நவராத்திரியும் மகரிஷிகளும்





ஆண்டுதோறும் நாம் கொண்டாடிவரும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு தெய்வீக காரணமும், பெரு மையும் அர்த்தமும், புண்ணிய பலன்களும் உண்டு. காலப்போக்கில், பல காரணங்களினால் நமது பண் டிகைகளில் பொதிந்துள்ள ரகசியங்கள் நமக்குத் தெரியாமல் போய்விட்டன.

இதற்கு முக்கியக் காரணம், இந்து மதம் மிக மிகப் பழைமையானது என்பதே ஆகும்! காலத்தின் எல் லைகளைக் கடந்து நிற்பது. வேறு வாழ்க்கை நெறிமுறைகள் எதுவும் இல்லாதிருந்த காலத்திலிருந்தே மனித சமூகத்தின் நல்வாழ்விற்கு ஒளிவிளக்காக வழிகாட்டி நிற்பது.
மனிதனின் அறிவுத்திறன் மிகவும் குறைவானது! நம் வாழ்க்கையில் சிறு வயதில் நாம் பேசிய பேச்சுகள், செய்த சில செயல்கள், விளையாட்டுகள் ஆகியவற்றை வயோதிக காலத்தில் நாம் மறந்துவிடுகிறோம்.இந்த அளவிற்கு நமது அறிவுத்திறன் குறைவாகவே உள்ளது. இதனைத்தான் குருக்ஷேத்திர புண்ணிய பூமியில் பகவான் ஸ்ரீ கண்ணனும் அர்ஜுனனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.மனிதப் பிறவியின் சிற்றறிவினால் பிரம்மத்தின் (அனைத்து உலகங்களின் சிருஷ்டி, சம்ஹார ரகசியங்கள்) ரகசியங்களைப் புரிந்துகொள்ள முடியாது, ஞானக்கண்ணினால் மட்டும்தான் பார்த்து உணரமுடியும் என அருளியிருக்கிறார்.

இந்த ரகசியங்களைத்தான் நமது வேத கால மகரிஷிகள் பல ஆண்டுகாலம் மிகக் கடினமான தவங்களை இயற்றி, வேதங்களிலிருந்து அவற்றைக் கண்டறிந்து, நமது நன்மைக்காகவே வெளியிட்டு அருளியுள்ளனர். அந்த ரகசியங்களைத்தான் நாம் உபநிஷத்துகள், இதிகாச புராணங்கள், தர்ம சாஸ்திரம், நீதிநூல்கள், பதினெண் புராணங்கள், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் மகாபாரதம், ஸ்ரீமத் ராமாயணம் போன்ற இதிகாச ரத் தினங்களிலிருந்தும் அறிந்துகொள்ள முடிகிறது. மனித வாழ்க்கையின் இந்த அரிய ரகசியங்களைத் தெரிந்து கொண்டால் நாம் மகிழ்ச்சியும், மனநிறைவும், மனநிம்மதியும் கொண்ட வாழ்வைப் பெற்று, பிறகு நித்ய சாயுஜ்ய பதவியான பகவானின் இணையடிகளில் இணைய முடியும்.

மகரிஷிகள் தங்கள் தவவலிமையால் அறிந்து நமக்குத் தெரியப்படுத்தியுள்ள பண்டிகை ரகசியங்களில் ஒன் றுதான் நவராத்திரி என்னும் தேவிகள் பூஜை செய்யவேண்டிய ஒன்பது புனித தினங்களாகும். இவற்றை நாம் தெரிந்துகொண்டு இந்த நவராத்திரி (ஒன்பது) நாட்களிலும் உடலாலும், உள்ளத்தாலும் தூய்மையாக இருந்து, நமது இல்லங்களையும் பரிசுத்தமாக வைத்து ஸ்ரீமகாலட்சுமியையும், அம்பிகை பராசக்தியையும், கல்விச் செ ல்வத்தை அளித்தருளும் ஸ்ரீ சரஸ்வதி தேவியையும் பூஜித்து அளவற்ற புண்ணிய பலன்களை நமக்காகவும், நம் குழந்தைகளுக்காகவும் பெறவேண்டியது அவசியம்.

நேரில் எழுந்தருளி ஆசி கூறும் தேவியர்!

நவராத்திரி பண்டிகையில் நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கிய ரகசியம், அந்த ஒன்பது நாட்களிலும், செல்வத்தை அருளும் திருமகளும், ஆரோக்கியத்தையும், நோயற்ற வாழ்வையும், உடல் பலத்தையும் தந்தருளும் மலைமகளும், அழியாச் செல்வமாகிய கல்விச் செல்வத்தை அளித்தருளும் கலைமகளும் நம் இல்லங்களுக்கு நேரில் எழுந்தருளி நம் குறைகளைத் தீர்த்து நமக்கு நல்வாழ்வு அரு ள்கின்றனர். இந்த ஒன்பது நாட்களிலும் உண்மையான பக்தியுடன், ஆசார, அனுஷ்டானங்களுடன் பூஜித் தால் அதற்குப் பலன் கைமேல் கிடைப்பதை அனுபவத்தில் பார்க்கலாம்.

