ஆசார்யார்கள் அவதரித்த ஆனந்தத் திருத்தலம்




கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று ஒரு மூதுரை உண்டு. ஆனால் காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை ‘கோயிலில்லா தெருவில் குடியிருக்க வேண்டாம்’ என்று மாற்றித்தான் சொல்ல வேண்டும். அந்தவகையில், இந்த ‘நகரேஷு காஞ்சி’ என்ற காஞ்சி மாநகரத்தில் எந்தப் பகுதியிலிருந்து நிமிர்ந்தாலும், ஏதேனும் கோபுரம் கண்களில் கட்டாயமாகப் படும். ஆன்மிகம் பெரிதும் தழைத்தோங்கி செழித்திருக்கும் இந்த திருத்தலத்தில், மொத்தம் 15 திவ்ய தேசங்கள் அமைந்திருக்கின்றன என்பது
ஆச்சர்யமான தகவல். இவை தவிர பிற வைணவக் கோயில்கள், சைவக் கோயில்கள், அம்மன் கோயில்கள், முக்கியமாக காஞ்சி சங்கர மடம்....
காஞ்சிபுரத்தில், பெருமாளின் திவ்ய தேசங்களைப் பொறுத்தவரை, அத்தியூர் பகுதியில் விளங்கும் வரதராஜப் பெருமாள் கோயிலைப் பிரதானமாகக் கொள்ளலாம். இந்தக் கோயிலின் புராணக் கதையுடன் சம்பந்தப்பட்ட இரு சம்பவங்களின் சாட்சியாக அஷ்டபுயகரம் ஆதிகேசவப் பெருமாளும், திருத்தண்கா தீபப்பிரகாசப் பெருமாளும் அருளொளி பரப்பி வருகிறார்கள்.

