ஸ்ரீலங்காவில்... ஸ்ரீரங்கன்!




ஸ்ரீரங்கத்தில், காவிரி- கொள்ளிடம் நதிகளுக்கு நடுவில், இலங்கையை நோக்கும் விதமாக தெற்கு நோக்கிப் பள்ளி கொண்டிருக்கிறார் நம்முடைய திருவரங்கன். அதேபோன்று இலங்கையிலும் வடக்கு நோக்கியபடி அதாவது நம் ஸ்ரீரங்கத்தைப் பார்த்தவாறு கோயில் கொண்டிருக்கிறார் பெருமாள்.

தலைநகர் கொழும்பில் கழனி எனும் பகுதியில் கோயில் கொண்டிருக்கும் இந்தப் பெருமாளுக்கு, ஸ்ரீநீலோற்பலவர்ண ரங்கநாதர் என்று திருப்பெயர். நீலோற்பல மலரைப் போன்று நீல நிறத்தில், மலர்ப் பொய்கையில் விரும்பி உறைபவர் என்று இவரைச் சிறப்பிக்கிறார்கள் பக்தர்கள்.

நம் தமிழக பாணியில் கட்டப்பட்டிருக்கிறது இவரது ஆலயம். உச்சியில் ஒன்பது கலசங்களுடன், முகப்பில் ஸ்ரீபரவாசு தேவர் திகழ... நம் ஸ்ரீரங்க விமானத்தை மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் பிரணவாகார விமானத்தின் கீழ் அருளும் பெருமாளைத் தரிசிக்க கண் கோடி வேண்டும். அவ்வளவு அழகு!

பெருமாளின் எதிரில் கருடாழ்வாருக்கு பதில் ஸ்ரீவிபீஷணாழ்வார்; நிலையான அமைதி வேண்டி பெருமாளை அவர் வணங்கி நிற்பதாக பரவசத்துடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள். ஸ்ரீகணபதி, திருப்பதி ஸ்ரீநிவாசன் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. பூஜைகளும் தமிழக முறைப்படியே நடைபெறுகின்றன. அனுதினமும் ஸ்வாமிக்கு வாசனை திரவியங்கள் அணிவிக்கப்படுகின்றன. பக்தர்கள் நேர்த்திக் கடனாக அர்ச்சனைப் பொருட்களுடன், வாசனை திரவியங் களையும் அளிக்கின்றனர்.



இங்கே, வைகுண்ட ஏகாதசி வைபவம் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. 33 யானைகள் புடைசூழ, மேள-தாளம், நாகஸ்வரம் முழங்க, கலைஞர்கள் பாரம்பரிய நடனங்கள் ஆடிவர, வெகு அற்புதமாக வீதியுலா நடைபெறுமாம். யானையின் மீது ஸ்ரீசுதர்சனர் பவனி வர, பின்னால் ஸ்ரீதேவி-பூதேவியுடன் ரங்கநாதர் திருவுலா வருவாராம்!

மலர் அர்ச்சனையும், முருத் தம்பத்தை (சர்க்கரைப் பொங்கல்) பிரசாதமும் இந்தக் கோயிலில் விசேஷ அம்சங்கள்! வேண்டுதலின்பொருட்டு 108, 1008 என்ற எண்ணிக்கையில் பெருமாளுக்கு மலர் அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். எப்போதும் மலர் குவியலின் மத்தியில்தான் காட்சி தருகிறார் பெருமாள். கருட தரிசனமும் குறிப்பிடத்தக்கது.

ஆமாம்... அனுதினமும் உச்சிப்போதில் வரும் கருடப் பறவைகள், ஆகாயத்தில் வட்டமிட்டபடி ஆலயத்தை வலம் வந்து வழிபட்டுச் செல்கின்றனவாம். 'இந்த தெய்வப் பறவைகளைத் தரிசிக்க, கஷ்டங்கள் எல்லாம் நீங்குகின்றன’ என நம்பிக்கை பொங்க சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

Comments

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நம் தமிழக பாணியில் கட்டப்பட்டிருக்கிறது இவரது ஆலயம். உச்சியில் ஒன்பது கலசங்களுடன், முகப்பில் ஸ்ரீபரவாசு தேவர் திகழ... நம் ஸ்ரீரங்க விமானத்தை மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் பிரணவாகார விமானத்தின் கீழ் அருளும் பெருமாளைத் தரிசிக்க கண் கோடி வேண்டும். அவ்வளவு அழகு! /

    அற்புதமாய் மனக்கண்களில்
    அரங்கனை சேவிக்கவைத்த
    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete

Post a Comment