கண்ணனை வேண்டிய காமதேனு





கண்ணன் பாட்டுக்கும் கர்னாடக சங்கீதத்துக்கும் அப்படியென்ன தொடர்போ, தெரியவில்லை. எங்கே கர்னாடக சங்கீதக் கச்சேரி நடந்தாலும், அங்கே... கண்ணனைக் கொஞ்சுகிற பாடல்களுக்குக் குறைவே இருப்பதில்லை. கச்சேரிகளில் பாடுபவர்கள் எத்தனை பிரபலங்களாக இருந்தாலும், அவர்கள் கண்ணனின் பாடலைப் பாடாமல் இருக்க மாட்டார்கள். சொல்லப்போனால், ஸ்ரீகிருஷ்ணரைப் போற்றுகிற பாடல்களைப் பாடியதால்தான், அத்தனைப் பேரும் புகழும் வாய்த்திருக்கிறது, அவர்களுக்கு!


இத்தகு பெருமைமிகு பாடல்களை உலகுக்குத் தந்தருளியவர்... வேங்கட சுப்பய்யர். வெறுமனே பெயரைச் சொன்னால் சட்டென்று எவருக்கும் தெரி யாது. ஊர்ப் பெயரையும் சேர்த்து, ஊத்துக்காடு வேங்கடசுப்பய்யர் என்றால், கர்னாடக சங்கீத உலகில் அத்தனைப் பரிச்சயம்! சங்கீத உலகுக்கு ஸ்ரீகண்ணனின் அழகையும் கருணையையும் கவிதைகளாக அள்ளித் தந்தவர், ஊத்துக்காடு வேங்கடசுப்பய்யர். அவருக்குச் சங்கீத ஞானத்தைத் தந்து அருளியவர், ஊத்துக்காடு காளிங்கநர்த்தனர்!

கும்பகோணத்தில் இருந்து தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் மற்றும் ஸ்ரீவீர பத்திரர் கோயில், ஆவூர் ஸ்ரீபசுபதீஸ்வரர், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்கை ஆலயம் ஆகியவற்றைக் கடந்து சென்றால், சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ள ஊத்துக்காடு ஸ்ரீகாளிங்கநர்த்தனர் கோயிலை அடையலாம்.

தமிழகத்தில், புராதனமான ஸ்ரீகிருஷ்ணன் கோயிலைக் காண்பது அரிது என்பர். ஊத்துக்காடு ஸ்ரீகாளிங்கநர்த்தனர் கோயில், புராதன- புராணப் பெருமைகள் கொண்ட திருத்தலம்! தேவலோகப் பசுவான காமதேனு, தன் கன்றுகளான நந்தினி, பட்டி மற்றும் இதர பசுக்களுடன் ஊத்துக்காட்டில் இருந்தது. சிவனார் மீது கொண்ட பக்தியால், தினமும் பூக்களைப் பறித்து, அங்கேயுள்ள ஸ்ரீகயிலாசநாதருக்குச் சமர்ப்பித்து பூஜித்து வந்தது, காமதேனு. அந்த ஊரில் ஏராளமான பசுக்கள் இருந்ததால், அது ஆவூர் எனப்பட்டது. பசுக்கள் மேய்ச்சலுக்குச் செல்லும் இடம், கோ வந்த குடி ஆனது. அதுவே பிறகு 'கோவிந்தக்குடி’ என்றானது. அதேபோல் பட்டி பசு, சிவனாருக்கு பூஜை செய்த ஊர் பட்டீஸ்வரம் எனப்பட்டது. இத்தனை ஊர்களிலும், ஊத்துக்காடுதான் காமதேனுவின் விருப்பமான தலமாக இருந் தது; காமதேனுவின் சுவாசமாகவே திகழ்ந் தது. எனவே, தேனுசுவாசபுரம் என்றும், மூச்சுக்காடு என்றும் அழைக்கப்பட்ட அந்த ஊர், இன்று ஊத்துக்காடு எனப்படுகிறது.

நாரதர் இங்கு வந்து, இங்கே இருந்த பசுக்களிடம் ஸ்ரீகிருஷ்ணரின் கதையைச் சொன்னார். அப்போது, காளிங்கன் எனும் பாம்பின் தலையில் நர்த்தனமாடி, அவனையும் அவனுடைய ஆணவத்தையும் அடக்கிய கதையை நாரதர் விவரிக்க... சிவ பக்தியோடு, மாயக்கண்ணன் மீதும் பக்தி கொண்டு வணங்கியது, காமதேனு. அவனுடைய புல்லாங்குழல் இசையைக் கேட்க வேண்டும் என்றும், அவனைத் தரிசிக்க வேண்டும் என்றும் ஏங்கித் தவித்தது. பசுவின் கோரிக்கையைக் கேட்காமல் இருப்பானா ஆயர்குலத்தோன்?! வேணுகானம் இசைத்தபடி, அங்கேயுள்ள நீரோடையில் காட்சி தந்தான் ஸ்ரீகண்ணன். அத்துடன், காளிங்கத்தில் நர்த்தனமாடுகிற கோலத்தையும் காட்டி அருளினான். பின்னாளில் இதனை அறிந்த சோழ மன்னன் ஒருவன், ஸ்ரீகாளிங்கநர்த்தனருக்கு இங்கு கோயில் அமைத்தான் என்கிறது ஸ்தல புராணம்.



ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபட வேண்டிய ஸ்தலம் இது. ரோகிணி நட்சத்திர நாளில் இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம். அதுமட்டுமா?! தங்கள் குழந்தைகள் இசைத் துறையில் வல்லுநராக வேண்டும்; பாடுவதில், ஆடுவதில், வாத்தியக் கருவிகளை இசைப்பதில் பேரும் புகழும் பெற வேண்டும் என விரும்புபவர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து ஸ்ரீகாளிங்க நர்த்தனரை பிரார்த்தித்துச் செல்ல... நினைத்த காரியம் இனிதே நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள்! உத்ஸவரின் திருப்பாதத்துக்கு கொலுசு சார்த்தி வழிபடுவது சிறப்பு. சர்ப்பத்தின் மேல் நின்றபடி ஆடினாலும், சர்ப்பத்துக்கும் ஸ்ரீகண்ணனுக்கும் மெல்லிய, நூலிழை அளவுக்கு இடைவெளியுடன் திகழ்கிற விக்கிரகத் திருமேனி, வியப்பின் உச்சம்!

ஆவணியின் ரோகிணி நட்சத்திர நன்னாள், ஸ்ரீகிருஷ்ணரின் ஜயந்தித் திருநாள். அன்றைய தினம் ஊத்துக்காடு கிராமமே அமர்க்களப் படுமாம்! சுமார் 800 லிட்டருக்கும் மேல் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பாலபிஷேகம் நடைபெறு வதைக் காணக் கண் கோடி வேண்டும்! ஊத்துக்காடு ஸ்ரீகாளிங்கநர்த்தன கிருஷ்ணரைக் கண் குளிர தரிசியுங்கள்; நம் மனம் குளிரச் செய்து, நம் இல்லங்களில் சந்தோஷங்களை நிறையச் செய்வான், கண்ணபிரான்!

Comments