ஒரே கோயில் வளாகத்தில் நான்கு திவ்ய தேச திருக்கோயில்கள் அமைந்திருப்பதும் வியப்பளிக்கும் ஒரு காட்சி. இங்கே திருநீரகம் உலகளந்த பெருமாள் பிரதானமாக வீற்றிருக்க, அவரைச் சுற்றி, திருஊரகம் நீரகத்துப் பெருமாள், திருக்காரகம் காரகத்துப் பெருமாள், திருக்கார்வானம் கார்வண்ணப் பெருமாள் என்று திருமால் அபயமளித்துக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் இந்த நான்கு கோயில்களும் திவ்ய தேச பட்டியல்படி 47, 50, 52, 53 என்ற கணக்கில்தான் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதாவது காஞ்சி மாநகரில் வெவ்வேறு பகுதிகளில் இருந்திருக்கக் கூடிய இந்த நான்குக் கோயில் பெருமாள்களையும் அழைத்து வந்து, பக்தர்களின் சேவை சௌகரியத்தை முன்னிட்டு அந்நாளையப் பெரியவர்கள் ஒரே வளாகத்துக்குள் அமைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. அதாவது, 108 திவ்ய தேசத் தலங்களை அந்தப் பட்டியல் வரிசைப்படிதான் தரிசிக்க வேண்டும் என்ற பாரம்பரியத்தை பக்தர்களின் நலனை உத்தேசித்து, மாற்றி, இப்படி ஒரே பகுதியில் நான்கு கோயில்களை தரிசிக்கும் வசதியை அவர்கள் ஏற்படுத்தியிருக்கலாம்.
இவை மட்டுமல்ல, ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள்ளும் ஒரு திவ்ய தேசக் கோயில் உள்ளது! நிலாத்திங்கள் துண்டத்தான் என்று இந்தப் பெருமாளுக்குப் பெயர். தனி சந்நதி. சிவாச்சார்யார்களே பெருமாளுக்கு அலங்காரம் செய்து, பக்தர்களுக்காக அர்ச்சனை செய்து, அந்தப் பெருமாள் அங்கு கோயில் கொண்டருளும் புராண சம்பவத்தை விளக்கிச் சொல்லவும் செய்கிறார்கள். சம்பிரதாய வழிபாட்டு நெறி காரணமாக அதிக எண்ணிக்கையில் வைணவ பக்தர்கள் இந்த ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் வந்து இந்தப் பெருமாளை சேவிப்பதில்லை என்பதாகவும் ஒரு கருத்து
நிலவுகிறது.
இதேபோல காமாட்சி அம்மன் கோயிலிலும், அம்மன் சந்நதிக்குப் போகும் வழியில், நுழைவாயிலின் இடது புறத்தில் திவ்ய தேசப் பெருமாள் ஒருவர், தாயாருடன் சேவை சாதிக்கிறார். இவர் கள்வர் பெருமாள் என்றழைக்கப்படுகிறார். தாயார், அஞ்சிலைவல்லி. பெருமாளின் பெயரே கள்வர் என்றிருப்பதாலோ என்னவோ, சில வைணவ பக்தர்கள் இங்கே அவரை தரிசிக்க வந்தாலும், அந்த அம்மன் கோயிலின் நுழைவாயிலுக்கு உள்ளே வந்து நேருக்கு நேர் அவரைக் கண்டு வணங்குவதில்லை. இதற்கும் சம்பிரதாய வழிபாட்டு நெறி குறுக்கே நிற்கிறது என்றுதான் ஊகிக்க முடிகிறது. அதனால், கள்வர் பெருமாளுக்கு எதிரே ஒரு நிலைக் கண்ணாடியைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள். அவரை மட்டும் தரிசிக்க விரும்பி வரும் வைணவ பக்தர்கள் நுழைவாயில் படிகளுக்குச் சற்றுத் தள்ளி நின்றபடி, தலையை மட்டும் நீட்டி, சாய்த்து, பிம்ப
ரூபமாக இந்தப் பெருமாளை தரிசித்து விட்டு, அதிலேயே நிறைவு பெற்றுத் திரும்பி விடுகிறார்கள். கள்வருக்கும், அருகில் தாயாருக்கும் கவசம் சாத்தி, அலங்காரம் செய்து, கண்ணாடி பிம்பம் தெளிவாகத் தெரியும் பொருட்டு, ஃபோகஸ் விளக்குப் பொருத்தி, காமாட்சி அம்மன் கோயிலைச் சேர்ந்தவர்கள் தம் பொறுப்பை நிறைவேற்றுகிறார்கள். ஆனால், கள்வருக்கு அர்ச்சனை செய்யவோ அல்லது வேறு வகையில் சேவை புரியவோ வேண்டுமானால், அம்மன் கோயில் சிவாச்சார்யார்களின் உதவியைத்தான் நாட வேண்டும். அவர்களாலும், தம்முடைய தினசரிப் பணிகளை நிறைவேற்றும்போது இடையே நேரம் கிடைத்தாலோ அல்லது அந்தப் பணிகள் முடிவடைந்த பிறகோதான் அவ்வாறு உதவ முடிகிறது.
நம் நாட்டில் நாம் தரிசிக்கக் கூடிய 106 திவ்ய தேசங்களுக்கும் செல்ல முடிந்தாலும், மேலே குறிப்பிட்ட இரண்டு திவ்ய தலங்களை சிலர் தவிர்த்துவிடக் கூடிய மனோநிலை வரலாம். அல்லது பிற திவ்ய தேசங்களில் அடையக் கூடிய நிறைவு இந்த இரு தலங்களில் கிட்டாமல் போகலாம். இதற்கு வைணவ சம்பிரதாய வழிபாட்டு நெறிமுறைகளும், அவ்வாறு நிறைவை அடைய முடியாத காரணங்களாக இருக்கலாம்.
இதுபோன்ற தர்மசங்கடத்தை நீக்கி, காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை, வைணவ திவ்ய தேசங்கள் உலா மனநிறைவோடு முழுமையடைய, இந்த இரு சந்நதிகளையும் ஏதேனும் பிற ஒரு திவ்ய தேசக் கோயில் வளாகத்தினுள் நிர்மாணிக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள்.

