பாகவதம் என்பது தனிப் புத்தகமல்ல.

ஸ்ரீமத் பாகவதமே கிருஷ்ண சொரூபமாகும். பாகவதம் என்பது தனிப் புத்தகமல்ல. மனித முயற்சியால் இயற்றப்பட்ட நூலும் அல்ல. பரிகாரங்களுக்காக உருவாக்கப்பட்ட இயற்றப்பட்ட ஸ்லோகங்களோ, துதிப்பாடல்களோ கொண்டதல்ல. பிரம்மம் எனும் மகாசக்தி, சப்தங்களாகவும் அட்சரங்கள் எனும் எழுத்துக்களாகவும் பாகவதத்தில் பரவியிருக்கின்றன.
கோயில்களில் அர்ச்சாவதார ரூபியாக சிலை வடிவங்களில் பகவான் அருளாட்சி செய்கிறான். ஆனால், பாகவதம் எனும் புராண வடிவமாகவே கிருஷ்ணர் அருள்புரிகிறார். அதனால்தான் பாகவதமாகிய கிருஷ்ணாவதாரம் என்று ஞானிகள் உரைக்கின்றனர்.
ஸ்ரீமத் பாகவதத்திலுள்ள ஒவ்வொரு காண்டமும் பகவானின் அவயவமாகவே விளங்குகிறது. முதல் மூன்று காண்டங்கள் பாகவதத்தின் பிரதானமும் ஆதாரமாகவும் இருப்பதால் அது பகவானின் திருவடியாகும். சிருஷ்டி முதலிய
காண்டங்கள் பாகவதத்தின் இடைப்பகுதியாகும். அதற்கும் அடுத்துள்ள ராஜ வம்சக் கதைகள் பாகவதத்தின் புஜப் பகுதி. அஜாமிளனின் கதை, நாமத்தினுடைய மகிமையைச் சொல்வதால் பாகவதத்தில் இருதயமாக அது ஒளிர்கிறது. தசம ஸ்கந்தம் எனும் கிருஷ்ணனுடைய லீலைகள் அனைத்துமே பாகவதத்தின் சிரசாக விளங்குகிறது. இப்படி பாகவத புருஷனை கற்பனை செய்து கொண்டே வந்தோமானால் இனி வரப்போகும் ஏகாதச ஸ்கந்தம் என்கிற பதினோராவது அத்தியாயம், ரத்ன கிரீடமாக பாகவதத்தை தகதகக்க வைக்கிறது. ஏனெனில் அத்தனையும் உபதேச ரத்னங்கள். இதுவரை கேட்ட கதைகள் அனைத்தும் ஞானத்தையும், தர்மங்களையும் நேரடியாக கேட்கக் கூடிய தகுதியை அளித்து விடுகிறது. எனவே, இந்த காண்டம் முழுவதும் கதைகளாக விரியாமல் உபதேசங்களையே கொட்டுகிறது. எனவேதான் ஏகாதச ஸ்கந்தம் என்று ஆரம்பிக்கும்போதே சுகப்பிரம்ம ரிஷி நிலையாமை குறித்துப் பேசுகிறார்.
‘‘பரீட்சித், பகவான் தன் மக்கள் என்றோ, வேறு தேசத்தவன் என்றோ வேற்றுமை பாராட்டுவதில்லை. தர்மத்தை ஸ்தாபனம் செய்வது மட்டுமே பகவானின் பணியாக இருந்தது. அகங்காரம் தலைவிரித்து ஆடுமிடத்தில் அதை வேரோடு அறுத்து எறிவதையே முதல் கடமையாக கொண்டிருந்தார் அவர். அந்த அகங்கார ஆட்டத்தை அதிகம் போட்ட யாதவர்களை இப்போது என்ன செய்வது என்று யோசித்தபடி இருந்தார். இவர்கள் என்னுடைய ஜனங்கள் என்பதாலேயே தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள். இவர்களை கண்டால் எல்லோரும் பயந்தல்லவா ஓடுகிறார்கள்! எதிர்க்க யாருமே இல்லை என்றல்லவா பேயாட்டம் போடுகிறார்கள். கௌரவர்கள் கூட அழிந்து விட்டனர். அசுரர்களையெல்லாமும் சம்ஹாரம் செய்தாகி விட்டது. தேவர்களும் ‘அவர்கள் கிருஷ்ணனுடைய ஜனங்கள்’ என்று சொல்லி, யாதவர்கள் பக்கம் வராமல் பயந்து ஒதுங்குகின்றனர். தன்னுடைய இனமாக இருந்தாலும் சரி, அதர்மம் அழியத்தான் வேண்டும் என்று தீர்மானித்தார். செல்வங்களோடு அதிகாரமும் இருந்தால் கர்வமும் அலட்சியமும் தானாக வந்து விடும். அப்போது பெரியோர், சிறியோர் என்று பாராமல் கேலியும் கிண்டலுமாக திரிவார்கள். அதை அழிக்க வேண்டும் என்றும் பகவான் நினைத்தார். இது மட்டுமல்லாது பகவான் கிருஷ்ணர் தன்னுடைய லீலைகளை முடித்துக் கொண்டு வைகுண்டத்திற்கு ஏக வேண்டும் என்றும் திருவுள்ளம் கொண்டிருந்தார்.
