பார்வையால் துயர் துடைக்கும் கோபாலன்

துவாரகாதீசனான கிருஷ்ணனின் காலத்திலேயே பகவானை தரிசிக்க முடியாத ஞானிகளும் ரிஷிகளும் உண்டு. ஆனால், கிருஷ்ணனோ பக்தனின் இருதயத்தில் கிஞ்சித்து பக்தி இருந்தாலும் போதும் அந்தக் கணமே காட்சி தருவேன் என உறுதி சொல்லியிருக்கிறான். இந்த சத்திய வாக்கை நிறைவேற்றியதன் பலன்தான் இன்று அவன் அர்ச்சாவதாரமாக விளங்கும் இத்தனை கிருஷ்ணன் கோயில்கள்.

கோபிலர் எனும் மகரிஷிக்கு ராஜகோபாலனாக காட்சி கொடுத்த தலம்தான் ராஜ மன்னார்குடி. அந்த அற்புதத் தலத்தை நாயக்க மன்னர்கள் உருகி உருகி வணங்கினார்கள். சிறு பூஜையிலிருந்து பிரம்மோத்சவம் வரையிலும் எல்லாவற்றையும் தாங்களாகவே ஆசை ஆசையாக நடத்தினார்கள். ராஜகோபால சுவாமியின் திருவடியிலேயே கிடந்தார்கள். தஞ்சையிலிருந்து புறப்படுவார்கள். ராஜகோபாலனின் அர்த்தஜாம பூஜையை அன்று முடித்து, மறுநாள் தஞ்சைக்குத் திரும்புவார்கள்.

அப்படிப்பட்டவர்தான் தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கர். பருவகாலமோ கோடைகாலமோ அதைப்பற்றி எல்லாம் அவருக்கு கவலை இல்லை. நாட்டில் என்ன பிரச்னை இருந்தாலும் சரி, ராஜகோபலன் இருக்கிறான், பார்த்துக் கொள்வான் என்று உறுதியாக நம்புபவர். தஞ்சையில் எந்த விழா நடைபெற்றாலும் சரி, ராஜகோபாலனை தரிசித்து விட்டுத்தான் அடுத்தது என்று மன்னார்குடிக்கு வந்து விடுவார். அவர் ஆழ்வார்கள் மீதும் வைணவ ஆசார்யர்கள் மீதும் அளவு கடந்த ஈடுபாடு ண்டிருந்தார். ‘ஞானிகளெல்லாம் இருதயத்தில்தான் பகவானை தரிசிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால், நான் இதோ அர்ச்சாவதாரம் எனும் விக்கிரக வடிவில் மன்னார்குடி ராஜகோபாலனை தரிசிக்கிறேனே.
இவன்தான் என் கோபாலன். என்னை ஆளும்
ராஜகோபாலன்’ என்று உருகினார். அது அடை மழைக்காலம். மழை விடாது பெய்தது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இன்று மழை நின்று விடும், நாளை நின்று விடும், பிறகு மன்னார்குடிக்கு செல்லலாம் என்று தவித்தபடி இருந்தார் மன்னர். ஒருவார காலம் இப்படியே நகர்ந்தது. பளிச்சென்று நிமிர்ந்தார். மழையென்ன, புயலென்ன, எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்ற மனத்தெம்பு பெற்று தேரில் ஏறினார். ‘புயலைப் பார்த்து வசுதேவர் தயங்கினாரா? கிருஷ்ணனைக் கூடையில் சுமந்து சென்றாரே! மழை, பெருவெள்ளத்துக்கு பயந்து கோபியர்கள்

தவித்தபோது கோவர்த்தன கிரியை தூக்கிப் பிடித்து அவர்களையெல்லாம் காத்தானே... இப்போது என் பொருட்டும் ஏதாவது செய்வான்’ என்று உறுதியோடு புறப்பட்டார். ஆனாலும் மழையும் புயலும் கைகோர்த்து பேயாட்டம் போட்டன. மரங்கள் பெயர்ந்து பாதையில் விழுந்தன. காலையா, மாலையா, இரவா என்று தெரியாதபடி மேகங்கள் சூரியனை காட்டாது மறைத்தன.
விஜயராகவ நாயக்கருக்கு பசித்தது. கையில் கொண்டு வந்ததை உண்டார். உடன் வந்தவர்களும் இனி பயணத்தைத் தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தினர். ‘மாதவனின் நாமத்தை உரைக்கும் இடமே வைகுண்டமாகுமாம்’ என்று விஜயராகவ நாயக்கர் அங்கேயே தங்கினார். கண்ணனை காணாத துக்கத்தோடு இப்போது தூக்கமும் கலந்து கொண்டது. தூக்கத்தை மீறி மனம் கிருஷ்ண தியானத்தில் லயித்தது. மன்னர் தன்னை மறந்த நிலையில் பல மணிநேரம் அப்படியே கிடந்தார். சட்டென்று எங்கிருந்தோ ஒரு குரல் ஒலித்தது. சிப்பந்திகள்தான் எழுப்புகிறார்களோ என்று கண்களை அகல திறந்தார். ஆனால், எல்லோரும் சிறு குடிலுக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

