சிங்கப்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலும் - ஸ்ரீ தண்டாயுதபாணியும்











நீண்ட காலமாக என் மனதில் ஓர் ஆசை! சிறு விதை போன்று, என் இதயத்தில் பதிந்து விட்ட அந்த ஆசை வளர்ந்து, காலக்ரமத்தில் விருட்சமாகவே வளர்ந்து விட்ட து!!

ஆம்!!! சிங்கபுரம் எனும் புராதனப் பெயரால், பாரத புண்ணிய பூமியை ஆண்ட மாமன்னன் ஹர்ஷ வர்த்தனன் காலத்தில், நம் நாட்டின் ஒரு பகுதியாக விளங்கி, இன்று தனிச்சிறப்புடன் தனிச் சிறுநாடாகத் திகழும் சிங்கப்பூரில், தமிழ் தாயின் செல்வப் புதல்வர்கள் நிர்மாணித்துள்ள, புகழ்வாய்ந்த திருக்கோயில்களைத் தரிசிக்க வேண்டும் என்ற, தணியாத ஆசைதான் அது.

எதற்கும் காலமும், நேரமும் கனிய வேண்டும் அல்லவா? மேலும், அவன் கூப்பிட்டால்தானே அவனது திருக்கோயில்களுக்குச் செல்ல முடியும்! நாம் ஆசைப்பட்டால் ம ட்டும் போதுமா?

சிங்கப்பூரில் உள்ள எனது நண்பர்கள், என்னைப் பார்க்கும்போதெல்லாம், அங்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் அழகான திருக்கோயில்களைப் பற்றிக் கூறுவார்கள். அப்போ தெல்லாம் என் இதயம் சிறகடித்துப் பரபரக்கும்- பறந்து சென்று அத்திருக்கோயில்களை உடனே தரிசித்து விடவேண்டும் என்று! எனது நீண்டகால ஆசையை நிறைவேற்றி வைத்தனர்.

ஆன்மிக பூமி!

ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில்; ஜுரோங் ஈஸ்ட் முருகன் ஆலயம்; ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி ஆலயம்; திருக்குன்றம் முருகன் ஆலயம்; ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயில்; சிராங்கூன் ரோட் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில்; ஸ்ரீவேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம்; ஈசூன் புனித மரம் ஸ்ரீபாலசுப்பிரமணியர் ஆலயம் - என்று ஏராளமான திருக்கோயில்கள் சிங்கப்பூரை ஓர் ஆன்மிக, புண்ணிய பூமியாக மாற்றியுள்ளன என்றால் அது மிகையாகாது.

ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில்!

சிங்கப்பூரின் அற்புத திருக்கோயில்களில் மிகவும் புகழ்பெற்றது நாட்டரசன்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் நிர்மாணித்து, நிர்வகித்து வரும் அழகான ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில். இதன் தூய்மையும், அழகும், பொலிவும், ஈர்ப்பு சக்தியும் (VIBRATION) அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

‘‘தன வைசியர்’’ - ‘‘தன வணிகர்’’ - என்று தமிழகம் போற்றும் நாட்டுக்கோட்டை நகரத்தார் அரும்பாடுபட்டு, நிர்மாணித்துள்ளனர், தங்கள் இதய தெய்வமான தண்டாயுத பாணிக்கு இத்திருக்கோயிலை!

‘‘முருகன்’’ என்ற சொல்லிற்கு ‘‘அழகன்’’ என்று பொருள்! அழகனுக்கு ஏற்ற, பேரழகுக் கோயிலை உருவாக்கி இருப்பதற்கு, நகரத்தார் சமுதாயத்தினர் ஸ்ரீபழநியப்பன் மீது கொண்டுள்ள பக்தியே காரணமாகும்.

‘‘திரை கடல் ஓடி திரவியம் தேடு’’ என்ற மூதுரையை ஏற்று, உலகின் எந்தப் பகுதியானாலும், தளர்வின்றிச் சென்று, பாடுபட்டு செல்வம் சேர்த்தாலும், அந்தச் செல்வத்தைத் தந்தருள்வது இறைவனே என்பதை மறவாது, எங்கு சென்றாலும் தங்கள் பாரம்பரிய வாழ்க்கை நெறிமுறைகளையும், சமய சமூகப் பணிகளையும் இன்றும் செய்து வரு கின்றனர் நகரத்தார் சமூகப் பெரியோர்கள்.

ஆதலால், உலகின் எந்த நாட்டிற்குச் சென்று வசித்தாலும், திருக்கோயில்களை உருவாக்க அவர்கள் தயங்குவதில்லை.

நாயன்மார்கள் அறுபத்துமூவரில், காரைக்கால் அம்மையார்; இயற்பகை நாயனார்; அமர்நீதி நாயனார்; கலிக்கம்பர் நாயனார்; மூர்த்தி நாயனார் ஆகிய அவதார புருஷர்கள் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே! அது மட்டுமா? பிள்ளை எழுதி வைத்த ஏட்டைப் படித்து, ‘‘காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’’ என்ற உண்மைப் பொருளை உணர்ந்து, அந்த வினாடியே, இளம் மனைவி, மாடமாளிகை, கோபுரம் அனைய செல்வம் ஆகிய அனைத்தையும் துச்சம் எனத் தூக்கி எறிந்து, து றவறம் பூண்ட பட்டினத்தடிகளும் நகரத்தார் இனம்தான் அல்லவா? ஆதலால்தான் இறைபக்தி என்பது, நகரத்தார் இனத்தின் இரத்தத்தில் கலந்து விட்ட ஒன்றாகி விட்டது! எனது அருமை நண்பர், என்னை இத்திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.

வழியெல்லாம் தூய்மையாக இருந்தது மட்டுமல்ல, எங்கும் தமிழ் மணம் வீசி, மனதைப் பரவசப்படுத்தியது. பல வீதிகள், தெருக்கள், சாலைகள் ஆகியவற்றிற்கு, சிங்கப்பூரில் வசித்து, அந்நாட்டின் உயர்விற்காகப் பாடுபட்ட தமிழ்ப் பெரியோர்களின் பெயர்கள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, பெருமிதப்பட்டேன்.

சீனர்களும், தமிழக மக்களும் ஒற்றுமையுடனும், கட்டுப்பாட்டுடனும் வாழ்ந்து வருவதைக் கண்டேன். மந்திரி பதவிகள் உட்பட, பல உயர்பதவிகளை வகித்து வருகின்றனர், தமிழ்த் தாயின் மக்கள் அந்நாட்டில்! சமீபகாலம் வரை, அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் திரு.ஷி.ஸி. நாதன் என்பவர் ஒரு தமிழ்ச் செல்வர் என்பதையும் தெரிந்து கொண்டபோது, மிகுந்த பெருமைப்பட்டேன்.

சின்னஞ்சிறு நாடாக இருப்பினும், ஆட்சியாளர்களின் நாட்டுப்பற்றை நினைத்து பெருமைப்பட்டாலும், அதேசமயத்தில் மாபெரும் பாரத திருநாட்டை நிர்வகிக்கும் பேறு பெற்றிருந்தும், சுயநலத்திற்காக, தேசப்பற்றை ஏலம் விடும் நம் நாட்டு அரசியல் தலைவர்களையும், அமைச்சர்களையும் நினைத்து, நினைத்து கண்ணீர் வடித்தேன்! மனம் எங்கெல்லாமோ சென்று திரும்பியது.

எங்கள் கார், ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலின் முன் வந்து நின்றது!

திருக்கோயிலின் ஈடிணையற்ற பொலிவு!

காரிலிருந்து இறங்கி, திருக்கோயிலைக் கண்டேன்! முதல் பார்வையிலேயே, ஆலயத்தின் அழகில் என் மனதைப் பறிகொடுத்து விட்டேன்!

நினைத்தால் நிர்மாணித்து விட முடியுமா? எத்தனை திட்டமிட்டிருக்க வேண்டும் இத்தகைய திருக்கோயிலை உருவாக்குவதற்கு! என் மனம் திகைத்தது!! மெல்ல, மெல்ல என் நினைவிற்கு வந்தேன்! அடிமேல் அடி வைத்து, நுழைவாயிலைக் கடந்தேன்!!

இன்னும் சற்று நேரத்தில், அந்த ஸ்ரீ தண்டாயுதபாணியைத் தரிசிக்கப் போகிறேன்! அவனருளால் அல்லவா அவனது தரிசனம் கிடைக்கப் போகிறது!! இந்த ஏழையினிடம் இப்படியும் ஓர் ஒப்பற்ற கருணையா!!! என் மனம் தள்ளாடியது. உடல் வியர்த்தது.

திருவேங்கடமுடையானின் திவ்ய சந்நிதியில் அடி எடுத்து வைக்கும்போது, ஸ்ரீமத் ராமானுஜருக்கு உடல் எல்லாம் நடுங்கி வியர்க்குமாம்! ‘‘சென்ற தடவை தரிசித்த பின்பு, இடைக்காலத்தில் அவன் திருவுள்ளம் நோகும்படி எவ்வித தவறும் செய்யாமல் இருந்திருக்க வேண்டுமே’’ என்று நெஞ்சம் கலங்குவாராம்.

அதேநிலையில்தான் நானும் இருந்தேன் அப்போது! நுழைவாயிலின் படியிலிருந்து நேராகத் தெரிந்தது, ஒளி வீசிப் பிரகாசிக்கும், விசாலமான முன் மண்டபமும், முரு கப்பெருமான் எழுந்தருளியுள்ள கருவறை திருச்சந்நிதியும் சிற்பக்கலை நயத்துடன், தெய்வீகமும் கலந்த அழகான தூண்களுடன், கம்பீரமாக வரவேற்றது முன் மண்டபம். மிகவும் தூய்மையாக வைத்திருக்கிறார்கள்.

கருவறையின் முன் நின்றேன்! கண்டேன் பெருமானின் திவ்ய தரிசனத்தை!! அந்த அனுபவத்தை என்னவென்று சொல்வேன்? எப்படி வர்ணிப்பேன்? என் கண்முன் நின்ற அந்த அழகன் - அழகிற்கோர் ஆறுமுகன் என்பார்களே பெரியோர்கள்! மாங்கனிக்காகக் கோபமுற்றவன்போல், கோவணாண்டியாய், தண்டம் ஏந்தி பழநி மலைமேல் நிற்கும் குமரன் - இதோ! இப்போது என்கண்முன் நிற்கிறான்!!

வேகமாகச் சுழலும் திரைப்படக் காட்சிபோல், சிக்கல் சிங்காரவேலனும் என்கண் செல்வனும், எட்டுக்குடி வேலவனும், குன்றுதோராடும் குமரனும் என் கண்முன் நின் றார்கள்!!!

என் நிலை இழந்து நின்றேன் ஒரு கணம். ‘‘ஆத்மாநுபவம்’’ என்பது இதுதானோ? இந்த சக்தியினால் தான் அருணகிரியாராலும் திருப்புகழ் பாட முடிந்ததோ? பொங்கி வரும் உணர்ச்சிகளால் என் மனம் தத்தளித்தது. அதனை ஆனந்தம் என்பதா? அல்லது பரமானந்தம் என்று கூறுவதா? அல்லது ‘‘பரவசம்’’ என்று பெரியோர்கள் கூறும் பக்தி நிலையா அது? - எதுவும் எனது சிற்றறிவிற்குப் புரியவில்லை!

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்!! ‘‘இதயம்’’ எனும் என் உள்ளத் தாமரையில் அந்த எழில் முருகன் அமர்ந்துவிட்டான் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

திருக்கோயிலின் வரலாறு!