நவராத்திரி பூஜையின்போது அந்த ஒன்பது நாட்களும் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொண்டு, வீட்டின் பூஜையறையில் நெய் விளக்கு ஏற்றி வைத்து, அந்த மூன்று தெய்வீக அன்னையருக்கும் சிறிது கல்கண்டு சேர்த்து, (சர்க்கரை கூடாது) பால் பாயசம் நைவேத்தியம் செய்து, நமஸ்கரித்து வந்தால் போதும்.

வீட்டில் பணக் கஷ்டம், கடன் தொல்லைகள், தரித்திரம் ஆகியவை நீங்கும். மருத்துவர்களால் தீர்க்க முடியாது என்று கைவிடப்பட்ட நோய்கள்கூட நல்லபடி குணமாகும். படிப்பில் பிரச்சினை ஏற்பட்டு வந்த குழந்தைகள் நன்றாகப் படிக்க ஆரம்பிக்கும். இவற்றை அனுபவத்தில் காணமுடியும். நவராத்திரி என்னும் அற்புதமான தெய்வீக ஒன்பது இரவுகளில் சூட்சும சக்தியினால் நாம் பெறும் நன்மைகள்தான் இவை.

ஒன்பதின் தனிச்சிறப்பு!

ஒன்பது என்ற எண்ணிற்கு ஒரு தனிப் பெருமை உண்டு. ‘நவ’ என்னும் சொல்லிற்கு ஒன்பது என்பது பொருள்.

நவரத்தினங்கள் ஒன்பது. நவதானியங்கள் ஒன்பது. நவதேவகன்னிகைகள் - தூய்மைக்கும், கற்பிற்கும் பெரு மை பெற்றவர்கள். நவதிருப்பதிகள் எம்பெருமானின் தெய்வீக சக்திக்கு உதாரணமாக விளங்கும் திருப்பதிகள். நவபாஷாணங்கள் -உலகில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் போக்கும் சக்தி வாய்ந்த ஒன்பது வகை பச்சிலை விஷங்கள். நவக்கிரகங்கள் -நமது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தி, வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஒன்பது கிரக சக்திகள். இவ்விதம் ‘நவ’என்ற எண்ணின் தெய்வீகப் பெரு மையைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

மேலும் ஒன்பது என்ற ஒரு எண்தான்; அதனை எவ்விதம் கூட்டினாலும், கழித்தாலும், பெருக்கினாலும் இறுதியில் கிடைக்கும் கூட்டுத்தொகை ஒன்பதில் முடியும். இவ்விதம்தான் நவராத்திரி தினங்களான ஒன்பது நாட்களும் தெய்வீக சக்தி கொண்ட நாட்களாகும்.ஒவ்வொரு தினத்திற்கும் ஒவ்வொரு பிரத்யேக சக்தி உ ண்டு. இந்த ஒன்பது நாட்களிலும் வீட்டில் மட்டுமின்றி, திருக்கோயில்களுக்குச் சென்று மூன்று தேவியரையும் தரிசிக்க வேண்டும்.

நாம் தேடிச் செல்லவேண்டிய ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீஅம்பிகை, ஸ்ரீசரஸ்வதி ஆகிய மூன்று அன்னையர்களும் நம் இல்லம் தேடி வரும் புண்ணிய நாட்களை நாம் இழந்துவிடக்கூடாது.

பொம்மை கொலுவின் தத்துவம்!

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வீட்டிலும் பொம்மை கொலு வைப்பது வழக்கம். இந்த பொம்மை கொலுவை உண்மையிலேயே ரசித்துக்கொண்டாடுபவர்கள் நம் குழந்தைகள். ஆதிகாலத்திலிருந்து பொம்மை கொலுவில் சாதாரண பொம்மைகளை வைப்பதில்லை. புண்ணிய கதைகள், தர்மத்தை எடுத் துக்காட்டும் நிகழ்ச்சிகள் பற்றியவை, சரித்திர நிகழ்ச்சிகள், தெய்வத் திருமேனிகள், அருளாளர்கள் போன் றவற்றைச் சித்திரிக்கும், அழகான பொம்மைகள்தான் கொலுப்படிகளை அலங்கரிக்கும்.

நம் முன்னோர்கள் தன்னிகரற்ற அறிவுத்திறன் படைத்தவர்கள். மனித மனதின் பலவீனங்கள், பலம் ஆகியவற்றை நன்கு உணர்ந்தவர்கள். தற்காலத்தில் Visual Education என்று கூறுகிறார்களே, அதைத்தான் நம் குழந்தைகளுக்கு நவராத்திரி கொலுவின் மூலம் நம் முன்னோர்கள் கற்றுக் கொடுத்தனர். ஒரு குறிப்பிட்ட பொம்மையைப் பார்த்தவுடன், குழந்தை ‘அது என்ன?’ என்று ஆர்வத்துடன் பெற்றோரையோ அல்லது வீட்டிலிலுள்ள பெரியோர்களையோ கேட்கும்.

