கலிபோர்னியாவில் ஒரு சிவ-முருகன் ஆலயம்




உங்களை மாதிரி ஒருத்தரைப் பார்க்கவே முடியாது! இப்படி நாம் சிலரிடம் சொல்வதுண்டு!

‘இந்த விஷயத்தைச் செய்யணும்னா, அதுக்குன்னே ஒருத்தன் பிறந்துதான் வரணும்!’ கஷ்டமான ஒரு செயலைப் பற்றி இப்படிக் கூறுவதுண்டு.
இவை இரண்டையும் சேர்த்து, ‘‘இந்தக் காரியத்தைச் செய்ய உங்களை மாதிரி ஒருத்தராலதான் முடியும். அப்படி ஒருத்தர் அவதரிக்க நீங்கதான் மனம் வைக்கணும்!’’ என்று பலர்கூடி ஒருவரிடம் வேண்டிக் கொண்டார்கள் என்றால் அவர் எவ்வளவு பெரியவராக இருக்க வேண்டும்?

அந்தப் பராக்ரமசாலி, பரமசிவன். அவரிடம் வேண்டிக் கொண்டவர்கள் தேவர்களும், முனிவர்களும். அவர்களின் வேண்டுதலின் பலனாகப் பிறந்தவன் முருகன்.
அந்த சிவபாலன் தந்தை சிவபிரானின் அம்சத்தைத் தன்னுள் கொண்டவனாக, சிவ முருகனாக காட்சி தரும் ஒரு கோயிலுக்குத்தான் இப்போது நாம் செல்லப் போகிறோம்.

இந்த முருகன் இருப்பது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில். கோயில் இருப்பது வெளிநாடாக இருந்தாலும், பாஸ்போர்ட், விசா என்று எந்தப் பிரச்னையும் இல்லாமல், இருக்கும் இடத்தில் இருந்தே பக்தி பூர்வமாகப் பயணித்து தரிசிப்போம் வாருங்கள்.

அயல்நாட்டுக் கோயில்களை மனம் குளிரக் குளிர தரிசனம் செய்து வரும் நம்மை போன்ற இந்தியர்களுக்கு இப்போது செல்லப்போவது ஒரு வளைகுடாப் பகுதிக்கு. வளைகுடாப் பகுதி என்றால் குன்றுகள் இருக்கும்தானே! குன்று இருக்கும் இடமெல்லாம் குமரனின் இருப்பிடம் அல்லவா!

இக்கோயிலும் ஆறுமுக வேலனின் அமைவிடம்தான். இங்கே அவன் சிவமுருகனாகக் காட்சியளிக்கிறான். கோயிலும் சிவமுருகன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. கோயில் அமைந்திருப்பது, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள காங்கார்ட் எனும் ஊரில்.

மிகவும் பிரபலமான சான் ஃப்ரான்சிஸ்கோ நகரின் அருகில் தான் இவ்வூர் உள்ளது. உலகப் புகழ் பெற்ற கோல்டன் கேட் பிரிட்ஜ் இருப்பதும் இங்குதான்.

கலிஃபோர்னியாவை ‘‘பே ஏரியா’’ என்றும் அழைப்பர்.

சைனா டவுன் மற்றும் கோல்டன் பாலத்தைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் அலை மோதுவர். அமெரிக்காவின் மற்ற மாநிலங்களில் கோடை வெயில் சுட்டுப் பொசுக்கும்போது இங்கு சிலுசிலுவென்று இருக்கும். அக்னியில் பிறந்திருந்தாலும் முருகன் தன் பக்தர்களைக் கருணை மழையால் குளிர்விப்பவன் அல்லவா! அவன் இருக்கும் இடம் குளுமையாக இருப்பதில் என்ன ஆச்சரியம்? சிலிக்கான் வேலி, நாபா வேலி, சாக்ரமன்டோ ஆகிய ஊர்களுக்கு மத்தியில் உள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள அனைத்து இந்தியர்களும் சிவமுருகன் ஆலயத்திற்கு வந்து வழிபடுகின்றனர்.

அமெரிக்கா வாழ் இந்தியர்களை இணைத்து இந்து மதத்தை வளர்க்கும் மிக முக்கியமான தலமாக விளங்குகிறது காங்கார்ட் சிவமுருகன் கோயில்.

