பஞ்சவடீஸ்வரர்





ஆனந்ததாண்டவபுரம்...

- ஊரின் பெயரில் இருந்தே, அந்தப் பெயர் வந்ததற்கான காரணத்தை ஓரளவு ஊகிக்க முடிகிறது அல்லவா? ஆம்! இறைவன், ஆனந்தமயமாகத் தாண்டவம் புரிந்த இடம்தான் இது. தற்போது ஊர்ப் பெயர் சுருங்கி, 'ஆனதாண்டபுரம்' என்று அழைக்கப் படுகிறது.


ஒரு காலத்தில் ஆனந்த முனிவர் என்பவர் இந்தத் தலத்தில் வாழ்ந்தார். எந்நேரமும் சிவ வழிபாட்டில் திளைத்திருப்பார். யோக சக்தியால் சாதனைகள் புரிந்தவர். நினைத்த நேரத்தில்- நினைத்த தலத்துக்குச் சென்று சிவ தரிசனம் செய்யும் பேறு பெற்றிருந்தார். தினமும் காலையில் ஆகாய மார்க்கமாகப் புறப்பட்டுப் போய், ராமேஸ்வரம் கடல் தீர்த்தத்தில் நீராடு வார். பிறகு, ஆகாயம் வழியாகவே பயணித்து, சிதம்பரம் சென்று நடராஜரைத் தரிசித்து விட்டு, மகேந்திரமலைக்குச் சென்று சிவ தியா னத்தில் மூழ்குவார். இரவு, தன் ஊருக்கு (ஆனந்ததாண்டவபுரம்) திரும்பி விடுவார். இதுதான் இவரது அன்றாட நடைமுறை. நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

பக்தர்களைச் சோதிப்பதுதானே அந்த ஜோதி சொரூபனின் வழக்கம்! ஆனந்த முனி வரையும் சோதிக்க விரும்பினார். அதுவும், தனக்கு உகந்த மார்கழி மாத திருவாதிரைத் திருநாளில் தன் சோதனையைத் துவங்கினார் ஈசன்.



பூலோகத்தில் உள்ள சிவாலயங்கள் அனைத்துமே அன்று கோலாகலமாக இருந்தன. ஆனந்த முனிவரது மனம் இன்பத்தில் திளைத் திருந்தது. பின்னே..! இன்னும் சற்று நேரத்தில், தன் அபிமான நாயகனாம் சிதம்பரம் நடராஜ பெருமானைத் தரிசிக்கச் செல்ல இருக்கிறாரே! ராமேஸ்வரம் தீர்த்தத்தில் காலையில் நீராடி, ராமநாதரைத் தரிசித்து விட்டு, சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்க வேண்டும். இருந்த இடத்தில் இருந்து ஆகாய மார்க்கமாக செல்ல எண்ணி, தன் யோக சக்தியைப் பயன்படுத்த முற்பட்டார்.

ஆனால், ஈசனின் திரு விளையாடலுக்கு இயைந்து, இயற்கை அந்த நேரம் பார்த்து சதி செய்தது. வானமே பொத்துக்கொண்டது போல் கொட்டோ கொட்டென்று கொட்டியது மழை.

தன் ஊரான ஆனந்த தாண்டவபுரத்தில் இருந்து ஆனந்த முனிவரால் எங்கும் நகர இயலவில்லை. இறைவனின் திருவிளையாடலால் யோக சக்தியை செயல்படுத்த முடியவில்லை. நேரம் ஓடிக் கொண்டிருந்தது. அர்த்தஜாம (இரவு வேளை பூஜை) நேரம் நெருங்கியும் மழை விடவில்லை. இயற்கையின் சதியைக் கண்டு, ஆத்திரம் வேறு அவரைப் பிடுங்கித் தின்றது. 'இன்று சிதம்பர நாயகனைத் தரிசனம் செய்ய முடியவில்லையே' என்று ஏங்கினார்; தவித்தார். 'ஈசனைத் தரிசிக்கும் பாக்கியம் இல்லாத நான், இனி எதற்கு உயிர் வாழ வேண்டும்!' என்று தீர்மானித்துத் தன் உயிரையே துறக்க முடிவெடுத்தார். அதற்கான முயற்சியில் இறங்கும்போது, 'போதும் சோதனை' என்பது போல், ஆடல் வல்லான் அவருக்குக் காட்சி கொடுத்தான். அன்னை சிவகாமி அருகே வீற்றிருக்க... ஆனந்த விமானத்தில் எழுந்தருளினார் சிவபெருமான். ஆனந்த தாண்டவம் எனும் திருநடனத்தை அவருக்கு ஆடிக் காண்பித்து தரிசனம் தந்தார். இதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தார் ஆனந்த முனிவர்.



