திருப்பதி தெரியாத தகவல்கள்

திருப்பதி ஏழுமலையானுக்கு சாத்தப்படும் தங்கச் சரிகை மாலையின் எடை 12 கிலோ. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்துதான் அணிவிக்க முடியும். நீல நிற ஒற்றைக்கல் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகில் இதுபோல் வேறு இல்லையாம்.

மகா சிவராத்திரியன்று க்ஷேத்திரபாலிகா உற்சவத்தில் உற்சவருக்கு வைர விபூதிப்பட்டை அணிவித்து வீதியுலா நடத்துவார்கள்.

யமுனைத்துறை மண்டபத்தில் இருந்து மாலைகளை கூடையில் இருவர் சுமந்து வருவர். அவர்களுக்கு முன் ஒருவர் டமாரம் அடித்தபடி வருவார். கருவறையை அடைந் ததும் திருமால் மார்பில் உள்ள மகாலட்சுமிக்கு மாலை அலங்காரம் நடைபெறும். பின் சுவாமிக்கு தோமாலை சாற்றுவர். அப்போது திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை ஓதப்படும். இதனை தோமாலை சேவை என்பர்.

மடைப்பள்ளியில் சுவாமி நிவேதனம் தயாராவதை, சீனிவாசப் பெருமாளின் தாய் வகுளவல்லி மேற்பார்வை செய்வதாக ஐதிகம். வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, கேசரி பாத், சர்க்கராபாத், ஜீரா பாயசம், மோளா, ஹோரா, கதம்பசாதம், பகாளாபாத், பருப்பு வடை, பானகம், அப்பம், ஜிலேபி, மனோகரம், ஹோலிபூ, தேன்குழல், கயாபடி, வட்டபடி, மாவுதோசை, நெய்தோசை, வெல்லதோசை, லட்டு ஆகிய நிவேதனங்கள் தயாராகின்றன. இவற்றில் சிறப்பு நிவேதனம் லட்டு. வகை வகையான நிவேதனம் இப்பெரிய மடைப்பள்ளியில் தயாரானாலும்கூட புதிய மண்பாண்டத்தில் தயாரிக்கும் தயிர் சாதம் மட்டுமே குலசேகர ஆழ்வார் படிதாண்டி திருமலையானுக்கு நிவேதிக்கப்படுகிறது.

கருவறைமுன் உள்ள படிதான் குலசேகர ஆழ்வார்படி என அழைக்கப்படுகிறது. ‘படியாய்க் கிடந்தேனும் உன் பவளவாய் காண்பேன்’ என உருகிப் பாடினார் குலசேகர ஆழ்வார். எனவே இப் படிக்கு இவர் பெயர்.

தெய்வச் சிலைகளில் அந்த சிலைகளைச் செதுக்கிய சிற்பியின் அடையாளம் ஏதேனும் இருக்கும். ஆனால் வேங்கடாசலபதி சிலையில் அப்படி எதுவும் இல்லை. நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள் பாலிஷ் போட்டது போல் பள பளக்கின்றது. 3000 அடி உயர குளிர்பிரதேசமான ஏழுமலையில் சுவாமிக்கு அதிகாலையில் குளிர்நீர் அபிஷேகம் செய்யும் போது வியர்க்கிறது. அதற்கு முன் சுவாமிக்கு அணிவித்த நகைகளைக் கழற்றும்போது அது சூடாக இருப்பதை உணர்வதாக அர்ச்சகர்கள் கூறுகின் றனர்.

திருப்பதிக்கு அபிஷேகப் பொருட்கள் வெளிநாட்டில் இருந்தும் வருகின்றன. ஆம்ஸ்டர்டாமிலிருந்து ரோஜாப் பூ விமானத்தில் வருகிறது. நேபாள கஸ்தூரி, பாரீஸ் சென்ட், புனுகு, கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், வெங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் பல நாடுகளிலிருந்து வருகின்றனவாம்.

அன்னமாச்சாரியா ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் கொண்டு பாடல்கள் பாடியுள்ளார். இவர் பாடல்களில் புகழ் பெற்றது வேங்கடேச சுப்ரபாதம்.

பங்காரு வாகிலி என்பது ஸ்தாபன மண்டபத்தின் அழகிய தங்கக் கதவுகள் கொண்ட வாயில். இங்குதான் தினமும் அதிகாலையில் அன்னமாச்சாரி யாரின் வேங்கடேச சுப்ரபாதம் இசைக்கப்படுகிறது. மார்கழி மாதம் முழுதும் ஆண்டாளின் திருப்பாவை ஒலிபரப்பப் படுகிறது.

பாதயாத்திரை செய்வோருக்கு வழியில் உள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் மூலவர் ஏழுமலையான் எளிய கோலத்தில் காட்சி தருகிறார். இவர் பாத தரிசனம் செய்த பின்பே பக்தர்கள் படி ஏறுவார்கள். வழியில் சிலா தோரணம் என்ற கல்வளைவு உள்ளது. இதுபோன்ற அமைப்பை வேறு எங்கும் காணமுடியாது என்பர்.

ஒவ்வொரு வியாழனன்றும் மாலை 6 மணி குபேரகாலமாகும். அப்போது ஏழுமலையானை பாதம் முதல் சிரசுவரை தரிசிப்பார்கள். இதற்கு குபேர கால தரிசனம் எனப் பெயர். இத்தரிசனத்தால் செல்வம், புகழ், வியாபார விருத்தி என அனைத்து நன்மைகளும் கிட்டும்.

திருப்பதியில் உள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளில் தமிழ்க் கல்வெட்டுகள் மட்டும் 2100 உள்ளனவாம்.

திருப்பதிக்குச் செல்பவர்கள் முதலில் கீழ்த்திருப்பதி கோவிந்தராஜனையும், பின் திருச்சானூர் அலர்மேலு மங்கைத் தாயாரையும் வணங்க வேண்டும். அதன்பின் மேல் திருப்பதி சென்று அங்குள்ள சுவாமி புஷ்கரணி அருகேயுள்ள வராகமூர்த்தியை தரிசித்த பின்னர் வேங்கடவனை சேவிக்க வேண்டும். இதுதான் சம்பிரதாய நியதி.

Comments