அமைதியும் இயற்கை அழகும் ஒரு சேர இருக்கும் தலம். மிதமான தட்பவெப்பமும் நிலவுவதால் இந்தியர்கள் அநேகர் இங்கு வசிக்கின்றனர்!
கோபுரம், கொடிமரம் என்றெல்லாம் தரிசிக்கும் ஆவலோடு வந்திருந்தால் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படியெல்லாம் இல்லாத, பெரிய தொழிற்சாலை போன்ற அமைப்பில் உள்ள கோயில் இது.

தொழிற்சாலை பெயர்ப் பலகை போல் எழுதப்பட்டு இருந்தாலும், சிவமுருகன் ஆலயம் என்னும் பெயரைப் பார்த்ததும் ஈசனே குழந்தை வடிவத்தில் உதித்த அற்புத நிகழ்வினைக் குறிக்கும் கந்தபுராணப் பாடல் நினைவில் வருகிறது.

ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பமும் இன்றி
வேதம் கடந்து நின்ற விமல! ஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க!

ஈசனும் முருகனும் வேறு வேறல்ல, இருவரும் ஒருவரே என்கிறார் கச்சியப்ப சிவாசாரியார். தேவர்கள் எல்லோரும் வந்து சிவனிடம், ‘‘வேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட விமலனே, உனக்கு நிகரான ஒப்பில்லாத குமரனை உன்னிடமிருந்தே தந்திடல் வேண்டும். தந்தையில்லாத பரம்பொருளான பரமசிவனை தந்தையாகக் கொண்டவன் முருகன்.

தமிழ்நாட்டில் கூட சிவனும் முருகனும் ஒன்றே என உணர்த்தும் வகையில் சுப்ரமணியன் லிங்க வடிவில் அருள்பாலிக்கும் அற்புதக் கோயில்கள் உள்ளன.

காங்கார்ட் வந்தமர்ந்திருக்கும் கந்தவேளின் தல வரலாறு என்ன தெரியுமா?

இக்கோயிலைக் கட்ட வேண்டும் என முதல் முயற்சி எடுத்தவர் ஓர் அமெரிக்கர். அமெரிக்காவில் பிறந்து பின்னர் ஹவாயில் இருக்கும் கௌவை ஆதினத்தின் மிக முக்கியமான குருவாகிய சிவாய சுப்பிரமணிய ஸ்வாமிகள்தான் அவர். இந்து மதத்தின் மகத்துவம் அயல்நாட்டில் அறியப்பட மாபெரும் பங்காற்றியிருக்கிறார், இவர். அயல்நாட்டிலுள்ள பல இந்துக் கோயில்களின் கும்பாபிஷேகம் இவரது தலைமையில் நடைபெற்றிருக்கின்றன. அமெரிக்க வாழ் இந்துக்கள் சென்று வழிபட கோயில் ஏதும் இல்லாமல் வெறும் வேதாந்த சென்டர்களே இருந்தன, சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை.

அப்படிப்பட்ட காலகட்டமான 1957ஆம் வருடம் முதன் முதலாக ஒரு சிறிய மர வீட்டில் இக்கோயில் அமைந்தது.

கணபதி, சிவன், முருகன் ஆகிய மூர்த்திகளுக்கு அங்கே வழிபாடு நடத்தி வந்திருக்கிறார்கள். அப்போது பழனி சுவாமி சிவன் கோயில் என்றே இக்கோயில் பெயர் பெற்றிருந்தது.

இந்தியர்கள் வேலை நிமித்தம் கலிஃபோர்னியாவுக்கு வர வர இக்கோயில் மிகப் பிரபலமடைந்திருக்கிறது.

விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுமாம். சிறிய இடத்தில் அமைந்திருந்த கோயில் என்பதால் பக்தர் கூட்டத்தினை சமாளிக்க முடியாமல் 1988-ல் தற்போது கோயில் இருக்கும் காங்கார்டில் இடம்பெயர்ந்து வந்திருக்கிறார் ஆறுமுகக் கடவுள்.

விஸ்தாரமான இடம், காற்றோட்டத்துடன் மிகப் பெரிய தொழிற்கூடம் போல் அமைந்திருக்கிறது கோயில்.



