அபிஷேகம் இல்லாத ஈஸ்வரன்!








வைகுண்டநாதனாம் திருமாலை அலங்காரப் பிரியன் என்றும், தென்னாடுடைய சிவனாரை அபிஷேகப் பிரியன் என்றும் சிலாகிப்பார்கள் பெரியோர்கள். ஆமாம்... சிவபெருமானுக்கு விதவிதமாய் அபிஷேகம் செய்து வழிபட, விரும்பிய வரம் கிடைக்கும்.

ஈஸ்வரன் சுயம்புவாய் எழுந்தருளியிருக்கும் சில கோயில்களில், மூலிகையும் தைலமும் கொண்டு தைலாபிஷேகம் செய்வதும் உண்டு. ஆனால், கோவை மாவட்டத்தில் உள்ள கோவில் பாளையம் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு காலகாலேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இதற்கு, சுவாரஸ்யமான காரணக் கதை ஒன்றையும் சொல்கிறார்கள்.



சிவ பக்தனாம் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்ந்துவரச் சென்ற எமதர்மன், சிறுவன் மீது பாசக்கயிற்றை வீசினான். அது, மார்க்கண்டேயன் கட்டித் தழுவிக்கொண்டிருந்த சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால் சிவநிந்தை செய்த பாவத்துக்கும் தண்டனைக்கும் ஆளானான் காலன். அத்துடன் பணியைச் சரியாகச் செய்யாத காரணத்தால், சிவ சாபத்துக்கும் ஆளாகி, பதவியிழந்து, பூமியில் பிறப்பெடுக்கும் நிலையும் ஏற்பட்டது. விமோசனம் வேண்டி பல்வேறு தலங்களுக்குச் சென்று வழிபட்ட எமதர்மன், இந்தத் தலத்துக்கும் வந்தான்; சிவவழிபாடு செய்ய விரும்பினான். ஆனால், லிங்க வடிவம் எதுவும் கிடைக்கவில்லையாம். ஆகவே, மணலால் லிங்கம் செய்ய நினைத்து, ஒரு குச்சியால் தரையைத் தோண்டினான். அப்போது, நுரை பொங்கியது. மணலையும், நுரையையும் சேர்த்து சிவலிங்கமாக பிரதிஷ்டை செய்து வழிபட்டானாம். இதனால் மகிழ்ந்த சிவப் பரம்பொருள் அவனுக்குக் காட்சி தந்து, எமலோக தலைமைப் பதவியை மீண்டும் அருளினாராம். காலனுக்கு காலம் (வாழ்க்கை, பதவி) கொடுத்தவர் ஆதலால், ஸ்ரீகாலகாலேஸ்வரர் என்று திருநாமம் கொண்டார் இந்தத் தலத்தின் நாயகன். இவர் மணல் லிங்கமாக இருப்பதால்தான், அபிஷேகம் செய்யப்படுவதில்லை!
காஞ்சிபுரத்தில் அருளும் ஸ்ரீஏகாம்பரநாதருக்கும் அபிஷேகம் கிடையாது. பஞ்சபூதத் தலங்களில் காஞ்சி, பிருத்வி தலம். இங்குள்ள சிவலிங்கம், பார்வதிதேவியால் மணலால் செய்து வணங்கப்பட்டது. லிங்க மூர்த்தத்துக்கு வெள்ளிக் கவசம் சார்த்தி பூஜிக்கப்படுகிறது; அபிஷேகம் என்பது ஆவுடையாருக்கு மட்டுமே!

Comments