அருள்பாலிக்கும் தலம். அங்கிருந்து கிழக்கே 10 கி.மீ. பயணித்து `கோபி' என்று அழைக்கப்படும் கோபி செட்டி பாளையம் வந்து சேருகிறோம்.

கோபி

கோபி செட்டிபாளையம், இப்பகுதியில் முக்கியமான நகரம் ஆகும். விசுவநாதர் - விசாலாட்சி ஆலயத்துடன், பெருமாள் கோயிலும் முக்கியமானது. கோபி சென்றாய் பச்சைமலை, பவளமலையைப் பார்க்காமல் வந்துவிடக்கூடாது. பச்சைமலையில் வள்ளி, தேவயானியுடன் சுப்ரமணியர் அருள்பாலிக்கிறார். பவளமலையில், முத்துக்குமாரசுவாமியாக முருகன் அருள்பாலிக்கிறார். மூன்று கி.மீ.தொலைவில் அமைந்த தலங்கள்.

பாரியூர்

கோபி - அந்தியூர் சாலையில் உள்ள திருத்தலம் பாரியூர். கொண்டத்துக் காளியம்மன் மகாமுனீசுவரருடன் அருள்பாலிக்கும் திருத்தலம். சூரனை சம்காரம் செய்த நிலையில் தரிசனம் தருகிறாள் அன்னை. தலைசிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. அழகிய ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் அமைந்த அழகிய ஆலயம். சப்த கன்னிகை, பூங்காளியம்மன், சித்தி விநாயகர் சந்நிதிகளும் உள்ளன.

கொண்டத்துக் காளியம்மன் கோயிலின் அருகிலேயே உள்ளது அமரபணீசுவரர் திருக்கோயில். சௌந்தரநாயகி, அன்னையின் திருநாமம்.

`கீதோபதேசத்தை' முகப்பிலே கொண்டு, கொடிமரத்தை வெளியே கொண்டு, ஐந்து நிலை ராஜகோபுரத்துடன வானுயர்ந்து நிற்பது ஆதிநாராயண பெருமாள் திருக்கோயில். அர்ஜுனனின் சாரதியாக அமர்ந்து, பகவத் கீதையை உபதேசிக்கும் திருக்கோலமும், இழுத்துப்பிடித்த கடிவாளத்தைக் கொண்ட நான்கு குதிரைகளும், நான்கு வேதங்களாகக் காட்சிதர, திருத்தேர் சுதை சிற்பம், சாலையில் செல்வோரையெல்லாம் அழைக்கிறது. கண்டிப்பாக சேவிக்கவேண்டிய ஆலயம் இது. பாரியூருக்கு பெருமை சேர்க்கிறது.

அந்தியூர்

பாரியூலிருந்து அத்தாணி சென்று, நேர்கிழக்காகப் பயணித்து அந்தியூரை அடைகிறோம். சந்தையில் நடுநாயகமாக நாம் முதலில் காண்பது, அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோயிலைத்தான்.

அழகிய 5 நிலை ராஜகோபுரமும், குதிரைகளும் எதிர் கொண்டழைக்க, கோயிலுக்குள்ளே நுழைகிறோம். ஏழடி உயரத்தில் நீலன், நீலி சிலைகள், துவார பாலகர்களாக, அச்சுறுத்தும் பாணியில் காண்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

கொங்கு நாட்டின் வடகரை எல்லைப்பகுதியாக விளங்கியது அந்தியூர். சங்க காலச் சிறப்பு பெற்றது. `அந்தி இளங்கீரனார்' இந்த திருத்தலத்தைச் சேர்ந்தவர்தான். பர்கூர் மலைத் தொடரின் அடிவாரமாக அமைந்ததே அந்தியூர். கோட்டை, கொத்தளம் எல்லாம் கதைகளாகிவிட்ட நிலையையே இன்று காண்கிறோம். கோயில்களில் மட்டும் ஒரு சில கல்வெட்டுக்கள், கோனேரின்மை கொண்டான் திரிபுவன சக்ரவர்த்தி, ராஜகேசரிவர்மன் என்று மன்னர்களின் பெயர்களைப் பறைசாற்றுகின்றன.

