அனைத்தும் வழங்குவார் ஆவராணி பெருமாள்!





நாகப்பட்டினத்துக்கு அருகில், முருகக்கடவுளின் பிரசித்தி பெற்ற சிக்கல் திருத்தலத்தைத் தெரியாதவர்கள் உண்டா என்ன? இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ஆவராணியில், அழகு ததும்பும் கோலத்துடன் அருளாட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் ஸ்ரீஅனந்தநாராயணப் பெருமாள்!
திருமால், திருமுடி முதல் திருவடி வரை ஆபரணங்கள் அணிந்து அழகு ஜொலிக்கத் தரிசனம் தருவதால், ஸ்ரீஅனந்தநாராயணர் குடிகொண்டிருக்கும் ஊர், ஆபரணதாரி என அழைக்கப்பட்டு, பின்னாளில் ஆவராணி என மருவியதாகச் சொல்வர்! தாயாரின் திரு நாமம்- ஸ்ரீஅலங்காரவல்லித் தாயார்.

புரட்டாசி மாதம் வந்துவிட்டால், ஒவ்வொரு நாளும் இங்கு ஸ்வாமிக்கு சிறப்பு பூஜைகளும் விசேஷ அலங்காரங்களும் கோலாகலமாக நடந்தேறுமாம்! குறிப்பாக, புரட்டாசி மாதத்தின் திருவோணம், ஏகாதசி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் இங்கு வந்து ஸ்ரீஅனந்தநாராயண பெருமாளை நெய் தீபமேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்!



இங்கேயுள்ள ஸ்ரீஅனுமனும் விசேஷமானவர். இவருக்கு வியாழன், சனிக்கிழமை மற்றும் அமாவாசை ஆகிய தினங்களில் கட்டமுது படைத்து வழிபடப்படுகிறது அதாவது, வஸ்திரத்தில் கட்டமுதை வைத்து (தயிர்சாதம்), ஸ்ரீஅனுமனின் திருவயிற்றில் வைத்துக் கட்டி, மனதார வேண்டிக் கொண்டால், நினைத்த காரியங்கள் யாவும் விரைவில் நடந்தேறும்; சகல ஐஸ்வரியங்களும் பெற்று நிம்மதியாக வாழலாம் என்கிறார் கோயிலின் குமார் பட்டாச்சார்யர்.

கவலை தீர்ப்பார்நிரவி ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள்!

நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது நிரவி திருத்தலம். இங்கே, ஸ்ரீஆனந்தவல்லி சமேதராகக் காட்சி தருகிறார் ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள். சூரிய பகவான் வழிபட்ட தலம் என்பதால், இரவி என்று இந்தத் திருத்தலம் அழைக்கப்பட்டு, பின்னாளில் அதுவே நிரவி என மருவியதாகச் சொல்வர்!



கோயிலின் தீர்த்தம்- சூரிய புஷ்கரிணி. திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள் கோயிலின் ஏழாவது பிராகாரமாக இந்தப் பெருமாளின் திருவிடம் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். மாசி மக நன்னாளில், காரைக்கால் கடற்கரையில், திருக்கண்ணபுரம், கோவில்பத்து உள்ளிட்ட ஒன்பது தலத்துப் பெருமாளும் ஒருசேரத் தரிசனம் தருவார்கள். அவற்றில் ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாளும் ஒருவர்!

ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து மனதார வழிபட்டு, வயலில் விதைத்தால் அமோக விளைச்சலைத் தந்தருள்வாராம் பெருமாள்!

புரட்டாசி மாதத்தில், ஸ்ரீஆனந்தவல்லித் தாயாருக் குப் புடவை சார்த்தி வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கப் பெறலாம்; ஸ்ரீகரிய மாணிக்கப் பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வழிபட்டால், கவலைகள் யாவும் தீரும்; பதவி உயர்வு கிடைக்கப்பெறலாம் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை!


சந்தோஜம் தருவார் ஸ்ரீசௌந்தரராஷ பெருமாள்!

ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வந்தால், சீரும் சிறப்புமாக வாழலாம் என்கின்றனர் நாகப்பட்டினத்து மக்கள்.

நாகப்பட்டினத்தில் உள்ளது ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள். மூலவரின் திருநாமம் ஸ்ரீநீலமேக பெருமாள்; உத்ஸவர்தான் ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள். ஆனாலும், சௌந்தரராஜ பெருமாள் கோயில் என்றுதான் பக்தர்கள் அழைக்கின்றனர். தாயாரின் திருநாமம்- ஸ்ரீகஜலட்சுமித் தாயார் (உத்ஸவர்); மூலவர் - ஸ்ரீசௌந்தரவல்லித் தாயார்.

தலவிருட்சத்தை மாமரமாகவும், சார புஷ்கரணியைத் தீர்த்தமாகவும் கொண்டு திகழ்கிற அற்புதமான திருத்தலம். இந்தத் தலத்தில் உள்ள எட்டுத் திருக்கரங்களுடன் கம்பீரத்துடன் திருக்காட்சி தந்தருள்கிறார் ஸ்ரீஅஷ்டபுஜ நரசிம்மர். இவரை வணங்கினால், எதிரிகளின் தொல்லை ஒழியும்; மன நிம்மதியுடன் வாழலாம் என்கிறார் ஸ்ரீராமன் பட்டாச்சார்யர்.



பங்குனியில் பிரம்மோத்ஸவம், ஆனி உத்திர பத்து நாள் விழா, ஆடிப்பூர பத்து நாள் திருவிழா என வருடந்தோறும் விழாக்களுக்கு குறைவில்லாத இந்தத் தலத்தில், புரட்டாசி மாத தரிசனத்துக்குக் கேட்கவா வேண்டும்?!

புரட்டாசி மாதத்தில் இங்கு வந்து, பெருமாளுக்குத் திருமஞ்சனம் சார்த்தி பிரார்த்தித்தால், காலசர்ப்ப தோஷம் விலகும்; விரைவில் கல்யாண வரம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை!

புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதத்தில், ஸ்ரீசௌந்தரராஜ பெருமாளை கண்ணாரத் தரிசியுங்கள்; சகல சந்தோஷங்களையும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள்!

Comments