அதாவது, திருநீரகம் உலகளந்த பெருமாள், திருஊரகம் நீரகத்துப் பெருமாள், திருக்காரகம் காரகத்துப் பெருமாள், திருக்கார்வானம் கார்வண்ணப் பெருமாள் ஆகியோர் ஒரே வளாகத்தில் அமைந்திருப்பதுபோல, நிலாத்திங்கள் துண்டத்தானையும், கள்வர் பெருமாளையும், காஞ்சிபுரத்திலுள்ள ஏதேனும் ஒரு வைணவ திவ்ய தேச ஆலயத்துக்குள்ளேயே மறு நிர்மாணம் செய்யலாம் என்கிறார்கள். ஆனால் பெருமாள் என்ன நினைத்திருக்கிறாரோ!
பொய்கையாழ்வார் அவதரித்த தலம் இது. திருமழிசையாழ்வார் பல்லாண்டுகள் இதே தலத்தில் தங்கி ‘திருவெஃகா’ பெருமாளுக்கு தொடர்ந்து சேவை புரிந்திருக்கிறார். இந்தப் பெருமாளை ‘சொன்னவண்ணம் செய்த பெருமாளா’க்கிய பெருமையும் இவருக்கே உண்டு. ‘கவிதார்த்திக சிம்மம்’ என்று போற்றப்படும் நிகமாந்த மஹாதேசிகன் அவதரித்ததும் இங்குதான்.
‘மொய்ம்பால் வளர்த்த இதத்தாய்’ என்று போற்றப்படும் ராமானுஜர், இத்தலத்துடன் பெரிதும் தொடர்பு கொண்டிருந்தார். தனக்குப் புனர்வாழ்வளித்த வரதராஜருக்கு அரும் சேவை
ஆற்றினார். புனர்வாழ்வளித்த சம்பவம் என்ன?
யாதவ பிரகாசர், ராமானுஜரின் ஆசான். தான் கற்றுக் கொடுத்ததை விடவும் கூடுதலாகக் கற்றுக்கொண்டதோடு, கூடுதல் பிரகாசத்தோடு ராமானுஜர் ஜொலித்ததை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தன் சீடன் தன்னையே மிஞ்சுவதா, எந்த மன்றத்திலும், எந்த ஆடுகளத்திலும் தன்னைப் பின்னிருத்தி தன் திறமையால் தான் முன் நிற்கிறானே என்றெல்லாம் பொறாமையால் தீய்ந்தார் யாதவ பிரகாசர். ஒரு கட்டத்தில், தன் புகழ் நிலைக்க, தன் சீடனைக் கொல்வதே ஒரே வழி என்ற வன்ம சிகரத்தை எட்டினார் அந்த ஆசான். அதற்காக ராமானுஜரை அழைத்துக் கொண்டு கங்கைக்குச் சென்றார். அங்கே நதியில் சீடரை அமிழ்த்திக் கொன்றுவிடுவதாக ஆசானின் திட்டம்.

ஆனால் உடன் வந்த இன்னொரு மாணவனும், தன் சிற்றன்னையின் மகனுமான கோவிந்தன் மூலமாக அந்த சதித் திட்டத்தைத் தெரிந்து கொண்ட ராமானுஜர், ஆசானின் பார்வையிலிருந்து தப்பி விந்திய மலைக் காட்டில் வழிமாறிச் சென்றார். கொலைமதி ஆசிரியரிடமிருந்து தப்பித்தாயிற்று; இனி எங்கே செல்வது? காஞ்சியை மீண்டும் காண்போமா என்றெல்லாம் ஏங்கி, தவித்தபடி, கால்போன போக்கில் சென்றார் ராமானுஜர்.
அவரை ஒரு வேடுவ தம்பதி தடுத்து நிறுத்தினர். தாம் உரிய வழி காட்டுவதாகச் சொல்லி, அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றனர். பலநாட்கள் ஆசானுடன் பயணித்து கங்கைக் கரைவரை வந்த தான், ஒரே இரவில் காஞ்சி மாநகருக்குத் திரும்பிவிட்டதை அறிந்து திகைத்தார் ராமானுஜர். வேடுவத் தம்பதி அவரை சாலையோரமாக இருந்த கிணற்றிலிருந்து தமக்கு குடிநீர் எடுத்து வருமாறு கேட்டுக் கொண்டனர். தன்னை மீண்டும் காஞ்சிக்குக் கொண்டு சேர்த்த அவர்களுக்கு நன்றிச் சேவையாக, அந்த கிணற்றிலிருந்து நீர் எடுத்துக் கொண்டு திரும்பி வந்தார் அவர். ஆனால் அவர்களைக் காணோம். வியப்பு மேலிட நிமிர்ந்த அவர் கண்களுக்கு வரத
ராஜர் கோயிலின் புண்ணியகோடி விமானம் தென்பட்டு ஆசியளித்தது. ‘பெருமாளே, தாயாரோடு வந்தாரா! அதுவும் சாதாரண வேடுவராக வந்தாரா!’ நெகிழ்ந்து போனார் ராமானுஜர். அன்றுமுதல் அதே கிணற்றிலிருந்து தினமும் நீரெடுத்து பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்து வந்தார். இன்றும் அதே கிணற்றின் தீர்த்தம்தான் பெருமாள் திருமஞ்சனத்துக்குப் பயன்படுகிறது.

வரதருக்காக, தன்னை வருத்தி சேவை புரிந்த இன்னொரு அருளாளர், திருக்கச்சி நம்பிகள். இவர் செய்த ஆலவட்ட கைங்கர்யம் இன்றும் சிறப்புடன் பேசப்படுகிறது. அது என்ன ஆலவட்ட சேவை? பக்தர்களின் சேவைகளை ஏற்றுக் கொண்டு அவர்கள் கோரும் வரங்களை மனமுவந்தளிக்கும் வரதன் அந்தப் பணி காரணமாக உடல் அயர்ச்சி அடைவானோ, வியர்வை பெருக்கி சோர்வடைவானோ என்று அஞ்சிய நம்பிகள், ஒரு பெரிய விசிறியால் அவருக்கு விசிறிக் கொண்டே இருந்தார். தன் பிறப்பிடமான பூவிருந்தவல்லியிலிருந்து தினமும் காஞ்சிபுரத்துக்கு வந்து விசிறிச் சேவையை ஆற்றி வந்தார் அவர். இப்படி அருகில் நின்றபடி தென்றல் வீசும் பணியாற்றிய நம்பிகளைப் பெரிதும் மெச்சிய பெருமாள், அவருடன் தினமும் பேசவும் செய்வாராம்! அதோடு நம்பிகள் காஞ்சியிலேயே தங்கியிருக்கும்படியும் செய்தார், வரதர். ராமானுஜருடைய தீர்த்த கைங்கர்யத்தை அறிந்த, ஆளவந்தார், தனக்குப் பிறகு அவருடைய சேவை ஸ்ரீரங்கத்து அரங்கனுக்கும் உரியதாக்க விரும்பினார். ஆனால், அவரை வரதரிடமிருந்து பிரிப்பது போலாகிவிடுமோ என்றும் தயங்கினார் அவர். ஆனால் யாதவ பிரகாசரின் சீடர்களிலேயே மிகச் சிறந்தவராக ராமானுஜரை, திருக்கச்சி நம்பிகள் அறிமுகப்படுத்தியிருந்ததால், ‘ஆம் முதல்வன்’ என்று பாராட்டி, ராமானுஜரின் ஆற்றலைக் கணித்திருந்தார் ஆளவந்தார். அவருடைய எண்ணம் நிறைவேற திருக்கச்சி நம்பிகள் உதவினார். நம்பிகளின் சிபாரிசின் பேரில், தனக்காற்றப்படும் சேவை ஸ்ரீரங்கனுக்கும் சாதிக்கப்படட்டும், அதன் மூலம் ராமானுஜரின் நிர்வாகத் திறமை அங்கும் பயன்படட்டும் என்று கருதிய வரதர், உடனே அதற்கு சம்மதித்தார். வரதரின் இந்த தியாகத்தைப் போற்றும் வகையில், ஸ்ரீரங்கம் கோயிலே ‘தியாக மண்டபம்’ என்று அழைக்கப்பட்டது.

ராமானுஜர் தன் இளமைக் காலத்தைக் கழித்த ‘உடையவர் திருமாளிகை’யை, காஞ்சி வரதர் கோயிலின் கிழக்கு வாசலுக்கு எதிரே உள்ள வீதியில் இன்றும் காணலாம்

Comments