திருக்கோயிலுக்கு விளக்கு ஏற்றி வைத்திடக் கொடுத்த சாஸனங்கள் உள்ளன. இவை 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. `களப்பலி' தந்த வீரர்கள் சிற்பங்குளும் இங்கே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்தியூர் பத்ரகாளியின் பெருமையை பறைசாற்றிடும் செவிவழிக் கதைகள் ஏராளம். தீவினை எங்கிருந்து எந்த உருவில் வந்தாலும், அதனைத் தடுத்து நிறுத்தி, பக்தர்களைக் காத்திடுவாள் அவள்.

கணவனின் கொடுமை தாங்காது கைக்குழந்தையோடு கிணற்றில் குதித்த எண்ணமங்காத்து பெண்ணொருத்தியை, கோயில் பூசாரியின் கனவில் தோன்றிக் காப்பாற்றியவள் அவள். வளை பக்தியுடன் தொழுபவருக்கு அவளது கடைக்கண் பார்வை அத்தனை பேறுகளையும் தருமாம்!

அம்மனின் தலையில் `பூ' வைத்து உத்தரவு கேட்பது, இப்பகுதியில் காலம் காலமாக நடைபெறும் நடைமுறை. பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில், ஏழு நாட்களிலும், தினம் ஒரு வாகனம் ஏறி திருவீதி வலம் வருவாள். மஞ்சள் நீருடன் ஏழாம் நாள் திருவிழா முடிவுறும்.

ஆவேசத்துடன் `வீரமக்கள்' எனப்படுவோர் குண்டம் மிதிக்கும் காட்சி, மெய்சிலிர்க்க வைத்திடும்.

`ஒரு எறும்புப்புற்றிலிருந்து ஐந்து தலை நாகமொன்று வெளிப்பட்டு, பசு ஒன்றின் ஐந்து மடிகளிலிருந்தும் பாலைக் குடித்த அதிசயம்தான், பத்ரகாளி கோயில் உருவான வரலாறு ஆகும்.

கோட்டையும் கோயிலும்

மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் மூன்று சுற்று கொண்ட பெரியதொரு கோட்டையும், மதில்களும் இருந்ததாம். அதனுள்ளே அத்தாணி மண்டபம், அரண்மனை, அந்தப்புரம் எல்லாம் இருந்தன.

இன்றோ, கோட்டை இருந்த இடமும், வராக நதியும் இருந்த இடம் தெரியவில்லை. செல்லீசுவரர் கோயில் இன்று காணும் இடமே பழய கோட்டை இருந்த இடம் போலும்! கோட்டையின் உட்புறம் மேற்குபுறமாக அமைந்த கோயில். செல்லீசுவரர் என்று திருநாமங்கொண்டு ஈசன் அருள்பாலிக்கிறார். அன்னை செல்லீசுவரி, தனிச்சந்நதி கொண்டுள்ளாள். நடராஜர் சபை, நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர் சந்நதிகளும் உண்டு.

அழகராஜப் பெருமாள்

செல்லீசுவரர் கோயிலுக்கு கிழக்கே அமைந்துள்ளது அழகராஜப் பெருமாள் கோயில். தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். சிற்பக்கலை நுணுக்கங்கள் நிறைந்த கோயில்.

ஆஞ்சநேயர்

பத்ரகாளி அம்மன் கோயிலுக்கருகிலேயே, மேற்கு பார்த்த நிலையில் ஆஞ்சநேயர் சந்நிதி ஒன்றும் நம் கவனத்தை ஈர்க்கிறது. சனி, ராகு, பாதிப்பிலிருந்து பக்தர்களைக் காத்திடும் சஞ்சீவிராயராம் இவர்!

பர்கூர்

அந்தியூருக்கு வடக்கே 25 கி.மீ. தொலைவில் உள்ளது பர்கூர். ஜெகதீசுவரர்-ஜெகதீசுவரி அருள்பாலிக்கும் திருத்தலம் இது

Comments