விசேஷமாக அவர் நடனம் ஆடிக் காண்பித்த அந்தத் திருத்தலம்தான் 'ஆனந்ததாண்டவபுரம்' என வழங்கப்படலாயிற்று. இதுதான் ஊரின் பெயருக்குக் காரணம். திருமுக மண்டலத் துக்கு நேராகத் தன் இடது திருவடியைச் சாய்வு இல்லாமல்- திருமேனியில் சரிபாதியாக மையத் தில் தூக்கி நிறுத்தி, ஆடி அருளிய ஆனந்ததாண்டவ மூர்த்தியின் விக்கிரகம் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. மூக்கு நுனியின் நடுப் பகுதியில் இருந்து நூல் பிடித்துப் பார்த்தால், வலது மற்றும் இடது திருவடிகளும் அபய கரமும் வரத கரமும் ஒரே நேர்க் கோட்டில் அடங்குவதாக இந்த விக்கி ரகம் அமைந்துள்ளது.

ஆனந்ததாண்டவபுரம் எங்கே இருக்கிறது?

காவிரியின் வடகரையில், மயிலாடுதுறைக்கு வடக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆனந்ததாண்டவபுரம். வைப்புத் தலம். கயிலை நாதன் இந்தத் தலத்திலும் எழுந்தருளி உள்ளான் என்பதற்காக 'கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும் கயிலாய நாதனையே காணலாமே' என்று திருநாவுக்கரசு ஸ்வாமிகள் குறித்துள்ளார். அவர் இதில் 'கஞ்சாறு' என்று குறிப்பிடுவது, ஆனந்த தாண்டவபுரத்தைதான் என்கிறார்கள்.

மயிலாடுதுறைக்கு வடக்கிலும், நீடூருக்குக் கிழக்கிலும், திருப்புன்கூருக்குத் தெற்கிலும், வைத்தீஸ் வரன்கோவிலுக்குத் தென்மேற்கிலும் அமைந்துள்ளது ஆனந்ததாண்டவபுரம். மயிலாடுதுறை ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து ஆனந்ததாண்டவபுரத்துக்கு டவுன் பஸ் வசதி உண்டு. இங்கு எழுந்தருளி உள்ள ஈசனின் பெயர் பஞ்சவடீஸ்வரர். அன்னை இரண்டு சந்நிதிகளில் எழுந்தருளி உள்ளாள். உலகம் காக்கும் அருள் நாயகியின் திருநாமங்கள்: கல்யாணசுந்தரி, பெரியநாயகியம்மை.



இறைவனின் திருநாமம், பஞ்சவடீஸ்வரர் என்று அழைக்கப்படுவதற்குப் புராணக் கதையைக் காரணம் காட்டுகிறது தல புராணம். பஞ்சவடி என்பதற்கு முடிக்கற்றையால் ஆன பூணூல் வடம் என்பது பொருளாகும். அந்தக் காலத்தில் முடிக்கற்றையால் ஆன பூணூலை அணிவது சைவர்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும். இந்த பஞ்சவடீஸ்வர பெருமானின் கதையை அறிவ தற்கு, 'பெரிய புராண'த்தில் இடம் பெற்றுள்ள மானக்கஞ்சாற நாயனாரின் வரலாறை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 37 பாடல்களில் இவரது வரலாறை அழகாகப் புனைந்துள்ளார் சேக்கிழார்.

