'ஆலயம் தொழுவது சாலவும் நன்று!’









'ஆலயம் தொழுவது சாலவும் நன்று!’ என்றனர் முன்னோர்கள். ஓங்கி உயர்ந்து நிற்கிற கோபுரங்களைப் பார்த்துவிட்டு, உள்ளே நுழைந்ததும் ஸ்ரீவிநாயகரில் துவங்கி, மூலவர் குடிகொண்டிருக்கும் கருவறைச் சந்நிதி, கோஷ்டங்களில் உள்ள தெய்வங்கள், பிராகாரங்களில் உள்ள தெய்வங்களின் சந்நிதிகள் என வலம் வந்து, நவக்கிரக சந்நிதியைச் சுற்றி வந்து, கொடி மரத்துக்கு அருகில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கிறபோது, நம் துக்கமெல்லாம் பறந்தோடிவிடும்!

உயர்ந்து நிற்கிற கோபுரமும், சற்றே தாழ்ந்திருக்கிற ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதியும் நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்தும். குறுகலான சந்நிதிக்குள் குடிகொண்டிருக்கிற இறை மூர்த்தியும், வெட்டவெளி போல் நீண்டிருக்கிற பிரமாண்ட பிராகாரங்களும் ஏதோ ஒன்றை நமக்குள் விதைக்கும்!

'இப்படித்தான் கோயிலைக் கட்ட வேண்டும்; மதில் எழுப்பி, பிராகாரம் அமைக்க வேண்டும். இந்தத் திசையில்தான் இறைச் சந்நிதிகள் இருக்கவேண்டும். ஸ்ரீதட்சிணாமூர்த்தி என்றால் தெற்குப் பார்த்தும், ஸ்ரீதுர்கை என்றால் வடக்குப் பார்த்தும் இருக்கவேண்டும் என ஆலயக் கட்டட அமைப்புக்கான சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.



கட்டடக் கலை வல்லுநர்கள் ஆலயங்களை அமைக்க, சிற்பிகளின் கூட்டம் தெய்வத் திருவுருவங்களை சாந்நித்தியம் கெடாமல், அழகுற வடித்துக் கொடுத் தது. ஆச்சார்யர்கள் ஒன்று சேர்ந்து ஆகமங்களை உருவாக்கிக் கொடுத் தனர். கடவுளுக்கான ஆராதனைகளை எப்போது, எவ்விதம் செய்வது என்றும், அபிஷேகங்களை எப்படிச் செய்யவேண்டும் என்றும் அமைத்துக் கொடுத்தனர்.

கட்டடக் கலைஞர்களையும் அவர்களின் திறமைகளையும் மிகவும் மதித்தனர், மன்னர் பெருமக்கள். சிற்பிகளுடன் மிகுந்த சிநேகிதத்துடன் பழகி, அவர்களை ஊக்கப்படுத்தினார்கள் அரசர்கள். ஆச்சார்யர்கள் என்பவர்கள் குருமார்கள். அவர்கள் வகுத்துக் கொடுத்த வழிபாட்டு முறைகளைப் பின்பற்றினால்தான், நமக்கும் நம் தேச மக்களுக்கும் இறைபலம் கூடும் என்று உணர்ந்த மன்னர்கள், ஆச்சார்யர்களை மதித்து வணங்கினார்கள்.

நம் தேசத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் அப்படிக் கட்டப்பட்டவையே! கனிந்த உள்ளத்துடன் கட்டடக் கலைஞர்களும், பெருமிதத்துடன் சிற்பக்கலை வல்லுநர்களும், 'இந்த தேசத்தில் இறைச் சக்தி பெருகித் ததும்ப வேண்டும்’ எனும் நோக்கில் ஆச்சார்யர்களும் ஒன்றிணைந்து உருவாக்கிய கோயில்கள் என்பதை நினைத்தாலே, அதன் தொன்மையும் பெருமையும், சக்தியும் சாந்நித்தியமும் தெளிவுற விளங்குகின்றன.



அதனால்தான் காஞ்சி மகாபெரியவா, 'கோயில் திருப்பணி செய்ய விரும்பும் அன்பர்கள், புதுசு புதுசா கோயில் கட்டத் தேவையில்லை. புராதன- புராணப் பெருமைகள் கொண்ட ஆலயங்கள், சிதிலம் அடைந்தபடி இருக்கறதைப் பார்த்தா, அந்தக் கோயிலுக்கு ஏதாவது திருப்பணி செய்யுங்க. பழைய கோயிலைச் சீரமைக்க உங்களோட பங்களிப்பும் இருக்கட்டும்!’ என்றார். 'அந்தக் கைங்கர்யம், உங்களுடைய வாழ்க்கை சிறப்பா அமையறதுக்குக் கை கொடுக்கும்’ என உபதேசித்தார்.

தமிழகத்தில், காஞ்சி மகானின் திருவடி படாத தலங்களே இல்லை. அவர் ஆராதித்து பூஜிக்காத தெய்வத் திருவிக்கிரகங்கள் மிகமிகக் குறைவு!

சென்னை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மேல்மருவத்தூர். இங்கிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது தொழுப்பேடு. இந்த ஊரில் இருந்து சூணாம்பேடு எனும் ஊருக்குச் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஆத்தூர் எனும் கிராமம். இங்குதான் ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீவடகலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

பல்லவர் காலத்துக் கோயில்; சுமார் 1,200 வருடங்கள் பழைமை மிக்க ஆலயம் இது! நடமாடும் தெய்வம் எனப் போற்றப்படும் காஞ்சி முனிவர், ஆத்தூர் கிராமத்துக்கு மூன்று முறை விஜயம் செய்திருக்கிறார். 1938-ஆம் வருடம் இங்கு வந்தபோது, அக்ரஹாரத்தில் உள்ள வெங்கய்யர் வீட்டில் தங்கி, அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

அப்போது அவருடைய முகத்தில் ஏதோவொரு தேடல்... 'இங்கே, இந்த ஊர்ல சிவாலயம் இருக்கா, என்ன?’ என்று கேட்டாராம். மடத்து அன்பர்கள் ஊர்க்காரர்களைப் பார்க்க, அவர்கள் 'ஆமாம்’ என்றனர். 'அந்தக் கோயிலுக்குப் போகலாம், வாங்கோ!’ என்று சட்டென்று எழுந்த பெரியவா, விறுவிறுவெனக் கிளம்பிச் செல்ல... மொத்த ஊரும் திரண்டு அவருக்குப் பின்னே சென்றது.

கோயிலைப் பார்த்ததும் பரவச மானார் பெரியவா. 'அற்புதம்... அற்புதம்’ என்று சொல்லிக் கொண்டே, உள்ளே சென்றார். புதர் மண்டி, செடிகொடிகள் படர்ந்து காணப் பட்டாலும், அதையெல்லாம் பொருட் படுத்தவில்லை, மகாபெரியவா!

சிவ சந்நிதிக்கு எதிரில் அப்படியே அமர்ந்துவிட்டார். சிவலிங்கத் திருமேனியையே பார்த்துக் கொண்டிருந்தவர், 'அடடே...’ என்று நெகிழ்ந்து போனாராம். 'ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் வேணுமே...’ என்று மடத்துச் சிப்பந்திகளைப் பார்த்துச் சொல்ல... உடனே ஏற்பாடு செய்யப்பட்டது. 'இன்னிக்கிப் பிரதோஷம். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு, ஸ்வாமிக்குப் பிரதோஷ பூஜை நடக்கப் போறது’ என்று சுவாமி சொல்ல...

பூமாலைகளும் வில்வ இலைகளும், பழங்களும் சர்க்கரைப்பொங்கலும் கொண்டு வந்து வைக்கப்பட்டன. அன்று மாலை, தன்னுடைய திருக்கரங் களால் ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்தார். பிரதோஷ பூஜை சிறப்புற நடந்தது. மொத்த ஊரும் சிலிர்த்துப் போனது.



இதையடுத்து, 1945 மற்றும் 48-ஆம் வருடங்களில், இங்கு வந்த மகாபெரியவா, ஸ்ரீகாமாட்சி அம்பாளுக்கும் ஸ்ரீவடகலீஸ்வரருக்கும் பூஜைகள் செய்தார்; அக்ரஹாரத்தில், ஸ்ரீராம நவமி விழாவைச் சிறப்புறக் கொண்டாடினார்.

''இந்த ஊர், நோய் தீர்க்கும் ஸ்தலம்னு மகாபெரியவா சொன்னாளாம். எட்டு வயதைக் கடந்தும், சரியாப் பேச்சு வராத சிறுவன் ஒருத்தனுக்கு, ஸ்ரீவடகலீஸ்வரர் கருணையால பேச்சு வந்ததாம்! ஸ்ரீகாமாட்சி அம்பாளோட கடைக்கண் பார்வை பட்டாலே, திருமண தோஷம் முதலான எல்லா தோஷங்களும் நிவர்த்தியாயிடும்னு பெரியவா சொன்னதா, எங்க தாத்தா சொல்லியிருக்கார்'' என்று பிரதோஷக் கமிட்டியைச் சேர்ந்தவரும், தற்போது பெங்களூருவில் வசிப்பவருமான சந்திரசேகரன் தெரிவிக்கிறார்.

''இத்தனைப் பெருமைகள் கொண்ட கோயில், மகா பெரியவா பூஜைகள் செய்து வழிபட்ட ஆலயம், இன்றைக்கு ஒற்றைச் சந்நிதியுடன் காட்சியளிக்கிறது. பிரதோஷ பூஜை மட்டும் எளிமையாக நடைபெறுகிறது. மற்ற எந்த விழாக்களும் நடைபெறாமல், வெறிச்சோடிக் கிடக்கிறது ஆலயம்'' என வருத்தம் கலந்த குரலில் சொல்கிறார் ராமசேஷன்.

ஆயிரம் வருடப் பழைமை மிக்க ஆலயம் இப்படிச் சிதைந்திருக்கலாமா? ஸ்ரீகாமாட்சி அம்பாள் குடி கொண்டிருக்கும் கோயிலுக்குக் குதூகலம் கிடைப்பது என்றைக்கு? காஞ்சி மகாபெரியவா, தமது திருக் கரங்களால் பூஜைகள் செய்து வழிபட்ட கோயிலுக்கு நல்ல வழி கிடைப்பது எப்போது?

சிவனடியார்களும் காஞ்சி மகானைப் போற்று கின்ற அன்பர்களும் மனசு வைத்தால், ஸ்ரீவடகலீஸ்வரர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெறும் நாள், வெகு தொலைவில் இல்லை!

Comments