"சிவமுருகன் ஆலயம்" என்ற பெயர் இருப்பதால், சிவன் சன்னதியைத் தேடினால் இங்கு மூலமூர்த்தியான முருகனின் பெயரே சிவமுருகன்தான். சிவமே முருகன்! முருகே சிவம்!

மூர்த்திகளுக்கெல்லாம் அழகிய பூவலங்காரம் மனதைக் கொள்ளை கொண்டுவிடுகிறது. எல்லா சன்னதிகளிலுமே அர்ச்சனை செய்யலாம்.

கணேசருக்கு துர்க்கைக்கு நவகிரகங்களுக்கு சிவமுருகனுக்கு என அபிஷேக ஆராதனைகள் தினமுமே நடைபெறுகின்றன.

கோயில் பணிகளை ஆசையுடனும் பக்தியுடனும் தன்னார்வமாக கலந்துகொண்டு செய்யும் பக்தர்களைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. வேக்கும் க்ளீனர் கொண்டு கோயில் தரையை சுத்தம் செய்வது, ஒட்டடை அடிப்பது, கோயில் விளக்கு, பாத்திரங்களைக் கழுவுவது என்று முழுமனதோடு பலர் செய்வதால் கோயில் ‘பளிச்’ என்று மிளிர்கிறது.

உண்டியல் எண்ணுவது, கோயில் சொத்துகளை சரி பார்ப்பது, வங்கி வேலைகளுக்கு உதவுவது என்றும் பல தரப்பான கைங்கர்யங்களில் ஈடுபடுகிறார்கள் பக்தர்கள்.

கோயிலுக்கு நிதி தேவைப்படும் சமயங்களில் இந்தியர்கள் ஒருங்கிணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

திருமணம், முடி இறக்குதல், அன்னப்பிராசனம், ஆயுஷ் ஹோமம், சத்ய நாராயண பூஜை, சர்ப்ப சாந்தி ஹோமம், முருகன் திருக்கல்யாண உற்சவம், நவகிரக ஹோமம், இன்ன பிற இல்ல விழாக்களோடு நீத்தார் கடன்களைச் செய்யவும் கோயிலில் வசதி உண்டு.அனைத்துக்கும் டாலர்களில் கட்டணப் பட்டியல் தருகிறார்கள்.

தைப்பூசத் திருவிழா இங்கு வெகு விமரிசையுடன் காவடி எடுத்துக் கொண்டாடுகின்றனர்.

இக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் யாவருமே மிகச் சிறப்பான குரு பரம்பரையில் வேதம் கற்று வந்தவர்கள். விற்பன்னர்களான இவர்கள் கோயிலின் அனைத்து பூஜைகளையும் நியமப்படி செய்கின்றனர்.

ஆவணி அவிட்டத்தன்று உபாகர்மாவும் இங்கு நடத்தப்படுகிறது.

அமெரிக்க நேரப்படி ராகு காலம், திதி, நட்சத்திரம் யாவுமே வித்தியாசப்படும் என்பதால்,அப்பட்டியலைக் கோயிலில் எழுதி வைக்கின்றனர்.

யோகா வகுப்புகள் கோயில் வளாகத்தின் அடித்தளத்தில் நடத்தப்படுகின்றன.

பக்தி அதிர்வுகளால் நிறைந்திருக்கும் இக்கோயிலுக்கு ஒரு முறை வந்துபோகும் யாரும், மீண்டும் மீண்டும் வரத் தவறுவது இல்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், மனம் ஆறுதலும் தேறுதலும் மாறுதலும் கிடைப்பது இங்கேதான் என்பதுதான். அமெரிக்காவில் இருந்தாலும், அகக்கண்ணால் தரிசித்து வேண்டும் உங்களுக்கும் தன் அன்பையும் அருளையும் வாரி வழங்குவான் அந்த வடிவேலன்.

எப்படிப் போகலாம் கலிஃபோர்னியா சிவ முருகன் ஆலயத்திற்கு?

கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது காங்கார்ட்.அங்கிருந்து காரில் இக்கோயிலுக்கு வருவது மிக மிக எளிது.அரசின் பொதுப் பேருந்து வசதியும் உண்டு.

கோயில் நேரம்

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை; மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை.
வாரயிறுதி மற்றும் விசேஷ நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் திறந்தே இருக்கும்.

Comments