அவிர் பாகத்தைப் பெற நேரில் வந்த இறைவன்!




அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான மாற நாயனார், சோழ நாட்டில் திருவம்பர் (அம்பர்) எனும் தலத்தில் வாழ்ந்தவர். இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு. வேதநாயகனாம் சிவனாரை வேள்விகளில் சிறந்த சோம வேள்வியால் வழிபட்ட அடியவர். ஆதலால், இவரை சோமாசிமாற நாயனார் எனப் போற்றுவர்.


இமைப் பொழுதும் ஈசனை மறவாமல் வாழ்ந்த மாற நாயனாருக்கு வெகு நாட்களாக ஓர் ஆசை. யாகத் தீயில் தாம் சமர்ப்பிக்கும் பழம், வஸ்திரம், பொன் முதலான நிவேதனப் பொருட்களை, சிவனாரே நேரில் வந்து பெற வேண்டும் என்று விரும்பினார் அவர். சிவபெருமானின் அன்புக்குப் பாத்திரமான சுந்தரமூர்த்தி நாயனாரின் நட்பு கிடைத்தால், தனது விருப்பம் நிறைவேறும் என்று எண்ணினார் மாற நாயனார்.


சரி... சுந்தரமூர்த்தி நாயனாரின் நட்பைப் பெறுவது எப்படி? சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தூதுவளைக் கீரை என்றால் மிகவும் விருப்பம். தினமும் அந்தக் கீரையைப் பறித்து வந்து சுந்தரருக்கு அளித்து, அதன் மூலம் நட்பை வளர்ப்பது என்று முடிவு செய்தார்.

அதன்படி நாள்தோறும் ஆற்றுக்கு நீராடப் போகும் மாற நாயனார் ஆற்றில் நீந்தி அக்கரைக்குச் செல்வார். அங்கு வளர்ந்திருக்கும் தூதுவளைக் கீரையைப் பறித்து வந்து சுத்தப்படுத்தி, சுந்தரருக்குக் கொடுத்து வந்தார். நாளடைவில் சுந்தரரது அன்புக்குப் பாத்திரமானார் சோமாசிமாற நாயனார்.

ஒரு நாள், சுந்தரரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார் மாற நாயனார். 'நிச்சயம் உமது விருப்பம் நிறைவேறும்!' என்று அருளிய சுந்தரர் அதுகுறித்து இறைவனிடம் விண்ணப்பித்தார்.

சுந்தரரது கோரிக்கையை இறைவன் மறுப்பாரா?! அவரது விண்ணப்பத்தை ஏற்று மாற நாயனாரது விருப்பத்தை நிறைவேற்றுவதாக அருளினார். கூடவே ஒரு நிபந்தனையும் விதித்தார் இறைவன். 'வேள்வியில் எனது பாகத்தைப் பெற எந்த ரூபத்திலும் வருவேன்' என்றார் ஸ்ரீதியாகேச பெருமான்.

ஒரு சுபமுகூர்த்த திருநாள்... வேத விற்பன்னர்கள் சூழ வேள்வி நடத்திக் கொண்டிருந்தார் சோமாசிமாற நாயனார். 'வேள்வியில் இறைவனும் கலந்து கொள்ளப் போகிறார்!' என்ற செய்தி அறிந்து, பொதுமக்களும் அங்கு திரளாகக் கூடியிருந்தனர். இறைவன் என்று வருவார்... எப்போது வருவார் என்று அறிந்து கொள்ள அனைவரும் ஆவலாக இருந்தனர்.

அப்போது, நான்கு நாய்களைக் கையில் பிடித்தபடி புலையன் ஒருவன் வேள்விச் சாலைக்குள் நுழைந்தான். மகன்கள் இருவர் மற்றும் 'கள்' குடத்தை சுமந்து வரும் மனைவி சகிதம் உள்ளே நுழைந்த புலையனைக் கண்ட வேதியர்கள் சிதறி ஓடினர்.

'யாகம் தடைபடுமோ' என்று கலங்கிய சோமாசிமாற நாயனார், விக்னங்கள் அகற்றும் விநாயகரை கண் மூடி பிரார்த்திக்க... வந்திருப்பது இறைவனே என்பதை அவருக்குக் குறிப்பால் உணர்த்தினார் விநாயகர். இதனால் பெரிதும் மகிழ்ந்த சோமாசிமாற நாயனார், புலையனை வணங்கி வரவேற்றதுடன், அவிர்பாகத்தையும் அவனுக்கு அளித்தார்.

மறு கணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது. புலையன் பிடித்திருந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்களாக மாற... சிவனாரும் பார்வதிதேவியும் இடப வாகனத்தில் அமர்ந்தபடி சோமாசிமாற நாயனாருக்குக் காட்சி தந்தனர். இந்தச் சம்பவம் திருவாரூருக்கு அருகில் உள்ள திருமாகாளம் என்ற தலத்தில் நிகழ்ந்தது என்பர்.

திருமாகாளம், அம்பர் ஆகிய தலங்களுக்கு நடுவே... சோமாசிமாற நாயனார் யாகம் நடத்திய யாகசாலையும், அவருக்கு, 'வந்திருப்பது இறைவனே' என்பதை உணர்த்தி அருளிய விநாயகர் குடிகொண்டிருக்கும் கோயிலும் உள்ளன.

திருமாகாளம் தலத்தில், சோமாசிமாற நாயனாரது திருநட்சத்திரமான வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திர திருநாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று... தூதுவளைக் கீரை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி, புலையன் கோலத்தில் வேள்விச் சாலைக்கு வரும் தியாகேச பெருமான் அவிர் பாகம் பெறுதல் ஆகிய வைபவங்கள் நடைபெறும். அன்று இரவு, சோமாசி மாற நாயனார் தன் மனைவியுடன் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருள வீதியுலா நடைபெறும்.

மறு நாள் மக நட்சத்திரத்தன்று வேள்விச் சாலையில் இருந்து சிதறி ஓடிய வேத விற்பன்னர்களுக்கு இறைவன் காட்சி தரும் வைபவமும், அம்பன் அம்பாசுரன் ஆகியோரை வதைத்த பாவம் தீர... காளிதேவி, சிவனாரை வழிபடும் வைபவமும் நடைபெறும். இத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

இந்த விழாவின்போது திருவாரூர் தியாகேசர் இங்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.

Comments