உதாரணமாக, சிபி சக்ரவர்த்தி மடி மீது புறா ஒன்று உட்கார்ந்திருப்பது போன்ற பொம்மையைப் பார்க்கும்போது, குழந்தைக்கு சிபி சக்ரவர்த்தியின் கருணை உள்ளம் புலப்படுகிறது. சிபி சக்ரவர்த்தி போல தானும் பிற உயிர்களின் மீது கருணையுடன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் அச்சிறு குழந்தையின் மனதில் ஆழப் பதிந்துவிடுகிறது. இதுவொரு சிறு உதாரணம்தான்!

கொலுப்படிகளில் உள்ள பொம்மைகளிலிருந்து மிகப்பெரிய தத்துவங்களையும், நெறிமுறைகளையும் குழந் தைகள் மிகவும் எளிதில் கற்றுக்கொண்டு விடுகின்றன. சிறு வயதுதான் நல்லொழுக்கம், பக்தி ஆகிய விதைகளை ஊன்றவேண்டிய வளமிக்க காலமாகும். அதற்காகத்தான் நவராத்திரி கொலு வைக்கப்படுகிறது.பல கட்டுரைகளினாலும், கதைகளினாலும் தெரிவிக்கமுடியாத விஷயங்களை ஒரு பொம்மை நொடிப்பொழுதில் விளக்கி விடுகிறது. ஆதலால்தான் நவராத்திரியில் வைக்கப்படும் கொலு சிறுவர், சிறுமிகளுக்கு அளவற்ற ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

அறிவியல்பூர்வமாகவும் நவராத்திரி கொலு குழந்தைகளுக்கு கல்வி, கற்பனை, அறிவு ஆகிய திறன்களை அளிப்பதுடன் நம் பாரத புண்ணிய பூமியின் கலாசாரம், பண்பு, சரித்திரம் போன்றவற்றைக் குழந்தைகள் தெரிந்துகொள்ள மிகச் சிறந்த, எளிய உபாயமாக விளங்குகிறது - நவராத்திரியும் அதனுடன் இணைந்த நவராத்திரி கொலுவும்.

நவராத்திரி பூஜையை எவ்விதம் செய்வது?

தினமும் காலையில் நீராடியபிறகு, வீட்டிலுள்ள பெண்களும், சிறுமியரும் நெற்றிக்கு அவரவருக்குரிய திலகம் அணிந்துகொண்டு ஸ்ரீமகாலட்சுமி,
ஸ்ரீஅம்பிகை, ஸ்ரீசரஸ்வதி படங்களை வைத்து, ஸ்தோத்திரங்களைச் சொல்லி புஷ்பங்களால் அர்ச்சித்து, நமஸ்கரிக்கவும்.

மாலையில் நெய்தீபம் ஏற்றி வைத்து, குழந்தைகளை பக்திப் பாடல்களைப் பாடச் சொல்வது வீட்டில் தெய்வீகச் சூழ்நிலையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் ஸ்ரீராமன், ஸ்ரீ கிருஷ்ணன், ஸ்ரீ சீதை, ஸ்ரீ ராதை போன்ற தெய்வங்களின் பிரதிபலிப்பாக அலங்கரித்து மகிழ்வது குழந்தைகளுக்கு உற்சாகத்தை அளிக்கும். இரவில் காய்ச்சிய பசும்பாலில் கற்கண்டை பொடி செய்து சேர்த்து, மூன்று தேவியருக்கும், அவர்களது சான்னியத்தைக் கொண்டுள்ள கொலுவுக்கும் நைவேத்தியம் செய்து, கற்பூர ஆரத்தி எடுத்து, பின்பு மங்கள ஆரத்தியுடன் அன்றைய தினத்தைச் சுபமாக முடிக்கவும்.

விஜயதசமி அன்று நவராத்திரி முடிகிறது. அன்று பசுவுக்கு உணவளித்து, வசதியிருப்பின் ஏழை ஒருவ ருக்காவது அன்னதானம் அளிக்கவும்.

நவராத்திரியின் முழுமையான பலன் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் கிடைக்கும். நவராத்திரி பண் டிகையின் உயர்வை நம் மகரிஷிகள் நம் மீது வைத்துள்ள பரம கருணையினால் அருளியுள்ளனர்.இந் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் மூன்று தெய்வீக அன்னையரையும் மற்றும் காயத்ரி, துளசி, கங்கை, காமதேனு, அருந்ததி ஆகிய பஞ்ச மாதாக்களையும், அகல்யா, திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி ஆகிய ஐந்து நித்ய கன்னிகைகளையும் பூஜித்து அனைத்துப் பாவங்களும், பாவங்களின் விளைவாக ஏற்படும் தோஷங்களும் நீங்கப்பெற்று மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற்று மகிழ்வோம்.

Comments