கரும்புத் தோட்டங்கள் நிறைந்த ஊர் அது. இதனாலேயே அந்த ஊர், 'கருப்பஞ்சாறூர்' எனும் பொருளில், 'கஞ்சாறு' என அழைக்கப்பட்டதாம் (தேனும் கனிச் சாறும் ஆகிய வாய்க்கால், கரும்புச் சாறான ஆற்றில் கலக்கும் ஊர் கஞ்சாறு என்று பெரிய புராணம் கூறுகிறது). பெரிய புராணத்தில் 'கஞ்சாறு' என்று குறிப்பிடப்பட்டிருப்பது, ஆன தாண்டவபுரத்தைத்தான் என்கிறது தல புராணம்.

கஞ்சாறில் வசித்து வந்தவர் மானக்கஞ்சாறர் எனும் வேளாளர் குடியினர். அந்தப் பகுதியை ஆண்ட மன்னரின் படைத் தளபதியாக விளங்கினார் இவர். சிறந்த சிவபக்தர். தனது சொத்துகள் முழுவதையும் சிவனடியார்களின் நலனுக்காக செலவிட்டு வந்த பெரும் வள்ளல். இவருக்கு ஒரு திருமகள். பெயர்- புண்ணியவர்த்தனி. திருமண பருவத்தை மகள் எய்ததும், உரிய வரனைத் தேடினார் மானக்கஞ்சாறர். தன் குலத்தைச் சேர்ந்தவரும், சிவ பக்தருமான ஏயர்கோன் கலிக்காமர் என்பவரைத் தேர்ந்தெடுத்தார். இரு வீட்டாரின் இசைவுடன், இல்லறத்தில் இணை யும் இனிய நாள் குறிக்கப்பட்டது.



திருமண நாளன்று கஞ்சாறு கிராமம் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஊரார் அனைவரும் மானக்கஞ்சாறர் இல்லத்தில் குழுமி இருந்தனர். மாப்பிள்ளை ஏயர்கோன் கலிக்காமரும் அவரது குடும்பத்தினரும் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்கள். பெண்ணைப் பெற்ற தந்தையான மானக்கஞ்சாறர் உள்ளுக்கும் வாசலுக்குமாய் நடந்து கொண்டிருந்தார். அவரைச் சோதிக்க எண் ணிய ஈசன், மாமுனி ரூபத்தில் அங்கே உதித்தார்.

வாசலில் தேஜஸ் ததும்பும் நிலையில் ஒரு முனிவர் நிற்பதைக் கண்ட கஞ்சாறர், மனம் குதூகலித்தார். அவர் அருகே சென்று திருப்பாதம் தொழுதார். கஞ்சாறரை ஆசிர்வதித்த முனிவர், ''மகனே... இந்த இல்லத்தில் இன்று என்ன விசேஷம்?'' என்று ஒன்றும் அறியாதவர் போல் கேட்டார்.

''ஐயன்மீர்... இன்னும் சற்று நேரத்தில் எனது மகளுக்குத் திருமண வைபவம் நடக்க உள்ளது. மாப்பிள்ளை வீட்டார் இங்கு வந்து சேர வேண்டியது தான் மிச்சம்... தாங்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதிக்க வேண்டும்'' என்று நடக்கப் போவது தெரியாமல் முனிவரை உள்ளே அழைத்துச் சென் றார் மானக்கஞ்சாறர்.



உள்ளே வந்ததும் தன் மகளை அழைத்தார் மானக்கஞ்சாறர்: ''குழந்தாய்... பழுத்த தவ சீலரான இந்த மாமுனிவரை வணங்கி ஆசி பெற்றுக் கொள்!'' என்றார். மணக் கோலத் தில் இருந்த புண்ணியவர்த்தனியும், அன்ன நடை நடந்து வந்து, தனது கருத்த கூந்தல் தரையில் தவழ... முனிவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினாள். பூக்களின் வாசம் மணக்க... உருண்டு திரண்ட கருங்கூந்தலைப் பார்த்த முனிவர், வியந்தார். பிறகு, ''இவளது நீண்ட கருங்கூந்தல் நமது பஞ்சவடிக்கு ஆகும்'' என்றார்.

அவ்வளவுதான். 'பஞ்சவடிக்கு ஆகும்' (பஞ்சவடி என்றால், முடிக்கற்றையால் ஆன பூணூல் வடம் என்று ஏற்கெனவே சொல்லி இருந்தோம்) என்ற முனிவரது வார்த்தைகளைக் கேட்ட மறு விநாடி, தனது உடைவாளை எடுத்தார் மானக்கஞ்சாறர். 'திருமணம் நிகழ இருக்கும் தருணத்தில் மணப்பெண்ணின் தலைமுடியைக் கேட்ட முனிவரை வெட்டிக் கொல்வதற்காகத்தான் மானக்கஞ்சாறர் உடைவாளை எடுத்தார்' என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. சிவனடியார் விரும்பிக் கேட்ட பொருளை, சற்றும் தாமதிக்காமல் அடுத்த கணமே அவருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் மகளின் கூந்தலை நறுக்குவதற்காக உடைவாளை எடுத்தார்.



ஆனால், முனிவராக வந்த பரமனார் அப்போது என்ன சொன்னார் தெரியுமா? ''அன்பரே! பொறு... பொறு... நீ மட்டும் இந்தச் செயலைச் செய்தால் போதாது. உன் மனைவி அந்தக் கூந்தலைப் பிடித் துக் கொள்ள வேண்டும். தந்தையாகிய நீ அதை வாளால் நறுக்க வேண்டும். அந்த நேரத்தில் உன் மகளின் கண்களில் இருந்து சொட்டுக் கண்ணீர் கூட வரக் கூடாது. எவருமே வருத்தப்படக் கூடாது'' என்றார் நிதானமாக.

அப்படியே நிகழ்ந்தது. பெண்ணின் தலை முடியைத் தன் கைகளில் வாங்கிக் கொண்டு மகிழ்ந்த அந்த முனிவர் பெருமிதப்பட்டார். மானக்கஞ்சாறர் குடும்பத்தினரின் சிவபக்தி கண்டு வியந்தார். அடுத்து, முனிவர் அங்கே மறைந்தார். அவர் நின்றிருந்த இடத்தில் ரிஷபத்தின் மேல் தன் தேவியருடன் காட்சி அளித்தார் பரமனார்.

மானக்கஞ்சாறர் குடும்பமும் ஊராரும் சேர்ந்து சிவனாரின் கால்களில் வீழ்ந்து வணங்கினர். ஆசிர்வதித்த ஈசன், அங்கிருந்து மறைந்தார். இதை அடுத்து வந்து சேர்ந்தனர் மணமகன் குடும்பத்தினர். மாப்பிள்ளையான ஏயர்கோன் கலிக்காமர், நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்து மனம் வருந்தினார். ஏன் தெரியுமா? தன் மனைவியின் கூந்தல் அறுபட்டதற்காகவா? இல்லை. புண்ணியவர்த்தனி மனைவி ஆன பின் அவளது கூந்தலை அரிந்து கொடுக்கும் பாக்கியம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று வருந் தினார். அதன் பின் இறைவன் அருளால், புண்ணியவர்த்தனி கூந்தல் திரும்பப் பெற்று, திருமணம் வெகு சிறப்பாக நடந்தது.



'ஜடாநாதர்' என்ற பெயருடன் கூடிய ஓர் அழகான பஞ்சலோக விக் கிரகம் ஆலயத்தில் இருக்கிறது. ஐந்தாக முடிந்து வைக்கப்பட்ட ஜடாமுடி தலையில் துலங்க, இவர் காணப்படுகிறார். இறைவன், சிவனடியாராக வந்த நிகழ்வை விளக்கும் விதமாக இந்த விக்கிரகம் காட்சி தருகிறது.

பழம் பெருமை வாய்ந்த இந்த ஆல யத்தை தரிசிப்போமா?

ஆலயத்துக்கு முன் அழகான திருக் குளம். சிவகங்கை தீர்த்தம் என்றும் பிந்து (அமிர்தத் துளி) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் சிறப்பைப் பற்றி தல மான்மியம் சொல்கிறது. சிறையில் அடிமைப்பட்டிருந்த தன் தாயை விடுவிக்க, கருட பகவான் அமிர்த கலசத்தை ஏந்திக் கொண்டு வான் வெளியில் பறந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, இந்தத் தலத்தில் உள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் அமிர்த கலசத் தில் இருந்து ஒரு துளி விழுந்ததாம்.

இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்குப் புத்திரப் பேறு வாய்க்குமாம். வாரிசு இல்லாத ஹேமகாந்தன் எனும் மன்னன், தைப்பூச உற்சவ காலத்தில் சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கி, பஞ்சவடீஸ்வரரை வழிபட்டு நல்ல மகனை அடைந்தான். புனிதமான தீர்த்தத்தை வழிபட்டு உள்ளே செல்கிறோம்.

மூன்று நிலை ராஜகோபுரம். கிழக்கு நோக்கியது. பலிபீடம், கொடிமரம், நந்திதேவர் தாண்டி உள்ளே செல்கிறோம். மிகப் பெரிய மண்டபம். நமக்கு நேராக மூலவர் பஞ்சவடீஸ்வரர் சந்நிதி. தவிர நடராஜர் மண்டபம், உற்சவர் மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன. ஜடாநாதர், மானக்கஞ்சாறர், அவரது மகள் புண்ணியவர்த்தனி, மாப்பிள்ளை ஏயர்கோன் கலிக்காமர் ஆகியோரது செப்புத் திருமேனிகள் உள்ளன. தைப்பூச உற்சவத்தின்போது 6-ஆம் நாள் புண்ணியவர்த்தனி திருக்கல்யாண உற்சவமும், 7-ஆம் திருநாளன்று பஞ்சவடீஸ்வரர் திருக்கல்யாண உற்சவமும் கோலாகலமாக நடை பெறும். தவிர புண்ணியவர்த்தனி, மானக்கஞ்சாறர், ஆனந்த முனிவர், பரத்வாஜர் ஆகியோரது சிலா விக்கிரகங்களும் தரிசனம் தருகின்றன.



பரத்வாஜருக்கு இங்கே ஒரு சிறப்பு உண்டு. இந்தத் தலத்தில் பாரிஜாத (பவளமல்லி) மரத்தின் கீழே அமர்ந்து தவம் புரிந்தார் பரத்வாஜ மகரிஷி (தல விருட்ச மும் இந்த மரம்தான்). இவரது வேண்டுகோளுக்கு இணங்க, இறைவன் இரு தேவியருடன் காட்சி தந்தார். அதாவது கல்யாண சுந்தரி என்கிற திருநாமத்துடன் இளமையாகவும், திருமணமாகி வயது கூடிய நிலையில் பெரிய நாயகியாகவும் இவருக்கு, இறைவனாருடன் காட்சி தந்தார் அம்பாள். எனவே, இந்த ஆலயத்தில் இரு தேவியர்களும் இருப்பது சிறப்பு. கிழக்கு நோக்கியவாறு கல்யாண சுந்தரியும், தெற்கு நோக்கியவாறு பெரியநாயகியும் தனித் தனி சந்நிதிகளில் குடி கொண்டுள்ளனர்.

ஆலயத்துக்குள் நுழைந்தவுடன் தரிசனம் தருகிறாள் பெரியநாயகி அம்பாள். குடும்பத்தில் எந்த ஒரு பிரச்னை இருந்தாலும் இவளிடம் வேண்டிக் கொண்டால், எல்லாம் சரியாகிவிடும் என்கிறார் அர்ச்சகர். பிராகாரத்தில் சந்நிதி கொண்டிருக்கும் கல்யாணசுந்தரியும் வரம் அருள்வதில் வள்ளல். கல்யாண வரம் வேண்டி இங்கே வந்து தன்னைப் பிரார்த்திப்பவர்களுக்கு அதை நிறைவேற்றி வைக்கிறாள் கல்யாணசுந்தரி. பௌர்ணமியன்று மாலை வேளைகளில் இந்த அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

பிராகார வலம் வருவோம். இதில் தட்சிணாமூர்த்தி, சுயம்பு விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் சுப்ரமண்யர், மகாலிங்கம், பைரவர், கஜலட்சுமி, கல்யாணசுந்தரி (தனி அம்பாள்), துர்கை, சண்டிகேஸ்வரர், அனுமன், நவக் கிரகங்கள், கால பைரவர், சனி பகவான் முதலான பல விக்கிரகங்கள் அருள் பாலிக்கின்றன

சுயம்பு விநாயகர், விசேஷ சக்தி கொண்டவர். இவரது திருமேனி மிகவும் அரித்தது போல் காணப்படுவதால், இந்த விக்கிரகத்துக்கு கவசம் ஒன்று செய்ய ஸ்தபதியிடம் ஆர்டர் கொடுத்திருக்கிறார் ஆலய அர்ச்சகர். ஆனால், காலம் கடந்தும் கூட கவசம் வரவில்லை.