அன்புடன் என்னை வரவேற்ற கோயில் நிர்வாகத்தினர், இத்திருக்கோயிலின் வரலாற்றையும், பெருமைகளையும் விளக்கிக் கூறினர்.

சுமார் 1824-ம் ஆண்டு, முதன் முதலில் வர்த்தக ரீதியாக சிங்கப்பூர் வர ஆரம்பித்த நாட்டுக்கோட்டை நகரத்தார் தங்கள் கடுமையான உழைப்பினால், சிங்கப்பூரில் சிறந்த வளர்ச்சியை அடைந்ததுடன், அந்நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும்பங்கு ஆற்றினர்.

நாட்டின் பொருளாதாரம், சமூகம் தொடர்பான பல்வேறு துறைகளுக்கும் அரும்பணி ஆற்றிய நகரத்தார் சமூகம், தங்கள் ஆன்மிகப் பணிகளையும் மறந்து விடவில்லை.

அதன் விளைவாக நமக்குக் கிடைத்த அரியபொக்கிஷம்தான் இன்று சிங்கப்பூர் நகரின் மையப்பகுதியில் கம்பீரமாகத் திகழும் நாட்டுக்கோட்டை நகரத்தார் ஸ்ரீ தண் டாயுதபாணி திருக்கோயில்!

ஆதியில், ஆற்றங்கரை மரத்தடியில் ‘‘வேல்’’ ஒன்றை வைத்துப் பூஜித்து வந்த நகரத்தார், தங்கள் இதயதெய்வமான ஸ்ரீதண்டாயுதபாணிக்குச் சிறு கோயில் ஒன்றை நிர்மாணித்து, 1859-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 4-ம் தேதியன்று, மகா கும்பாபிஷேக வைபவத்தைச் சிறப்பாக நடத்தி மகிழ்ந்தனர்.

ஆதலால், இத்திருக்கோயிலில், வேலனைவிட வேலுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஆலயத்தின் அதிசய வளர்ச்சி!

அதன் பிறகு, பல்வேறு காலகட்டங்களில், நகரத்தார் சமூகப் பெரியவர்களின் அரும்பெரும் முயற்சிகளால், இத்திருக்கோயில் விரிவடைந்து, 1936; 1955; 1983; 1996 ஆண்டு களில் திருக்குட நன்னீராட்டு வைபவங்கள் சிறப்பாக நடைபெற்றன.

சமீபகாலத்தில், ஆண்டு 2009 நவம்பர் 27-ம் தேதி அன்று, அற்புதமான இந்த ஆலயம் நிறுவப்பெற்று, 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை விசேஷ வைபவமாக, உலகோர் வியக்கும் வண்ணம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 21-ம் நூற்றாண்டில், இந்த ஆலயத்தில் நடைபெறும் முதல் கும்பாபிஷேக நிகழ்ச்சியும் இது தான்.

திருவிழாக்கள்!

ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதத்தில் இத் திருக்கோயிலில் நவராத்திரி விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின் ஒன்பது நாட்களிலும் ஸ்ரீதண்டாயுத பாணிக்கு விதம் விதமாக அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

முதல் நாள், ராஜ அலங்காரத்தில் தரிசனம் தந்தருள்கிறான் ஸ்ரீதண்டாயுதபாணி. ஆண்டிக் கோலம் பூண்ட அந்த அழகனை, அரசனாக, செங்கோல் ஏந்தி, சிம்மாசனத்தில் வீற்றிருந்து, ஈரேழு பதினான்கு உலகங்களையும் அரசாளும் சக்கரவர்த்தியாகத் தரிசிப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

இரண்டாம்நாள், வெண்ணெய் உண்ணும் கண்ணனாக, வெண்ªணைய்த்தாழி அலங்காரம், அழகனுக்கு மேலும் அழகு சேர்க்கும் அற்புத தரிசனம்!

மூன்றாம் நாள், சிறுவன் மார்க்கண்டேயனை யமனிடமிருந்து காக்கும், கால சம்ஹாரமூர்த்தியாகக் காட்சியளிப்பது, கிடைத்தற்கரிய திவ்ய காட்சி
யாகும்.

நான்காம் நாள், மால்மருகனுக்கு மாமனைப் போன்று, வேணுகானக் கண்ணனாக விசேஷ அலங்காரம்.

ஐந்தாம் நாள், கண்ணப்ப நாயனாருக்கு அருள்புரியும் காளத்தி அப்பனாகக் காட்சி புரிகிறான் குமரன்.

ஆறாம் நாள், ஊஞ்சல் ஆடும் உமையன்னையாகவும், ஏழாம் நாள், பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரனாகவும், எட்டாம் நாள், காளிங்க நர்த்தன கண்ணனாகவும், ஒன்பதாம் நாள், ஸ்ரீசரஸ்வதி, அம்மையப்பனுக்குப் பூஜை செய்யும் அலங்காரத்திலும்,

பத்தாம் நாளான விஜயதசமி அன்று வில்லும், அம்பும் ஏந்தி, குதிரை வாகனத்திலும் காட்சியளிப்பது, பிறவியில் கிடைத்தற்கரிய தரிசனங்களாகும்.

தைப்பூசம்!

சிங்கப்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலில் ஆண்டுதோறும், தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாகவும் பெரிய அளவிலும் கொண்டாடப்படுகிறது. ‘‘தைப்பூச ஆலயம்’’ என்றே அயல்நாட்டினர் இந்த ஆலயத்தைக் குறிப்பிடும் அளவிற்கு, இங்கு நடைபெறும் தைப்பூச உற்சவம் சிறப்பாக, புகழ்பெற்று நடத்தப்பெறுகிறது. தைப்பூசத் திருவிழா வில், நம் நாட்டினர் மட்டுமின்றி, பிற மதத்தினரும் - குறிப்பாக சீனர்களும், ஸ்ரீதண்டாயுதபாணிக்கு நேர்ந்துகொண்டு, அலகுக் காவடி, பால் குடம், இதர வகைக் காவடிகள் எடுத்து வருவது அனைவரையும் பிரமிக்கச் செய்கிறது.
திருவிழாக்கள் மட்டுமில்லாமல், தேவாரப்பாடல் வகுப்புகள்; அன்னதானம்; இலவச மருத்துவசேவை ஆகியவற்றையும் நடத்தி வருகின்றனர் இவ்வாலய நிர்வாகப் பெரு மக்கள்.

நகரத்தாரின் பக்தி!

சிங்கப்பூரில் வசிக்கும் நகரத்தார் பெருமக்கள் இப்பெருமானிடத்தில் வைத்துள்ள பக்தியையும், பிரேமையையும் அவர்கள் இப்பெருமான் மீது இயற்றியுள்ள துதிப்பாடலைப் படித்தால் தெரியும்!

‘‘சேவடி நாளும் தொழுது எழுவானாத் திண்புவியில்
யாவரும் வந்தித்து, அடிதொழ வைப்பான்-இமையவரும்
மூவரும் வந்து துதிசெயச் சிங்கப்பூர் முன்னி அமர்
காவலன் தண்டாயுதபாணியாம் எங்கள் கற்பகமே!’’

தமிழகத்திற்குப் பெருமை!

சிங்கப்பூரில் தன்னிகரற்றுப் பிரகாசிக்கும் இந்த அற்புத, அழகு மிளிறும்
ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில் தமிழகம் மற்றும் தமிழக மக்களின் பக்திக்கும், ஆன்மிகப் பெருமைக்கும் சான்றாகத் திகழ்கிறது!

Comments

  1. ‘‘சேவடி நாளும் தொழுது எழுவானாத் திண்புவியில்
    யாவரும் வந்தித்து, அடிதொழ வைப்பான்-இமையவரும்
    மூவரும் வந்து துதிசெயச் சிங்கப்பூர் முன்னி அமர்
    காவலன் தண்டாயுதபாணியாம் எங்கள் கற்பகமே!’’

    அழகான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete

Post a Comment