‘விஜயராகவா...’ என்று இம்முறை தெளிவாக கூறியபோது மன்னர் தம்மை மறந்து ‘‘கோபாலா...’’ என்று ஆசையாக அழைத்தார். ‘‘ஏன் இத்தனை சிரமம் உனக்கு? அரண்மனை மாடத்திலிருந்து ஒரு கருடன் நாளை புறப்படும். அது காட்டும் திசையில் பயணித்துச் செல். அது ஒரு வேப்பமரத்தின் மீது அமரும். அங்குதான் நான் அமரவிருக்கிறேன். எனக்காக ஆலயமெழுப்பு. நான் எப்போதும் அருளொளி பரப்புவேன்” என்றார் கிருஷ்ணன். விஜயராகவ நாயக்கர் கண்களில் நீர் கொப்பளித்தது. ‘நான் என்ன ரிஷியா, மகாபக்தனா! உலகிலுள்ள எல்லா சுகங்களையும் அனுபவிக்கும் சாதாரண மானுட அரசன்தானே! இப்படி ஒரு கட்டளை எனக்கு வர நான் என்ன தவம் செய்தேன்!’ என்று நெகிழ்ந்தார். நடந்தவற்றை அரண்மனைக்குச் சென்று உரைத்தார்.
வெகு விரைவாக கோயில் கட்டி முடித்தார்.
ஏராளமான நிலங்களையும் பூஜைக்கு தேவையான பொருட்களையும் நிரந்தரமாக வைத்தார். பெரிய திருவடி எனும் கருடாழ்வார் அரசனுக்கு சுட்டிக்
காட்டிய தலமே நல்லிச்சேரி.
நல்லிச்சேரி சுற்றிலும் வயல்கள் சூழ்ந்த அழகான கிராமம். இந்த ஊரின் அழகைக் கண்டு, ‘இது பிருந்தாவனமோ?’ என்று கோபாலன் அமர்ந்து விட்டானா என எண்ணவும் தோன்றுகிறது. சிறிய கோயிலானாலும் அழகாக இருக்கிறது. பிரசன்ன ராஜகோபால சுவாமி என்று மன்னார்குடியைத்தான் இந்த கோயிலிலுள்ள பெருமாளும் நினைவுபடுத்துகிறார். கோயிலுக்குள் நுழைந்தவுடனே பாகவத பக்தர்களை வாருங்கள் என்று பணிவோடு அழைக்கிறார் சிலை வடிவில் விஜயராகவ நாயக்கர்.அருகேயே இரு பக்கமும் செங்கமலத் தாயாரும் நின்ற கோலத்தில் ஜெகத்ரட்சகப் பெருமாளும் அருள்
பாலிக்கின்றனர். உள்ளே சென்று ஸ்ரீதேவி&பூதேவி சமேதராக சூரிய சக்ரத்தாழ்வாரின் அபூர்வ தரிசனம்! நோயா, கடனா, மன உளைச்சலா, இவருக்கு அருகில் நின்று அவர் பார்வை கடாட்சம் பெற்றாலே போதும் எல்லாம் தானாக ஓடிவிடும். எதிரில், சுடர்கொடியாள் ஆண்டாள் அருள்கிறாள்.

இன்னும் உள்ளே அர்த்த மண்டபத்தை நோக்கிச் செல்ல, ருக்மிணி&சத்யபாமா சமேத ராஜகோபாலனாக பெருமாள் சேவை சாதிக்கிறார். துவாரகை அரசவையில் எப்படி கம்பீரத்தோடு இருப்பானோ அதே நின்ற கோலம். எப்போதோ கோபிலர் மகரிஷிக்காக மன்னார்குடியில் காட்சி தந்த இந்த கிருஷ்ணன், இப்போதும் அதே காட்சி தரமுடியும் என்பதை இந்த ஆலயம் நிரூபிக்கிறது. அது புராண காலம்; ஆனால், விஜயராகவ நாயக்கரின் காலம் ஐநூறு வருடங்களுக்கு உட்பட்டது. ‘இங்குதான் கண்ணன் அசரீரியாக நாயக்க மன்னருடன் பேசினாரா!’ என்று கருவறையையே உற்றுப் பார்ப்போம்.

‘நீ சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறேன், என்ன வேண்டும்?’ என்று பதிலுக்கு கிருஷ்ணன் கேட்பதும் புரியும். துளசியின் வாசம் கமழ்ந்தபடி இருக்கிறது. கிருஷ்ணனின் காலத்திற்கு மனம் பறக்கிறது.
‘கோவிந்தஜீ... கோவிந்தஜீ...’ என்று துதித்து
மகிழும் பிருந்தாவனவாசியாக மனம் மாறுகிறது.
கோயிலின் விமானத்தில் புராண விஷயங்களை சிற்பங்களாக செதுக்கியிருக்கிறார்கள். அவற்றை ரசித்துக் கொண்டே வலம் வரலாம். இந்த கிராமத்தின் அமைதி நமக்குள் தனிமையை கொடுக்கும். கோபாலனின் சந்நதிக்கு அருகேயே எங்கேனும் அமர்ந்து கொண்டு அவனின் நாமங்களை சொல்லிக் கொண்டே இருக்கலாம். நாம சங்கீர்த்தனமும் செய்யலாம். அப்படி பஜிப்போரின் உள்ளத்தில் அந்த கோபாலன் ராஜாவாக சிம்மாசனமிட்டு அமர்ந்து விடுகிறான். கோயில் குறித்த இதர தகவல்கள் அறிய 9941128535 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நல்லிச்சேரி எனும் இத்தலம் தஞ்சாவூர் &
கும்பகோணம் பாதையில் அய்யம்பேட்டையில் இறங்கி 3 கி.மீ. செல்ல வேண்டும். ஆட்டோ வசதி உண்டு.

Comments