இதே போல் பிறிதொரு சந்தர்ப்பத்தில், கவசம் செய்ய வேறொருவரிடம் ஆர்டர் கொடுத்திருக்கிறார். அதுவும் கைகூடவில்லை. இது குறித்து, ஆலய அர்ச்சகர் ஜகதீச சிவாச்சார்யர் நம்மிடம் சொல்லும்போது, ''இவரது திருமேனிக்குக் கவசம் கூடாது என்பது அவரது உத்தரவு போலிருக்கிறது. அதனால், சுயம்பு விநாயக ருக்குக் கவசம் செய்யும் முயற்சியை அதோடு விட்டு விட்டோம். இவர், மிகுந்த வரப்ரசாதி. கேட்டதைக் கொடுப்பார்.'' என்றார். அதுபோல் இங்கு இருக்கும் துர்கை, மிகுந்த சிறப்பு வாய்ந்தவள். பல குடும்பங்களுக்கு இவள் குலதெய்வமாகத் திகழ்கிறாள். சற்றே பெரிய விக்கிரகம். இந்த அன்னைக்கு அபிஷேகம் செய்து, புடவை வாங்கி அணிவித்தால் சகல குறை களும் அகன்று விடுமாம்.

பழைமையின் சுவடாக விளங்கும் இந்த ஆலயத்துக்கு, தற்போது ஜகதீச சிவாச் சார்யர் என்பவர் பரம்பரை தர்மகர்த்தா மற்றும் அர்ச்சகராக இருந்து வருகிறார். இந்த ஆலயத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவம், தைப்பூச உற்சவம் ஆகியவற்றை அந்த நாட்களில் மகாராஜாக்களே வந்து கொண்டாடி இருக்கிறார்களாம். இங்கு துலாபாரம் நேர்ந்து கொள்ளலாம். பிரார்த் தனையின் தன்மைக்கு ஏற்ற மாதிரி எள்ளு, கடலை, எண்ணெய் ஆகியவற்றை தங்கள் எடைக்கு நிகராகத் தருகிறார்கள்.

இந்த பஞ்சவடீஸ்வரர் ஆலயத்துக்கு 1996-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தற்போது, அடுத்த கும்பாபி ஷேகம் செய்வதற்காகத் திருப்பணி வேலை களை வருகிற ஜூலை 6-ஆம் தேதி அன்று துவங்க இருக்கிறார்கள். புராணப் பெருமை வாய்ந்த இந்தத் திருத்தலம் விரைவில், பொலிவு பெற பிரார்த்திப்போம்!

தகவல் பலகை

தலம் : ஆனந்ததாண்டவபுரம் என்கிற ஆனதாண்டபுரம்

மூலவர் : பஞ்சவடீஸ்வரர்- பெரியநாயகி- கல்யாண சுந்தரி.

எங்கே இருக்கிறது?:

மயிலாடுதுறைக்கு வடக்கிலும், நீடூருக்குக் கிழக்கிலும், திருப்புன்கூருக்குத் தெற்கிலும், வைத்தீஸ்வரன் கோவிலுக்குத் தென்மேற்கிலும் அமைந்துள்ளது ஆனந்ததாண்டவபுரம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவு.

எப்படிப் போவது?:

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்தும், பேருந்து நிலையத்தில் இருந்தும் ஆனந்ததாண்டவபுரத்துக்கு டவுன் பஸ் வசதி உண்டு.

தொடர்புக்கு:

வை. ஜகதீச சிவாச்சார்யர்
தண்டபாணி சிவாச்சார்யர்
பரம்பரை தர்மகர்த்தா, அர்ச்சகர்,
பஞ்சவடீஸ்வர ஸ்வாமி கோயில்,
ஆனந்ததாண்டவபுரம் 609 103.
மயிலாடுதுறை தாலுகா, நாகை மாவட்டம்
போன்: 04364- 242127
மொபைல்: 94860 32325

Comments