ஒருசமயம் விஸ்வாமித்திரர், துர்வாசர், பிருகு போன்ற மகத்தான மகரிஷிகள் கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்திற்காக பகவானை காண வந்தார்கள். தெருவெல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தன. யாதவர்கள் விதம் விதமாக வேஷங்கள் போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சாம்பன் என்பவன் கர்ப்பவதியாக வேடம் தரித்திருந்தான். மகரிஷிகள் வரும் நேரம் பார்த்து சாம்பனை அழைத்துக் கொண்டு யாதவக் கூட்டமொன்று ரிஷிகளின் முன் நின்றது. சாம்பனின் கைகளில் வளையல்கள் சிணுங்கின. நளினத்தோடு சாம்பன் மகரிஷிகளை பார்த்தான். கூடியிருந்தோர் வணக்கமாக இல்லாது, மகரிஷிகள் என்று கூட பாராது, ‘‘பெரியோர்களே இவளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா அல்லது பெண் குழந்தை பிறக்குமா?’’ என்று கேட்டனர். மகரிஷிகள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம் என்று அலட்சியமாகப் பார்த்தனர். ரிஷிகள் கூர்ந்து நோக்கினர். என்ன சொல்லலாம் என்று யோசிக்கிறார்கள் போலிருக்கிறது என்று யாதவர்கள் நினைத்தனர்.
‘பகவானே... கிருஷ்ணா... ஏன் எங்கள் மூலமாக உன் லீலைகளை நடத்திக் கொள்கிறாய். இதற்காகத்தான் எங்களை இங்கு வரும்படி உந்துதல் கொடுத்தாயா? ரிஷிகளின் சாபத்தினால் யாதவர்கள் அழிந்தார்கள் என்று சொல்லப்படுவதுதான் உன் திருவுள்ளமா? நீ அப்படி நினைப்பதால்தான் இவர்களுக்கு இந்த ஏளன புத்தி வந்திருக்கிறதோ என்னவோ...’ என்று மனதுக்குள் வெதும்பியபடி உற்றுப் பார்த்தனர். சரி, இவர்களுக்கு சாபமிட வேண்டாம். ஆனால், அவன் வயிற்றில் என்ன உள்ளதோ அதை அப்படியே சொல்வோம். கண்டதை கண்டபடி சொல்வதில்
தவறில்லையே என்று மனதைத் தேற்றிக்
கொண்டார்கள்.
‘‘யாதவர்களே... இந்த சாம்பவப் பெண்ணுக்கு ஆண் குழந்தையும் பிறக்காது, பெண் குழந்தையும் பிறக்காது. யாதவ குலத்தையே நாசம் பண்ணும்படியான இரும்பு உலக்கைதான் பிறக்கும்’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள்.
‘ஆஹாஹா...’ என்று யாதவர்கள் கேலியாக சிரித்தார்கள். ‘‘இவன் பெண்ணே அல்ல. இவனுக்கு எப்படி குழந்தை பிறக்கும். அதுவுமல்லாது இரும்பு உலக்கை எப்படி பிறக்கும்!’’ என்ற அவர்கள் சாம்பனின் வேஷத்தை கலைத்து விட்டு, ‘‘ஒன்றுமில்லையே! நீங்கள் ஏமாந்து விட்டீர்கள்..!’’ என்று ரிஷிகளை கேலி செய்தார்கள். பிறகு சாம்பனை அழைத்துச் சென்று, அவனுடைய ஆடைகளை களைந்தபோது, உண்மையாகவே இரும்பு உலக்கை இருந்தது! யாதவர்கள் அரண்டனர். முகம் இருண்டு தரையில் சரிந்தனர். என்ன செய்வதென்று தெரியாது திகைத்தனர். நேராக உக்கிரசேன மகாராஜாவிடம் கொண்டுபோய் உலக்கையைக் காண்பித்தனர். அவரோ, ‘‘இதென்ன பெரிய விஷயம்! இதை தூள்தூளாக்கி பிரபாஸ «க்ஷத்திரத்திலுள்ள கடலில் எறிந்து விடுங்கள்’’ என்று உத்தரவிட்டார்.
யாதவர்கள் உலக்கையை தூள்தூளாக்கினர். இந்த துகள்கள் என்ன செய்யப் போகிறது என்று துச்சமாக கடலில் எறிந்தனர். அந்த துகள்கள் கரையவில்லை. அவை சரியான காலத்திற்காக காத்திருந்தன. பரீட்சித் இங்கு இன்னொரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். பகவான் கிருஷ்ணரே அவர்களுக்கு தலைவராக இருந்தாலும் குரு நிந்தனை, கேலி செய்தல் போன்ற ஒழுங்கீனங்களுக்கு தெய்வத்தால் கூட எந்த நிவர்த்தியும் செய்ய முடியாது என்பதையும் பகவானே உணர்த்துகிறார் பார்’’.
‘‘சரி, அந்த இரும்புத் துகள்கள் என்ன ஆயின?’’ என்று பரீட்சித் கேட்டான்

Comments

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment