நாதன் முடி மேலிருக்கும்..!







பூமண்டலத்தை அஷ்டதிக் கஜங்களாகிய எட்டு யானைகள் தாங்குவது போன்று, அஷ்ட நாகங்களும் தாங்கி நிற்பதாக ஐதீகம். நாகங்களில், பெருமாளுக்கு படுக்கையாகவும் குடையாகவும் பணி செய்யும் பேறு பெற்றவன் ஸ்ரீஆதிசேஷன்.

ராம அவதாரத்தில் லட்சுமணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில், பலராமனாகவும் ஆதிசேஷன் அவதரித்ததாகக் கூறுவர். அதுமட்டுமா? அம்பிகையின் ஒரு சக்தியாகவும், ஸ்ரீவிநாயகருக்கு உதரபந்தனமாகவும், ஈசனின் திருமுடியிலேயே வீற்றிருக்கும் பெருமை மிகுந்தவையாகவும் திகழ்கின்றன நாகங்கள். ஆடி மாதம் தேய்பிறையில் வரும் நாகபஞ்சமி, நாக வழிபாட்டுக்கு உகந்த தினம். இந்தத் திருநாளில், நாகவழிபாட்டுக்குரிய தலங்க ளைத் தரிசிப்பதும் வழிபடுவது விசேஷம். இதனால், நன்மைகள் யாவும் தேடிவரும்; நாக தோஷங்களும் அகலும்!

பாற்கடலைக் கடைவதற்கு வாசுகிப் பாம்பையே கயிறாகப் பயன்படுத்தினார்கள் என்பது நமக்குத் தெரியும். அந்த வாசுகிக்கு, அலகாபாத்- பிரயாகையில் ஒரு கோயில் உண்டு. அனைவரும் தரிசிக்க வேண்டிய தலம் இது.

தமிழ்நாட்டில் நாக வழிபாடு பிரசித்தம். நாகப்பட்டினம் ஸ்ரீநாகநாத சுவாமி கோயிலில், கருவறையை ஒட்டிய அர்த்த மண்டபத்தில், நாகம் வாழும் பிலம் அதாவது புற்று ஒன்று உள்ளது. வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் இங்கு பாலூற்றி வழிபடுகிறார்கள்.



நாகர்கோவில் நாகராஜா ஆலயமும் பிரசித்தம். கேரள பாணியில் அமைந் திருக்கும் ஆலயத்தில் உற்ஸவம், நாகர் பூஜை, ஊர்வலம் எல்லாமே நாகராஜனை மையமாக வைத்தே நடைபெறுகின்றன. திருமண வரம் வேண்டியும், குழந்தை யில்லாத குறை தீரவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறார்கள்.

குடந்தை அருகே உள்ள திருத்தலம், திருநாகேஸ்வரம். இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீநாகநாத ஸ்வாமி வரப்பிரசாதியானவர். ராகு, நாகவல்லி, நாகர் சந்நிதிகளை யும் தரிசிக்கலாம். இங்கே அருளும் ஸ்ரீராகு பகவானுக்கு அபிஷேகிக்கப்படும் பால், அவரது திருமேனியில் வழியும்போது நீல நிறமாக வழிவதைக் காணலாம். ஞாயிற்றுக்கிழமை- ராகு கால பூஜையும், பால் அபிஷேகமும் சிறப்பாக நடைபெறும்.

திருப்பதியின் ஏழு மலைகளில் ஒன்று சேஷகிரி. ஆதிசேஷனின் அம்சமாகவே கருதப்படுகிறது. இது, அவருடைய இருப்பிடம் என்றும் சொல்வர். அதேபோல், கேரளாவிலும் நாகர் வழிபாடு அதிகம். ஆலப்புழை- ஹரிப்பாடு எனும் இடத்தில் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி கோயில் சிறப்பானது. அருகிலுள்ள மன்னார் கோயிலில், பிரம்மன்- விஷ்ணு- சிவன் மும்மூர்த்திகளையும் நாகராஜா வடிவில் பரசுராமர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகின்றனர்.

Comments

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment