கோனேரிராஜபுரம் ஸ்ரீநடராஜர் விக்கிரகமாக உறைந்த சிவனடியார்




கும்பகோணம் அருகில் உள்ள ஊர் கோனேரிராஜபுரம். இங்குள்ள சிவாலயத்தில் காட்சி தரும் ஸ்ரீநடராஜர் விக்கிரகம் விசேஷமானது. பஞ்சலோகத்தால் ஆன இந்த விக்கிரகத்தின் மார்பில்... மனித உடலில் இருப்பது போன்று ஒரு 'மரு'வையும் முடியையும் காணலாம்!

உலகிலேயே பெரியதாகக் கருதப்படும் இந்த விக்கிரகம் இங்கு வந்தது எப்படி? அதற்கு சுவாரஸ்யமான கதை உண்டு.


சோழ மன்னன் ஒருவரது கனவில் தோன்றிய இறைவன், கோனேரிராஜபுரம் சிவாலயத்தில் நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி பணித்தார். சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து அவரிடம், ''கலைநுட்பத்துடன் கூடிய பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை 90 நாட்களுக்குள் வடிக்க வேண்டும். அது, அளவில் பெரிதாகவும் அனைவரும் பாராட்டும்படியும் இருக்க வேண்டும்!'' என்று கட்டளையிட்டார் மன்னர்.

சிவ பக்தரான அந்த சிற்பி, இறைவனை வணங்கி, விக்கிரக பணியைத் துவக்கினார். ஆனால், அது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை விரைவில் புரிந்து கொண்டார். ஒவ்வொரு முறையும் அவர், பஞ்சலோகத்தை உருக்கி, அச்சில் வார்க்கும் போது ஏதேனும் ஒரு குறை தென்படும்; விக்கிரகம் முழுமை அடையாது! சிற்பி எவ்வளவோ முயன்றும், காரணத்தை அறிய முடியவில்லை.



நாட்கள் நகர்ந்தன. பணி எந்த அளவில் உள்ளது என்பதை அறிய சிற்பக்கூடத்துக்கு வந்தார் மன்னன். 'விக்கிரகம் இன்னும் தயாராகவில்லை!' என்பதை அறிந்து சினம் கொண்டவர், ''இன்னும் இரண்டு நாட்களில் விக்கிரகம் தயாராகவில்லை எனில், உம் தலை தரையில் உருளும்!'' என்று ஆவேசத்துடன் கிளம்பிச் சென்றார். கவலையில் ஆழ்ந்த சிற்பி, 'அம்பலவாணா... இது என்ன சோதனை!'' என்று இறைவனையே தியானித்து கண்ணீர் வடித்தார். அவர் அருகில், பெரிய உலைகலன் ஒன்றில் பஞ்சலோகம் கொதித்துக் கொண்டிருந்தது.

அப்போது, 'ஐயா' என்ற அழைப்பொலி கேட்டு, வாயிலுக்கு சோகத்துடன் வந்தார் சிற்பி. அங்கு வயதான சிவனடியார் ஒருவர் நின்றிருந்தார். ''ஐயா, தாகம் உயிர் போகிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாருங்களேன்... சுடுதண்ணீராக இருந்தால் நன்று!'' என்றார் சிவனடியார். சிற்பிக்கோ எரிச்சல்! 'இன்னும் இரண்டு நாட்களில் என் தலை உருளப் போகிறது; இவருக்குச் சுடுதண்ணீர் வேண்டுமாம்!' என்று சலித்துக் கொண்டவர், ''உள்ளே, உலைகலனில் கொதிக்கிறது... போய்க் குடியுங்கள்!'' என்றபடி வெளியே அமர்ந்து விட்டார்.



சிவனடியார் உள்ளே சென்றார். நன்கு கொதித்துக் கொண்டிருந்த பஞ்சலோகத் திரவத்தைக் குடித்தார். மறுகணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது! ஸ்ரீநடராஜர் விக்கிரகமாகவே உறைந்தார் சிவனடியார். அவரைக் காணாது உள்ளே வந்த சிற்பி, விக்கிரகத்தைக் கண்டார். அதன் மார்பில் ஒரு மரு; மருவில் ஒரு முடி! 'என்ன அதிசயம்... சிவனடியார் மார்பில் இருந்தது போன்றே இந்த விக்கிரகத்திலும் மருவும் முடியும் உள்ளனவே... அப்படியானால் வந்தது யார்?' என்று வியந்தவர், எல்லாம் சிவனருள் என்பதை உணர்ந்தார். கண்ணீர் மல்க ஆடல்வல்லானை வணங்கிப் பணிந்தார். இந்த சம்பவம், மார்கழி மாத திருவாதிரை திருநாளன்று நிகழ்ந்தது என்பர்.

Comments

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment